உலகின் பெருங்குழும நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பனியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களுள் முக்கியமானவர் தீரன் சின்னமலை. ‘தீர்த்தகிரி’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்பட்டார் தீரன் சின்னமலை அவர்கள். வெள்ளையர்களுக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை அடிபணியாது, அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.
பல்வேறு போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். வீரமும் விவேகமும் கலந்த போர் முறைகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்து, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்க போராடியவர். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இம்மண்ணை மீட்டெடுக்க மைசூர்ப்புலி திப்பு சுல்தானுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை கலங்கடித்தவர். வீரத்திற்கு அடையாளமாக தான் மறைந்தாலும் வரலாற்றில் இடம்பெற்ற தீரன் சின்னமலை அவர்களின் வீர வரலாற்றை அறிவோம்.
தீரன் சின்னமலை அவர்கள், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயத்திற்கு அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ‘பழையக்கோட்டை மன்றாடியார் பட்டம்’ பெற்ற மதிப்புமிகு குடும்பத்தில் ரத்னசாமி மற்றும் பெரியாத்தா தம்பதியருக்கு மகனாக 1756 ஏப்ரல் 17-ஆம் தேதி பிறந்தார். தீரன் சின்னமலை அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி என்பதாகும்.
தீரன் சின்னமலை அவர்கள் தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான சிலம்பு, வில்வித்தை, குதிரையேற்றம் மட்டுமல்லாமல் நவீன போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். தற்காப்புக்கலைகள் அனைத்திற்கும் மொத்த உருவமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள் தான் கற்ற கலைகள் அனைத்தையும் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். அதுமட்டுமல்லாமல் அவர் சார்ந்த வட்டாரத்தில் குடும்ப மற்றும் நிலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
சின்னமலை வாழ்ந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி அவர்களின் ஆட்சியில் இருந்தது. மைசூர் திவான் ‘முகம்மது அலி’ என்பவரால் அப்பகுதி மக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு அதன் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.
ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்து முகம்மது அலி கேட்ட போது, “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள ஓர் சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். இதனால் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
அவமதிப்புக்குள்ளான திவான் சின்னமலைக்கு தக்க பாடம் கற்பிக்க ஒரு படையை அனுப்பினார். அதனை எதிர்த்து தீரன் சின்னமலையின் படையும் போரிட்டன. இருபடைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதின. இதில் சின்னமலையே வெற்றிபெற்றார்.
தீரன் சின்னமலை அவர்கள் வளர வளர நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் தொடர்ந்து வளர்வதை அவர் உணர்ந்தார். இதில் சிறிதும் விருப்பமில்லாத சின்னமலை ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்தார். அந்த சமயத்தில், அதாவது 1782 டிசம்பர் 7-ஆம் தேதி மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க எண்ணினார்.
இதுவே, தீரன் சின்னமலைக்கும் பெரும் சாதகமாக அமைந்தது. ஆகவே, தீரன் சின்னமலை அவர்கள் தனது நண்பர்களோடு ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் தீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சிறிரங்கப்பட்டணம், மழவல்லி மற்றும் சித்தேசுவரம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த மூன்று மைசூர் போர்களிலும் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் மாபெரும் சேதத்தை விளைவித்து வெற்றியை கைப்பற்றியது.
மூன்று முறை நடந்த மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு கோபமடைந்த ஆங்கிலேயர்கள், பலவிதமான புதிய போர் முறைகளைக் கையாளத் திட்டம் வகுத்தனர். இதன் காரணமாக, திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரின்போது தங்களுக்கு உதவிப் புரியக் கோரி தூது அனுப்பினார். பிரெஞ்சுக்காரர்களால் பயிற்சியளிக்கப்பட்ட தீரன் சின்னமலை கோவை பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு திப்புவுடன் இணைந்து துணிச்சலுடனும், வீரத்துடனும் அயராது போரிட்டனர். துரதிஷ்டவசமாக, “மைசூர்ப்புலி” எனறழைக்கப்பட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், 1799 மே 4 ஆம் தேதி போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
திப்பு சுல்தான் அவர்களின் இறப்பிற்கு பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். எனவே அவ்விடம் ‘ஓடாநிலை’ என்றழைக்கப்படுகிறது.
திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் விதமாக, தீரன் சின்னமலைக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் அவரது வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் பீரங்கிகள் போன்ற நவீன போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்பு, 1799-ல் தீரன் சின்னமலை தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்பு சுல்தானிடம் பணியாற்றிய சிறந்த போர்வீரர்களான அப்பாச்சி மற்றும் தூண்டாஜிவாக் போன்றவர்களை தனது படையில் சேர்த்ததோடு மட்டும் நில்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அருகில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கனிஜாகான், புத்தேமுகம்மது, முகம்மது ஹாசம் போன்ற தளபதிகளுடன் இணைந்து ஆங்கிலேயரை தாக்க திட்டம் தீட்டினார்.
1800 ஜூன் 3-ஆம் தேதி, லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ஆம் படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்”, கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது.
இந்த போருக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முஹம்மது ஹாசம், திட்டத்தின் தகவல்களை வெளியிடாதிருக்க தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்தார். இதனையடுத்து ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட அப்பாஜி மற்றும் தூந்தாஜிவாக்கினால் அனுப்பப்பட்டவர்கள் உட்பட 42 பேருக்கு மரணதண்டனை ஆங்கிலேயரால் விதிக்கப்பட்டது. இந்த புரட்சியாளர்களில் பெரும்பாலோனோர் இசுலாமியர்கள். ஆங்கிலேயரின் அரசு பதிவுகளில் தீரன் சின்னமலை, முகம்மதுஹாசம் ஆகியோரோடு காணமுடிகிற புரட்சியாளர்கள் பெயர்களாக ஹைதர்கான், சுமாஷ்கான் அலிசாகிப், மான்கான், ஷேக் அலி, செலர்கான், அலிசெயிப், உசேன்செயிப் யூனூஸ்கான், மொஹியுதீன்கான், சையது இமாம், பீர்செயுப், மொகீர்தீன்கான், செய்யது மொகியுதீன், சூலிமலை அமில்தார், இட்ச்சப்புலி அமில்தார், ஷேக்மதர் சேக்யுசேன், குலாம்உசேன் சேக்அலி, பீர்முகம்மது, அப்துல்காதர் ஷமஸ்கான், செலார்கான், சோட்டா அப்துல்காதர், முகம்மது ஷெரிப், ஷேக் மீரா, ஷேக்மீரான், ஷேக் முகம்மது தெலர்வார், புனா, பீர்முங்கப்பா அலி, பெஷாயர், முல்லப்பா குனிமூர்த்தி, சுப்பாராவ், பீனாஷேக்மியான், மொகிர்தீன்கான், சையது மொஹிர்தீன் என எண்ணற்றவர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1801ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்தாற்போல், 1802-ல் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். தீரன் சின்னமலை அவர்கள் பிடிபடாமலிருக்க கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கினார்.
மாவீரர் பொல்லான், ஈரோடு நல்லாமங்காபாளையத்தை சேர்ந்த இவர் போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்து கம்பீரத் தோற்றமுடையவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர் தீரன் சின்னமலை அவர்களை காத்தவர். தீரன் சின்னமலையின் போர்களான பவானிப் போர் 1801-லும், சென்னிமலைப்போர் 1802-லும், அரச்சலூர் போர் 1803-லுமென தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணியாக இருந்த போர்த்தளபதி இவரே. கர்னல் ஹாரிஸ் ஈரோடு ஓடாநிலைக் கோட்டையில் முகாமிட்டிருந்த தீரன் சின்னமலையை சுற்றி வளைக்க திட்டமிட்டு பெரும்படையுடன் முற்றுகையிட்டார். இந்த தகவலை பொல்லான் முன்கூட்டியே தீரன் சின்னமலைக்கு உளவுபார்த்து தெரிவித்ததுடன், இந்த முறை கர்னல் ஹாரிசை எதிர்ப்பது என்பது நமக்குதான் உயிர்ச்சேதத்தை அதிகம் விளைவிக்கும் ஆகவே கோட்டையை விட்டு தப்பி விடுமாறு எச்சரிக்கை செய்திருந்தார். தீரன் சின்னமலையும் அப்படியே செயல்பட்டு கோட்டையிலிருந்து தப்பினார்.
இதை அறியாத கர்னல் ஹாரிஸ் கோட்டைக்குள் நுழையும் போது கோட்டை வெற்றிடமாக காணப்பட்டது. நாம் வருவது எப்படி தெரிந்தது எப்படி தீரன் சின்னமலை தப்பினார் என்பது தெரியாமல் குழம்பிப் போன கர்னலுக்கு கோட்டையினுள் பொல்லான் அனுப்பிய துப்பு பற்றிய தடயம் கிடைத்தது.
கொதித்துப் போன கர்னல் பொல்லானை சுற்றி வளைத்துப் பிடிக்க ஆணையிட்டான். பொல்லான் வீசிய வாளுக்கு பலர் பலியானாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொல்லான் பிடிபட்டார். கோபத்தின் உச்சத்தில் இருந்த கர்னல் பொல்லானை பலர் பார்க்க ஓடாநிலைக் கோட்டை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் ஆடி 1, 1805-ல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். தன் தலைவர் தீரன் சின்னமலை தப்பிவிட்டார் என்ற மகிழ்ச்சியோடே குண்டுகளை தாங்கிச் சரிந்தார் அம்மாவீரர் பொல்லான்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்வியடையச் செய்து, அவர்களின் தலைகுனிவிற்கு காரணமாக அமைந்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் தீர்த்துக் கட்ட எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்டபோது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர்.
ஜூலை 31, 1805 ஆடி பெருக்கு நாள் அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலையும் அவரது சகோதர்களும் தூக்கிலிடப்பட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
வடக்கிற்கு 100 ஆண்டுகள் முன்பே ஆங்கிலேயர்களுக்கு எதிரான கலகத்தை சாதி மதம் கடந்து நடத்தி முடித்தவர்கள் தமிழர்கள். இந்த மண் கண்ட மாவீரர்கள் வரலாறு துரோகங்களின்றி நிறைவு செய்யப்பட்டதில்லை. அந்த துரோகங்களின் உட்பொருளாக சாதியும், மதமும், ஆசைகுணமும், அரசியல்பற்றற்று செல்லும் தன்மையும் ஆதிக்கத்தோடு கொடூரச் சிரிப்பை சிரித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் மக்களை வாட்டி வதைக்கிறது. கிழக்கிந்தியக் கம்பனியின் வரிக்கொடுமை இன்றைய பாஜகவின் GST-யாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் அடிப்பணிந்த சாதிப்பெருமை அப்பாவி பிள்ளைகளை ஆணவப்படுகொலைகளை செய்கிறது, மதவாதம் நம்மை பிளவுபடுத்த துடிக்கிறது. நம் மாவீரர்களை காட்டிக்கொடுத்த கொடுக்கின்ற சாதியும் மதமும் ஏகாதிபத்தியத்தின் வேட்டைநாய்கள். அது ஆதிக்கத்தின் எலும்புத்துண்டை உட்கொண்டு நம்மை கொல்லுமே ஒழிய நம்மைக் காக்காது.
வரலாறு எனும் பேராயுதமே நம்மை காக்கும். அதை கற்று சாதி மதம் கடந்த நாகரீகமுள்ள சமூகமாக நாம் மாறுவதும், ஒன்றுபடுவதும், நம்மீது எதிர் வரும் அடக்குமுறைகளை எதிர்த்து துணிச்சலோடு உரிமைகளுக்காக போராடுவதும் தான் தீரன் சின்னமலை போன்ற எண்ணற்ற மாவீரர்களுக்கு நாம் செய்யும் வீர வணக்கம்.