கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி

தலையங்கம் – ஆகஸ்ட் 03, 2022

வலிமையானவனுக்கானதே நீதி என்பது தொடர்ந்து நிலைநாட்டப்படுமெனில் சமூகநீதியென்பது புதைக்கப்படுகிறது என்று பொருள். கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறை மீதான ஆதாரங்கள் உடற்கூறாய்வில் ஐய்யமின்றி வெளிப்பட்டதை மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு அவர்கள் சுட்டிக்காட்டி எடுத்துரைந்திருந்தார். நக்கீரன் ஊடகத்தின் நேர்காணல் மூலமாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு அவர்கள், உடற்கூராய்வு அறிக்கையை வைத்து பள்ளி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக சிறுமியின் வலது மார்பகத்தில் கடித்ததற்கான காயம் குறித்தும், வலது விலா எலும்புகள் முறிந்துள்ளது குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ளார். அதற்கான அறிவியல்பூர்வமான பதில்கள் ஏதும் இதுவரை இல்லை.

வழக்கறிஞர் சங்கரசுப்பு

ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பில் தீவிர பங்காற்றிய பள்ளி நிர்வாகத்தினர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் கோரியே பொதுமக்கள், இயக்கத்தினர் மக்கள் திரள் போராட்டங்களை சனநாயக முறையில் நிகழ்த்தினர். இதற்கு பலனின்றி போனதாலேயே அப்பள்ளி மீது வன்முறையானது நிகழ்ந்தது. தமிழகக் காவல்துறையின் திட்டமிட்ட தவிர்த்தலே மக்களின் அவநம்பிக்கைக்கு காரணமாக அமைந்திருந்தது.

தற்போது வரையில் இப்பள்ளி நிர்வாகத்தின் மீதான தீவிர நடவடிக்கைகளோ, இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் விதமான அரசின் கட்டுப்பாடுகளோ அறிவிக்கப்படாமல், பள்ளியின் மீது தமது சினத்தை காட்டிய வெகுமக்கள் மீதான வேட்டையை தீவிரப்படுத்தி வருகிறது காவல்துறை. ஓரிரு நாட்களுக்கு முன் வெளியான சமூகவலைதள பேட்டியில் அப்பாவி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதை பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. குடியரசு, வசந்த் எனும் இரண்டு இளைஞர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை ஆதாரத்துடன் ஊடகவியலாளர் கரிகாலன் அவர்கள் வெளிப்படுத்தியது, கள்ளக்குறிச்சிப்பகுதியில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை அம்பலப்படுத்துகிறது.

இதற்கு முன்பாக பட்டியலின சமூகமக்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் பள்ளி மீதான வன்முறைக்கு பொறுப்பேற்க வைக்கும் வகையிலான பொய்யான செய்திகள் ‘தி இந்து’ போன்ற ஊடகங்களில் பரப்பப்பட்டது. மேலும் பட்டியலின இளைஞர்கள், பகுதிகள் மீதான காவல்துறையின் அடக்குமுறையும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளின் பொழுதும், ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுதிலும் இதுபோல வெகுமக்கள் மீதும், குறிப்பாக பட்டியலின மக்கள் மீதும் கடுமையான வேட்டையை அன்றைய அதிமுக காவல்துறை கட்டவிழ்த்துவிட்டது. டாஸ்மாக் போராட்டங்களின் பொழுதும் இது போன்ற வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. சாமானிய மக்களிடத்தில் பீதியையும், கடுமையான அச்சத்தையும், காவல்துறை மீதான பயத்தையும் ஏற்படுத்த இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மனித உரிமை மீறல்கள் குறித்த ஜல்லிக்கட்டு விசாரணை அறிக்கையும், ஸ்டெர்லைட் விசாரணையும் என்னவானது எனும் கேள்விக்கு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசும் பதிலளிக்காமல் காவல்துறையை பாதுகாப்பதாகவே நடந்து கொண்டிருக்கிறது. குடிசை, ஆட்டோக்கள் மீது காவலர்கள் தீ வைக்கும் காணொளிகள், வாகனங்களை சேதப்படுத்தும் காணொளிகள், மக்களின் மீது காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகியவை காணொளியாக வெளியான பின்னரும் அக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போன்று ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு எந்த துறையிடமிருந்து காவலர்கள் உத்தரவு பெற்றனர், துப்பாக்கி சூடு நடத்திய சிறப்புப்படை எப்படி அழைக்கப்பட்டது குறித்து எத்தகவலும் பொதுவெளிக்கு தெரிவிக்கப்படவில்லை.

தங்குதடையற்ற வன்முறையை மக்கள் மீது ஏவுவதை தடுக்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் தமிழகக் காவல்துறை இயங்கி வருகிறது. சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத காவல்துறை என்பது மிகமோசமான அரச வன்முறை நிறுவனமாக உருவெடுக்கும் என்பதை உலகின் பல நாடுகளில் நடந்த வன்முறைகள் காட்டி இருக்கின்றன. இலங்கையில் நடந்த இனப்படுகொலை முதல் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறை ஆகியன வெகுசன எழுச்சிக்கே வித்திட்டிருக்கின்றன. அரசியல் சாசனத்திற்கு மீறிய துறையாக அரசின் நிறுவனங்கள் செயல்பட ஆரம்பிக்குமெனில் அது பொது அமைதியை சீர்குலைக்கும் அமைப்பாகவே செயல்படும்.

முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து கேட்டபொழுதில் தமக்கு எவ்வித தகவலும் தெரியவில்லை என்று சொன்னதை நாம் மறக்க இயலாது. காவல்துறை யாரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது கேள்விக்குறியானது. இதே நிலையே திமுக ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது என்பதையே கள்ளக்குறிச்சி அடக்குமுறைகள் தெரிவிக்கிறது. இச்சம்பவம் குறித்தான வெகுமக்கள் போராட்டங்களும், ஒன்றுகூடல்களும் தடுக்கப்பட்டன. தீவிர கண்காணிப்பு வேட்டை சாமானியர்கள் மீது நடத்தப்பட்டு, வெகுமக்களே குற்றவாளிகள் எனும் பிம்பம் காவல்துறையால் கட்டமைக்கப்படுகிறது.

இந்துத்துவ பின்னணி கொண்ட சக்தி கல்விக்கூடத்தின் குற்றவாளி நிர்வாகிகள் பாதுகாக்கப்படுகின்றனர். பலியான மாணவி பற்றியான வழக்கு மேலோட்டமான வழக்காக புனையப்படுகிறது. அப்பாவிகள் சிறைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். மக்களுடன் களமிறங்க உண்மை நிலையை கண்டறிந்து வெளிப்படுத்தும் ஊடகங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படியாக துண்டிக்கப்பட்ட பகுதியாகவும், அடக்குமுறை ஏவப்படும் பகுதியாகவும் மாறி இருக்கும் இந்நிலை பற்றிய எவ்வித அரசியல் நிலைப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் காவல்துறையின் போக்கில் அடக்குமுறைகளை திமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. 2021-2022-இலும் காவல்நிலையத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை  குறைந்தபாடில்லை. இவ்வகையில் எளிய மக்கள் மீதான காவல்துறையின் வன்முறைக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு முடிவுகட்டாமல், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் செயலற்று நிற்பதை மக்கள்விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். காவல்துறை நேரடியாக முதல்வர் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தோல்வி நிர்வாகத் தோல்வியாக பார்க்க இயலாது. கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் தனியார் கல்விக்கூடத்திற்கு ஆதரவான அறிக்கை என்பது திமுகவின் வர்க்க நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியது. இதுவரை சாமானியர்களை சந்தித்து உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பினை திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளவுமில்லை. இவ்வகையான தோல்வி என்பது எவ்வகையிலும் திராவிடர் இயக்க கோட்பாட்டிற்குரியதல்ல. இது திராவிடர் இயக்க மாடலுமல்ல. பார்ப்பனிய இந்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற வன்முறைகளை தடுக்க இயலாமலும், சாமானிய மக்களுடன் கைகோர்க்காமலும் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வகையிலும் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு திராவிட கருத்தியலுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.

One thought on “கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி

  1. அய்யா,தாங்களும் மக்கள் அதிகாரம் மற்றும் தந்தைபெரியார் திராவிட கழகத்தின் முன்னணியாளர்களைை கைது செய்து , சிறப்பு புலானாய்வு பிரிவு கீழ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எழுதாதது என்ன வித மாடல் !?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »