மக்களுக்கு தேவை கடவுளர் சிலைகளா? கல்வியளித்தவர்கள் சிலைகளா? – திருமுருகன் காந்தி உரை

நெய்வேலி வடலூர் நகராட்சியால் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் சிலைகளை புதிய பேருந்து நிலையத்தருகில் உடனடியாக நிறுவிடக் கோரி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில், அதன் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களது தலைமையில் பொதுக்கூட்டம் சனவரி 8, 2026 அன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

அன்பான தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, இன்றைக்கு தமிழ்நாட்டில் பெரிய விவாதம் என்னவெனில், பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும், நாம் தமிழர் சீமானும் போட்டி போட்டுக்கொண்டு இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று கட்சியும்/ இயக்கங்களும் இதனுடைய தலைவர்களும் தந்தை பெரியாரை இழிவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய சிலை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்கள் கிராமங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதுதான் எங்களது இலக்காக, கொள்கை முழக்கமாக நாங்கள் முன்வைக்கின்றோம்.

தலைவர்களின் சிலையை எதற்காக ஒரு நகரத்தில் மற்றும் கிராமத்தில் வைக்கிறார்கள்? வீதியிலே அனைவரும் பார்க்கின்ற விதமாக ஏன் சிலைகள் அமைக்கப்படுகின்றன? நமக்கு சிலை என்றாலே கோயில் சிலைதான் நினைவுக்கு வரும். கோவிலில் கடவுளினுடைய சிலையை எளிதில் நாம் பார்த்து விட முடியாது. கோவிலுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக இந்த மண்ணிலே இருக்கிறது. அதில் கருவறையில் இருக்கக்கூடிய ஆண்டவனுடைய சிலையை (நாம் வணங்குகின்ற அந்த கடவுளினுடைய சிலையை) காண்பதற்கு அத்தனை போராட்டத்தையும் அத்தனை கட்டணத்தையும் கொடுத்துதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமக்கு யார் கல்வியை பெற்று தந்தார்களோ, யார் நமக்கு சுயமரியாதையை பெற்றுக் கொடுத்தார்களோ, அவர்களது சிலைகள் ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும், வீதியில் இருக்கும் பொழுது அவர்கள்தான் ’நமக்கான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்த கடவுள்கள்’ என்று நாம் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் சிலைகள் வீதியிலே வைக்கப்படுகின்றன. வேறு எதற்கு வைக்கிறார்கள்? எந்த சாமி நமக்கு சாப்பாடு போட்டது? எந்த சாமி நமக்கு கல்வியை திறந்து வைத்தது? எந்த சாமி நமக்கு வாழ்வாதாரத்தை பாதுகாத்தது? என்று நமக்கு தெரியாது.

காலம் காலமாக கோயிலுக்கு போகிறோம், காலம் காலமாக சாமி கும்பிடுகிறோம், காலம் காலமாக வேண்டுதல் வைக்கின்றோம். வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்தது? ஆனால் நாம் என்றைக்கு கல்வி கற்கின்றோமோ, என்றைக்கு பட்டய படிப்பு படிக்கின்றோமோ, அன்றைக்கு நமது வாழ்க்கை மாறிப் போகிறது. படித்தால்தான் மாறுகிறது. கோயிலில் போய் தேங்காய் உடைத்தால் மாறுகிறதா? இல்லையே!

யார் நமக்கு கல்வி கொடுத்தார்களோ, யார் நமக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடை பெற்று கொடுத்தார்களோ, அவர்கள்தான் இந்த மண்ணின் உண்மையான காவல் தெய்வங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதைவிட வேறு என்ன கடவுள் இருக்க முடியும்?

என்னுடைய தாத்தா படிக்கவில்லை, உங்களுடைய தாத்தா படிக்கவில்லை, உங்கள் தாத்தாவின் அப்பாவும் படிக்கவில்லை, என் தாத்தாவின் அப்பாவும் படிக்கவில்லை. மேலும் முப்பாட்டான்கள் படிக்கவில்லை, வேலைக்கு செல்ல முடியவில்லை, மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ முடியவில்லை என்கிறது. கண்ணுக்கு தெரிந்து உண்மைதானே. இன்றைக்கும் படிக்காதவர்கள் நிலை என்னவாக இருக்கிறது? படிக்காதவர்கள் அதிகாரத்தை பெற்றுவிட முடிகிறதா? செல்வத்தை ஈட்டி விட முடிகிறதா? மரியாதைக்குரிய இடத்தில் வாழ்ந்து விட முடிகிறதா? இல்லையே, கல்வி இல்லை என்றால் சமூகத்தில் மரியாதை கிடைப்பதில்லை, கல்வி இல்லை என்றால் பதவிகள் கிடைப்பதில்லை, கல்வி இல்லை என்றால் செல்வங்களுக்கு வழியில்லை, கல்வி இல்லை என்றால் உயர்வுக்கு வழியில்லை என்றால், கல்வியை கொடுத்தவன் தானே கடவுளாக இருக்க முடியும். அந்த வகையில் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கருடைய சிலைதானே இந்த மண்ணினுடைய காவல் தெய்வமாக இருக்க முடியும்.

கல்வி கற்ற காரணத்தினால் தான் இந்த அதிகாரிகள் இன்றைக்கு இந்த பதவியில் சென்றிருக்கிறார்கள். இந்த பதவிக்கு சென்ற அதிகாரிகளுக்கு கல்வி கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அதானே.  

அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரும் ஏன் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தனும் என சொல்கிறோம்? எல்லா குடும்பத்தில் ஒரு குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வம் என்பது: நம் குடும்பத்திற்கும், நாம் வாழ்கின்ற ஊருக்கும், மண்ணுக்கும் நல்லது செய்தவர்களுக்கு நன்றி உணர்ச்சியோடு நாம் செலுத்துகின்ற மரியாதை. அதுதான் குலதெய்வம். இந்து மதத்தில் இருப்பதை போல பூஜை புனஸ்காரம் செய்வதோ, சமஸ்கிருதத்தில் மந்திரத்தை சொல்வதோ, ஐயரை கூட்டி வந்து யாகம் வளர்ப்பதோ நம் வழக்கம் கிடையாது. நம்முடைய பண்பாடும் கிடையாது.

நமது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதுதான் தமிழனுடைய மரபு. தமிழன் இந்து மதத்தை சார்ந்தவன் அல்ல. இந்து மதம் தமிழனுக்கான மதமும் அல்ல.

தமிழன் வழங்குகின்ற சாமி தமிழனுடைய சமயம். தமிழனுடைய மதம். அதை வள்ளலார் சொல்கிறார்: வள்ளலார் தமிழருக்கு என்று தனித்த மரபு இருக்கிறது என்று சொல்கிறார். அவர் ஆரிய இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பெருமகனார் பிறந்த இந்த மண்ணில் பேச வாய்ப்பு கொடுத்ததற்கு தோழர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். இந்த மண் அப்பேர்ப்பட்ட புரட்சியை நடத்திய மண்.

இந்து மதம் தமிழனுக்கு சொந்தமான மதம் அல்ல. இந்து மதம் தமிழனை இழிவு செய்கின்ற மதம். மறந்துவிடாதீர்கள். இவன்(பாப்பான்) சொல்லக்கூடிய எந்த பெரிய கோவிலில் நம் சாதிக்காரனுக்கு பூஜை செய்வதற்கும் அர்ச்சராக மாறுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது? எந்த மதத்தில் நம்முடைய பிள்ளைகளுக்கு (நம்முடைய சந்ததிகளுக்கு) கோவிலில், அவர்கள் வழங்குகின்ற அந்த இடத்தில், அந்த கடவுளுக்கு அர்ச்சகர் ஆவதற்கு உரிமை இல்லை என்றால், அந்த மதம் எப்படி நம் மதமாக இருக்க முடியும்?

ஒரு இந்து, மசூதியில் போய் இருக்க முடியுமா? ஒரு இஸ்லாமியர் கிறிஸ்துவத்தினுடைய ஆலயத்தில் போய் ஃபாதராக இருக்க முடியுமா? அதுபோலத்தான் தமிழன் இந்து கோவிலில் அர்ச்சகராக மாற முடியவில்லை என்றால், அவன் இந்துவா இல்லையா? என்று சொல்லனும். அது என்ன உன் சாதி மட்டும் உள்ளே போய் மணியாட்டி கொண்டு உட்காரலாம். மற்றவர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்) என்ன கெட்டவனா? தீட்டுப்பட்டவனா? அசிங்கமானவனா? குற்றவாளியா? யார் அவர்கள்?

சிதம்பரம் கோவிலில் அந்த குடுமி வைத்தவன் மட்டும்தான் மணியாட்டுவான், அவன் மட்டும்தான் தட்டில் காசு வாங்குவான், அவன்தான் எல்லா வேலையும் செய்வானா? அவன் யார்? நான் யார்? நானும் அவனும் இந்து என்றால், அவனுக்கு மட்டும் அந்த யோக்கியதை இருக்கிறது. ஆனால் எனக்கு அது கிடையாது. அப்போது நான் அசுத்தமானவன், அதிகாரம் இல்லாதவன் என சொல்கிறான்.

கடவுளுடைய சன்னதிக்கு சென்று நான் மரியாதை செய்வதற்கோ (அர்ச்சனை செய்வதற்கோ) தகுதி இல்லாதவன் என்று ஒரு(இந்து) மதம் சொல்கிறது என்றால், அந்த மதமும் நானும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். அந்த மதத்தைச் சார்ந்தவனாக எப்படி தமிழனாக இருக்க முடியும்? என்று வள்ளலார் கேட்டார்.

அந்த மண்ணில் நின்று வள்ளலார் சொன்னதை தான் நாங்கள் பேசுகிறோம். நாங்கள் ஒன்றும் தனியாக பேசவில்லை. வள்ளலார் சொன்னதை தான் தந்தை பெரியார் சொன்னார். இவர்கள் பேசிய அதே குரலைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் பேசினார்.

இன்றைக்கு இந்து மதத்தை நான் காப்பாற்ற போகிறோம் என போகிறானே பிஜேபிக்காரன். நான் கேட்கிறேன்: பிஜேபிக்காரன்தான் நமக்கு சாமி எப்படி கும்பிட வேண்டும் என கற்றுக் கொடுத்தானா? இல்லையெனில் இந்த பிஜேபிக்காரதான் கோயிலை கட்டினார்களா? இந்த வடநாட்டில் (குஜராத்) இருந்து வருகிறானே ’பாரத் மாதாக்கி ஜெய்’ என்று சொல்கிறானே, இவன்தான் கோயிலை கட்டினார்களா? இவன் தமிழனுக்கு ஏதாவது பிரச்சனைக்கு வந்து நின்றானா? நமக்கு புயல் வந்த பொழுது எட்டிப் பார்க்கவில்லை. வெள்ளம் வந்தபோது நிவாரணம் தரவில்லை. தமிழ்நாட்டு மீனவனை சுட்டு படுகொலை செய்த போது, ஏன் என்று கேள்வி கேட்கவில்லை.

இந்த வடநாட்டு கும்பலனுக்கு, நாம் எப்படி மரியாதை தர முடியும்? அவன் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் வந்து கலவரம் செய்கிறான். திருப்பரங்குன்றத்தில் எங்க தீபம் ஏற்ற வேண்டும் என்று பிஜேபி காரனுக்கு என்ன அக்கறை?

முருகன், இந்து மத கடவுள் அல்ல. அவன் தமிழ் மத கடவுளை சார்ந்தவன். தமிழ் வழிமுறையை சார்ந்தவன். முருகனுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

வடநாட்டில் முருகனுக்கு ஏதாவது கோயில் வைத்துள்ளானா? குஜராத்தில் முருகன் கோயில் இருக்கிறதா? மகாராஷ்டிராவில்,? பீகாரில், உத்தர பிரதேசத்தில் போன்று எங்கயாவது முருகனுக்கு கோயில் இருக்கிறதா? வடநாட்டில் எவனாவது முருகன் பெயர் வைத்துள்ளானா? இவ்வளவு எதுக்கு? வடநாட்டிலிருந்து இங்கே எத்தனை பேர் வேலை செய்கிறார்களே, வடநாட்டு தொழிலாளி எவனாவது முருகனுக்கு மொட்டை போட்டு உள்ளானா? எவனாவது முருகன் கோயிலுக்கு சென்று கும்பிடுகிறானா? அப்புறம் எப்படி முருகன் இந்து மதம் சொல்கிறாய்? இவர்கள் நம் கடவுளையும் கோவிலையும் கொள்ளை அடிப்பதற்காக வந்த கூட்டம்தான் பாரத ஜனதா கட்சி கூட்டம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இவனுக்கு வடநாட்டில் இந்த மாதிரி கோயில் இருக்கிறதா? சிதம்பரத்தில் இருக்கின்ற மாதிரி கோவில், ராமேஸ்வரத்தில் இருக்கின்ற மாதிரி கோவில், காஞ்சிபுரத்தில் இருக்கின்ற மாதிரி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் மாதிரியான கோவில் இப்படி ஏதாவது ஒரு கோவில் கட்டி வைத்துள்ளானா? வடநாட்டில் இந்த மாதிரி கோபுரம் இருக்கிறதா? கோவில் இருக்கிறதா? செல்வங்கள் இருக்கிறதா? தங்க நகைகள் கொட்டி கிடக்கிறதா? எந்த இடத்தில்? எந்த மாநிலத்தில்? வடநாட்டில் இப்படிப்பட்ட கோவில் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்.

தமிழன் யோசிக்க வேண்டாமா? வடநாட்டிலிருந்து ஒரு கூட்டம் இங்கே வந்து ’பாரத் மாதாக்கு ஜே’ என சொல்கிறானோ, அவனை அடித்து பந்த வேண்டாமா நீங்கள்? யாருடா நீ என கேட்க வேண்டாமா?

தமிழன் கொத்து கொத்தாக ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பொழுது, காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நின்று தீர்மானம் போட்டு தமிழனை கொலை செய்ய வேண்டும், விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று சொன்னவன் பாரதிய ஜனதா கட்சிக்காரன் & ஆர்எஸ்எஸ் காரன் மறந்து விடாதீர்கள். வெறும் காங்கிரஸ் கட்சிக்காரன் மட்டும் ஈழப்படுகொலைக்கு துணைபோகவில்லை, பிஜேபி காரன் தான் எதிர்க்கட்சி தலைவன் அவனும் சேர்ந்துதான் தீர்மானம் போட்டான்.

இன்றைக்கு அவன் தமிழ்நாட்டை பற்றி பேசிகொண்டு இருக்கான். நான் மதுரையில் வாழ்ந்திருக்கிறேன். எங்க குடும்பத்தில் மதுரை திருப்பரங்குன்ற கோவிலில்தான் மொட்டை போடுவார்கள், காது குத்துவார்கள். என்னுடைய தம்பிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்குதான் கல்யாணம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் எங்கே ஏற்ற வேண்டுமோ அங்குதான் தீபம் ஏற்றி இருக்கிறார்கள். இவன் சிக்கந்தர் தர்கா பக்கத்தில் ஏற்றனும் என்கிறான். ஏன் பிள்ளையார் கோவிலில் ஏற்றினால் முருகன் கோபித்துக் கொள்வாரா? ஏன் முருகனுக்கு பிள்ளையார் கோவில் தீபம் ஏற்ற கூடாதா? என்ன குறைந்து போய்விடும்? முருகனுக்கு தர்கா பக்கத்தில் ஏற்றினால் நியாயமா? ஆனால் முருகனுக்கு பிள்ளையார் கோவில் பக்கம் ஏற்றினால் பிரச்சனையாம்.

என்னவெனில்  பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது முருகனுடைய தகுதிக்கானது கிடையாது. முருகனுக்கு அந்த தகுதி கிடையாது என்று சொல்கிறான். உங்களுக்கு புரிகிறதா? பிஜேபிக்காரன் என்ன சொல்கிறான் எனில், முருகனுக்கு பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுகின்ற அளவுக்கு முருகனுக்கு தகுதி கிடையாது என்கிறான். வேறு என்ன பிரச்சனை?

பிள்ளையாரும் இந்து, முருகனும் இந்து எனில், அங்கு தீபம் ஏற்றினால் நல்ல விசயம்தானே. பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றினால் என்ன வகையில் கெட்டது? என்ன கெட்டு போகும்? கடந்த 100 வருடமாக பிள்ளையார் கோயிலில் ஏற்றுகிறார்களே, மதுரையில் ஏதாவது வெள்ளம் வந்ததா? பூகம்பம் வந்ததா? நிலநடுக்கம் வந்ததா? ஒன்றும் வரவில்லை. நன்றாகதான் இருக்கிறது. இதில் பிஜேபிக்காரனுக்கு என்ன பிரச்சனை? பிள்ளையார் வடநாட்டுசாமி, முருகன் தமிழனுடைய சாமி, தமிழனுடைய சாமிக்கு எப்படி வடநாட்டு சாமியின் இடத்தில் போய் தீபம் ஏற்றி எங்கள்(பிள்ளையார்) சாமியை அசிங்கப்படுத்துகிறான் என்று பிஜேபிக்காரன் வந்திருக்கான்.

தமிழ்நாட்டில் இத்தனை வருடமாக வாழ்ந்திருக்கிறோமே என்றைக்காவது நாம் கேட்டிருக்கிறோமா? யோசித்திருப்போமா? நமக்கு சூடு சுரணை வேண்டும். என்னவெனில் “பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை? பிஜேபிக்காரனை பார்த்து கேட்க வேண்டும். எங்கள் ஊர், எங்கள் மலை, எங்கள் கோயில், நீ யார்? முதலில் நீ யார்? என்று கேட்பதற்கு தமிழனுக்கு துணிவு வேண்டும்.

மேலும் சிக்கந்தர் கோவிலில் உள்ள தர்காவில் வந்து ஆடு மாடு கோழி எல்லாம் பலியிடக்கூடாது. ஏன் அசைவம் சாப்பிட்டால் என்ன பிரச்சனை?  அசைவம் சாப்பிட்டால் நமக்கு வால் முளைத்திடுமா? அல்லது கொம்பு முளைத்திடுமா? அசைவம் சாப்பிட்டால் சாமிக்கு அசுத்தமா?

நம்மளுடைய குலதெய்வத்துக்கு எல்லாம் கெடா வெட்டி கும்பிடுகிறோமே சாமி கோபித்துக்கொள்ளுமா? நாமெல்லாம் அசைவம் சாப்பிடுகிறோம். ஐயர் பசங்க அசைவம் சாப்பிட மாட்டான். அதனால் சைவம் சாப்பிடுவது தான் புனிதமானது என்று நம் மண்டையில் ஏற்றுகிறான். புரியதுங்களா? நம்மை அசிங்கம் என சொல்கிறான். அசைவம் சாப்பிடுபவன் அசிங்கமானவன் என சொல்கிறான். அசைவம் சாப்பிட்டால் என்ன தவறாகி போகும்? என்ன உலகம் இடிந்து விழ போகிறதா? நம்மவர்களை அசிங்கப்படுத்தி கொண்டே இருக்கிறான்.

பலியிடுவது நம் வழக்கம். முருகன் என்பது என்ன? 2500 வருடத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட நம் இலக்கியங்களில் முருகன் என்பவன் ’மலையும் மலை சார்ந்த இடத்தில் வசிக்கக்கூடிய மக்களினுடைய கடவுளாக’ முருகன் அடையாளப்படுத்தப்பட்டார். குறிஞ்சி நிலத்தினுடைய கடவுள் முருகன். இங்கே குறவர் சமூகத்தை சார்ந்து வந்திருக்கிறார்கள். தமிழனுடைய ஆதிக்குடி குறவர் சமூகம்.

மனித இனம் தோன்றிய பொழுது அவன் சமவெளியில் தோன்றவில்லை. மலையும் மலை சார்ந்த இடத்தில் தான் தோன்றினான். அதுதான் குறிஞ்சி திணை என்று சொல்லக்கூடிய முதல் திணை. மனிதன் தோன்றிய இடமான குறிஞ்சி திணையில்தான் இங்கு குறவன் குறத்தியர் வாழ்கிறார்கள். அவர்களுடைய கடவுள்தான் முருகன் என்று சொல்கிறார். குறவன் குறத்தியர் மலையிலே வாழக்கூடியவர்கள், அவர்கள் விவசாயம் செய்து வாழ மாட்டார்கள். வேட்டையாடி வாழ்வார்கள். ஆக முருகன் என்பவர் அசைவ உணவை உண்ணக்கூடிய வழக்கத்தை கொண்ட கடவுள். முருகனுக்கு பழி கொடுக்கக்கூடிய மரபு நம்மளுக்கு இருந்த மரபு.

நான் ஒன்றும் பொய் பேசவில்லை. இத்தனை பேர் கோயிலுக்கு போகுறீர்கள். நான் வந்து சாமி கும்பிடாதவன். ஆனால் என் குடும்பத்தில் இருப்பவர்கள் கோயிலுக்கு போவார்கள். கோயிலுடைய கட்டமைப்பை பார்த்தால், கோயிலில் நுழையும் பொழுது கோபுரம் இருக்கிறது. கோபுர கதவு வழியாக உள்ள போகிறீர்கள். உள்ளே போனால் தேங்காய் உடைக்கும் இடம் வைத்திருப்பான். அதன் உள்ளே போனால் என்ன சாமியோ/ மூலவர் அதற்கான கொடிமரம் இருக்கும். மூலவருக்கான வாகனம் இருக்கும். மூலவருக்கான துவார பாலகர் இருப்பார். அதற்கு பின்தான் கருவரை இருக்கும். கருவரைக்குள்ளதான் கடவுள் இருப்பார். அதனை சுற்றி துணை தெய்வங்கள் இருக்கும். அதற்கான மரம் இருக்கும்.

இதில் தேங்காய் உடைக்கிறீங்களே அது என்ன இடம்? அந்த இடத்துக்கு என்ன பெயர்? கொடிமரம் சொல்றீங்க, வாகனம் சொல்றீங்க, துவாரபாலகர் சொல்றீங்க, கருவரை சொல்றீங்க. இதில் தேங்காய் உடைக்கிறீங்களே அதன் பெயர் பலிபீடம். அந்த காலத்தில் பலி கொடுத்துதான் சாமி கும்பிட்டோம். இன்றைக்கு அதை மாத்திட்டான் தேங்காய் உடைக்கின்ற இடமாக மாற்றிவிட்டான். சாமி என்ன தேங்காய் சட்னியா சாப்பிடுகிறது? அது சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி சாப்பிடுற சாமியா அது. அதுக்கு சர்க்கரை பொங்கலை கொடுத்து இன்றைக்கு சாமிக்கு கொடுத்து சுகர் வந்து போச்சு.

நம்ம சாமி என்ன சாமி? துடிப்பான சாமி. சண்டை போடுகின்ற சாமி. சக்கரை பொங்கலையா எடுத்து சாப்பிட்டுட்டு அருவாளை தூக்கி நிற்க முடியுமா? இந்த எச்ராஜா ஒரு படத்தில் அருவாளை தூக்குறது அருவாள் வந்து எச்ராஜாவை தூக்கிவிடும். யாருக்கு என்ன மாதிரி கடவுளோ, யாருக்கு என்ன வாழ்க்கை முறையோ? அந்த வாழ்க்கை முறையில் நம்முடைய சாமி இருக்கும். அப்படித்தான் நமக்கு முருகன் என்ற பெயர் வந்தது.

நான் கேட்கிறேன்: முருகன் இந்து கடவுள் என்று சொல்கிறான் எனில், எந்த ஐயராவது முருகன் பெயர் வைத்துள்ளானா? முருகன் பெயர் வைக்க மாட்டான். வேல்முருகனோ, திருமுருகனோ, அருள்முருகனோ, வடிவேலோ, பழனியோ, சரவணன்னோ, செந்திலோ, குமரனோ இப்படி எந்த பெயருமே வைக்க மாட்டான். அவன் சுப்பிரமணியன் என்று வைப்பான். பிஜேபிக்காரன் கூட படம் எடுத்தானே! அது ஏன் கந்தன் மலை என்று பெயர் வைக்கிறான்.  ஏன் முருகன் மலை என்று பெயர் வைக்கவில்லை? ஏன்னெனில் “ஸ்கந்தன்” அது தமிழ் வார்த்தை கிடையாது, அது சமஸ்கிருத வார்த்தை. பிஜேபிக்காரன் & ஆர்எஸ்எஸ் காரன் தமிழர்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கிறான். நாம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம்.

இதையே கர்நாடகாவிலோ, மகாராஷ்டிராவிலோ, கேரளாவிலோ அவன் சாமியை இந்த மாதிரி பிஜேபிக்காரன் நம் முருகனை கிண்டல் செய்வது மாதிரி/ அசிங்கப்படுத்துகின்ற மாதிரி இருந்தால், இந்நேரம் அடித்து விரட்டி இருப்பார்கள். தமிழன் ஏன் சூடு சொரணை இல்லாமல் உட்காந்திருக்கிறோம். ”நீ எப்படி என் சாமிக்கு பெயரை மாற்றுவாய்?” என கேட்டிருக்க வேண்டும். ஆறுவடை வீடு என்று சொல்லக்கூடிய முருகனுடைய வீடு, அந்த வணங்குகின்ற இடத்துதிற்கு என்ன பெயர் வைத்திருக்கிறான்? சுப்பிரமணிய சாமி திருக்கோவில் என்று வைத்திருக்கிறான். முருகன் பெயரே வைக்கவில்லையே.

முருகன் என்கின்ற பெயர் 2000 வருடத்திற்கு முன்பிருந்த இலக்கியத்தில் இருக்கிறது. ஆனால் சுப்பிரமணியன் என்ற பெயர் இல்லை. அப்போது நம்மளுடைய இலக்கியத்தில் நம் வரலாற்ற்றில் எந்தபெயரை நாம் கடவுளுக்கு வைக்கிறோமோ, அந்த பெயரை கூட கசக்குமெனில், இந்த அரசியலை புரிந்துக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா?

இதற்காகதான் வள்ளலார் 170 வருடத்திற்கு முன்பே போராடினார். வைப்பதற்கு பாஜக காரன் & ஆர்.எஸ்.எஸ் காரனுக்கு நம் சாமியையும், நம் கோயிலையும் திருடி விட்டார்கள். இன்றைக்கு நமக்கு நல்ல நாமம் போடுவதற்கு வந்து உட்காந்து இருக்கிறான். இதை ஆதரிப்பதற்கு ஒருத்தன் நாம் தமிழர் கட்சி கிளம்பி இருக்கிறான். நாம் தமிழர் என்று பெயருக்கு பதிலாக ஏன் ’நாம் சங்கி’ என்று வைக்க வேண்டியதுதானே.

சீமான் இப்போதெல்லாம் மேடையில் பேச போவதற்கு முன்பே குடித்துவிட்டு இருந்தாரா? என தெரியாது. கல்லு குடித்துவிட்டுதான் கல்லூரிக்கு போவேன் என்று அவரே பேசினார். ஆனால் இன்றைக்கு கோமியம் குடித்துவிட்டுதான் அரசியல் பேச வந்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு துரோகியை தமிழினம் பார்த்ததில்லை.

தந்தை பெரியாரினுடைய மேடையில் ஏறி பெரியாரிய தோழர்களினுடைய அரசியலோடு சேர்ந்து பயணித்து அவர்களை பயன்படுத்திக்கொண்டு, இன்றைக்கு பிஜேபிக்காரன் சங்கி பயலுடன் கை கிடைத்தபின் உடனே பெரியாரை இழிவுபடுத்துகின்ற வேலையை செய்யும் துரோகியை ஒரு நாளை விட்டுவிடக் கூடாது.

ஆர்எஸ்எஸ் காரன் காவி ட்ரவுசர் போட்டு கொண்டு, நாங்கள் எல்லாம் காலையில் உடற்பயிற்சி / மனப்பயிற்சி செய்யப் போகிறோம் என்று, உங்கள் பிள்ளைங்களை கூப்பிடுவான். தயவு செய்து அனுப்பிவிடாதீர்கள். முதலில் உடல் பயிற்சி என்றுதான் கூப்பிடுவான். நம் பிள்ளைகளும் போகும். அதன்பின் எப்படி குடிசைக்கு தீ வைப்பது? எப்படி குடிசைக்கு குண்டு வைப்பது? எப்படி மசூதிக்கு குண்டு வைப்பது? எப்படி கொலை செய்வது? எப்படி கற்பளிப்பு பண்ணுவது? எப்படி பாலியல் வன்முறை பண்ணுவது? போன்ற எல்லாவற்றையும் ஆர்எஸ்எஸ் காரன் கற்றுக் கொடுப்பான். உங்களுக்கே தெரியாமல் குஜராத்துக்கு வகுப்புக்கு போவான். உங்களுக்கே தெரியாமல் உத்தர பிரதேசத்தில் அங்குள்ள பயிற்சி முகாமுக்கு போவான். அங்கு போயிட்டு வந்தபின் கலவரம் பண்ணுவான், ஜெயிலுக்கு போவான். அதன்பின் அந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் எங்கள் பிள்ளைகளை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டுட்டு போயிருவான்.

திருப்புரங்குன்றத்தில் தீபம் ஏற்றவேண்டும் என்று சொல்லி சண்டை போட்டார்களே, அந்த நீதிபதியில் இருந்து எல்லாரும் இருக்கிறானே அவன் வேறு ஆள். காவல்துறையிடம் சண்டை போட்டு மல்லு கட்டி வழக்கு வாங்குபவன் நம்ம ஆள். அதற்கு அவன் வரமாட்டானே!

எந்த ஐயராவது வீதியில் இறங்கி சண்டை போட்டு உள்ளானா? நம்ம ஆளு எல்லாம் முறுக்கிட்டு கிளம்புவான். அவன் வடநாட்டான் அவன் தெளிவாக இருக்கிறான். எந்த சேட்டு மார்வாடியாவது வந்தானா? திருப்புரங்குன்ற முருகன் கோவில் பிரச்சனைக்கு எந்த சேட்டும் வரவில்லை. எந்த குஜராத்தியும் வரவில்லை. எந்த பார்ப்பனரும் வரவில்லை. ஆனால் நம்ம ஆட்கள் போய் நிற்கிறான். கூறு கெட்டவன்கள். நம்மை காலம் காலமாக அடிமைப்படுத்தி கொண்டிருக்கிறான். அதாவது அந்த திருப்பரங்குன்றத்தில் வழக்கு நடத்துகிறாரே அந்த நபர்(ராம ரவிகுமார்) வழக்கில் வென்றாலும் கூட திருப்பரங்குன்ற கோயில் கருவரைக்குள் போய் பூஜை பண்ண முடியாது. வெளியேதான் நிற்க வைப்பார்கள். இப்படி நம்மவர்களை ஆட்களை எடுத்து நம் கண்ணை குத்துகின்ற வேலையை பிஜேபிக்காரன் செய்கிறான். இதற்கு துணை போவதற்கு அவனுக்கு (பார்ப்பனன்) கூலி வேலை செய்யக்கூடிய சீமான் கிளம்பி வந்திருக்கிறான். கேட்டால் நான் பிராமண கடப்பாரை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்கிறான்.

இந்த ’பிராமணன்’ என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். உங்களுக்கு எல்லாம் வரும் நிறைய செய்தியெல்லாம் பொய்யாகவே கதை எழுதி கதை எழுதி அனுப்புவார்கள். இது எப்படி நடக்கிறது? நீங்கள் வாட்சப்பில் படிப்பீர்கள், நம் குடும்பத்தில் உள்ளவர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர் வட்டாரங்கள் எல்லாரும் ஆர்எஸ்எஸ் காரன் பிஜேபிக்காரன் சொல்கின்ற செய்தியை ஒப்புவிப்பான். நம்மவர்கள் என்ன நினைப்போம் எனில், உண்மையாலுமே ஒருவன் உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறான் என்று. இல்லை, இதற்காக 100 பேருக்கு சம்பளம் கொடுத்து சென்னையில் ஒரு அறையெடுத்து ஒரு அலுவலகம் எடுத்து, அதில் பொய்யாகவே கதை எழுதி தினமும் பரப்பிக்கொண்டு இருக்கிறான். அதற்கு 30,000/ 35000 சம்பளம்.

என் பெயர் திருமுருகன். என் குடும்பத்தில் எல்லாம் முருகன் பெயர்தான் வைப்பார்கள். என் குடும்பத்தில் சரவணன், அருள்முருகன், குமரன், செந்தில், சரவணன், வடிவேல், குமாரவேல், முருகானந்தம், ஆறுமுகம், பழனியில் இருந்து இதெல்லாம் மூன்று தலைமுறை பெயர்கள். ஆனால் எச். ராஜா பிஜேபிக்காரன் என்ன பரப்புகிறான்? ”இவன் உண்மையான பெயர் திருமுருகன் கிடையாது, இவன் பேரு கிறிஸ்தவ பெயர்” என்று பரப்புகிறான்.. இது எனக்கு மட்டும் செய்யவில்லை.

விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கிறிஸ்தவர் என்று செய்தி பரப்பிய கும்பல்தான் ஆர்எஸ்எஸ் கும்பல். பிரபாகரன் அவருடைய தந்தையின் வேலுப்பிள்ளை. அது முருகன் பெயர். அவரையே கிறிஸ்தவன் என சொன்னவன்தான் பிஜேபிக்காரன். இவன் என்ன சொல்கிறான் தெரியுமா? ஈழத்தில் அந்த விடுதலை புலிகள் அமைப்பு என்பது கிறிஸ்தவ அமைப்பு ஆகவே அது அழிக்கப்பட வேண்டும் என்று சொன்னவன்தான் ஆர்எஸ்எஸ் காரன். இது கிறிஸ்தவ அமைப்பு என்று அவன் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறான். மேதகு பிரபாகரனுடைய மூத்த மகனுக்கு பெயர்’ சார்லஸ் ஆண்டனி’ என்ற பெயர். யார் அந்த சார்லஸ் ஆண்டனி? அந்த இயக்கத்தில் தன்னை பற்றி எந்த கவலையும் இல்லாமல், தன் உயிரை கொடையாக கொடுத்த மேதகு பிரபாகரனுடைய உற்ற தோழனான அந்த சார்லஸ் பெயரை, தன் மகனுக்கு வைத்தார். ஆர்எஸ்எஸ் காரன் குஜராத்திலிருந்து எழுதுகிறான்: ” தலைவர் பிரபாகரனின் மகன் பெயர் கிறிஸ்தவன், அவன் மொத்தமாக கிறிஸ்தவனாக மாறிவிட்டார்கள்,  விடுதலை புலிகள் ஒரு கிறிஸ்தவ அமைப்பு (மிஷினரி அமைப்பு), அவர் கிறிஸ்தவ கைக்கூலிகள்” என்று கூச்சமே இல்லாமல் எழுதுகிறான்.

ஐயா. நெடுமாறன் அவர்கள் ஆர்எஸ்எஸ் காரனுக்கு நேரடியா கடிதம் எழுதுகிறார். ”அவர்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது, அவர் அப்பா பெயர் வேலு பிள்ளைதான். இவர் பெயர் பிரபாகரன். இவருக்கு திருப்பூர் முருகன் கோவிலில்தான் கல்யாணமே நடந்தது” என்று எழுதுகிறார். அதை பற்றி அவன் கவலைப்படவில்லை. அவன் இதைத்தான் திரும்ப திரும்ப இன்றைக்கு வரைக்கும் பரப்பி ’விடுதலை புலிகள் கிறிஸ்தவர்கள், ஆகவே அழிக்கப்பட வேண்டும்’ என்று கட்டுரை எழுதி பரப்புகிறவன்தான் காங்கிரஸுக்கு கை கொடுத்த பிஜேபி ஆர்எஸ்எஸ் காரன்தான். இவன்தான் நம்மளுடைய ஊரில் கொடியை நட்டு அராஜகம் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

நாங்கள் எந்த பெரிய கட்சிக்கும் (திமுக, அதிமுக) ஆதரிக்கின்ற அமைப்பு (மே 17 இயக்கம்)  அல்ல. நம் ஊரில் பிஜேபிக்காரன் கொடிகட்டி இங்கே கலவர அரசியல் செய்கிறானே, இந்த மாதிரி திமுகவோ அதிமுகாவோ வடமாநிலங்களில் கட்சி கட்டிவிட முடியுமா? சொல்லுங்கள். மகாராஷ்டிராவிலோ, குஜராத்தியிலோ, உத்தர பிரதேசத்திலோ, அதிமுக கொடியை எடப்பாடி ஏற்றிட முடியுமா? ஏற்ற விடுவானா? விடமாட்டான் தானே, அப்புறம் எதற்கு பாஜக கொடி நம் ஊரில் பறக்கிறது? எங்கள் ஊர் கட்சி, எங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, எங்கள் ஊர் கட்சிக்காரன், உன் ஊரில் உன் மாநிலத்தில் நீ சொல்லக்கூடிய ஒரே இந்தியா, அதே பாரத், அதே பாரத் மாதா கி என்று சொல்கிறாயே, அந்த ஊரில் எங்கள் கட்சியை கட்ட முடியாது. ஆனால் உன் கட்சி என் ஊரில் கட்டலாம். ஏன் இங்கே இருக்கின்ற கட்சிக்கெல்லாம் இந்தியா மேல் பற்று இல்லையா? நீ(பாஜக) மட்டும்தான் பற்று வைத்திருப்பாயா? நீ மட்டும்தான் சாமி கும்பிகிடுறாயா?

காந்தியை கொலை பண்ண வந்தது பிஜேபிக்காரன். சுபாஷ் சந்திர போஸ் காட்டி கொடுத்தவன்தான் பிஜேபிக்காரன். காமராஜரை கொலை முயற்சி பண்ணவன்தான் பிஜேபிக்காரன். பிறகு உனக்கு என்ன யோக்கியதை? யாரெல்லாம் வெள்ளைக்காரனுக்கு எதிராக சண்டை போட்டார்களோ, அவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு கொலை செய்த கூட்டம்தான் பிஜேபி ஆர்எஸ்எஸ் மறந்துவிடாதீர்கள்.

அவனுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? மானமுள்ள தமிழனாக இருந்தால், சுயமரியாதை உள்ள தமிழனாக இருந்தால், பிஜேபி கொடியும் நாம் தமிழர் கொடியும் இந்த மண்ணில பறக்க கூடாது. பிராமண கடப்பாரையா நீ(சீமான்) தூக்கிக்கொண்டு வருகிறாய்? ஈரோட்டில் ஆப்பு,  வைத்தோம் அல்லவா, உனக்கு 234 தொகுதியிலும் தமிழர் கட்சிக்காரனுக்கு வேட்டு இருக்கிறது. இந்த தொகுதியில் யாராவது நாம் தமிழக்காரனுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தம்பி உன் தலைவன் உன்ன மொத்தமாக குத்தகைக்கு பிஜேபியிடம் விற்றுவிட்டான். காசு வாங்கிட்டு போயிவிடுவான். நீ அவனை நம்பி, அவன் ஏதோ தமிழ் தேசிய புரட்சி பண்ண போகிறான் என சொல்லி கையில் இருக்கும் காசு எல்லாவற்றையும் கொடுத்துவிடாதே! பிறகு நாசமாக போய்விடுவாய். ஒவ்வொரு தேர்தலிலும் புது புது வேட்பாளர்தான் நிறுத்தி வைக்கிறான், அப்படியெனில் பழைய வேட்பாளர் ஓட்டாண்டியாகி ஓடி போயிவிட்டான் என்று அர்த்தம். உங்களையெல்லாம் மொத்தமாக விற்பதற்கு உங்கள் அண்ணன் உட்கார்ந்து இருக்கிறான்.

இந்த முறை நாங்க சும்மா விட மாட்டோம். மே 17 இயக்கம் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்குதோ, அந்த தொகுதியில் எல்லாம் நாம் தமிழர் தோற்க்கடிக்க ஓட விடுவோம். ஏற்கனவே தோற்கடித்து நீ டெபாசிட் வாங்கவில்லை. அதுவும் கிடைக்காமல் செய்வோம். ஏன்னெனில் தந்தை பெரியாரை என்றைக்கு ஒருவன் இழிவு செய்கிறானோ, அதன்பிறகு அவன் கட்சி எல்லாம் தமிழ்நாட்டில் விடக்கூடாது. என்ன ஆனாலும் பரவாயில்லை, உயிரே போனாலும் பரவாயில்லை. எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது.

பிராமண கடப்பாரை என்று சொல்கிறான். பிராமணன் என்கின்ற வார்த்தை தமிழனை அசிங்கப்படுத்துகின்ற வார்த்தை. எப்படி என்று கேட்பீர்கள். ஏன் சாதி பேரில் பிராமணன் வைத்தால் மட்டும் திட்டுகிறீர்கள்? கோனார் மெஸ், ரெட்டியார் மெஸ், நாடார் மெஸ், எல்லாம் வைத்தால் திட்டுவதில்லையே எனில், கோனாரோ, ரெட்டியாரோ, செட்டியாரோ, வன்னியரோ, பறையரோ, கவுண்டரோ, நாடாரோ, இதெல்லாம் சாதி பெயர்கள். ஐயர் ஐயங்கார் என்பது சாதி பெயர். நீ உன் சாதி என்ன? என கேட்டால் ஐயர் அல்லது ஐயங்கார் என சொல்லலாம். நம்மவர்களை கேட்டால் நம் சாதி பெயரை சொல்கிறோம். ஆனால் அவன் சாதி (ஐயர் அல்லது ஐயங்கார்) பெயரை சொல்ல மாட்டான். ஐயர் என்றால் சைவத்தை பின்பற்ற கூடியவன். அது சிவனை வழிபடக்கூடிய முறையை சேர்ந்தவன். ஐயங்கார் என்றால் வைணவத்தை பின்பற்ற கூடியவன். இதெல்லாம் அவனுடைய கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் சாதி பெயராக பிரிந்துள்ளது.

ஆனால் அவன் சாதி பெயரை சொல்ல மாட்டான். ”நான் ஒரு பிராமணன்”(I am Brahmin) என்று சொல்லுவான். நம்மவர்களை கேட்டால் என்ன சொல்லுவோம்? நம் சாதி பெயரை சொல்லுவோம். அது பறையாரா, வன்னியரா, ரெட்டியாரா, செட்டியாரா, உடையாரா என்பதை சொல்லுவோம். நாம் பிராமணன் என்பதை சாதி பெயர் என நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது சாதி பெயர் அல்ல, அது வர்ண பெயர். வர்ணம் என்பது: பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன். பிராமணன் என்கின்ற வர்ணத்திற்குள் இருக்கின்றவன் தான் ஐயர் ஐயங்கர் என்பதெல்லாம். பிரம்மாவினுடைய தோலிருந்து பிறந்தவன் சத்திரியன். வடநாட்டில் சத்திரியன் தனியாக வைத்துள்ளான். அவன் யார் பூநூல் போடக்கூடிய ஆரியனோ, அவன்தான் சத்திரியன். நம் ஊரில் சத்திரியன் கிடையாது. இங்கு நம்மளாக சொல்லிக்கொள்ளலாம். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். தமிழ்நாட்டில் சில பேர் வைசியன் என்று சொல்லிகொள்கிறான். தமிழ்நாட்டில் வைசியன் சொல்லவில்லை, அவன்  மார்வாடிகளை வைசியனாக வைத்துள்ளான். அவன் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன். பிரம்மாவின் காலிருந்து பிறந்தவன் தான் தமிழன் என்று எழுதி வைத்திருக்கிறான். தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியல் சாதிகள் எல்லாம் சூத்திரர்கள் என்றுதான் எழுதி வைத்திருக்கிறான்.

நீங்கள் உங்க சாதி பெயரை கேட்டால் அவன் சாதி பெயரை சொன்னால் பரவாயில்லை. நீங்க சாதி பெயரை கேட்டால் அவன் வர்ணப் பெயரை சொல்லுவான். அப்படியெனில் தலையில் பிறந்தவன், நம்மவர்களை காலில் பிறந்தவன் என்று இழிவுப்படுத்தும் வர்ணம். இதை நாம் கொல்லவில்லை, அவன்(ஆரியன்) எழுதி வைத்துள்ளான். இப்போதுபுரிகிறதா? அதனால் தந்தை பெரியார் சொன்னார்: அவனெல்லாம்(பிராமணன்) பிரம்மாவின் தலையிலிருந்து, தோலிலிருந்து, தொடையிலிருந்து பிறந்தவன் சொல்கிறான், நாம் சொல்வோம் நாங்கள் எல்லாம் அம்மாவிடம் இருந்து பிறந்தோம் என்று.

அதுதான் பகுத்தறிவு. சாதியில் மேலே எது? கீழே எது? பிரிப்பதுதான் வர்ணம். சாதி பிரச்சனை எல்லாம் இருக்கிறதே அது வர்ணத்தால் வந்ததுதான். பெரியார் ஐயர் / ஐயங்கார் என்று சொன்னால் ஒன்றும் சொல்லாதவர், பிராமணன் என்று சொன்னால் அதை எதிர்த்தவர்.

அந்த பிராமண கடப்பாறையை தூக்கி கொண்டுதான் இன்றைக்கு சீமான் வரேன் என்கிறார். அப்படியெனில் ”பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த இந்த பிராமணர்களை ஆதரித்து, உங்களுக்கு(தமிழர்களுக்கு) எதிராக வருகிறேன்” என்கிறான்..

ஆரியன் வருவதற்கு முன்பு பிராமணன் என்கின்ற பார்ப்பனன் வருவதற்கு முன்பாக இந்த மண்ணிலே இந்தியா முழுவதும் வாழ்ந்தவன் திராவிடன். திராவிடம் என்றால் தெலுங்கு அல்ல, ஆரியர்கள்/ பிராமணர்கள்/ பார்ப்பனர் வருவதற்கு முன்னாகவே இந்த நிலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களினுடைய பெயர்தான் திராவிடன். ஒரு இனத்தின் பெயர் அது. அதற்குப் பிறகு மொழி வருகிறது. மொழியின் வழியாக நாம் தமிழர்கள். அதுதான் அர்த்தம். சீமான் லூசு மாதிரி திராவிடனா தெலுங்கு என்று பேசிக்கொண்டு இருக்கிறான். அவன் படிக்காதவன் என்றைக்கு படித்துள்ளான்? எந்த புத்தகத்தை படித்துள்ளான்? ஏதாவது புத்தகத்தில் உள்ள இரண்டு பக்கங்களை சொல்ல சொல்லுங்கள் பாப்போம். ஒரு அறிவும் கிடையாது.

திராவிடன் என்பதை பற்றி பெரியார் மட்டும் சொல்லவில்லை. அதற்கு முன்பு அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ’திராவிட இயக்க மகாஜன சபை’யை நடத்தினார். திராவிடர் என்ற வார்த்தை அன்றைக்கு வந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பதற்கு, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே அயோத்திதாச பண்டிதர் அந்த பெயரை பயன்படுத்தி இருக்கிறார். சீமான் சொல்லும் திராவிடம் தெலுங்கு என்று பேசுவது முட்டாள்தனம். முட்டாள் பசங்க அப்படி தான் உளறுவார்கள். இவன் சொல்வதின் அர்த்தம் ”இந்தியாவில் பூர்வக்குடி தெலுங்கர்கள்” என்று சொல்லுகிறது நாம் தமிழர் கட்சி.

திராவிடர் என்றாலே இந்தியா முழுவதும் அனைவரும் தமிழர்கள் என்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லி இருக்கிறார். அதைவிடவா சீமான் எல்லாம் அறிவாளி? சீமான் எல்லாம் பொறிக்கி பசங்க. ஒழுங்கா படித்துவிட்டு மக்களிடம் பேசனும். இல்லையெனில் வாயை மூடிக்கொண்டு உட்காரனும். நீ எல்லாம் தகுதி இல்லாமல் தலைவனாக வந்து மக்களுக்கு பொய்யான தகவலையும் புரட்டுகளையும் பேசுகிறான். மக்களை பிரிக்கக்கூடிய விசயங்களை சொல்லக்கூடிய நபர்களை எல்லாம் ஒருபொழுதும் தலைவனாக அனுமதிக்க கூடாது.

புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுகிறார்: திராவிடன் என்கின்ற வார்த்தை, சூத்திரன் என்கின்ற வார்த்தை பற்றி எல்லாம் பேசுகின்றார். அவருக்கு தெரியுமா? தெலுங்கு அரசியல், தமிழ் அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்று, அவர் ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மானுடவியல் வளர்ச்சியை பற்றி ஆய்ந்தறிந்த மாபெரும் மேதை. புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய புத்தகமே அவ்வளவு இருக்கிறது. வாழ்நாளில் படிக்க முடியாத அளவில் இருக்கிறது.

உலகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவனாக வந்த புரட்சியாளர் அம்பேத்கரை விடவா, இந்த நாம் தமிழர் கட்சி காரனின் கூட்டம். இந்த நிலத்தினுடைய பூர்வக் குடியாக வாழ்ந்தவர்களுக்கு பெயர் தான் திராவிடர்கள். அந்த திராவிட இனத்தின் மூத்த குடிதான் தமிழ் குடி அதான் தமிழினம். அந்த இனத்தினுடைய அந்த திராவிட இனத்தின் மூத்த மொழி தமிழ் மொழி. அதைத்தான் தந்தை பெரியார் சொல்லுகிறார்.

ஆகவே பெரியோர்களே தாய்மார்களே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் இழிவுபடுத்தக்கூடிய எந்த செயலையும் நாம் அனுமதிக்க முடியாது. அவர்களது சிலையை அப்புறப்படுத்திய அந்த அதிகாரிகள் எல்லாம் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரின் புத்தகத்தையும் வாசித்து, அதன் மூலமாக அவர்கள் கட்டுரை எழுதி கொடுத்து, அவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடிய வேலையை செய்ய வேண்டும். அப்போதுதான் புத்தகத்தை படிப்பார்கள். முதலில் புத்தகத்தை படித்துவிட்டு வா என்று சொல்லி அவர்களுக்கு நாம் தண்டனை கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »