தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதி, சமீபத்தில் பேசிய உரையானது, இராவண காவியம் போற்றிய பெருந் தலைமைகளின் திராவிடக் கொள்கை, இராமன் புகழ்பாடும் அளவுக்கு தேய்ந்து விட்டதா! என எண்ணும் அளவிற்கு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி என ராமனைப் பற்றிக் கூறியது, திராவிடத்தின் மையக் கண்ணோட்டத்தையே வெடி வைத்து தகர்ப்பதாக உள்ளது.
புதுக்கோட்டை நகர மன்றத்தில் ஜூலை 22, 2024 அன்று, கம்பன் கழக விழா நடைபெற்றது. அதில் சட்ட அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசினார். கம்பன் கழகம் என்பது கம்பராமாயணத்தில் கம்பன் வடித்த கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகளாக ஒவ்வொருவர் குணத்தையும் கொண்டு, அவற்றை இலக்கிய நயத்துடன் கருத்தரங்கம், பட்டிமன்றங்களாகப் பேசி, கம்பனின் வரிகளில் தமிழ்ச் சுவை ஊறுவதாக ருசித்துக் கிடக்கும் இலக்கியவாதிகளில் சிறு கூட்டம் நடத்தும் விழாவாகும்.
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரகுபதி, “பெரியாருக்கு முன்னால், அண்ணாவிற்கு முன்னால், கலைஞருக்கு முன்னால், மு.க. ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன். சமத்துவம், சமூகநீதி, அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை சொல்வதே கம்பராமாயணம். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன். இதை யாராலும் மறுக்கவே முடியாது” – என பாஜக-கட்சியினரின் குரலாகப் பேசினார்.
திராவிட மாடல் அரசு என்று ஒவ்வொரு செயல்பாடுகளிலும் சொல்லும் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த அமைச்சருக்கு, திராவிடமே என்னவென்று தெரியாமல் போனதா? என்கிற கேள்வியே இவர் உரையினால் எழும்புகிறது. திமுக அரசின் ஒரு சில செயல்பாடுகளில் விமர்சனம் இருந்தாலும், திராவிடக் கருத்தியலின் வேர் இன்றும் திமுகவில் இருக்கிறது என்கிற எண்ணமே பெரியாரியக் கொள்கையாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதை அசைத்துப் பார்த்திருக்கிறது சட்டத்துறை அமைச்சரின் இந்த உரை. இன்னும் எத்தனை பேர்கள் இவரைப் போல இருக்கிறார்களோ என வருத்தமே மேலிடுகிறது.
ஆரியத்தின் பெருமை பேசும் கம்பராமாயணத்தை தெருவுக்குத் தெரு நாடகங்களாகப் போட்டு, தமிழர்களின் வரலாறுகளை அழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், பெரியார் மேடை தோறும் இராமாயணப் புத்தகங்களை அடுக்கி வைத்து கம்பராமாயணப் பாத்திரங்களைத் தோலுரித்தார். தொடர்ச்சியாக குடி அரசு இதழில், அதைப் பற்றி எழுதியும் வந்தார். தமிழர் பண்பாட்டை நாசமாக்கிய அதைத் தீ வைத்து கொளுத்த வேண்டும் என காட்டத்துடன் மக்களிடம் பேசினார். அதையே இலக்கிய நடையில், இலக்கியவாதிகளுடன் விவாதம் புரிந்தார் அண்ணா. இராமனைப் புகழ்ந்து இதிகாசம் படைத்த கம்பரை நேர் நிறுத்தி கேள்விக் கணைகளால் துளைக்கும் வகையில் இராவணன் பேசும்படியாக ‘நீதிதேவன் மயக்கம்’ என்னும் நாடகத்தை எழுதினார். பாவேந்தர் பாரதிதாசனும், புலவர் குழந்தையும் இராவணன் புகழ் பாடி கவிதைகள் வடித்தனர். பெரும் கருத்தியல் போரே அன்று வெடித்தது.
தமிழர்களை குரங்குகள், அரக்கர்கள் என இழிவுபடுத்தியது இராமாயணம். அதனைப் போற்றி வடநாடுகளில் நடந்த ராம லீலாவிற்கு மாற்றாக, கடும் போராட்டங்களுக்கு இடையில் ’இராவண லீலா’ நடத்திக் காட்டினார் அன்னை மணியம்மையார். இவ்வாறு இராமாயணத்தை தகர்ப்பதையே திராவிடக் கோட்பாடாக ஏற்றுப் பணியாற்றிய திராவிடத் தலைமைகளின் நோக்கத்தையே போகிற போக்கில் இழிவுபடுத்தி விட்டுப் போயிருக்கிறார் சட்டத்துறை அமைச்சர்.
தமிழர்களின் இயற்கையோடு பிணைந்த வாழ்வியலை கவிநயத்துடன், சொற் சுவையுடன் எடுத்துக் காட்டும் சங்க இலக்கியங்கள் என்னும் புதையல்களை அடியோடு அகற்றி, அந்த இடத்தில் ஆரியக் கற்பனைகளைப் புகுத்தி உருவாக்கப்பட்டதே கம்பராமாயணம் போன்ற கதைகள். இதைத் தெளிவாக அறிந்தவர்கள் திராவிடக் கொள்கையாளர்கள். அதனால்தான் தமிழர்களுக்கென்று தனி இலக்கியம் வேண்டுமென்றால், அதற்கு திருக்குறள் போன்றவை இருக்கிறதே என வாதிட்டார் பெரியார். சங்ககால இலக்கியங்களின் ஊடாக தமிழர்களின் மேன்மையான வரலாறுகளை எடுத்துக் காட்டியவர் அண்ணா.
தமிழர்களின் தனிக்கலைச் செல்வத்தை காட்டும் நூற்களாக சங்க நூற்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அண்ணா. ”தனியான கலையுடன் தனியான வாழ்வும், தனியரசும் பெற்று வாழ்ந்த தமிழர், பின்னர் தாழ்ச்சியுற்றுத் தன்மானம் இழந்து, தன்னரசு இழந்ததற்குக் காரணம் கம்ப இராமாயணம், பெரிய புராணம் போன்ற ஆரியக் கற்பனைகளை உள்ளடக்கிய கலப்புக் கலையைத் தம் தலைமேற் கொண்டதனால்தான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறியவை எல்லாம் திராவிடம் பேசுபவர்களின் மனப்பாடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் திமுக அமைச்சர் ரகுபதிக்கு, திராவிட ஆட்சியையே இராமனின் ஆட்சி என்று சொல்லுமளவுக்கு திராவிட கோட்பாடுகளில் பூச்சியமாக இருக்கிறார்.
“நான் கூறுகிறேன், காதலுக்கும், கற்பிற்கும் இராமகாதையிலிருக்கும் இன்ப நுணுக்கப் பொருள்களை விட மிகச் சிறப்புடைத்தான பொருள்கள் நமது அகப் பொருளில் உண்டு. எனவே கம்பராமாயணம் ஒழியின், காதலுக்கும், கற்புக்கும் கவிதை இரேதே என்று, பண்டிதர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை” – எனப் பண்டிதர்களை வாயடைக்க வைத்தவர்தான் அண்ணா.
அதைப் போல நட்புக்கு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் கொண்ட நட்பு, தியாகத்திற்கு தன் தமையனுக்காக ஆட்சிப் பொறுப்பையே தூக்கி எறிந்து துறவியான இளங்கோவடிகள் செய்த தியாகம் என சங்கக் கவிகளில் தமிழர்களின் மாண்பு பற்றிய வரிகள் மண்டிக் கிடக்கிறது என வாதிட்டவர் அண்ணா. அவர் வழிவந்து விட்டு இன்று இராம காதை புகழ் பாடுவது திராவிடக் கொள்கை திமுகவில் சரிந்து கொண்டிருக்கிறதா! என்கிற அச்சத்தையே புகுத்துகிறது.
‘எங்களின் நோக்கம் கலையைக் கெடுத்ததலுமல்ல, இலக்கியத்தை அழித்தலுமல்ல. கலைப்புரட்சி மூலம் இன எழுச்சி – இன விடுதலை கோருவதேயாகும்…. கம்பனின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். ஆனால் அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம்…’ என்று கம்பராமாயணத்தை ஆதரிக்கும் தமிழறிஞர்கள் அவையில், இராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்ன பெரியாரின் நியாயத்திற்கு வாதத்திறனால் வலுவூட்டினார் அண்ணா. சட்டத்துறையை பராமரிப்பவர் அண்ணாவின் இந்த வாதங்ளை எல்லாம் அறியாமலிருப்பதே வெட்கக்கேடு. அதுவும் எதற்காக இந்த வாதங்களை வைத்தாரோ, அதற்கு நேர்மாறாக ராமனை சமூகநீதி காத்தவன் என்று சொல்வது மாபெரும் மானக்கேடு.
“நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறனையல்ல; அதன் தன்மையை, விளைவை“ என்பதை தெளிவுபடக் கூறியவர். அந்த தன்மைதான் இன்று வரை வடமாநிலங்களில் ராம பக்தியால் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் தொடுக்கும் தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது. அதன் விளைவுதான் ஜெய்ஸ்ரீராம் என்று இஸ்லாமியர்களை சொல்லச் சொல்லி கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் வடநாடுகள் போல கலவரங்கள் உருவாகாமல் இருப்பதற்கு, எதையும் கேள்வி கேட்கச் சொன்ன திராவிட இயக்கத் தலைமைகள் ஊட்டிய பகுத்தறிவே காரணம் என்பது அமைச்சர் ரகுபதிக்கு புரியாமலே இருக்கிறது.
“நொந்த மனம் கொண்டு வையம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ” – என கம்பனே சந்தேகத்துடன் வடித்து வைத்த பாடல்களில் இலக்கிய வளம் ஊறுவதாக கம்பன் விழாக்களை நடத்தும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு, தமிழர்களின் அற நூல்களாக விளங்கும் சங்க நூற்கள் ஒவ்வொன்றுக்கும் விழா எடுக்க மனமில்லை. ஆனால் திராவிடத் தலைமைகள் எழுதுகின்ற, பேசுகின்ற வரிகள் தோறும் தமிழர்களின் சங்க ஏடுகளில் ஊறிக் கிடந்த அறம்தான் இருந்தது. அவர்களின் சிந்தனை தோறும் வடவர் பண்பாட்டிலிருந்து தமிழர் பண்பாட்டை மீட்கும் எண்ணமே விரவிக் கிடந்தது.
இந்த இராமாயணக் கதையின்படி எடுத்துக் கொண்டாலும், சூத்திரனான ’சுக்ரீவன்’ தவம் பண்ணினான் என தலையை வெட்டிய ’ராமன்’ சமூகநீதியுடன் ஆட்சி செய்தான் என்பதும், ’மனைவியை தீக்குளிக்கச் சொன்ன ராமன், ஏற்றத்தாழ்வில்லா சமூகத்தை அருளினான்’ என்றும் திமுக அமைச்சர் பேசியது நகைச்சுவையின் உச்சம்.
காதல் காவியம் என இராமாயணத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதும், பார்ப்பன தர்மத்துக்கான ஆட்சியை நடத்திய ராமனின் ஆட்சியை திராவிட மாடலோடு ஒப்பிடுவதும், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ராம ராச்சியம் அமைப்பதன் குரலன்றி வேறல்ல. பெரியார், அண்ணா போன்ற திராவிடத் தலைமைகள் முன்னெடுத்த, தொலைநோக்குடன் கூடிய கலைப் புரட்சியையும், திராவிட இயக்கக் கொள்கைகளின் வேரையும் இவரைப் போன்ற அமைச்சர் பெருமக்கள் அறியாதிருப்பது, திராவிடக் கொள்கைகளை பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு ஊட்டம் கொடுக்கக் கூடியது.
இந்த பிற்போக்கு சக்திகளுக்கும், இந்துத்துவ வெறியர்களுக்கும் எதிரான அரசியலை கைக்கொள்ளவே மே 17 இயக்கம் ‘இராவணன் பெருவிழா’ கொண்டாடியது. விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் சனநாயகக் கட்சியுடன் இணைந்த ’தமிழ்த் தேசிய கூட்டணி’ சார்பாக நடந்த அந்த விழாவில், ஆரிய மேன்மைக்கு ராமன் என்றால், திராவிட மேன்மைக்கு இராவணன் என தமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாவாக அவ்விழாவை மே 17 இயக்கம் முன்னிறுத்தியது. ‘எம் தமிழர் மூதாதை இராவணன் காண்’ – எனப் போற்றிப் பாடிய பாவேந்தரின் எண்ணத்திற்கு உரமூட்டிய விழாவாக அது அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் இராவணன் பெருவிழா கொண்டாடுவோம் என தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் உறுதியெடுத்துக் கொள்ளப்பட்டது.
சமூகநீதி, சமத்துவம், திராவிட மாடல் என்பதன் முழுமையான விளக்கத்தை அறியா விட்டாலும், திராவிடத் தலைமைகள் ஊட்டிய அறிவை உள்வாங்கிக் கொள்ளும் திமுகவின் கடைக்கோடி தொண்டனால் திமுகவின் வெற்றி உறுதியாகிறது. அந்த வெற்றியால் பதவியைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பெருமகன் நேர்மாறான கொள்கையுடன் உறவாடுவது அவர்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கிறது.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும் என்று முதல்வர் பேசுகிறார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் வடக்கிலிருந்து நம் மீது திணித்த இராமனைப் போற்றி புகழ்கிறார். திமுக-வின் ஒரு சில செயல்பாடுகளில் விமர்சனம் இருந்தாலும் தமிழர்களின் பண்பாடு வகையினில் சமரசம் செய்து கொள்ளாது என்றே நினைக்கும் திராவிட, பெரியாரியக் கொள்கையாளர்களின் எண்ணத்தில் இடி விழுந்திருக்கிறது சட்டத்துறை அமைச்சரின் பேச்சு.