தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் வகையில் அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெறவிருக்கும் ஈரோடு இடைத்தேர்தலில் மே17 இயக்கம் பரப்புரையை தொடங்கி இருக்கிறது. சனவரி 27, 2025 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் சிலைக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பரப்புரையை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் சனவரி 29, 2025 பரப்புரை செய்தார். மாலை 5 மணியளவில் துவங்கிய பரப்புரை இரவு 9 மணிக்கு பலவேறு இடங்களில் நடந்தது.
ஈரோட்டுப் பரப்புரையில் தோழர். பிரவீன் குமார் ஆற்றிய உரையின் சுருக்கம்:
மானமுள்ள ஈரோட்டு வாழ் மக்களே, உங்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய தேசிய கூட்டணி சார்பாக, எங்கள் தோழர் திருமுருகன் காந்தியின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மானமுள்ள ஈரோடு வாழ் மக்களே என்று ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் ஊருக்கு மானமில்லாத ஒருத்தன் வந்திருக்கிறான். அந்த மானமில்லாத ஒருத்தனை அம்பலப்படுத்த, அவனின் தமிழ் தேசியத்துக்கு எதிரான இழிவான அரசியலை அம்பலப்படுத்துவதற்கு, சென்னையிலிருந்து மட்டுமல்ல பல்வேறு ஊரிலிருந்தும் கிராமத்திலிருந்தும் பெரியார் தொண்டர்கள், பெரியாரிய தோழர்கள் வந்துள்ளோம். பெரியாரினால் படித்த காரணத்தினால்தான், நாங்கள் எல்லாம் ஒவ்வொரு ஊரில் இருந்தும் வந்துள்ளோம். எங்கள் குடும்பத்தை, எங்கள் பிள்ளைகளை விட்டுவிட்டு, வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு உங்கள் ஊருக்கு வந்திருக்கிறோம்.
ஏனென்றால் உங்கள் ஊரில் அம்மணமாக ஒரு எலி சுத்திக் கொண்டு இருக்கிறதாம், அந்த எலி கடந்த ஐந்து நாளாக உங்கள் தெருவில்தான் போய் வருகிறதாம். அந்த எலிக்கு ஒருவன் கோமணம் கட்டி விட்டானாம். அந்த கோமணத்தில் என்ன எழுதி இருந்ததென்றால், ஆர்எஸ்எஸ் கொடியான, சங்பரிவார் அமைப்பின் காவிக்கொடி அந்த எலி கோவணத்தில் இருந்ததாம். இப்போது தமிழ் தேசிய கூட்டணியின் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், கே.எம்.ஷெரிப் ஆகியோர் சேர்ந்து ஏன் வந்திருக்கிறோம் என்றால், அந்த அம்மணமாக ஓடுகிற எலியுடைய கோணத்தைப் பிடுங்கி அடிக்க வந்திருக்கிறோம்.
இவர் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாரே என்று பார்க்காதீர்கள். இந்த நிலத்தில் பிறந்து, இந்தியா முழுவதும் சுயமரியாதை விடயத்தை பிரச்சாரமாக எடுத்து, உலகம் முழுவதும் சுயமரியாதைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்றியது தந்தை பெரியார். அவரை ஒருவன் அவதூறு செய்து கொண்டே இருக்கிறான். அந்த மண்ணில் இருந்து கொண்டு, பெரியார் பெண்களை இச்சையா பேசினார், அவமானமாக பேசினார், அசிங்கமாக பேசினார், தாய்மொழி தமிழை தப்பாக திட்டி விட்டார் என்று பொய்யான தகவல்களை, இந்த அரசியல் களத்தில் வந்ததில் இருந்து ஒருவன் சொல்லிக் கொண்டே இருக்கிறான். இப்படி சொல்கிறாயே, இதற்கு ஏதாவது ஆதாரம் காட்டு என்று நாங்கள் அவனை நோக்கி அறிக்கை விட்டபோது, கூட்டணியுடன் இணைந்து பத்திரிக்கை சந்திப்பு நடத்தி எங்கள் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் கேள்வி கேட்டபோது, அதெல்லாம் நான் தரமாட்டேன் என்று அவன் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.
கடந்த ஒரு வாரம் முன்பு நாங்கள் என்ன செய்தோம் என்றால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அங்கமாக இருக்கக்கூடிய கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலே, தோழர் ஷெரிப், தோழர் குடந்தை அரசன், தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைப்பிலிருந்து 3000 பேர் சீமான் வீட்டை முற்றுகையிட்டோம். கருப்பு சட்டைக்காரர்கள் கூடி முற்றுகையிட்ட உடனே, அங்கு வந்த பெண்கள் எல்லாம் சீமானுக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து எதிர்ப்பு தெரிவித்த பிறகு வீட்டுக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சீமான், திடீரென்று வெளியில் வந்து, ‘நான் அவங்களை எல்லாம் சந்திக்க மாட்டேன், நான் பேசியதற்கு ஆதாரம் கொடுக்க மாட்டேன்’ என சொல்லிட்டு திரும்பி வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்து கொண்டான்.
அவன் உருட்டுக்கட்டையுடன் 100 அடியாட்களை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருந்து கொண்டான். வடிவேலு சுந்தர்.சி-யிடம் ஒரு படத்தில் சொல்வது போல, ‘வாடா, எங்க தெருவுக்கு, ஊருக்கு’ என்றான். நாங்கள் சென்றால், உடனே நான் ஊரில் இல்லடா, எங்க தெருவுக்கு வாடா என்றான், தெருவுக்கு சென்றால் உடனே அடுத்து எங்கள் வீட்டுக்கு வாடா என்றான். வீட்டுக்கே சென்றோம், வீட்டில் பூட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, இப்போது ஈரோட்டிற்கு கிளம்பி வந்து விட்டான். இப்போது நாங்கள் சிங்கம் படத்தில் சூர்யா, வில்லனான ஆப்பிரிக்கனை துரத்திக் கொண்டு போவதைப் போல, அந்த வில்லன் கண்டம் விட்டு கண்டம் போகிறானோ அங்கெல்லாம் சூர்யா போவதைப் போல, நாங்களும் எல்லா இடத்துக்கும் உன்னைத் (சீமான்) துரத்தி வந்து கொண்டு இருக்கிறோம். நீ (சீமான்) பெரியார் பற்றி, தமிழகத்துக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக எங்கெல்லாம் பதிவு செய்கிறாயோ, அது போலியானது பொய்யானது என அம்பலப்படுத்துவது தான் எங்களுடைய வேலை. அதற்காகத்தான் வேலை வெட்டி, குடும்பம், குழந்தைகளை எல்லாம் விட்டு, எங்கள் பொருளாதாரத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு உன்னை (சீமான்) சந்திக்க வேண்டும் என்று வந்திருக்கிறோம்.
இந்த தொகுதியிலே வருகின்ற ஐந்தாம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இறந்து விட்டார். அவரின் மேல் எங்களுக்கும் விமர்சனம் இருக்கிறது. மாற்றுக் கருத்து இருக்கிறது. ஆனால் இறந்த பிறகு அந்தப் பிணத்தை வைத்து இழிவு அரசியல் பேசலாமா? நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒருவன் பொதுக்கூட்டத்தில் ‘நாங்கள் திமிராக நிற்கிறோம், செத்துப் போனவர் எங்கே’ என்று கேட்கிறான். அவர்தான் இறந்துவிட்டாரே, அவரிடம் போய் பதிலைக் கேட்டுக் கொண்டு நிற்கிறான். இதுதிமிர்த்தனமான பேச்சு அல்லவா. வயது மூப்பின் அடிப்படையிலோ நோயின் அடிப்படையிலோ உடல் வலிமையற்று இறந்தவர்களை நோக்கி ‘அவன் செத்து விட்டான், நான் நிற்கிறேன்’ என்று பேசுவது எவ்வளவு திமிர்த்தனமாக இருக்க முடியும். அவன் கட்சியின் வளர்ப்பு இது. அவனுக்கு சரியாக அரசியல் சொல்லிக் கொடுத்திருந்தால் இப்படிப் பேசுவானா? பிணத்திடம் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கு (நாம் தமிழர்) திராணி இருந்தால், நெஞ்சில் துணிவு இருந்தால் உயிரோடு இருக்கும் எங்களிடம் கேள்வியை கேட்க வேண்டும். விவாதத்திற்கு வர வேண்டும்.
அவர்கள் ஆர்எஸ்எஸ் முதுகுக்கு பின்புறம் ஒளிந்து கொண்டு, ஆர்எஸ்எஸ் முதுகில் ஏறி சவாரி செய்யும் பாஜக மோடி மேல் உட்கார்ந்து கொண்டு அவமானமின்றி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்றைக்கு அத்தனை பிரச்சனைக்கும் மூலக் காரணம் ஒன்றிய அரசு நிதி தராதது தான். தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட 18,200 கோடி ரூபாய் நிதி தரவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் 1,200 கோடி ரூபாய் ஒன்றிய அரசு தரவில்லை. அந்த 100 நாள் வேலை திட்டத்தில் யார் வேலை செய்கிறார்கள்? ஏழை எளிய விவசாயி மக்கள்தான் வேலை செய்கிறார்கள். அந்த 1,200 கோடியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது. 1,200 கோடியை தராமல் இன்றைக்கு 3,000 கோடிக்கு படேல் சிலை நிறுவி இருக்கிறார்கள். மோடி போடும் ஒரு கோட் சூட்டின் விலை சுமார் 40 லட்சம். ஆனால் ஏழை விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்துக்கு போகும்போது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய ₹100 – ₹300 ரூபாய். அதைக் கூட மக்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இன்றைக்கு ஈரோட்டில் தோல் தொழிற்சாலை பிரச்சனை, நூல் விலை பிரச்சனை என எல்லாவற்றிற்கும் காரணம் ஜிஎஸ்டி. வெங்காயம் பூண்டு தின்னாத நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி ஒரு பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். இங்கு உழைக்கும் குடிகள், வணிகர்கள்,வியாபாரிகளை கேட்டால் ஜிஎஸ்டி மூலம் எவ்வளவு ஊதியத்தை லாபத்தை இழந்தோம் என்று சொல்வார்கள். மார்வாடி சேட்டுகள் கடை வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் அந்த கடையில் கூலிக்கு வேலைக்கு இருக்கிறார்கள். இதை செய்தது ஒன்றிய மோடிய அரசு.
இன்றைக்கு நம் பிள்ளைகள் படித்து பட்டம் பெறுவது கூட செல்லாது என்று அறிவிக்க யுஜிசி-ஐ கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மாட்டேன் என்கிறது. நீட் விலக்கு கொடுக்கவில்லை, ஜிஎஸ்டி உரிமை கொடுக்கவில்லை, மாநிலத்திற்கு மெட்ரோ ரயிலுக்காக பணம் கொடுக்கவில்லை. இப்படி தமிழ் சமூகத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மோடிக்கு எதிராக கடந்த 14 வருடமாக களத்தில் நிற்கிறோம். பாஜகவிற்கு எதிராக நின்று வாக்குகள் சேகரித்தோம்.
ஆனால் சீமானின் சுண்டு விரல் பெரியார் நோக்கி கேள்வி எழுப்புகிறது. செத்துப்போனவர்களை பற்றி கேள்வி எழுப்புகிறது, ஆனால் நேரடியாக இந்த மண்ணினுடைய மக்களுக்கு எதிரியாக இருக்கக்கூடிய அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல். முருகன், மோடி, அமீத்ஷா என பாஜகவை சார்ந்தவர்கள் எவரிடமும் அது ஏன் நீட்ட மறுக்கிறது, ஏனென்றால் அவர்கள் காசு தருகிறார்கள், அவர்களின் பாதுகாப்பில் சீமான் பேசுகிறான்.
அந்தக் கட்சியினுடைய இரண்டாம் கட்ட தலைவர் ஆன சாட்டை துரைமுருகன் வீட்டுக்கு NIA சோதனை போனது. ஒரு முஸ்லிமுடைய வீட்டுக்கு NIA போகும் போதும், ஒரு தலித்துடைய வீட்டுக்கு போகும் போதும், உடனே பாம் வைத்திருக்கிறான், பணம் வைத்திருக்கிறான் என்று உடனே செய்தி போடுவார்கள். சாட்டை துரைமுருகன் வீட்டிற்கு சென்ற சோதனைக்குப் பிறகு ஏன் விசாரணைக்கு கூப்பிடவில்லை. இதில் என்ன உள்குத்து இருக்கிறது? வெளிப்படையாக எந்த செய்தியும் வரவில்லை. ஈழத் தமிழர்களிடம் திறள்நிதி என்கிற பெயரில் பணத்தை சேகரித்து அண்ணனுக்கு (சீமான்) வீடு வாங்கித் தருவது சொத்து வாங்கித் தருவதும் தான் அவனுடைய பினாமி வேலையாக இருக்கிறது. அவன் வீட்டுக்கு NIA சென்றதும், மோடி அரசின் எதிர்ப்பு என்று புள்ளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். இந்திய அரசு NIA அனுப்பி மிரட்டும் அளவுக்கு பாஜக குறித்தோ, காங்கிரஸ் குறித்தோ, ஈழ இனப்படுகொலையில் இந்திய அரசின் சம்பந்தம் குறித்தோ, சர்வதேச அளவிலோ, இந்திய அளவிலோ, தமிழ்நாட்டு அளவிலோ என்ன தாக்கத்தை செய்தார்கள்?
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை எங்கள் தோழர் திருமுருகன் காந்தி ஐநாவில் சென்று நிரூபித்தார். வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு நீதிபதிகளிடம் சென்று ஆய்வுப்பூர்வமாக பேசினார்.
நாம் தமிழர் கட்சி என்றைக்காவது இது போல செய்து இருக்கிறதா? ஈழத்திற்கு பச்சை துரோகம் செய்து, பிரபாகரன் பிணத்துக்கு மீது, ஈழ மக்கள் பிணத்தின் மீது ஏறி நின்று அவர்கள் அரசியலுக்கு துரோகம் செய்கிறான் சீமான். இன்றைக்கு தமிழ்நாட்டிலே பெரியாரையும், பிரபாகரனையும் எதிராக வைத்து அரசியல் பிழைத்துக் கொண்டிருக்கிறான் சீமான். அவமானம் வெட்கம் எதுவும் இல்லாதவன். அன்று பிரபாகரன் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்ததும், பிரபாகரனுக்கு ஆயுத பயிற்சி கொடுத்ததும் கொங்கு மண்டலத்தில் இருந்த பெரியார் தோழர்கள் தான். அந்த பெரியாருடைய சமூக நீதி கோட்பாடை, பெண் உரிமை கோட்பாடை அமல்படுத்திய இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம்.
ஆனால் சீமான் இப்பொழுது வெங்காயமா, துப்பாக்கியா, பார்த்துவிடலாம் என்று பேசுகிறான். வெங்காயம் கொடுத்ததும் நாங்கள் தான், துப்பாக்கியை பாதுகாப்பாக சேர்த்ததும் பெரியாரியத் தோழர்கள் தான். சீமான் ஒரு விரலை கூட ஆட்டவில்லை. விஜயலட்சுமி வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். நாங்கள் களத்தில் இருந்தோம். முல்லை பெரியாருக்காக, மீத்தேனுக்காக, கல்வி உரிமைக்காக, சாதி வன்கொடுமைக்காக நாங்கள் களத்தில் இருந்து கைதாகி சிறைக்குள் சென்றோம்.
செரீப் தோழரோ, குழந்தை அரசன் தோழரோ, திருமுருகன் காந்தியோ என இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாமே தமிழ் மொழிக்காக, இனத்திற்காக வாழ்வுரிமைக்காக போராடி சிறை சென்று வந்தவர்கள். நாங்கள் ஓட்டு அரசியலில் நிற்கவில்லை. ஓட்டு அரசியல் என்பது எங்கள் பிரதானம் அல்ல. யார் வேண்டும் என்றாலும் எம்எல்ஏ, முதலமைச்சர் ஆகட்டும். சர்வதேச பொய் அணியுடைய சங்கத் தலைவராக இருக்கக்கூடிய சீமான் என்கிற காசுக்காகவே வேலை செய்யக்கூடிய ஆர்எஸ்எஸ் அடியாள். அவன் உங்கள் மண்ணில் தேர்தலுக்காக வந்து நிற்கிறான். இதே மண்ணில் வந்து பெரியார் பற்றி அவதூறு அரசியலை பேசிக் கொண்டு வரும் போது, சோற்றில் உப்பு போட்டு தின்னும் மானவுள்ளவர்கள், இங்கே வரவேற்றீர்கள் என்றால், நீங்கள் இழிவானதை தந்தை பெரியாருக்கு செய்றீர்களென்று அர்த்தம்.
எங்களுக்கும் வேலை குடும்பம் எல்லாம் இருக்கிறது. இங்கு உங்களுடைய மானம் போய் விடக்கூடாது, ஈரோட்டினுடைய மானம் போய்விடக் கூடாது என்றே வந்து நிற்கிறோம். இந்த அவதூறு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற வேண்டுகோளை விடுக்கத்தான் வந்திருக்கிறேன். உங்கள் வாக்கு ஒருபோதும் பெரியாரையும் பிரபாகரனையும் மோசமாக பேசக்கூடிய, அவதூறு செய்து ஈனப்பிழைப்பு செய்யக்கூடிய சீமானுக்கு ஒருபோதும் போய் விடக்கூடாது. நாங்கள் அதிமுக, தேதிமுக, விஜய் ரசிகர், எஸ்டிபிஐ என்று சொல்லி, ஒரு பொழுதும் திமுகவுக்கு ஓட்டு போட்டது கிடையாது என்று சொல்வீர்கள் என்றால், அதற்கு மாற்றாக சீமானுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். ஆனால் பாஜகவினுடைய செல்லப்பிள்ளையாக நிற்பது மூலம் முன்பு வாங்கிய நாம் தமிழர் ஓட்டு மற்றும் பாஜக ஓட்டினை சேர்த்து வாங்குவதற்கும், தமிழ்நாட்டில் திராவிடத்தை எதிர்த்து, ஈரோட்டில் பெரியாரை எதிர்த்தே நாங்கள் (நாம் தமிழர் கட்சி) 20,000/30,000 ஓட்டு வாங்கி விட்டோம் என்று தமிழக மக்களை மடை மாற்றுவதற்காகவும் சங்கி சீமான் ஈரோட்டுக்கு வந்திருக்கிறான். அப்படி என்றால், அந்த சங்கி சீமானை அம்பலப்படுத்த வேண்டியது நம் கடமையா, இல்லையா?
இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி அதிகார வர்க்கத்தின் மீது கோவம் இருந்தது என்றால், நீங்கள் சுயமரியாதை மிக்க எங்க தோழர் வெண்ணிலா அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். வெண்ணிலா கவுன்சிலராக இருக்கிறார். தமிழினத்துடைய துரோகி சீமானை விரட்டி அடிக்க பெரியாருடைய பேத்தி வெண்ணிலா அவர்கள் கணக்கீட்டு பொறி(calculator) சின்னத்தில் நிற்கிறார். சீமானை தோற்கடிக்க வேண்டும் என்றால், வலதுசாரி தமிழ் தேசியத்தை வீழ்த்தி இடதுசாரி தமிழ் தேசிய தலைவர்களான பிரபாகரனையும், தந்தை பெரியாரையும் தூக்கிப் பிடிக்கக்கூடிய அரசியலுக்கு நீங்கள் விருப்பப்பட்டீர்கள் என்றால், எங்களுடைய வேட்பாளரான வெண்ணிலா அவர்களுக்கு கால்குலேட்டர் சின்னத்தில் வாக்களியுங்கள்.
தந்தை பெரியாருடைய அர்ப்பணிப்பை, தந்தை பெரியாருடைய தியாகத்தை சோற்றில் உப்பு போட்டு தின்பவர்கள் எவரும் மறக்க மாட்டார்கள். எவன் பெரியாரை எதிர்க்கிறானோ எவன் பிரபாகரனுக்கு துரோகம் இழைக்கிறானோ, அவனை வீழ்த்துவது எங்களுடைய கடமை. அந்த முன்னணிப்படையில் மே 17 இயக்கம் மட்டுமல்ல, குழந்தை அரசன் மட்டுமல்ல, ஷெரிப் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழினத்தில் பிறந்தவனும் நின்று களமாட வேண்டும் என்று கூறி முடிக்கிறேன்.