
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறியைத் தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்துவது தொடர்பாக, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பிப்ரவரி 8, 2025 அன்று சென்னையில் ஊடக சந்திப்பை நடத்தினார். இதில் அவருடன் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக தோழர். குமரன் அவர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்த ஊடக சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசியதின் சுருக்கம்:
“தந்தை பெரியாரை இழிவு செய்து, அவதூறு செய்து வாக்குகளை வாங்கிவிட முடியும் என்று நம்பிய சீமான் கட்சியினுடைய வேட்பாளர் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கின்றார். பெரியாருக்கு ஆதரவாக ஈரோட்டில் வாக்குகள் கிடைக்காது என்று பேசினார் சீமான். பெரியார் சிலையை உடைப்பேன் என்று அவர் கட்சிக்காரர்கள் பேசினார்கள். பெரியாருடைய படங்களை கிழித்தார்கள். அங்கே பரப்புரை செய்த பிற வேட்பாளர்கள் மீது நாதகவினர் வன்முறையை ஏவினார்கள். இத்தனை செய்தும் கூட பெரிய விகிதத்தில் அவர்களால் வாக்குகளை வாங்க முடியவில்லை. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளாக அதிமுக, பாரதி ஜனதா கட்சி, புதிதாக வந்திருக்கக்கூடிய விஜய் கட்சி என எந்த கட்சியும் நிற்கவில்லை. கடந்த மூன்று / நான்கு ஆண்டுகளில் நாதக தான் திமுகவினுடைய ஒற்றை எதிர்க்கட்சி என்பது போல பேசி வந்தார் சீமான். நான்தான் திமுகவினுடைய எதிரி என்பது போல பேசி வந்தார். ஆனால் திமுகவினுடைய தவறுகள் அல்லது நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து அவரைத் தவிர அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளுக்காக அவரது கட்சியை விட சமூக இயக்கங்கள்/ மக்கள் இயக்கங்கள் தான் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆக அவர் உண்மையான எதிர்க்கட்சி அல்ல என்பது முதல் கட்டமாக நிறுவனமாகி இருக்கிறது.
மேலும் பெரியார் குறித்து இழிவாக அவதூறு செய்யும் வகையிலே சீமான் பேசியது அவரது வாய்ப்பை மிகப்பெரிய அளவுக்கு குறைத்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மையாக இப்பொழுது வெளிப்பட்டிருக்கிறது. தந்தை பெரியாரை, தமிழ்நாட்டினுடைய தலைவர்களை அவமானப்படுத்தி அவதூறு செய்தெல்லாம் தமிழ்நாட்டிலே தேர்தல் அரசியலை செய்துவிட முடியாது என்பது இப்பொழுது அம்பலமாகி இருக்கிறது. இதற்குப் பிறகாவது அவர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வார் என்று நாங்கள் நம்புகின்றோம். அவர் மாற மறுத்தார் என்றால் தொடர்ச்சியாக தேர்தலில் அவருக்கான பாடங்கள் கற்பிக்கப்படும் என்பதையும் இச்சமயத்தில் அவருக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இப்படியான தேர்தல் முடிவுகளை அவருக்கு கொடுத்ததற்காக ஈரோடு மக்களுக்கு நாங்கள் எங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது திருப்பரங்குன்றத்தை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி செய்கின்ற வன்முறை கலாச்சாரத்தைக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் ஒரு மதவெறியைத் தூண்டுவதற்காக பாஜகவினர் முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் மலையிலே எது இசுலாமியர்களுக்கு உட்பட்ட பகுதி எது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உட்பட்ட பகுதி என்பதை 1920 ஆண்டிலேயே நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அந்த நீதிமன்ற தீர்ப்பு மேல்முறையீடு சென்று அன்றைக்கு பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது. அதற்குப் பிறகு 1975 இல் இது குறித்தான விவாதம் வந்தபொழுதும் கூட எது இசுலாமியர்கள் பகுதி எது முருகன் கோவிலுக்கு உட்பட்ட பகுதி என்பதை வரையறை செய்து உறுதிப்படுத்தி விட்டார்கள்.
ஆக 1920 தீர்ப்பை மீண்டும் மீண்டும் நீதிமன்றங்கள் உறுதி செய்த பிறகு, மீண்டும் தவறான கோரிக்கைகளை, மதவெறி ஊட்டுகின்ற கோரிக்கைகளை இந்துத்துவ அமைப்புகள் முன்வைத்து நீதிமன்றத்தை நாடி இருக்கின்றன. இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் எந்த வகையிலும் தமிழர்களை பிரதிபலிக்கக் கூடிய அமைப்புகள் அல்ல. அவை அதிகாரப்பூர்வமாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும் அல்ல, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும் அல்ல. இந்த அமைப்புகளுடைய நோக்கமே மதவெறியை தூண்டுவதும், மக்களை மத அடிப்படையில் பிரிப்பதுமாக இருக்கிறது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகளினுடைய வழக்குகளை நீதிமன்றம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை நாங்கள் நீதிமன்றத்தில் வைக்க விரும்புகின்றோம்.
திருப்பரங்குன்றமும் அங்கே இசுலாமியர்களுக்கான வழிபாட்டு தளமும் திடீரென்று வரவில்லை, நீண்ட காலமாகவே இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத சிக்கலை இன்றைக்கு ஒரு மதவெறி அமைப்பு சனநாயக கட்டமைப்பில் இல்லாத ஒரு அமைப்பு உருவாக்குகிறது. இந்தியாவில் சாதி மத பாலின வேறுபாடு இன்றி அனைவரும் உறுப்பினராக இருக்கக்கூடிய ஒன்றுதான் சனநாயக அமைப்பு. ஆனால் ”குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வேறொரு மதத்தை எதிரியாக பார்ப்பேன் என்று வெளிப்படையாக சொல்லுகின்ற ஒரு அமைப்பு நீதிமன்றத்தை நாடும் பொழுது, நீதிமன்றம் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த அடிப்படையில் இந்த வழக்கை நிராகரித்திருக்க வேண்டும். இது விசாரணைக்குரிய வழக்கு அல்ல என்று 2023இல் இவர்கள் வழக்கு போட்டபொழுது நிராகரித்திருக்க வேண்டும்”. 2023இல் வழக்கு தொடுத்து, அது விசாரணைக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட நேரத்தில் கலவரத்தை கொண்டு வரவேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கம்தான் இதற்குக் காரணம்.
மதுரையிலே இசுலாமியர்களுக்கான வழிபாடு என்பது திருப்பரங்குன்றம் மலையில் மட்டும் கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மாறவர்மன் சுந்தரபாண்டியன் இசுலாமியர்களுக்கான வழிபாட்டுத் தளமாக ஹாஜிமார் பள்ளிவாசலுக்கு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து அங்கே பள்ளிவாசல் எழுப்புவதற்கான எல்லா உதவிகளையும் செய்தார் என்பது வரலாறு.
பாண்டிய அரசர்கள் இசுலாமியர்களை எதிரிகளாகவோ இரண்டாம் தர குடிமக்களாகவோ பார்க்கவில்லை. அவர்கள் ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரியினுடைய தேங்காய்ப்பட்டணத்தில் இந்தியாவின் பழமையான இசுலாமிய வழிபாட்டு தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தமிழர்களின் ஒற்றுமையை, வட இந்தியாவில் இருக்கக்கூடிய மதவெறி அமைப்புகளால் தூண்டப்படுகின்ற இந்துத்துவ அமைப்புகள் சீர்குலைக்க முயலுவதை நீதிமன்றங்கள் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியை முன்வைக்கின்றோம்.
தமிழ்நாட்டினுடைய பாதுகாப்பும் தமிழ்நாட்டினுடைய அமைதியும் மிக முக்கியம். இந்த அமைப்புகள் கோவை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகள். இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர் கோவை நகரத்தில் தனது அமைப்பிலிருந்து இடதுசாரி அமைப்புக்கு சென்றார் என்கின்ற ஒற்றை காரணத்திற்காக 21 வயது இளைஞர் ஒருவரை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தார்கள். 10 நாட்கள் அந்த இளைஞர் மருத்துவமனையில் போராடிய பிறகு அவர் இறந்து போனார். இதற்காக இந்து முன்னணியைச் சார்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதற்கான தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கு தொடுத்தால், நீதிமன்றம் உடனடியாக அதை நிராகரித்திருக்க வேண்டும். பிரிவியூ கவுன்சில் வரைக்கும் சென்று, அதற்குப்பிறகும் நிலைநிறுத்தம் செய்யப்பட்ட ஒரு தீர்ப்பு இருக்கும் பொழுது, எதற்காக நீதிமன்றம் இது போன்ற வழக்குகளை எடுத்துக் கொள்கிறது என்பதை நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.
திட்டமிட்ட ஒரு மத வெறி நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடிய ஆபத்தும் இருக்கிறது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மதுரை என்பது தமிழர்களுடைய பழமையான நகரம். தமிழ் மொழியினுடைய அடையாளம். சங்கம் வைத்த மதுரையிலே இப்படி ஒரு மதவெறியைத் தூண்டும் அரசியலுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம். மதுரை என்பது அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, நாகரீகம் அடைந்த நகரமாக இருக்கக்கூடிய ஒரு நகரம். அந்த நகரத்தை மதவெறியால் பிரிப்பதை அனைவரும் எதிர்த்து நிற்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வெகுமக்களுக்கு வைக்கிறோம்.
நீதிமன்றத்தை மிக கொச்சையாக கீழ்த்தரமாக பேசிய எச்.ராஜா போன்ற நபர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தார்கள்? “அயோத்தியாவை போல நாங்கள் செய்வோம்” என்று அவர் மேடையில் பேசி இருக்கிறார். அயோத்தியா இடிக்கப்பட்ட பொழுது எத்தனை ஆயிரம் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தியாவில் மதவெறி கட்டவிழ்க்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என்று சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த கட்டுப்பாட்டினுடைய முதல் விதிகளையே மீறி எச்.ராஜா பேசியிருக்கிறார். எச்.ராஜாவினுடைய பேச்சு தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் வந்திருக்கிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்து தான் இத்தகைய ஆர்ப்பாட்டத்தை செய்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை எச்.ராஜா கைது செய்யப்படவில்லை. எச்.ராஜா பேசியதற்கும் சீமான் பேசியதற்கும் திமுக அரசு ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
மருதுபாண்டியர்களுக்கான வீர வணக்க கூட்டம் நடத்துவதற்கு நாங்கள் மேலூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி கேட்டபொழுது உள்ளரங்கில் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். மருதுபாண்டியருக்கான வீர வணக்கக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சனநாயக கட்சியை சேர்ந்த கே.எம்.ஷரீப் அவர்கள் நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றம் ஒரு விசித்திரமான தீர்ப்பைக் கொடுத்தார்கள். அவர் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மேடையில பேச வேண்டும் என்று கூறினார்கள். இங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்த என்ன அளவுகோல் இருக்கிறது, கருத்துரிமை குறித்தான என்ன அளவுகோல் இருக்கிறது என்று கேட்க விரும்புகிறோம்.
இதே போன்று கல்விக் கொள்கைக்கு எதிரான ஒரு போராட்டத்திற்காக அனுமதி கேட்டபொழுது 7:00 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த மதவெறி கூட்டத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, திமுக அரசு இவை மூன்றுமே அனுமதித்திருக்கிறது. அங்கே மதவெறி ரத்த ஆறு ஓடும் என்றால் அதற்கு யார் பொறுப்பு? இன்றைக்கு தைப்பூசத்துக்கு மத அடையாளத்துடன் இந்துத்துவ அமைப்புகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல விடயங்களை தானே முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் நீதிமன்றம் இதையெல்லாம் ஏன் எடுக்கவில்லை என்பது எங்களுக்கு கவலையாக இருக்கிறது.
பெரியாரை எதிர்த்து பேசியதற்கான பதிலடியை ஈரோடு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் இந்துத்துவ அமைப்புகளுக்கு பொதுமக்கள் எதிர்வினை ஆற்றுவார்கள். எங்கள் மதுரை நகரம் அமைதியான நகரம், அதில் மதவெறிக்கு இடமில்லை என்பதை பொதுமக்கள் கூறுவார்கள்.
பேரூரில் குடமுழுக்கு விடயம்:
பேரூர் என்பது பல ஆண்டு காலமாக இருக்கக்கூடிய புகழ் பெற்ற வழிபாட்டு இடம். பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மையார் ஆகிய இரண்டு இறைவன் அங்கே மக்களால் காலம் காலமாக வழிபடக்கூடிய சூழலில், அங்கு தமிழில் குடமுழுக்கு இல்லை. பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மாள், பேரூர் போன்ற தமிழ்ப்பெயர்கள் இருக்கும் கோயிலில் சமஸ்கிருதத்தில் அறுபது குண்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு குண்டத்தில் மட்டுமாவது தமிழில் வழிபாடு நடத்த கோருகிறார்கள். அதையும் அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இடம் இல்லாமல் எதற்கு சமஸ்கிருதத்தில் பூஜை? சமஸ்கிருதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழர் கட்டின கோவிலில் தமிழில் பாடக் கூடாதென்பது அநியாயமாக இருக்கிறது. பட்டீசுவரன் சொல்லிலே பட்டி என்பது கால்நடைகளை செல்வமாக பார்க்கக்கூடிய இடம். பச்சை நாயகி என்பது முல்லை நிலத்தை குறிக்கிறது. முல்லை நிலமும் மருத நிலமும் திரியக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய வழிபாட்டு இடத்தில் தமிழில் பாடுவதற்கு நாம் நீதிமன்றம் வரைக்கும் போக வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்த மூன்று சூழல்களையும் ஒன்றாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். பெரியாரை அவமானப்படுத்தி பேசும் நபர் மீது நடவடிக்கை கிடையாது. தமிழில் வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. ஏற்கனவே இருக்கக்கூடிய வழிபாட்டு இடத்தில் கலவரம் செய்ய வருபவருக்கு போராட்டத்துக்கு அனுமதி கிடைக்கிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்கள் மிகப் பொறுப்புணர்வோடு இதுபோன்ற சமூக விரோத கருத்துக்களை எல்லாம் நிராகரிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் நாங்கள் இச்சமயத்தில் முன்வைக்கின்றோம். ஆகவே பேரூர் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை இதுவரைக்கும் எந்தவிதமான பொறுப்பான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதை குறித்து அமைச்சர் முறையாக பதிலளிக்க வேண்டும். அதேபோல திருப்பரங்குன்ற பிரச்சனையிலும் இதே போன்ற ஒரு சூழல் உருவாகாமல் தடுப்பதற்குரிய வேலையை செய்ய வேண்டும். இசுலாமியர்கள் இந்த மண்ணினுடைய இரண்டாம் குடிமக்கள் அல்ல. இசுலாமியர்கள் தமிழர்கள். எங்கள் மண்ணின் சொந்தக்காரர்கள். இத்தனை ஆண்டு காலமாக இந்த மண்ணிலே இயல்பாக காலம் காலமாக கடைபிடிக்கப்படுகின்ற பண்பாட்டில் வந்தவர்கள் அவர்கள். தமிழர்களை இந்துவாக கிறித்துவராக இசுலாமியராக பிரிக்கக்கூடிய எந்த அரசியலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தமிழர்களின் உரிமைக்காக போராடிய தந்தை பெரியாரை அவமானப்படுத்துகின்ற அரசியலையும் நாங்கள் நிச்சயமாக வீழ்த்துவோம். அதற்கு பாடமாகத்தான் ஈரோட்டிலே சீமானுக்குரிய எதிர்வினையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே அந்த மக்களுக்கும் எங்களது நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.”-என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.
இதன் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: தொடர்ச்சியாக இந்துத்துவ அமைப்புகள் கலவரம் செய்ய முனையும் நோக்கமென்ன?
பதில்: எந்த ஒரு அமைப்புக்கும் சமூகம் அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்கிற நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் இந்துத்துவ அமைப்புகளுக்கு அப்படி எந்த நோக்கமும் கிடையாது. இந்துத்துவ அமைப்புகள் நமக்கு சாமி கும்பிடும் முறையைக் கற்றுக் கொடுத்தார்களா? பிஜேபிதான் நமக்கு சாமியை அறிமுகம் செய்ததா? இவர்கள்தான் நமக்கான வணங்குகின்ற முறையை கற்றுக் கொடுத்தார்களா? இவர்கள் கடவுளுக்கு புரோக்கரா? சாமியால் அல்லது வெகுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளா? தமிழ்நாட்டில் இந்து வழிபாட்டு முறையில் இருக்கும் மக்கள் யாரும் இந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக இல்லை.
இந்த அமைப்புகள் கலவரத்தை மூட்டும் நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.1988-ல் கோயம்புத்தூரில் மரக்கடை பகுதியில் கலவரத்தைக் கொண்டுவர முயற்சித்தார்கள். இந்த அமைப்புகளால் 1997-ல் இசுலாமியர்கள் மீது பெரிய அளவுக்கு வன்முறை திட்டமிடப்பட்டது. கோயம்புத்தூருடைய மையப்பகுதிகளாக இருக்கும் டவுன் ஹால் பகுதி, மரக்கடை பகுதி, என்.எச். ரோடு, ஒப்பனக்கார தெரு, ரங்கே கவுடர் வீதி, ராஜா தெரு போன்றவை வணிகப் பகுதிகளாக இருந்தன. ஜவுளி, தங்கம், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மர பொருட்கள், மளிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், பூ வியாபாரம், நூல் வியாபாரம் போன்றவை தமிழர்கள் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடங்கள்தான்.
வணிகம் நடக்கும் இந்த இடங்களில் தான் கலவரம் நடந்தது. கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்பகுதியில் தமிழர்கள் செய்த வணிகம் அனைத்தும் வடநாட்டார்கள் குறிப்பாக குஜராத்திகள், ராஜஸ்தானிகள் கையில் போய் சேர்ந்து விட்டது. கலவரத்தால் தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டர்கள். மார்வாடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று இந்த மார்வாடி, பனியாக்கள் ரங்கே கவுடர் வீதியை ஜெயின் தெருவாக மாற்ற வேண்டுமென்று போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலையை வைத்து கூட்டம் நடத்துகிறார்கள். இந்துத்துவ அமைப்புகளை நம்பி சென்றால் நமது வணிகம் வடநாட்டான் கையில் சென்று விடும் என்பதை மதுரை மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம். ஏனெனில் இந்த அமைப்புகளுக்கான நிதி உதவி முழுக்க மார்வாடிகள்தான் செய்கிறார்கள்.
மதவெறிக்குப் பின்னால் ஒரு காரண காரியம் இருக்கிறது. பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. ஹோல்சேல் வணிகத்தில் இருக்கும் இசுலாமியரையும் தமிழர்களையும் வெளியேற்றுவதுதான் அவர்களின் நோக்கம். மதுரையை சுத்தி இருக்கக்கூடிய வணிக நிறுவனங்கள், வணிக கடைகள் மார்வாடிகள் கைக்கு சென்றத்திற்குப் பிறகுதான் பிஜேபி ரெண்டு லட்சம் ஓட்டுகள் வாங்கி இருக்கிறது.
இங்கு இருக்கும் தமிழர் கடைகளில் மார்வாடிகள் பொருட்கள் வாங்குவது இல்லை. சென்னை சில்க்ஸ், போத்தீஸ், சரவணாஸ் போன்ற கடைகளிலும் இதே நிலைதான். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு லாபம் சேர்க்கின்ற வகையில் இந்துத்துவ அமைப்புகள் வேலை செய்கின்றன. இதை மக்கள் புரிந்து கொண்டு மதவெறிக்கு இடம் அளிக்கக்கூடாது என்ற வேண்டுகோளை நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால் நாம் மார்வாடிகளை விரோதிகளாகப் பார்க்கவில்லை. வியாபாரம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஆதிக்கம் செலுத்தாதீர்கள், எங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து அந்த வேலையை செய்யாதீர்கள் என்றுதான் கூறுகிறோம்.
கேள்வி: திருப்பரங்குன்ற மக்களே ஒற்றுமையாக இருப்பதாகக் கூறும்போது ஆர்.எஸ்.எஸ்கும் பிஜேபிக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன?
பதில்: மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மதுரை தெற்குவாசல் தர்கா, நாகூர் தர்கா போன்றவற்றில் இந்துக்கள் அதிகம் வழிபடுவார்கள். இந்த பண்பாட்டு முறையில் மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்புகள் மட்டுமே கலவரம் பண்ணுவதற்காக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கோயம்புத்தூருடைய நிலைமை மதுரைக்கும் வந்துவிடக் கூடாது என்கிற கவலையில்தான் நாங்கள் பேசுகிறோம். மதுரையில் இசுலாமிய தர்காவை இடித்துவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்? தமிழ்நாட்டுடைய பொருளாதாரம் உயர்ந்து விடுமா? எல்லாருக்கும் மாத வருமானம் 10,000 ரூபாய் உயர்த்தி கொடுத்து விடுவார்களா? அல்லது நாம் செலுத்தும் வரியை மோடி ரத்து செய்து விடுவாரா? தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனே கொடுத்து விடுவாரா? மதுரையில் எயிம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கே பிஜேபியால் முடியவில்லை. மருத்துவமனைக்கோ, மெட்ரோ ரயிலுக்கோ பணம் தராமல் பாஜக இழுத்தடிக்கிறது.
தமிழ்நாட்டின் நலனுக்காக எச்.ராஜா ஏதாவது போராட்டம் செய்திருக்கிறாரா? பாஜக கட்சிக்காரர்கள் காமராஜர், ஐயா.முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையாருக்கு மரியாதை செலுத்துவது போல் அவர்கள் கட்சித் தலைவர்களுக்கு செய்ய இயலவில்லை. ஆனால் இந்தத் தலைவர்கள் அனைவருமே பாஜகவினால் பாதிக்கப்பட்டவர்கள். 1956-ல் காமராஜர் அவர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் முயற்சி செய்தது. முத்துராமலிங்க தேவருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு சாவர்கர் படை திரட்டி கொடுத்தார். எம்ஜிஆர் காலத்தில் மண்டைக்காடு கலவரம் செய்தார்கள். ஜெயலலிதா அம்மையாரை சிறையில் தள்ளியது பாஜக அரசு.
தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளாக இருக்கும் பிஜேபிக்கு மரியாதை செலுத்த, தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த பிஜேபி தலைவர் என்று யாரும் இல்லை. பிஜேபி-ல் இருக்கக்கூடிய ஒரு தலைவர் கூட தமிழர்களுக்காக போராடி வழக்கு வாங்கியதில்லை. சிறை சென்றதில்லை. ஆனால் இதே மண்ணுக்காக இசுலாமியர்கள் பல போராட்டங்கள் செய்திருக்கிறார்கள். பெருமழை, வெள்ளம் வந்தால் அவர்கள் பேரிடர் மீட்புப்பணி செய்கிறார்கள்.
எனவே கலவரம் செய்யும் நோக்கத்தோடு வருபவர்களுக்கு எதிராக நாங்கள் நிற்போம். திமுக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த காலச் சூழலில், அனைவரும் கடுமையாக உழைக்கிறோம். இந்த நேரத்தில் மதவெறிக்கெல்லாம் இடம் கொடுப்பதற்கு நமக்கு நேரமில்லை, அது நமது வேலையும் இல்லை. மேலும் ஈரோடு மக்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
கேள்வி: எச்.ராஜா தமிழ்நாடு அரசை தாலிபன் அரசு என்று கூறி இருக்கிறாரே, இது குறித்து உங்கள் கருது என்ன?
பதில்: தமிழ்நாட்டினுடைய ஐஎஸ்ஐஎஸ் ஆக இருப்பவர் எச் ராஜாதான். ஆர்எஸ்எஸ்சை விட பயங்கரவாத அமைப்பு வேற எதுவும் கிடையாது. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை போன்றவற்றால் நடத்தப்பட்ட கலவரத்தினால்தான் இந்தியாவிலேயே அதிக மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அந்த அமைப்பின் உறுப்பினர் தான் எச்.ராஜா. இதை நான் பகிரங்கமாக சொல்கிறேன், முடிந்தால் அவரை மறுக்க சொல்லுங்கள்.
கேள்வி: அதிமுகவின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்: அதிமுக இன்னும் எதிர்கட்சியாக வேலை செய்யவில்லை. இன்று பல்வேறு மக்கள் கோரிக்கைகள் இருக்கின்றன. இது குறித்து சட்டசபையில் அவர்கள் பேச வேண்டும். ஆனால் அவர்கள் பேசவில்லை. மாஞ்சோலை பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக எடப்பாடியார் சொல்லி ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மாஞ்சோலை குறித்து இதுவரைக்கும் அதிமுக பேசவே இல்லை. இப்படி பல கோரிக்கைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆனால் அந்த கோரிக்கைகளை எல்லாம் எடுத்து பேசுவதற்கு எதிர்கட்சி தயார் இல்லை. அதுதான் இன்று பெரிய பலவீனமாக நாங்கள் பார்க்கிறோம்.
கேள்வி: NIA குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: NIA என்பது இசுலாமியர்களை குறிவைத்து இயங்குகின்ற அமைப்பாகத்தான் மாறிப்போயிருக்கிறது. இசுலாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.