
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்றுவரை இனப்படுகொலைக் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகள் மீதான விசாரணைப் பொறிமுறைகளில் முன்னேற்றம் இல்லை. போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்றும் தேடப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை இன்றும் இலங்கை இனவாத அரசால் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் 2009-ல் ஆட்சியிலிருந்த ராஜபக்சே அரசாங்கத்தால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைப் போரில், எந்த சாட்சியங்களுமின்றி தமிழர்களைக் கொன்று குவிக்க ஐநா பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மருந்து, உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. மருத்துவமனைகளுக்குள், பாதுகாப்பு வலயங்களுக்குள் குண்டுகள் வீசப்பட்டன. கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்து வீழ்ந்தனர்.
ஒரு போருக்கான நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், திட்டமிடப்பட்ட பேரழிப்பு ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்டு 26 க்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டுடன் சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு இப்போரை நடத்தியது. ஐநாவின் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் போர் நிறுத்தத்திற்குரிய எந்த மனிதாபிமான முடிவுகளும் எடுக்கவில்லை.

போர்க் குற்றம், மனித உரிமை மீறல், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய அனைத்தும் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இப்போரில், 1,69,796 தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஐ.நா, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு (ITJP) போன்ற விசாரணை அமைப்புகள், காணாமல் போனவர்கள் அடிப்படையிலும், படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் உறுதி செய்தன.
இனப்படுகொலைக்கு பின்பாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையமும் (OHCHR), ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலும் (UNCHR) விசாரணைகள் தொடர்ந்தன. மனித உரிமை, பொறுப்புக் கூறல், நல்லிணக்கத்துக்கான (LLRC) உள்ளக விசாரணை நடத்தப்பட்டது. இதன்படி இலங்கை அரசே இனப்படுகொலை செய்த இலங்கை அதிகாரிகளை விசாரிக்கும் நிலை உருவானது. இனப்படுகொலையில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை கொடுக்கும் வகையிலும், அவர்களை காப்பாற்றும் வகையிலுமே இந்த விசாரணைகள் தொடர்ந்தன.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராசபக்சே, முன்னாள் ராணுவ பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராசபக்சே, முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா, முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பல முக்கிய ராணுவ அதிகாரிகள் மனித உரிமை மீறலில் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது இடதுசாரி அரசாக சொல்லப்படும் அனுர திசநாயகா ஆட்சிக்கு வந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச், 2025 அன்று நடந்த 58 வது அமர்விலும், பொறுப்பு கூறுவது தொடர்பான பல தீர்மானங்களை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறலை விசாரிக்கும் சர்வதேச வழிமுறைகளை மறுத்துப் பேசியுள்ளது. 2009 இனப்படுகொலையின் போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து இயற்றப்பட்ட முந்தைய தீர்மானங்களுக்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் கடும் மறுப்பை காட்டும் இலங்கை, உள்கட்டமைப்பில் பலவீனமாகவும், தேவையான சீர்திருத்தத்தை மேற்கொள்ளவில்லையென்றும் மே 2024-ல் OHCHR அறிக்கை ஒன்று சமர்ப்பித்துள்ளது. உலகிலேயே இரண்டாவது காணாமல் ஆக்கப்படும் நாடாக இலங்கை உள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. 2009-ல் பாதுகாப்பு வலயங்களிலிருந்து சிங்களப் படையிடம் தஞ்சமடைந்த பலர் காணாமலாக்கப்பட்டதையும், தங்கள் உறவுகளைத் தேடி போராடுபவர்கள் பாதுகாப்புப் படையினர் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதையும் குறித்து அந்த அறிக்கை அலசுகிறது. 2016-ம் ஆண்டில் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ‘காணாமல் போனார் அலுவலகம் (OMP)’ ஒரு வழக்கைக் கூட முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல், இழப்பீட்டு நிதியைக் கொடுத்து முடிப்பதாகவும் மக்கள் கூறியதாக OHCHR அறிக்கையில் தெரிவிக்கிறது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்டு அனைத்து விசாரணை ஆணையங்களும் தோல்வியுற்றதை OHCHR அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் ‘வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் (ARED)’ சார்பாக உறவினர்கள் வவுனியாவில் மே 7, 2025 அன்று 3000 நாள் போராட்டத்தை நடத்தி உள்ளனர். அரசாங்க காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மக்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும், சர்வதேச சமூகம் தங்கள் அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கான நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் தொடர்ச்சியாகப் போராடுகின்றனர். இந்திய இடதுசாரிகளால் கொண்டாடப்படும் இலங்கையின் புதிய அதிபரான அனுர திசநாயகா பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் கடந்த பின்னும், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழர்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருக்கின்றனர்.
தமிழர்கள் தங்கள் உறவுகளை இழந்து துன்பங்களை சுமப்பதோடு தங்கள் நிலங்களையும் இழந்த வேதனையிலும் உழல்கின்றனர். தொடச்சியான சிங்கள இனவெறி அரசாங்கங்கள் தமிழர் பகுதிகளில் சிங்கள மயமாக்கலை தீவிரப்படுத்த வனம் மற்றும் தொல் பொருள் துறைகளை வெகுவாகப் பயன்படுத்திக் கொண்டன.

இலங்கையின் புதிய அதிபரும், பெளத்த மத அடிப்படையிலான ஆட்சியே இது என பெளத்த பிக்குகளிடம் உறுதியளித்தவருமான அனுர திசநாயக்கா, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட பெளத்த விகாரைகளை அப்புறப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளவில்லை. குருந்தூர்மலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெளத்த விகாரை அருகே தங்களின் பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ததற்கான மூன்று பேர் மே 10, 2025 அன்று கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப் பட்டிருக்கின்றனர். இன்று வரை தங்கள் பூர்வீக நிலங்களை ஒப்படைக்கக் கோரும் போராட்டங்கள் தமிழீழப் பகுதிகளில் தொடர்கின்றன.
இலங்கை இனவெறிப் போருக்கு முன்பு வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் 22,206 ஏக்கர் மட்டுமே இருந்ததாவும், போருக்கு பின்னர் 43,500 ஏக்கர் அதன் வசம் சென்றுள்ளதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலங்கள் இலங்கையின் இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல் துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிப்ரவரி, 2025ல் கூறியிருக்கிறார்.
இவர்களின் கூற்றுக்களை ஓக்லாண்ட் நிறுவனத்தின் (oakland institute) அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. போரின் பொழுது இடம்பெயர்ந்த மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் உல்லாச சொகுசு விடுதிகள், விவசாயம், கடைகள், விடுமுறை விடுதிகள் போன்றவற்றை இராணுவம் நடத்துவதாக ஆதாரத்துடன் குறிப்பிடுகிறது. முல்லைத் தீவில் மட்டும் 16,910 ஏக்கருக்கும் அதிகமான பொது மற்றும் தனியார் நிலங்களை ராணுவம் கையகப்படுத்தி உள்ளதாகவும், வனத்துறை 32,110 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. தொல்பொருள் துறை 202 ஏக்கர் நிலத்தையும், மகாவலி அதிகார சபை 4368 ஏக்கர் நிலத்தையும், மணலாறு சிங்களப் பிரதேச செயலக பிரிவை உருவாக்குவதற்காக 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்வாறு இலங்கையில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நீதிக்கான விசாரணைப் பொறிமுறைகள் தொய்வு அடையும் நிலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கிடைக்கப் பெறாது தொடரும் வலிகள், தங்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள ஆங்கிரமிப்பு எனப் பல வழிகளில் ஈழத் தமிழர்களின் சொல்லொணாத் துயரங்களையே அனுபவிக்கின்றனர். இடதுசாரி என்று போற்றப்படும் அனுர திசநாயக்கா ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி, தமிழர்களின் அதிகாரப் பகிர்வு பற்றிய குறைந்தபட்சத் தீர்வான 13வது சட்டத்திருத்தம் பற்றி இரு நாட்டு அரசுகளின் சந்திப்புகளின் பொழுதும் பேசப்படுவதில்லை.
பெளத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழும்பிய இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே நினைத்தன. அந்த பெளத்த பேரினவாதத்திற்கு தலைவணங்கி ஆட்சிப் பொறுப்பேற்ற அனுர திசநாயகாவின் ஐந்து மாத ஆட்சியில் தமிழர்கள் நீதிக்கான எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. இனப்படுகொலையில் பங்கேற்ற இராணுவ அதிகாரிகள் மீது எந்த விசாரணையும் நடத்தப் போவதில்லை என்று பகிரங்கமாகவே அவர் அறிவிக்கிறார். தமிழர்களுக்கான அநீதிகள் அங்கு தொடர்ந்து கொண்டே இருந்தும், இங்குள்ள இடதுசாரிகள், இடதுசாரியான அனுர திசநாயகா தமிழர்களுக்கான தீர்வை அளிப்பார் எனப் பேசுவதும், தமிழகத்தின் பெரிய கட்சிகளே தமிழீழம் என்கிற அடையாளத்தை உச்சரிக்காமல், இலங்கைத் தமிழர் என்று பேசுவதும், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் வாழ்வதே சிறந்தது என்பதும், ஈழத் தமிழர்களின் நோக்கத்தை சிதைக்கும் போக்கையும், தங்கள் கருத்தைத் திணிக்கும் போக்கையுமே காட்டுகிறது.
இந்நிலையில், உலகத் தமிழர்களின் முன்னெடுப்பால் கனடாவில் ஈழத்தின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. தங்களின் அடையாளத்தை பண்பாட்டு, அரசியல் வழியில் கொண்டு போகும் செயல்முறையில் என்றும் தமிழர்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதையே ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நடத்தி தமிழினம் உலகத்திற்கு எடுத்துரைக்கிறது.

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நீதிக்காக சமரசமற்ற களத்தில் மே 17 இயக்கம் தொடர்ச்சியாக செயல்படுகிறது. சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து 7 ஆண்டுகள் வழக்கையும் சந்தித்தது. இனப்படுகொலை நடத்திய அதிகார மட்டங்களின் பின்னணியை சர்வதேச நீதிக்கான அமைப்புகளில் தோலுரித்த அரசியல் செயல்பாட்டுடன், தமிழர்களின் பண்பாட்டு வழி நிகழ்வான நினைவேந்தலையும் எந்த இக்கட்டான சமயத்திலும் நிறுத்தாமல் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் இனப்படுகொலை சந்தித்த மே மாதத்தில் நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே 18, 2025 அன்று நடத்துகிறது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை என்றென்றும் மறவோம் என தமிழர்கள் அனைவரும் திரண்டு நினைவேந்தலில் பங்கு கொள்ள மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது.
“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”