இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்று திரளும் ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்.
“இந்திய ஒன்றியம்” எனப்படும் இன்றைய நிலப்பரப்பின் அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டு அதிகாரங்கள் அனைத்தும் ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் இருந்து பார்ப்பனிய – பனியாக்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாள், 15 ஆகஸ்ட் 1947!
ஆங்கிலேய “பொருளாதார” ஏகாதிபத்தியம் தனது இந்திய காலனியத்தை பார்ப்பனிய-பனியா “பேரினவாத – பொருளாதார” கும்பலிடம் கையளித்த மூன்றாண்டுகள் பிறகு ‘குடியரசு இந்தியா’ என்ற குழந்தை பிறந்தது. இந்த உன்னதமான ‘குழந்தை இந்தியா’ இன்று பார்ப்பன-பனியாக்களின் கொடும்பேயாக வளர்ந்து; இந்திய ஒன்றியத்தின் உழைக்கும் மக்களான சூத்திர பட்டியலின மக்கள் சுரண்டலை “உலகின் பெரிய சனநாயகம்” என்று பெருமிதம் கொள்கிறது. உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒர் அணியில் ஒன்று திரள்வதை தடுக்கும் ஏற்பாடாக இந்தியாவின் சனநாயகம் (?!) தன்னை வரித்துக் கொண்டுள்ள சூழலில் தான் முதல் முறையாக ஒன்றியம் தழுவிய பொது வேலை நிறுத்தம் முன்வைக்கப்பட்டது.
1981 ஜூன் 4ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் தேசிய பரப்புரைக்குழு நடத்திய மாநாட்டில் தான் முதல் முறையாக ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. 1982 சனவரி 19 அன்று வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து மாநில வாரியாக மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன. ஒன்றியம் தழுவிய வேலைநிறுத்தத்தை ஒட்டி சுமார் 6000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசால் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர்.
மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் பரப்புரை குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டு 1982 சனவரி 19 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தம், 13 அம்ச முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. இதில், “அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் – 1981”யை திரும்ப பெறுவது; தொழிலாளிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வது; விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விவசாய விலைப் பொருட்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் போன்ற, இன்றுவரை நிறைவேற்றப்படாத, மிக முக்கியமான கோரிக்கைகள் இடம்பெற்றன. இடதுசாரிகளின் இந்திய தொழிற்சங்க மையம் (CITU), பொதுத்துறை நிறுவனங்களின் சங்கங்கள் (AITUC, INTUC) மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் அமைப்பு (BMS) உட்பட ஒன்றியம் முழுவதுமிருந்த பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இதில் பங்குபெற்றன.
இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 10 தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது, தமிழ்நாட்டிலும் இடதுசாரி சங்கங்களின் ஆதரவுடன் விவசாய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய விவசாய இயக்கத்தினர் மீது அன்றைய அதிமுக அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமெய்ஞானத்தை சேர்ந்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஒன்றியம் தழுவிய இந்த வேலைநிறுத்த முயற்சி, அனைத்து விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க கூடியதாக மாறியுள்ளது. இப்படி தொடங்கப்பட்ட வேலை நிறுத்தங்கள் இதுநாள்வரை 23 முறை நடைபெற்றுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்ததில் வரலாற்றில் முதல் முறையாக 25 கோடி உழைக்கும் மக்கள் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் விவசாய போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் ‘சம்யுக்தா கிஸான் மோர்ச்சா’ தலைமையில் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்று போராட்டத்தை வெற்றியடைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் 50 கோடிக்கும் மேலாக உழைக்கும் மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கார்பொரேட் ஆதரவான சட்டங்களை இயற்றிடும் மோடி அரசு மீது விவசாயிகளின் அதிருப்தி, தவறான பொருளாதார கொள்கைதிட்டங்களால் பணப்புழக்கம் இல்லாமல் பெரும்பான்மை வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் சிறுகுறு தொழில்கள் முடங்கிப்போனது, அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலையேற்றம் போன்றவை தற்போதைய வேலைநிறுத்தத்தின் மீதான அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் பிஜேபியை தவிர அனைத்து கட்சிகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமையில் செயல்படக்கூடிய “தமிழ் நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு” ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்குபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17 அம்ச கோரிக்கைகளை வேலைநிறுத்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக போராட்ட குழு அறிவித்துள்ளது.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
- அரசு துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுக்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும்.
- புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.
- தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 58 ஆக குறைக்க வேண்டும்.
- சம்யுக்த கிஸான் மோர்ச்சா முன்வைக்கும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
போன்ற அரசு ஊழியர், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்ட மிக முக்கியமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தளத்தில் திரண்டு நின்று தங்கள் பொது எதிரியை அடையாளபடுத்தக்கூடிய மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ள இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கமும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.