ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை

சாதி மதரீதியாக மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் சனாதானிகளின் கூடாராமாகிய ஐஐடி சென்னை.

no sexual assault

உயர்தரமான கல்வி என்று கட்டமைக்கப்பட்ட மாயையால் பல மாணவர்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் படிப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கின்றனர். பல லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் செண்டரில் படித்து, நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, ஓரளவே பின்பற்றப்படும் இட ஒதுக்கீடுகளில் தேர்வாகி ஐஐடிக்குள்ளே செல்லும் நம் மாணவர்கள், அதற்குப் பின்னர் மன உளைச்சல்களையே பரிசாகப் பெறுகின்றனர். இதன் விளைவாக, சிலர் தற்கொலையை தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும், பலர் மனநல சிகிச்சைக்கு செல்கிறார்கள். தன்னம்பிக்கையை குலைக்கும் வகையில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளை சந்திக்கும் எண்ணற்ற மாணவர்கள் சிகிச்சைக்கு வருவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கும் அளவிற்கு ஒன்றிய அரசின் இந்த ஐஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மதவெறியும், சாதிவெறியும் ஊறிப் போன எந்த இடத்திலும் பெண்களின் மீதான குற்றங்கள் மேலோங்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை ஐஐடி கல்வி வளாகம். பட்டியலின மாணவ, மாணவியர் என்றாலே அவர்களை சாதி ரீதீயில் இழிவாக நடத்தி காயப்படுத்துவதும், வேண்டுமென்றே குறைந்த மதிப்பெண் அளிப்பது போன்ற ஆசிரியப் பதவிக்கே இழுக்கான செயல்களை செய்வதும் இங்கு பணிபுரியும் பார்ப்பன பேராசிரியர்களின் மனநிலையாக உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 

சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயிலும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி  ஒருவர் 2021-ம் ஆண்டு மார்ச் 29 அன்று  சென்னை மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகாரளிக்கிறார். அதில், கிங்சுக்தேவ் சர்மா என்கிற தன்னுடன் படிக்கும் ஆய்வு படிப்பு மாணவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும்; மற்றும் இரண்டு பேராசிரியர்கள் உட்பட ஏழு நபர்கள்  தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் புகாரளித்து 3 மாதங்கள் கழித்து, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம், தான் முதல் தகவல் அறிக்கை பதியப்படுகிறது. அதில், பெண்ணைத் தாக்குதல், மிரட்டுதல், துன்புறுத்துதல் போன்ற  பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதேத்தவிர ஒரு வருடம் கடந்த நிலையிலும் பாலியல் வன்புணர்வு செய்ததற்கான 376-A சட்டப் பிரிவின் படி முதல் தகவலறிக்கை பதியப்படவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தவராக இருந்தபோதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. புகாரில் குறிப்பிட்டுள்ளவர்களிடம் எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்த அவர்களின்  செல்போனையும் பறிமுதல் செய்யவில்லை.    

இதனைத் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய அப்பெண் அனைத்திந்திய ஜனநாயக மகளிர்  சங்கத்தை (AIDWA) அணுகியுள்ளார். 2017-ம் ஆண்டிலிருந்து உடன் படித்த கிங்சுக்தேப் சர்மா என்கிற உயர்சாதி மாணவன் ஒருவனால் பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு பாதிக்கப்பட்ட பெண் ஆளாகியிருக்கிறார். அதனை அவன் புகைப்படமெடுத்து நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறான். அவர்கள் அந்தப் பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். அந்தப் பெண்ணைப் பார்த்து வழியெங்கும் கொச்சையாகவும், கேலியாகவும் பேசுவது தொடர்ந்ததால், அந்தப் பெண் மேற்குவங்கத்தில் உள்ள தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு, அப்பெண்ணின் பெற்றோர்கள் “ஐஐடி கல்வி என்பது நம்மைப் போன்றவர்களுக்கு  கிடைப்பது அரிதானது. அதனால், காவல் துறையினரிடம் செல்லாமல் கல்லூரி நிர்வாகத்திடமே புகார் தெரிவித்து படிப்பைத் தொடரும்படி” கூறியுள்ளனர். 

தொடர்ந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் கல்லூரி நிர்வாகத்தின் உள்ளக பாலியல் குற்றப் புகார் குழுவிடம் (CCASH) புகாரளித்திருக்கிறார். இந்தக்குழு, ஜூலை 17, 2020-ம் ஆண்டு அளித்த புகாரின் மீது விசாரணையை மூன்று மாதம் கழித்து அக்டோபர் 10, 2020-ல் இணைய வழியாக விசாரிக்க எடுத்துக் கொள்கிறது. அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு உண்மை எனக் கண்டறிந்து, மாணவி குறிப்பிட்ட முக்கிய குற்றவாளி முதற்கொண்ட மூன்று பேரும், பாதிக்கப்பட்ட பெண் அவருடைய ஆய்வு படிப்பு இறுதி முடிவுகளை சமர்ப்பிக்கும் வரை கல்வி வளாகத்திற்கு வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இடைக்கால அறிக்கையை மட்டும் வழங்கியது. புகார் அளித்த பெண் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு உண்மையென தெரிய வந்த பின்னர் கல்லூரி நிர்வாகம் இக்குற்றத்தை காவல்துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், ஐஐடி விசாரணைக்குழு முழு தகவல்களையும் அறிக்கையில் தெரிவிக்காத நிலையில் குற்றம் கண்டறிந்த பின்னரும் முறையாக காவல்துறைக்கு தெரியப்படுத்திடவில்லை.

இந்த விசாரணைக்குழுவின் விசாரணை தொடரும் பொழுதே வேதியியல் ஆய்வகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாலியல் தொல்லைகளை தொடர்ந்திருக்கின்றனர். இவற்றை எல்லாம் அத்துறையின் பார்ப்பன பேராசிரியர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வுக்கான வேதியியல் இரசாயனங்களையும் அந்த பார்ப்பன பேராசிரியர் தர மறுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவியிடம், ‘நீயே குற்றம் புரியும் சாதியில் பிறந்திருக்கிறாய். நீ அவர்களைக் குற்றம் கூறுகிறாயா?’ என பார்ப்பன கொழுப்புடன் பேசியுள்ளார். இதன் காரணமாக அம்மாணவி தனக்கு உதவி செய்ய வந்த மகளிர் சங்கத்திடம், ‘என் சாதியைக் குறிப்பிட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய மறுத்து விடுவீர்களோ என அஞ்சினேன்’ என அவர் நெஞ்சு குமுறும் அளவிற்கு ஐஐடியில் சாதிய ரீதியான குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோரிடவும் உரிமையில்லாதவர்களாக பார்ப்பன சனாதனிகள் சாதிய வன்மத்தை ஐஐடியில் வலுவாக நிலை நிறுத்தி உள்ளனர் என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் அச்சமே எடுத்துக்காட்டுகிறது. 

இந்திய ஒன்றிய அரசின் கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவியிடமே “பிறப்பால் அமைந்த சாதிய மேலாதிக்கமே அனைத்தையும் தீர்மானிக்கிறது” என்பதை வலுவாக நிறுவியிருக்கிறார்கள். கல்வி கற்கும் வாய்ப்பில்லாத காலத்தில் பட்டியலினப் பெண்களை அச்சுறுத்தி காலங்காலமாக பாலியல் சுரண்டலை எவ்வாறு நியாயப்படுத்தி இருப்பார்கள் என்பதை சனாதனிகளின் வரலாற்றைத் திருப்பிப்பார்த்தால் புரிந்துக்கொள்ள முடியும்.

கல்லூரி விசாரணைக் குழு இடைக்கால அறிக்கை அளித்து குற்றம்புரிந்த மாணவர்களுக்கு வளாகம் உள்ளே வர தடை விதித்திருந்தபோதும், அந்த மாணவர்கள் கல்லூரிக்கு தொடர்ந்து வருவதை  கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தனது ஆய்வுப்படிப்பை முடிக்க முடியாமல் செய்து விடுவார்களோ என அச்சப்பட்டு மாணவி காவல்துறையிடம் செல்கிறார். இதனையடுத்து, காவல்துறையினரின் தலையீடு ஏற்பட்டுவிட்டதால் இனி விசாரணை செய்ய முடியாது எனக் கல்லூரி விசாரணைக்குழு கைக்கழுவிவிடுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பல அதிகார அமைப்புகளிடமும் இந்தப் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தன்னந்தனியாக சென்னைக் காவல்துறைத் தலைமையகம், மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் ஆணையம், குடியரசுத் தலைவர் முதற்கொண்டு அனைவரிடமும்  தொடர்ந்து மனு கொடுத்துள்ளார். இவை அனைத்தும் அம்மாணவிக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு சோர்வடைந்து மூன்று முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். 

இறுதியாக, தனது கல்லூரி நண்பர் மூலமாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு காரணமான நீதிபதி சந்துரு அவர்களை சந்தித்து முறையிட்டதை அடுத்து அவர் காவல் துறை உயரதிகாரியிடம் பேசியிருக்கிறார். இந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்க  ஜனநாயக மகளிர் சங்கத்திடமும் கோரிக்கை வைத்திருக்கிறார். மொழி தெரியாத மாநகரில் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களை தாங்கிக் கொண்டு போராடிய அந்த மாணவியின் பிரச்சனை இன்று அம்பலமாகி இருக்கிறது. இல்லையென்றால், ஐஐடி வளாகத்திற்குள் நடக்கும் பல சாதிய மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை போல இந்த குற்றமும் புதைக்கப்பட்டிருக்கும். 

இடைக்கால அறிக்கைகளில் கூட பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த கைப்பேசிகளை பற்றி எந்தக் குறிப்பையும் கல்லூரி விசாரணைக் குழு தெரிவிக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் அவற்றைப் பறிமுதல் செய்யும் முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதிகாரமிக்க உயர்சாதிக் கூடாரங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை தங்கள் கல்லூரி மாணவியாக நினைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க அக்கறைக் காட்டியிருக்கும். பார்ப்பனர்கள் தவிர்த்த மற்றவர்கள் இந்தக் கல்வி நிலையங்களில் நுழைவதை  வன்மத்துடன் நோக்கும் சாதிய ஆதிக்கவாதிகளுக்கு எப்படி அக்கறை ஏற்படும்? பெரிய நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்பதை வாடிக்கையாகக் கொண்ட காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கடந்திருக்கும். மகளிர் சங்கத்தின்  நெருக்கடி உருவாகியதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க துவங்கியிருக்கிறது. மகளிர் ஆணையம் ஒரு மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்துத்தர ஆணையிட்டிருக்கிறது. ஜனநாயக மகளிர் சங்கம் இவ்வழக்கை சிபி -சிஐடியிடம் மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறது.

சாதியப் பாகுபாடு பார்த்து பாலியல் குற்றங்கள் புரியும் உயர்சாதி மாணவர்கள்; அவர்களுக்குத் துணை போகும் பார்ப்பன பேராசிரியர்கள், இவர்களைக் காக்கும் உயர்சாதி ஐஐடி கல்வி நிறுவனம் என இந்தப் படிநிலையில் தான் கல்வியில் மட்டுமல்லாது, அனைத்து மட்டங்களிலும் தங்களைக் காத்துக் கொள்ளும் வலைப்பின்னலை இறுக்கமாக நிறுவியுள்ளது. இவர்களே குற்றங்களின் ஊற்றுக்கண்ணாக இருந்து கொண்டு, மற்றவர்களின் மீது பழியைத் திருப்பி விட்டு தங்களை தூய்மையானவர்கள் போல காட்டிக் கொள்ளும் வகையிலான புனிதக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு வாய்ப்பு மூலம் இந்நிறுவனங்களில் சேரும்  மாணவர்களுக்கு திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்து வழங்கி, அவர்களைத் தகுதியற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் வார்த்தை வசைபாடி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். 

பார்ப்பன பேராசிரியர் ஒருவரின் மதரீதியான வன் சொற்களால் காயப்படுத்தியதால் ஐஏஎஸ் இலக்குடன் ஐஐடி-க்குள் நுழைந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி 2019-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கடும் நெருக்கடிக்கு பிறகு காவல் துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவ்வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வீட்டைப் பிரிந்து இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என சிபிஐ விசாரணை முடிவை வெளியிட்டது. பெருங்கனவுடன் மகிழ்ச்சியாக படிக்க வந்த பெண்ணிற்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கியும், மதரீதியாக தொடர்ந்து மனதினை சிதைத்து தற்கொலை செய்யக் காரணமான பார்ப்பனப் பேராசிரியர் ஐஐடியில் சுதந்திரமாக இருக்கிறார். தங்களை பாத்துக்கொள்ள உயர்சாதிகளுக்கிடையே இருக்கும் அதிகார வலைப்பின்னல்களில் சிக்கி எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டு ஐஐடி வளாகத்திற்குளேயே புதைக்கப்பட்டுவிட்டது. 

பட்டியலின மாணவர்களான ரோகித் வெமுலா, முத்து கிருஷ்ணன், மருத்துவ மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்த பழங்குடியினப் பெண்ணான பாயல் சாத்வி போன்ற பல மாணவர்களையும் சாதிய ஆதிக்கவாதிகளால் இழந்திருக்கிறோம். ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கும் இந்த பார்ப்பனர்கள் இக்கல்வி நிலையங்களை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் சவக்குழிகளாக மாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரும்பங்கை விழுங்கும் ஐஐடி போன்ற ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பான்மை மக்களின் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டு சிறுபான்மையான உயர்சாதியினரின் கூடாரமாகவே உள்ளது.

குரலற்ற மக்களின் குரலாக போராட்ட அமைப்புகள் இந்தக் கொடுமைகளெல்லாம்  எழுப்பாமல் இருந்தால் எப்பொழுதும் போல மறைக்கப்பட்டிருக்கும். அதனால் தான் போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்துவதும், காவல் துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி அடக்க நினைப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. எவ்வளவு இன்னல்கள் தந்தாலும் பாதிக்கப்படும் மக்களுக்காக களத்தில் நிற்பவர்களே மக்கள் செயல்பாட்டாளர்கள். அந்த வகையில், சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்காள மாணவிக்கு நீதி பெற்றுத் தர பாடுபடும் ஜனநாயக மகளிர் சங்கம் உட்பட பிற அமைப்புகளுக்கும் மே 17 இயக்கம் துணையாக நிற்கும். 

மேலும், இது போன்ற உயிர்பலிகள் இனியும் ஐஐடிகளில் ஏற்படாமல் தடுத்திட சென்னை ஐஐடியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். அதோடு  இடஒதுக்கீடு முறையை முழுமையாக பின்பற்றி பேராசியர்கள் உதவி பேராசியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும். இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் முறைகேடாக பல்வேறு பணிகளை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன பேராசியர் மற்றும் பணியாளர்களை உடனடியாக நீக்கிட வேண்டும். மதவெறி சாதிவெறியை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துவெறி அமைப்புகளின் கிளை அமைப்புகளை ஐஐடிக்குள் செயல்படுவதை தடை செய்து நவீன அக்ரகாரமாக மாறியிருக்கும் ஐஐடிகளை மாற்றி அனைவருக்குமான கல்வி நிலையமாக மாற்ற வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »