சித்திரை முதல் நாளா தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரை முதல் நாளா தமிழ்ப் புத்தாண்டு?

இந்திய துணைகண்டத்தினுள் ஆரிய பார்ப்பன கும்பலின்  நுழைவுக்குப்பின் மொழி,பண்பாடு, கலாச்சார சமூக,அரசியல் ரீதியாக ஏற்பட்ட சிதைவுகள் ஏராளம். ஆயினும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தளங்களில் ஆரிய பார்ப்பன சமஸ்கிருத மேலாதிக்கத்தை, ஊடுருவலை எதிர்த்து சமர் செய்வது தமிழ் பரப்பு மட்டும்தான் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் தமிழுக்குதான் அத்தகைய தனித்துவமும் மேலாண்மையும் உள்ளது என்பதை வரலாற்றின் வாயிலாக நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறான தமிழர் வரலாற்றில் கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழருக்கென்று ஒரு தொடராண்டு குறித்து கருத்தியல் விவாதங்களும்,சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக வரலாற்றை நாமும் தேடிப்பார்ப்பதான் மூலம் எது தமிழ்ப் புத்தாண்டு என்பதில் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகின்றது.

தமிழ் தொடராண்டு:

சமய அடிப்படையில் பலர் அவரவருக்கு உகந்த நாட்களை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். புத்த மதத்தினர் புத்தர் பிறந்தநாளிலிருந்து ஆண்டினை கணக்கிடுக்கிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற நாளிலிருந்து ஆண்டுகளை கணக்கிடுக்கிறார்கள். கிருத்தவ மதத்தினர் இயேசு கிருத்து பிறந்தநாளில் இருந்து ஆண்டுகளை  கணக்கிட்டு வருகின்றனர். இன்று அதுதான் உலகின் அனைத்து செயல்பாடுகளையும் குறிக்கும் ஆண்டு கணக்கீடாக (கி.மு.-கி.பி. என்று ) உள்ளது.

இவ்வாறு தமிழுக்கு ஒரு தனித்த தொடர் ஆண்டு கணக்கீடு வேண்டும் என்ற நோக்கில் 1921-ம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடினார்கள்.

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதம், சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர்.கா.நமச்சிவாயம் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.

கூட்டத்தில் முடிவாக தமிழின் பெருமையை உலகறியச்செய்து உலகிற்கு பொது மறையான திருக்குறளை தந்த திருவள்ளுவரின் காலத்திலிருந்து தமிழுக்கு தொடராண்டு கடைப்பிடிக்கலாம்  என்றும் அவரது காலம் கிமு.31 என்றும் அதன் துவக்கம் தை 2 ஆம் நாள் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

அதாவது நடப்பு ஆங்கில ஆண்டுடன் 31-ஐ கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். (2022 + 31 = 2053. )

இந்த முடிவினை தமிழக அரசும் ஏற்று 1971 முதல் அரசின் நாட்குறிப்பிலும்,1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழினம் 2053 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகிறோம் என்ற போதிலும் ஒரு பொதுவான தொடர்ஆண்டு தேவை எனும் பட்சத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் துவக்கம் எந்த மாதத்தில் என்பதில் தான் சிக்கல். அதாவது, தமிழாண்டின் புத்தாண்டு எந்த மாதம்?

தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. மேலும் தமிழ் மாதங்களில் தை மாதத்தை போற்றிய அளவிற்கு வேறெந்த மாதத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

” தை பிறந்தால் வழி பிறக்கும் “.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை

 “தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநாநூறு, ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை.

இலக்கியங்கள் தை மாதத்திற்கு இவ்வளவு பெருமை சேர்த்திட கால அடிப்படையிலும் தை மாதம் குளிர்ச்சி பொருந்திய “பின்பனி காலமாகவும், வேளாண் அறுவடை காலமாகவும்” இருக்கின்றது. உழவர்கள் தாங்கள் விளைவித்த உணவு பொருட்களை கொண்டு தங்களுக்கு வாழ்வளித்த இயற்கையை வணங்கும் வழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு வருவதற்கு பொங்கல் விழாவே நம்முன் உள்ள நிகழ்கால சான்று. அதன் துவக்க நாளான தை முதல் நாளே நம்முடைய புத்தாண்டாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி தை என்ற ஓரெழுத்து ஒருமொழி சொல்லுக்கு தைத்தல் என்னும் பொருள் உண்டு. (தைத்தல் – இணைத்தல் ) பழைய ஆண்டினையும் புதிய ஆண்டினையும் இணைக்கும் மாதம் என்பதால் தை மாதத்திற்கு இப்பெயர்.

மேலும், ஜப்பான், சீனா, கொரியா, மங்கோலியா போன்ற பண்டைய தொன்மை நாகரீகம் கொண்ட இனத்தவர்களும் இதே காலத்தில்தான் தங்களின் புத்தாண்டை கொண்டாடிவருகின்றனர் என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் மேதகு.பிரபாகரன் அவர்களும் தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து கொண்டாடி உள்ளனர்.

சித்திரை முதல் நாளா புத்தாண்டு?

காலம், வானியல் குறித்த விடயங்களில் தமிழர்களின் அறிவு மிகவும் மேலோங்கியே இருந்து வந்துள்ளது. அதனால்தான் ஒரு ஆண்டினை ஆறு பெரும்பொழுதுகளாக,

கார் (மழை ), கூதிர் ( குளிர் ), முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனவும்,

ஒரு நாளினை ஆறு சிறு பொழுதுகளாக

வைகறை,காலை, நண்பகல்,ஏற்பாடு, மாலை, யாமம் எனவும் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

ஒரு நாளை 60 நாளிகை என்றும் ஒரு நாளிகை 24 நிமிடங்கள் என்றும் பிரித்து கணக்கிட்டனர்.

( 60 நாளி × 24 நிமிடம் = 1440 நிமிடங்கள் ) இதுவும்  தற்போதுள்ள உலக கணக்கீடான ஒரு மணி நேரம் = 60 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பதும் ஒரே கணக்கீட்டு அளவாகவே உள்ளது. இவ்வாறு காலத்தை மிகத்துல்லியமாக கணக்கிட்ட தமிழர்கள் தொடராண்டினை பின்பற்றாமல் வந்திருப்பார்களா என்று நினைக்கும் பொழுது பெரும் வியப்பாகவே உள்ளது.

கி.பி.78 சாலிவாகனன் அல்லது கி.பி.127 கனிஷ்கர் காலத்தில் தற்போது தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் பிரபவ முதல் அக்சய வரையிலான 60 வருட கணக்கீடு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆரியர்கள் தெற்கே ஊடுருவி மன்னர்களிடம் இனக்கமான பின் சமஸ்கிருதம் தாங்கிய அதே ஆண்டு கணக்கினை இங்கே பின்பற்ற செய்துள்ளனர். ஜோதிடப்படி முதல் இராசியான மேஷம் ராசியில் சூரியன் நுழையும் மாதம் புத்தாண்டு என்று முடிவு செய்து சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட செய்தனர். இந்த 12 ராசிகளுக்கான நட்சத்திரத்தின் பெயர்கள்தான் தமிழ் மாதங்களின் பெயர் என்றும் கூறுகின்றனர். ஆனால் மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை,சித்திரை ஆகிய இரு பெயர்களை தவிர வேறெந்த நட்சத்திரத்திற்கும் தமிழ் மாதப் பெயர் கிடையாது என்பதே உண்மை. நாராதரும், விஷ்ணுவும் இணைந்து பெற்ற பிள்ளைகள்தான் இந்த அறுபது ஆண்டுகள் என ஒரு அருவறுக்கத்தக்க ஆபாச புராணக்கதையையும் கூறியுள்ளனர்.இக்கதை அபிமானசிந்தாமணி என்னும் நூலில் பக்-1392 ல் இடம்பெற்றுள்ளது.

60 ஆண்டில் 23வது ஆண்டின் பெயர் விரோதி – எதிரி.

33வது ஆண்டு விகாரி – அழகற்றவன்.

38 வது ஆண்டு  குரோதி – பழிவாங்குபவன்.

55 வது ஆண்டு துன்மதி – கெட்டபுத்தி.

இப்படி பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், இயற்கைக்கும், நாகரீகத்திற்கும் ஒவ்வாத ஆரியவழி தமிழ்ப்புத்தாண்டினை நாம் எப்படி கடைப்பிடிக்க இயலும்.

ஆகையால் தான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கடந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் வந்த ஜெயலலிதா ஆட்சியில் அது நீக்கப்பட்டது மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்று  கொண்டுவரப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் அது மாற்றப்பட்டு, மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசின் செய்தி குறிப்புகளே சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற செய்தியை தாங்கி வருகிறது.

புரட்சிகவிஞர் பாரதிதாசன் கூறியது போல்

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.!!

என்பதை வெறும் எழுத்து படைப்போடு நில்லாமல் நமது குடும்பத்தினருக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் வரலாற்று சான்றுகளை விளக்கிக் கூறி தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாட அனைவரும் உறுதியேற்போம்.

One thought on “சித்திரை முதல் நாளா தமிழ்ப் புத்தாண்டு?

 1. நல்ல கட்டுரை! தலைவர் பிரபாகரன் அவர்களே தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துக் கொண்டாடினார் என்பது இன்றைய இளைஞர்கள் பலர் இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வர உதவும்.

  ஆனால் அதே நேரம் இதில் உள்ள இரு தகவல்கள் தவறானவை. முதலாவது 1921-ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடித் திருவள்ளுவர் ஆண்டுத் தொடரை அறிமுகப்படுத்தினார்கள் என்பது. இந்தத் தகவல் பரவலாகச் சொல்லப்பட்டு வந்தாலும் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அதனால் விக்கிப்பீடியாவில் இந்த வரி திருத்தப்பட்டு விட்டது.

  அடுத்து, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் காணக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது தவறு! சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு எப்படி ஆதாரங்கள் இல்லையோ அதே போலத் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கும் ஆதாரம் ஏதும் வலுவாக இல்லை. ஓரிரு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் வலுவாக இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் தயவு செய்து குறிப்பிடுங்கள்!

  கட்டுரையின் முடிவில் பாவேந்தரின் “நித்திரையில் இருக்கும் தமிழா” பாடலை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள், வழக்கம் போல. ஆனால் தமிழ் அறிஞர்கள் முதல் எளிய இணையக் குடிமக்கள் (netizens) வரை அனைவரும் இத்தனை ஆண்டுக் காலம் எடுத்துக் காட்டி வந்த இந்தப் பாடல் உண்மையில் போலியானது என்பது நான்கு நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. ஆம்! பாரதிதாசனார் இந்தப் பாடலை எழுதவேயில்லை. தை முதல் நாளான பொங்கல்தான் தமிழ்ப் புத்தாண்டு என பாரதிதாசன் பாடல் எழுதியுள்ளார் என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பாடல் அவர் எழுதவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி!

  இப்படித் தகவல் பிழைகள் மட்டுமில்லாமல் மிக முக்கியமான இடங்களில் எழுத்துப்பிழைகளும் உள்ளன.

  ஒரு நாளின் ஆறு சிறுபொழுதுகள் பட்டியலில் ‘ஏற்பாடு’ என ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஏற்பாடு இல்லை, ‘எற்பாடு’. எல் – அதாவது சூரியன் படுகிற வேளை என்பதால் எற்பாடு. அடுத்து ’நாழிகை’ என்பதை நாளிகை எனவும் ’நாழி’ என்பதை நாளி எனவும் எழுதியிருக்கிறீர்கள். இந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்!

  நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »