தமிழின விரோத ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கை!

தமிழின விரோத ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கை!

நாட்டில் நடக்கும் செய்திகளை உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு கொடுப்பதே செய்தி ஊடகங்களின் அறம். ஆனாலும் ஊடக அறத்தை கடுகளவும் பின்பற்றாத ‘தி இந்து’ குழுமத்தின் ஆங்கில பத்திரிக்கையான ‘The Hindu’-வில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும் உண்மையின் உரைகல் என்று மக்கள் அனைவரும் நினைக்கும் வகையிலான ஒரு புனித பிம்பம் பார்ப்பனியத்தால் மிக கச்சிதமாக கடந்த பல ஆண்டுகளாக திட்டமிட்டு கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. உண்மையில் அத்தகையதொரு தகுதி ‘தி இந்து’ குழும நாளேடுகளுக்கு கிடையவே கிடையாது என்பது ஆணித்தரமான ஆதாரபூர்வமான கருத்து. அதோடு அதன் நாளேடுகளில் தமிழர்களுக்கு ஆதரவான செய்திகளை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இதனாலேயே தந்தை பெரியார் கிண்டலாக, ‘இந்து பத்திரிக்கை எதையெல்லாம் தவறு என்று எழுதுகிறதோ அதையெல்லாம் சரி என்று எடுத்து எழுதுங்கள்’ என்று சொல்வதுண்டு. அந்தளவுக்கு உண்மைக்கு புறம்பான தமிழின விரோதத்தோடு செயல்படக்கூடிய பத்திரிக்கை தான் ‘தி இந்து’.

அதேபோல் ஈழப் போரின் போது இந்த நாளிதழின் நிலைபாடுகள், நேரடியான தமிழின விரோத நிலைபாடு ஆகும். இதன் ஆசிரியர், என்.இராமின் பார்ப்பனிய வெறியின் காரணமாக தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் இராணுவமாக இருந்த புலிகளுக்கு எதிராகவும் நஞ்சை கக்கியது. இவரின் இந்த தொடர் சிங்கள அதரவு மற்றும் தமிழின எதிர்ப்பு காரணமாகவே சிங்கள அரசு, இந்து நாளிதழ் என்.இராமுக்கு இலங்கையின் உயரிய விருதான ‘லங்கா ரத்னா”விருது கொடுத்து கவுரவித்தது.

இந்த நாளேடு பொதுவாகவே வலதுசாரி அரசியலையே ஆதரித்து வருகிறது. அதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, இதன் ஆசிரியர்களில் ஒருவரான நரசிம்மன் என்பவர் என்.இராம் மீது சாட்டிய குற்றம்தான். அதாவது, ”உள்நாட்டு அரசியலில் பாஜகவின் கொள்கைகளை ஆதரித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்தும், அதேபோல் வெளிநாட்டு விடயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீனா, இலங்கையை ஆதரித்தும் எழுதி வருவதாக அவர் என்.இராம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.” அங்கு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவரே என்.இராம் மீது இத்தகைய குற்றத்தை சாட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

அதோடு இப்பத்திரிகையில் சமீபகாலமாக தலையங்க நேர்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டு உள்ளது எனவும், கட்டணச் செய்திகளே தலைப்பு செய்திகளை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இடம்பெறுகிறது எனவும், பல்வேறு உண்மை செய்திகளும், ஊழல்களும் மழுங்கடிக்கபடுகிறது எனவும் என்.இராமின் சகோதரரான என்.இரவி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டை இராமின் மீது வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் ஊடக அறத்தை நிலைநாட்டாது ஒருதலைப் பட்சமாக குறிப்பாக, தமிழின விரோதத்தை அப்பட்டமாக முன்னிறுத்தும் இந்து என்.இராமின் முகமூடியை மே 17 இயக்கம் ஆரம்பகாலம் முதலே தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அதோடு அவர் தமிழின படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்து பெங்களூரில் விழா நடத்தியதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அவரின் தமிழின விரோத மனப்பான்மையை அனைவரும் அறிய செய்தது.

பார்ப்பனிய சாதிய வன்மம் நிறைந்த என்.இராமின் தமிழின விரோத மனப்பான்மை என்றும் மாறாது என்பதற்கான சமீபத்திய ஆதாரம் தான், தற்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத பௌத்த அரசின் எதேச்சாதிகார போக்கால் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியால் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்த தமிழர்களை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டு இருப்பது.

அதாவது, “திருட்டுத்தனமாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மூலமாக கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் கடத்தல்கள் அதிகரிப்பது அல்லது இரு நாடுகளிலும் உணர்ச்சிகளை தூண்டுவது போன்றவைகள் நடக்காமல் இருப்பதை இருநாட்டு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இருதரப்பு உறவுகளில் நீண்டகால எரிச்சலூட்டும் பால்க் வளைகுடா மீன்பிடி பிரச்சனைக்கு தீர்வு காண இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்” என்று எழுதி இருக்கிறது.

கைக்குழந்தைகளுடன் வாழ வழியின்றி தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை மனிதத் தன்மையற்று கடத்தல்காரர்களாகவும், போதைப் பொருட்கள் கடத்துபவர்களாகவும் உலகிற்கு காட்டும் இந்த ‘தி இந்து’ ஆங்கில இதழின் இனவெறியை தமிழினம் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனையான விடயம்.

நம்மில் சிலரும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு, ஈழம் என தமிழர்களை இருவேறாக கருதிக் கொண்டு பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். அதனால் தான் உதவிக்கரம் நீட்ட வேண்டிய தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களை கைது செய்து சிறையிலடைப்பதை பற்றி வாய் திறவாமல் மௌனமாக கடந்து செல்கிறார்கள்.

மேலும், இந்நாளேடு தமிழினத்தின் மீது தீராத வன்மத்தை கொண்டு இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம். அதில் முக்கியமான மற்றும் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், தமிழ்நாடு மீனவர்கள் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையால் கொல்லப்படும் போதும், சட்ட விரோதமாக துன்புறுத்தப்படும் போதும் அந்த செய்திகளை எழுதும் போது தமிழ்நாடு மீனவர்கள் என்றே எழுதி வருகிறார்கள். ஆனால், அதுவே குஜராத் மீனவர்களோ அல்லது மற்ற மாநில மீனவர்கள் யாரேனும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்படும் போது மட்டும் அவர்களை இந்திய மீனவர்கள் என எழுதுகிறார்கள். இத்தகைய செயல்கள் இவர்களின் தமிழின வெறுப்பை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

இதுபோலவே, இந்து பத்திரிக்கை சாதிய வன்மம் நிறைந்த பார்ப்பனியத்தை மட்டுமே தூக்கி பிடிக்கும் என்பதற்கான சமீபத்திய ஆதாரம், சென்னை ஐஐடி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் சக மாணவர்களால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து வெளியிட்ட செய்தி. அந்த பட்டியலின மாணவி தான் உயர்சாதி மாணவர்களால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தனது பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரோ அம்மாணவியை சாதிய ரீதியாக அவமதித்ததோடு அவரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இந்த தொடர் பாலியல் வன்கொடுமை குறித்து இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட பேராசிரியர் மற்றும் சக மாணவர்களை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால், மற்ற தமிழ் பத்திரிக்கையில் குற்றவாளிகளை குறித்து முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்றே இந்த பத்திரிகையில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய உண்மை செய்திகள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு அவர்கள் (பார்ப்பனர்கள்) விரும்பும் வகையிலான செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

இவர்கள் தமிழினத்தின் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் மீதும் வன்மத்தினை கக்குகின்றனர். அதற்கு சான்றாக, தூய்மை பணியை செய்து வரும் எளிய மக்கள் கொரோனா முதல் அலை மற்றும் 2-ம் அலையின் போது தகுந்த பாதுகாப்பு உபகரணமின்றி கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லாம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என செய்தி எதுவும் வெளியிடாத இந்த இந்து ஆங்கில இதழ், தற்போது அவர்கள் உரிய நேரம் வரை வேலை செய்யாமல் சீக்கிரமே சென்று விடுகின்றனர், வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர் என்று பல அவதூறுகளை பரப்புகிறது. இதுபோன்றே உயர் மட்டத்தில் வேலை செய்பவர்களை பற்றியும் குறிப்பாக பார்ப்பனர்கள் செய்து வரும் தில்லுமுல்லு பற்றியும் தகவல்களை வெளியிடுவார்களா எனில் இல்லை என்பதே பதில்.

வெளியில் முற்போக்காளார் வேடமிட்டு பல முற்போக்கு மேடைகளில் ஏறும் இந்து என்.இராம், சங்கராச்சாரியர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் தனது மறைக்கப்பட்ட பூணூல் வெளியில் தெரிவதுகூட அறியாமல் பதறி முதல் ஆளாக ஓடுவதும், தனது பத்திரிக்கை அலுவலக உணவங்களில் இறைச்சிக்கு அனுமதி மறுப்பதும். சல்லிகட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பின் செயற்பாடுகளை தொடர்ந்து எழுதுவதும், சல்லிகட்டில் சாதி இருக்கிறது மக்கள் சாகிறார்கள் என்று முதல் பக்கத்தில் எழுதுவதுமான வேலையில் ஈடுபடும்போதுதான் அவரின் ஆரிய குடுமி அப்பட்டமாய் வெளிவரும்.

தமிழர்களை அடிமைபடுத்த வேண்டுமென்றால் தமிழர்கள் தலையில் ஆரிய பண்பாட்டை புகுத்தவேண்டும், தமிழர்களை சாதிகளாக, மதங்களாக பிரித்து கூறு போடவேண்டும், தொழிலாளார் விரோத நடவடிக்கைகளை மெல்ல மெல்ல விசம் போல் சமூகத்தில் ஏற்ற வேண்டும். இதை செய்யக்கூடிய ஒரு ஆள் தான் என்.இராம். அதற்கு உறுதுணையாக தொடங்கப்பட்டதுதான் தி இந்து பத்திரிக்கை. இந்த உண்மை இந்த பத்திரிக்கை ஆரம்பித்த பொழுதே தெரிந்ததால் தான் தந்தைப் பெரியார் தொடர்ந்து இதனை அம்பலப்படுத்துவதை ஒரு வேலைத்திட்டமாகவே வைத்திருந்தார்.

ஆகவே, மிக மோசமான காலகட்டத்தில் இருக்கும் தமிழினம் இந்து என். இராம் போன்ற விசச்செடிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தும் அரசியல் வேலை திட்டத்தை உடனடியாக வகுக்கவேண்டும். ஆரியம் நமது தோளில் கைபோடுவது நம்மை அரவணைக்க அல்ல, அழிக்க என்ற வரலாற்று உண்மையை புரிந்துகொண்டு தமிழினம் செயற்படட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »