கடந்த வாரம் சென்னை மெரினா கடற்கரையின் லூப் ரோட்டில் மீன்கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி ஒரு பொதுநல மனுவை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது மீனவர்கள் பொது சாலையில் குந்த வைக்கிறார்கள் என்றும் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள் என்றும் கூறிய நீதிபதி மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறி இருக்கிறார்.
2.5 கிலோமீட்டர் நீளமுள்ள மெரினா லூப் சாலை என்பது நகரத்தில் வாழும் உயர்தட்டு மக்களுக்கு ஒரு போக்குவரத்து சாலையாக மட்டுமே தென்படும். ஆனால் நொச்சிக்குப்பம், நொச்சி நகர், டூமிங் குப்பம், ராஜீவ் காந்தி நகர், முல்லை மாநகர், சீனிவாசபுரம் மற்றும் நம்பிக்கை நகர் ஆகிய ஏழு மீனவ கிராம மக்களுக்கு அதுதான் வாழ்வாதாரம். சென்னையின் கடலோரப் பகுதியில் வாழும் சுமார் 700 மீனவக் குடும்பங்களின் பூர்வகுடி நிலம்தான் இன்று லூப் சாலையாகி இருக்கிறது.
கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை இருக்கும் இந்தப் பகுதியில் 1960களில் தான் பல்வேறு மீனவ கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்பட்டது. 1990களில் கூட ஒரு மண் சாலையாக மட்டுமே இருந்த இந்தப் பகுதியை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை காய வைக்கவும், மீன் வணிகம் செய்யவும் பயன்படுத்தினர். 2000களின் தொடக்கத்தில்தான் இந்த மண் சாலை தார்ச்சாலை ஆனது.
இந்த லூப் சாலையை போக்குவரத்திற்காகப் மாநகராட்சி பயன்படுத்தியபோது, மக்களின் நலன் கருதி மீனவர்கள் அதை எதிர்க்கவில்லை. தொடக்கத்தில் இந்தச் சாலை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி கூறி இருக்கிறது. படிப்படியாக, இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம், என்று நேரம் கூட்டப்பட்டு பின்னர் அது நாள் முழுவதும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்போது போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அவர்களை அப்புறப்படுத்துகிறது அதிகார வர்க்கம்.
இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, அரசுகள் இவர்களை வெளியேற்றவே முயற்சி செய்திருக்கின்றன. மேலும் கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள், நவீன மீன் சந்தை திட்டம் என அனைத்து திட்டங்களும் மீனவர் வெளியேற்றத்தைக் குறி வைத்தே கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் இந்த மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தி பெரும்பாக்கத்தில் குடியேற அரசு ஆணையிட்டபோது, கடுமையாக போராடினார்கள் மீனவர்கள். இப்போதும் இயற்கை பேரிடர்களோடு அதிகார வர்க்கத்தோடும் போராடும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
1985இல் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலம் போராடியவர்கள் இந்த மீனவர்கள். (இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்தனர்.) சல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல், சுனாமி, புயல், மழை, வெள்ளம், மீன் பிடித்தலின் போது சிங்கள கடற்படையின் தாக்குதல் என்று பல்வேறு போராட்டக்களங்களை சந்தித்த மீனவர்கள் இன்று தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்க மெரினாவில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மீனவர்களுக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்ற மே17 இயக்கம் இப்போதும் போராடும் மீனவர்களுக்குத் துணை நிற்கிறது. கோட்டைப்பட்டினம் மீனவர் படுகொலை,ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்கள், சிங்கள/ இந்திய கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களுக்காக இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தி வழக்குகளும் வாங்கியுள்ளனர் மே17 இயக்கத் தோழர்கள். தற்போதும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உட்பட பல தோழர்கள் மீனவர்களைச் சந்தித்து அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
17/4/2023 அன்று போராடும் மீனவர்களை சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்த மே 17 இயக்கத் தோழர்களிடம், மீனவர்கள் தங்கள் குறைகளைக் கூறும் போது, “நாங்கள் பிறந்து வளர்ந்த இந்த இடத்தை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். மாநகராட்சி ஊழியர்கள் என்ற பெயரில் கிட்டத்தட்ட நூறு பேர் எங்கள் பகுதியில் நுழைந்து எங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். எங்களை எட்டி உதைத்து மீன்களை கீழே வீசி எறிந்தனர். இந்தப் பகுதியில் செட்டிநாடு வித்யாஷ்ரம் போன்ற பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வசதிக்காகவே எங்கள் பகுதியில் போக்குவரத்திற்குச் சம்மதித்தோம். ஆனால் இப்போது தனியாருக்கோ, ரோப் கார் திட்டம் போன்றவற்றிற்கோ எங்கள் நிலம் எடுத்துக்கொள்ளப்படுமோ என்று எங்களுக்கு அச்சமாக இருக்கிறது.
மேலும் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள மிகப்பெரிய உணவகங்களுக்கு எங்கள் மீன் கடைகளை போட்டியாகக் கருதுகிறார்கள். நாங்கள் குறைந்த விலையில் மீன் விற்பனை செய்வதால் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனாலும் கடந்த சில நாட்களில் எங்களை அப்புறப்படுத்துவதற்காகவே, பொதுமக்களின் வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார்கள். அருகிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் வாகனங்கள் எந்த இடத்தில நிறுத்தினாலும் காவல்துறை அவர்களை ஒன்றும் கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் காவல்துறை ஒத்துக்கொள்வதில்லை. இங்கு வரும் ஊடகங்களும் எங்கள் நிலையை வெளியுலகிற்கு சரியாக எடுத்துக் கூறுவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு எங்கள் துயரங்கள் முழுமையாகத் தெரிவதில்லை.
பல்வேறு சமரச பேச்சுக்களை மாநகராட்சி கூறினாலும், அவையெல்லாம் மேம்போக்காகவே இருக்கின்றன. எனவே எங்கள் உயிர் உள்ள வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்” என்று கூறி போராட்டம் நடத்தி உள்ளனர் மீனவர்கள்.
மீனவ மக்களின் கோரிக்கைகள்:
* நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு அறிவித்தபடி 1188 குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.
* வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மீனவர்களுக்கு 5,29,000 ரூபாய் நிர்ணயித்தது சரியா?
* Affidavit என்ற பெயரில் மீனவ குடும்பங்களுக்கிடையே சிக்கல்களை உருவாக்கக் கூடாது.
* குடியிருப்புகளை வழங்குவதற்கு முகவர்களை வாரியம் அனுமதிக்கக் கூடாது.
* மீனவர்களுக்கு வழங்கவிருக்கும் குடியிருப்புப் பட்டியலின் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
* நொச்சிக்குப்பத்தில் உள்ள அனைத்து விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்கும் வாரியம் உடனடியாக குடியிருப்பு வழங்க வேண்டும்.
இவையே போராடும் மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கின்றன.
“நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது. அந்த வளர்ச்சி யாருக்காக என்பதுதான் நம் கேள்வி” என்று பாலியப்பட்டு சிப்காட் போராட்டத்தில் முழங்கினார் தோழர் திருமுருகன் காந்தி. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷாவும், சென்னையின் ஆறுகளை ஆக்கிரமித்த தனியார் நிறுவனங்களும் அதிகார வர்க்கத்தின் கண்ணுக்குத் தப்பும்போது, சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்கள் அழகான இடத்தைக் கெடுப்பதாகக் கூறுவதன் பின்னால் இந்த மக்களின் மேலுள்ள சமூகப் பார்வையே வெளிப்படுகிறது. எனவேதான் பணக்கார வர்க்கத்தினர் செரிமானத்திற்காக நடைப்பயிற்சி செல்லும் பாதைகள் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமே மீண்டும் மீண்டும் நசுக்கப்படுகிறது.
இந்த மக்களும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதுக்காகப்பட வேண்டுமென்றால், மக்களின் ஆதரவு மீனவர்களுக்கென்பதை நாம் தெரியப்படுத்த வேண்டும். சமூக நீதியை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் திமுக அரசு, மீனவர்களின் வாழ்வாதாரம் மீதான அதிகார வர்க்கத்தின் நெருக்கடியை நீக்கி, அவர்கள் வாழ்வு மேம்படும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். அதுதான் உண்மையான ‘திராவிட மாடல்’ அரசாக இருக்க முடியும்.