மோடியின் முகமூடியை கிழிக்கும் சர்வதேச ஊடகங்கள்!

மோடியின் முகமூடியை கிழிக்கும் சர்வதேச ஊடகங்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி, கோவிட்-19 வைரசு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தொற்று பாதிப்புகளின் அதிகரிப்பு இந்தியாவின் பலவீனமான சுகாதார அமைப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. தடுப்பூசிகள், மருத்துவ வளங்களின் கடுமையான பற்றாக்குறையால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை நாள்தோறும் பதிவு செய்துவரும் ஒரே நாடு, இந்தியா. மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்காக மக்கள் துடித் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பதை மட்டுமே இலட்சியமாக கொண்ட மோடி அரசு தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி, கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்து, தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. மேலும் ஆக்ஸிஜன், உயிர் காக்கும் மருந்துகளை சேமித்து வைத்து வைக்காமல் இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் கோட்டைவிட்டது.

மத்தியபிரதேசத்தில் மருத்துவமனைகளில் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ், படுக்கை வசதி என எதுவும் இல்லை. ஆனால் அங்கு ஆட்சியில் உள்ள பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், தங்களிடம் அனைத்தும் போதுமான அளவில் உள்ளது என்று கூறியிருப்பது பாஜகவினர் மனிதகுல விரோதிகள் என்பதற்கு சிறந்த உதாரணம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த 3 மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வருகின்றன. ஆயினும் சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது. உண்மையை மறைப்பதன் மூலம் கொரோனாவை தடுத்து விடலாம் என்று மோடி அரசு நினைக்கிறது.

மோடி அரசின் அலட்சியத்தால் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்ட இந்தியாவை சக நாடுகள் கைவிடவில்லை. எதிரி நாடு என்று முத்திரை குத்திய பாகிஸ்தான் முதல் சிறிய நாடான பூட்டான் வரை உதவி வருகின்றன.

இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 3.5 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா தொற்று மற்றும் 3,000 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் நெருக்கடி குறித்தும், மோடியின் தோல்வியை குறித்தும் சர்வதேச ஊடகங்கள் பலவகையிலான கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது மோடி அரசின் தொடர் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்துகின்றது.

 

தி கார்டியன், இங்கிலாந்து

இந்தியாவில் மக்கள் அனைவரும் ஆக்ஸிஜனுக்காக போராடிக் கொண்டிருக்கும் போது, அரசியல்வாதிகள் “ஆக்சிசன் தட்டுப்பாடு இல்லை” என மறுப்பதாக “தி கார்டியன்” பத்திரிகை எழுதியுள்ளது.

கார்டியன் பத்திரிகையில், நாட்டில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜனுக்காக துடித்து கொண்டிருக்க, அவர்களில் பலர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்ட நிலையிலும், அரசியல் தலைவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என கூறியதோடு, அது குறித்த கருத்தை தெரிவிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துகின்றனர் எனவும் கூறியுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை எனவும் அதைப் பற்றி புகார் கூறுபவர்களுக்கு மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியுள்ளார் எனவும், ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்று புகார் கூறும் மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் எனவும் அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

 

பைனான்சியல் டைம்ஸ், இங்கிலாந்து

மோடி அரசு கொரோனாவை தடுக்காவிட்டால் இன்னும் நிறைய இறுதி சடங்குகள் எரியும் என “பைனான்சியல் டைம்ஸ்” இங்கிலாந்து ஊடகம் கூறியுள்ளது.

“இந்தியாவின் இரண்டாவது அலையின் சோகம்” என்ற தலைப்பிலான கட்டுரையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும் தகவல்கள், முதல் அலையில் வைரஸ் அடையாளம் காணப்பட்ட போது இருந்த மோசமான நிலையைக் கொண்டு இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு மோடி பொறுப்பு ஏற்காவிட்டால், அவரது நாடு முழுவதும் அதிக சடலங்கள் எரியும், என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

 

லெ மொண்டே, பிரான்சு

மோடியின் தொலைநோக்கு குறைபாடு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என “லெ மொண்டே” பிரெஞ்சு பத்திரிகை தெரிவித்துள்ளது.

2020ல் முன்னேற்பாடுகள் இல்லாத ஊரடங்கை விதித்து புலம்பெயர் தொழிலாளர்களை கைவிட்டு, நாட்டை முடக்கியது போல 2021ல் தனது நாட்டின் பாதுகாப்பை முழுவதுமாக சீர்குலைத்ததற்கு காரணம் மோடியின் தொலைநோக்கு பார்வை குறைபாடும், அவரது ஆணவமும் என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.

 

டைம், அமெரிக்கா

உலகப் புகழ்பெற்ற “டைம்” இதழில் இந்திய இதழியலாளர் ராணா அய்யூப் எழுதியிருக்கும் கட்டுரையில் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நெருக்கடியான சூழலில் கும்பமேளாவை அனுமதித்தது பெருந்தவறு என்றும், கும்பமேளா தோல்விக்கான பொறுப்பை மோடியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைப்பதாக அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்கா

நிலைமையை உணராமல் மிக விரைவாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது தான் இந்தியாவின் தற்போதைய நிலைக்குக் காரணம் என “வாஷிங்டன் போஸ்ட்” எழுதியுள்ளது.

தியேட்டர்கள், ஸ்டேடியம், கும்பமேளா போன்றவை வைரஸ் பரவலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பே சிதைந்து போகும் நிலையில் உள்ளது என்றும், இந்த மோசமான நிலையை அடையாமல் தவிர்த்திருக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தி ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா

மோடி அரசின் ஆணவ போக்கும், அதன் அதிதீவிர (இந்துத்துவ) தேசியவாத எண்ணமும் தான் இந்தியாவில் இந்நிலை உருவாகக் காரணம் என “தி ஆஸ்திரேலியா” ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதார மையத்தில் இந்தியா கொரானாவை வீழ்த்தி விட்டதாக இறுமாப்புடன் கூறிய மோடி, மக்கள் மூச்சுவிடக்கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை உற்சாகமாக நடத்தி கொண்டுருக்கிறார் என்றும் சாடியுள்ளது.

 

டைம், அமெரிக்கா

மோடி மட்டுமல்ல, கொரோனா நெருக்கடிக்கு இந்தியாவின் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும் என “டைம்” இதழ் தெரிவித்துள்ளது.

பல இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் மற்றும் பிராந்திய செய்தி நிறுவனங்களும் மோடிக்கு ஆதரவானவையே! அவர்கள் வழக்கமாக அரசாங்கத்தின் வெற்றிகளை மட்டுமே மிகைப்படுத்தி கூறும் நிலையில், இந்திய ஊடகங்களின் பொறுப்பின்மையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்று இந்த பத்திரிகை கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

 

ஆஸ்திரேலியன் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன், ஆஸ்திரேலியா

இந்தியாவின் இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும் என “ஆஸ்த்ரேலியன் பிராட்கேஸ்டிங் கார்ப்பரேஷன்” வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்திய அரசைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கூடிய கூட்டமே கொரோனா பரவலுக்கு காரணம் எனக் கடந்த 2020 வருடம் பழி சுமத்திய மோடி அரசு, இப்பொழுது உலகின் மிகப்பெரிய கூட்டம் கூடும் இந்து மதத்தினரின் விழாவான கும்பமேளாவை நடத்த அனுமதித்திருப்பது மோடி அரசின் முரணான மற்றும் பாகுபாடான போக்கை தெளிவாகக் காட்டுகிறது என்று ஆஸ்திரேலியா “ஏபிசி” ஊடகம் கூறியுள்ளது.

 

தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ், சிங்கப்பூர்

இந்தியாவில் இந்த கொரோனா பரவலால் நிகழ்ந்துள்ள பேரழிவு என்பது இயற்கைப் பேரிடருக்கு ஒப்பானது. இந்த பேரழிவு தற்பெருமை நிரம்பிய, நிர்வாகத் திறனற்ற, அதிகாரத் திமிர் போன்றவற்றினால் உருவானது என சிங்கப்பூர் “தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ்” பத்திரிகை கூறியுள்ளது.

 

ஆணவம், அலட்சிய போக்கு, அதிகார வெறி, அதிகார குவியல், நிர்வாக திறமையின்மை, இந்துத்துவ மதவாதம் போன்ற மோடி அரசின் செயல்பாடுகள் தான் இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருப்பதாக பல சர்வதேச ஊடகங்களின் கட்டுரைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

தவறுகள் அனைத்தையும் மோடி அரசு செய்துவிட்டு, பெருந்தொற்று பாதிப்பு கைமீறி போனதும், தற்போது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதற்கு மோடி எப்படி பதிலளிக்க போகிறார்? குறைந்தபட்சம் பொறுப்பாவது ஏற்பாரா?

இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு #ResignModi ஹாஷ்டேக்கை மக்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இரண்டாவது முறையும் திறனற்ற மோடியை பிரதமராக்க காரணமானவர்கள் அனைவருமே குற்றவாளிகள் தான்!!

Translate »