நீட் தேர்வில் நடந்தேறிய முறைகேடுகளும் வலுக்கும் எதிர்ப்பும்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 12, 2021 அன்று நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்களை மாற்ற முயற்சி போன்ற பல முறைகேடுகள் நடந்திருப்பதும், அதேபோல ஜெய்ப்பூரில் வினாத்தாள் கசிந்த விவகாரமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் நீட் பயிற்சி மையங்கள் ஈடுபட்டிருப்பது நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்நிலையில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிந்த விவகாரம் என்பன நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் தற்போது நீட் எழுதிய மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர்கள் தற்போது நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் மறுதேர்வு நடத்தக் கோரி #FairNEET எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் தங்கள் கோரிக்கையை வெளிபடுத்தி வருகின்றனர். அதோடு இந்த முறைகேடுகளை விசாரிக்க CBI விசாரணைக்கு உத்தரவிட கோரி தேசிய தேர்வு முகமைக்கு (National Testing Agency) கோரிக்கை வைத்துள்ளனர்.
பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.சி பாட திட்டத்தில் உயர்தர பள்ளிகளில் படிக்கும் உயர்சாதி-பணக்கார மாணவர்கள், மேலும் சில லட்சங்களை செலவு செய்து கோச்சிங் சென்டர் மூலம் நீட் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். இவ்வளவு செலவு செய்தும் நீட் தேர்வில் வெற்றி பெற இயலாத உயர்சாதி-பணக்கார மாணவர்களின் பெற்றோர்கள், தங்களிடம் பணம் இருக்கும் திமிரில் தம் பிள்ளைகளை மருத்துவராக்க பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களோடு தான் மாநில அரசின் பாட திட்டங்களில் பயிலும் ஏழை மாணவர்கள் போட்டி போட வேண்டும் என்றும், அது தான் “சம வாய்ப்பு” என்றும் கூறுகிறது மோடி அரசு. தமிழ்நாட்டில் அனிதா போன்ற மாணவர்கள் தங்கள் கனவை நிறைவேற்ற கஷ்டப்பட்டு படிக்கின்றனர். ஆனால் இது போன்ற பல முறைகேடுகளை செய்து, வட மாநில மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிலேயே படிக்க வருவது தான் அநீதியின் உச்சம்.
உண்மை நிலை இப்படி இருக்க, தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைவதற்கு, இங்கு கல்வித் தரம் பின் தங்கியுள்ளதே காரணம் என தமிழ்நாடு பாஜகவினர் வாய் கூசாமல் பொய் கூறி வருகின்றனர். அதோடு பார்ப்பன கும்பலும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் ஊடகங்களும் நீட் தேர்வை எதிர்ப்பவர்களை தகுதிக்கும் திறமைக்கு எதிரானவர்களாக சித்தரித்தனர்.
நீட் தேர்வு எனும் கார்ப்பரேட் வணிகம்
இந்தியாவில் நீட் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவையாக உள்ளன. கடந்த ஆண்டு நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சிகளைப் பெற தங்களது குடும்ப வருமானத்தில் 12% தொகையை இந்தியப் பெற்றோர்கள் செலவிடுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.
மேலும், CRISIL என்ற அமைப்பு 2020-ல் நடத்திய ஆய்வுபடி, 2021-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் சுமார் ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம் செய்யும் என கணித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இதுவரை இல்லாத அளவில் 13% அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்த வர்த்தகம் ரூ.45,000 கோடியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை நீட் தேர்வுகளில் வெற்றி அடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்கள் நாட்டின் மிகப்பெரிய நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது கவனிக்க வேண்டிய விடயம். இந்த நீட் பயிற்சி மையங்கள் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். சராசரியாக ஒரு மாணவரிடம் ரூ. 2,94,000 அளவில் நீட் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி நிறுவனங்களில் முதல் மூன்று இடத்தில் உள்ளது பார்ப்பனிய மற்றும் பனியா கும்பலின் ஆகாஷ், ஆலன், Resonance போன்ற நிறுவனங்கள் தான். இவற்றின் நீட் பயிற்சி மையங்கள் மட்டும் நாடு முழுவதும் சுமார் 544 கிளைகள் உள்ளன. இந்த மூன்று நிறுவனங்கள் மட்டும் ஆண்டிற்கு சுமார் ரூ.1000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை தனித் தனியாக லாபம் ஈட்டுகின்றன.
இப்படி தங்களுக்குள் தொழில் போட்டி, அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல காரணங்களால் சில நீட் பயிற்சி மையங்கள் சட்டத்திற்கு புறம்பாக வினாத்தாள்களை திருடி தங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விற்பது, ஆள்மாறாட்டம் செய்வது என தொடங்கி விடைத்தாள்களை மாற்றுதல், திருத்துதல் என்ற அளவிற்கு இந்த முறைகேடுகள் வளர்ந்துள்ளது.
நீட் தேர்வில் நடந்துள்ள பெரும் முறைகேடுகள்
கல்வியை வியாபாரமாக்கி அதன் மூலம் பலரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவிற்கு மக்களை மாற்றியிருக்கிறது மோடி அரசு.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதால், எந்த கெடுபிடியும் இல்லாத வடமாநிலங்களில் பல மோசடிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு நீட் தேர்வு ஆரம்பித்தது முதலே இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன.
இங்கு பாஜக அரசின் நீட் தேர்வு எதிர்பார்க்கும் தகுதி, திறமை என்பது பணம்தான். ஒருவரிடம் பணம் மட்டும் இருந்தால் போதும், அவர் எத்தகைய முறைகேடுகள் செய்தேனும் எளிதாக மருத்துவம் படிக்க முடியும். அதற்கு ஆதாரமாக இங்கு நடந்தேறிய சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.
1. புரோமெட்ரிக் முறையில் நடக்கும் நீட் தேர்வுக்கு பயன்படுத்தும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்க கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது. கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy admin) எனும் ரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்தி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினி முன் அமர்ந்திருக்க, வேறிடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இத்தகைய ரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே கணினியில் அந்த ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர்.
2. சில தேர்வு மையங்களில் பணம் வாங்கி கொண்டு நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வு எழுத அனுமதித்து உள்ளனர். பணம் கட்டிய மாணவர்கள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். மேலும் ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்து உள்ளனர்.
3. இந்தச் சூழலில் தான் தற்போது மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் நடந்த மாபெரும் மோசடியை CBI கண்டுபிடித்துள்ளது. இங்குள்ள RK Education Career Guidance பயிற்சி மையம் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் 50 லட்ச ரூபாய் வரை இந்நிறுவனம் வசூலித்துள்ளதாக சிபிஐ தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ல், பரிமல் கோட்பள்ளிவார் மோசடியான வழிகளைப் பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கிறார். இதற்காக பெற்றோர்களிடம் பெருந்தொகையை பெற்ற பின்னர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தப்படுகிறது, மேலும் கோச்சிங் சென்டரில் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
4. 2019-ல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, இர்ஃபான், ராகுல், பிரவீன், பிரியங்கா ஆகிய ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும், இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியிலும், மற்ற 3 பேர் வெவ்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டத்தின் மூலம் சேர்ந்து படித்து வந்ததும் நாம் அறிந்ததே.
பிரவீனும் ராகுலும் சென்னையில் நீட் தேர்வு எழுதிய அதேசமயத்தில், அவர்களின் பெயரில் போலியான நபர்கள் வடநாட்டு மையங்களில் அவர்களுக்காக தேர்வு எழுதியது அவர்கள் பிடிப்பட்ட போது அம்பலமானது.
உதித் சூர்யாவும், இர்ஃபானும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்ற சென்னை அண்ணா நகரிலுள்ள கிரீன் பார்க் நீட் கோச்சிங் சென்டருக்கும் இம்மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த ஆள் மாறாட்ட மோசடிக்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் குழும அலுவலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் 30 கோடி ரூபாய் ரொக்கமும் 150 கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
5. அதேபோல் அதிகார வர்க்கத்திற்கு லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டில் வசிப்பது போன்ற போலியான இருப்பிடச் சான்று பெற்று, தமிழ்நாட்டைச் சேராத 150 மாணவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
6. இதுபோன்றே, ஆந்திராவை சேர்ந்த ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த நிதிவர்மன் என்ற இருவரும் போலியான மாணவர் சேர்க்கைச் சான்றிதழ் கொடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்று பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் டில்லியில் உள்ள கும்பல் ஒன்றிடம் பணம் கொடுத்து இந்தப் போலிச் சான்றிதழ்களை வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
7. கோவாவில் 2017-ம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்த 4 மாணவர்கள் கோவா போலீசால் கைது செய்யப்பட்டனர். 2018-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சீதாதேவி என்ற மாணவி குறுக்கு வழியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் அம்பலமானது.
8. கர்நாடக மாநிலத்தில் 32 மருத்துவக் கல்லூரிகளில் நடந்த வருமானவரி சோதனையில், அந்த மருத்துவ கல்லூரிகள் அனைத்தும், சராசரியாக ஒரு மாணவரிடம் 60 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி கொண்டு, முறைகேடாக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் ஏஜென்டுகள் மூலம் போலியான பெயர்களில் நீட் தேர்வெழுதி, மருத்துவக் கலந்தாய்வின் போது குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர்வதாக கூறிவிட்டு பின்னர் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையின் போது வராமல் தவிர்த்து விடும் முறையை பின்பற்றியுள்ளனர். இதன் மூலம், மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு, காலியாக இருக்கும் அந்த இடம் கல்லூரிக்கே மீண்டும் வழங்கப்பட்டு விடும். அந்த இடத்தை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விற்றுள்ளன.
9. ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவிக்கு விடை கூறுவதற்காக நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்பட 8 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும், அதற்காக 35 லட்சம் பேரம் பேசப்பட்டு தேர்வு மைய வளாகத்திலேயே ரூ.10 லட்சம் கைமாறியுள்ளது.
போலி சேர்க்கைச் சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ், ஆள் மாறாட்டங்கள் என்பவை எல்லாம் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு நீட் தேர்வை எழுதியது கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதன்மூலம் இதுபோன்ற முறைகேடுகளை ஒரு பெரிய வலைப் பின்னல் அமைப்பு பல மட்டங்களில் செய்து வருவது புலனாகிறது.
நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். அதனை உறுதி செய்யும் வகையில் தான் தற்போதைய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் உள்ளது.
நீட் தேர்வின் மூலம் தகுதியான மருத்துவர்களை கொண்டு வரப்போவதாக கூறி, ஏராளமான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்று இந்தியாவை புரட்டிப்போடும் அளவிற்கு வேசம் போட்டது மோடி அரசு. ஆனால் அதெல்லாம் ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில கூடாது என்று கொண்டு வரப்பட்ட ‘நவீன மனுதர்ம கோட்பாடு’ என்று அனைவரும் புரிந்துக் கொண்டனர். மோடியின் சாயம் வெளுத்து விட்டது.
இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தொடங்கி அத்தனை குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எந்தளவிற்கு அவசியமானதோ, அதனைவிடப் பலமடங்கு அவசியமானது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை. எனவே இந்த கோரிக்கையை உயர்த்தி பிடிப்போம்!
1996ல் TNPCEE எழுதி MBBS தகுதி கிடைக்க பெறாமல், BPT தகுதி கிடைத்தாலும் self-financing கல்லூரி ஒதுக்கீடு கட்டுப்படியாகாது என.. பின்னர் கணிப்பொறியாளர் ஆனேன் நான் ! ஆனால் அரசு இயந்திரம், தேர்வு நடத்தும் அமைப்புகள் மீது வெறுப்போ நம்பிக்கையின்மையோ வந்ததில்லை…. இந்த நீட் தில்லாலங்கடிகள் அம்பலமாகும் வரை !!!