இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

“நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்” – தன்னுடலுக்கு துரோகமும் தன்னினத்திற்கு தன்னையும் தந்த ஒப்பிலா அறவழிப் போராளி திலீபனின் இறுதி வார்த்தைகள்..

தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஒரு சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும் என்ற விடுதலைக் கனலை விழியிலேந்திய பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 29, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் பிரதேசத்தின் ஊரெழு கிராமத்தில் ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயினை இழந்தார். தந்தையின் பாசம், இரு அண்ணன்களின் அரவணைப்பு என மிகவும் செல்லமாக வளர்ந்த திலீபன் படிப்பிலும், அறிவுக் கூர்மையிலும் மிகுந்த திறனுடையவராக இருந்தார். இலங்கை அரசு தமிழ் மாணவர்களின் கல்வியை நாசப்படுத்த கொண்டு வந்த தரப்படுத்துதல் அளவையும் தாண்டி அதிக மதிப்பெண் எடுத்து யாழ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேர்வாகி படிக்கச் சென்றார். மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய நினைத்த மகத்தான மனிதன் தன்னின மக்கள் சிலரிடம் நோயாக மாறியிருந்த இனவுணர்வுக் குறைபாட்டை போக்க தனது உயிரையே மருந்தாக அளித்த துயரமும் நடந்தேறியது.

தமிழினத்தின் அறிவுச் சொத்துக்களாக  கிடைத்தற்கரிய தமிழ் நூல்களை சேமித்து வைத்திருந்த யாழ்ப்பாண நூலக எரிப்பு, தனி ஈழம் அடைந்தாக வேண்டிய கட்டாயத்தின் சிறு பொறியை பதின் பருவத்திலேயே திலீபனுக்குள் ஊட்டியது. சிங்கள இனவெறியர்களும், பௌத்த மத அடிப்படைவாதிகளும் இணைந்து தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக அரங்கேற்றிய கொடுமைகளில் 1981-ல் நடந்த இந்தப் படுபாதக செயலும், தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்ற 1983 சூலைக் கலவரமும் திலீபன் மனதில் ஆறாத வடுவாக பதிந்தது. தமிழர்களின் கல்வியை முடக்க இலங்கைப் பேரினவாத அரசு கொண்டு வந்த தரப்படுத்துதல் சட்டம், திட்டமிட்டு தூண்டப்பட்ட இனக்கலவரம், வகைத் தொகையின்றி பேரினவாதப்  படைகளால் தமிழ்ப் பெண்களுக்கு நடத்தப்பட்ட பாலியல் வன்முறை என அந்தக் காலகட்டத்தில் அளவற்ற அநீதிகளை நிகழ்த்திய பேரினவாத அரசை எதிர்த்து நிற்க கல்வியில் பேரார்வம் கொண்ட திலீபன் தன் மருத்துவப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். யாழ்ப்பாண மாகாணத்தின் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரானார்.

திலீபன் உண்ணாவிரதக் காரணங்களும் அதற்கு முன்பான நிகழ்வுகளும்:

1983-ல் நடந்த சூலைக் கலவரத்திற்கு பின்பான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தியும், இலங்கை அதிபர் செயவர்த்தனேவும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஒரு உடன்பாடு எடுத்தனர். ஆனால் உண்மையில் இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இந்தியாவும், இந்தியா போன்ற அண்டை நாட்டை பகைத்துக் கொள்ள முடியாது என்கிற அச்சம் கொண்ட இலங்கையும் சேர்ந்து எடுத்த முடிவாகத் தான் இந்த உடன்படிக்கை இருந்தது.

தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வாக இந்த உடன்படிக்கை இல்லையென விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆனால் ராசீவ் காந்தி அழைப்பு விடுத்து தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமும், உறுதியும் அளித்ததால் வேறு வழியின்றி மக்களின் விடுதலைக்காக, விடிவிற்காக ஆயுதங்களை ஒப்படைப்பதாக முடிவெடுத்தார். இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்த ஆயுதங்களை கையளிப்பதாகக் கூறினார்.

“இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது பொறுப்பை இந்தியாவிற்கு மாற்றித் தருகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமென நாம் நினைக்கவில்லை. தமிழீழத் தனியரசே மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும் என்பதில் எனக்கு  அசையாத நம்பிக்கை உண்டு. போராட்ட வடிவங்கள் மாறலாம். எமது போராட்ட இலட்சியம் மாறாது” என்று தமது மக்களிடம் இந்த உடன்படிக்கை குறித்தான தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார் பிரபாகரன். இதன்படி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்திறங்கியது. அமைதிப்படை விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதில் காட்டிய முனைப்பில் சிறிதளவும் ஒப்பந்தத்தில் இருந்தபடியான தமிழர்களின் உரிமைக்குரிய செயல்பாடுகளில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மாறாக புலிகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் அளித்து விடுதலைப் புலிகளின் மீது தாக்குதலை ஏவி விட்டது. அமைதிப் படையின் நோக்கம் வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதற்கிடையில் செப்டம்பர் 13-ஆம் தேதியன்று இந்தியத் தூதுவர் தீட்சித்திற்கு ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதினார் பிரபாகரன். அறவழிப் போராட்டத்தின் அனைத்துக் கதவுகளையும் விடுதலைப் புலிகளின் அமைப்பு திறந்து வைத்திருந்ததற்கு இவ்வளவு நகர்வுகளும் சாட்சிகளாகவே இருக்கின்றன. இன்னமும் உச்சமாக அறவழிப் போராட்டம் தந்த பரிசு தான் திலீபனின் மரணமும்.

1987, செப்டம்பர் 15-ஆம் நாள் இந்த ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகிறது. இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளும் விடுதலைப் புலிகளின் இலட்சியமான தனித் தமிழீழம் நோக்கியதான கோரிக்கைகள் கூட இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே இந்த உண்ணாவிரதம். அந்த கோரிக்கைகள் இவைகளே,

  1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
  2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  4. வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும்.

“எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக் கூடாது. அப்படி என் கோரிக்கை நிறைவேறாவிட்டால் நான் இறக்கும் மட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுய நினைவோடு என்றாலும் சரி, சுயநினைவில்லை என்றாலும் சரி இதுக்கு சம்மதிக்கிறேன் என்று சத்தியம் செய்து தாருங்கோ” என்று மருத்துவரிடம் சத்தியம் வாங்கியே உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் திலீபன்.

நார்வே, சுவீடன், பிரிட்டன், ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் யாழ்ப்பாணம் வந்து திலீபனைப் பார்த்துச் செல்ல, இந்திய அமைதிப்படை அதிகாரிகளும், இந்தியாவின் தூதுவர் தீட்சித்தும் கூட உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார்கள். ஆனால் திலீபனைக் காண்பதற்காக அல்ல. ஆயுதங்கள் ஒப்படைப்பது பற்றியும், சிங்களக் கைதிகளை விடுவிப்பது பற்றியும் பேசிவிட்டுச் சென்றார்கள். “திலீபனிடம் பேசுங்கள். நீங்கள் சொல்வதைத் திலீபன் ஏற்றுக் கொண்டால் உண்ணாநோன்பை நிறுத்தலாம்” என்று தீட்சித்திடம் பிரபாகரன் வலியுறுத்தியும் அவர் மறுத்து விட்டார். கோரிக்கைகளை இந்தியாவும், இலங்கையும் அலட்சியமாய் பார்த்தன.

இந்திய உயர்சாதி வர்க்கத்தின் அதிகாரக்  கட்டமைப்பே மனித உணர்வுக்கும், மாண்புக்கும் மதிப்பு அளிக்காத வகையில் அமைக்கப்பட்டதே. அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். இதே தீட்சித் தான் புலிகளைப் பற்றிய அவதூறுகளை தமிழ் மக்களிடம் பரப்பச் சொன்னதாகவும், பேச்சுவார்த்தைக்கு வரும் போது பிரபாகரனை கொன்று விடச் சொன்னதாகவும் இந்திய அமைதிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் பின்னாளில் தான் எழுதிய நூலில் தெரிவிக்கிறார்.

திலீபன் உண்ணாநோன்பிருந்த 12 நாட்களும் பந்தலை நோக்கி மக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக பெண்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவேக் கருதி கண்ணீர் விட்டனர். உணர்ச்சிக் கவிஞர்கள் தமிழ்த்தாயின் துயர் மிகுந்த சொற்களால் உள்ளங் குமுறினர்.

“மேடையா கட்டினோம்
நல்லூரிலே உனக்குப்
பாடைதான் கட்டினோம்!
உயிரோடு பாடையிலே
உட்கார்ந்த தமிழ்ப் புலியே!
வயிறு எரியுதடா!
வயிறு எரியுதடா!”

எனத் துடித்தார் கவிஞர் காசி ஆனந்தன்.

“விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் – போய் முடியப் போகின்றான் – போய் முடியப் போகின்றான்.. “

என்று கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கதறி நின்றார்.

“இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே
தங்க மேனியைச் சாவு தின்னுதே
தனலில் ஆடிய மேனி சோருதே
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே
பொழுதுசாயுதே! பொழுதுசாயுதே!
வந்து பாரடா! வந்து பாரடா!
வாடமுன்னொரு செய்தி கூறடா!”

உணர்ச்சிக் கொந்தளிப்பில் தனது துயரத்தை வடிக்கிறார்.

திலீபன் நாவொடுங்கும் வரை விடுதலை உணர்வூட்ட உரையாற்றினார். விழி மூடும் வரை விடுதலை நேசித்த புத்தகங்களை வாசித்தார். உயிர் விடைபெறும் வரை தமிழீழ விடுதலையே சுவாசித்தார். தன் உள்ளுறுப்புகள் அறுந்து போகும் வலியை விட  தன்னினம் இணைந்து நிற்கும் நெகிழ்ச்சியில் அந்த 23 வயது மருத்துவ மாணவர் கண் மூடினார்.

1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு திலீபனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. அவரின் விருப்பத்திற்கிணங்க யாழ் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு அவருடல் தானமாக வழங்கப்பட்டது. வழியெங்கும் கண்ணீர் மழை பொழிந்த மக்களின் மனங்கள் தியாக தீபம் திலீபனின் உருவத்தை பொறித்துக் கொண்டது. திலீபனின் உயிரை அருந்தி அறவழியின் தாகம் தணிந்தது. இந்தியாவின் கோர முகம் உலகிற்கே தெரிந்தது.

“இந்த இனம் – இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்! அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது! பேரம் பேசாது – விட்டுக் கொடுக்காது! ஆயுதம் இல்லாவிட்டாலும் – உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும்! தன்னுடைய விடுதலைக்காக – நியாயத்திற்காக – நீதிக்காக – அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்!”

திலீபன் தமிழினத்தின் மேல் கொண்ட ஆழமான நம்பிக்கையின் விளைச்சலை தமிழினம் அறுவடை செய்தே தீரும். தமிழீழம் மலரும் காலமும் நிச்சயம் ஒரு நாள் வரும்.

இயன்ற வரை அறவழி, இயலாத நிலையிலே மறவழி என்பதுவே தமிழர் மரபின் குணம். அறவழியாலும், மறவழியாலும் எண்ணற்ற உயிர்கள் ஈந்து வளர்த்தெடுத்த தமிழீழ விடுதலைத் தீயை என்றும் அணையாமல் பாதுகாப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »