நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் அறிக்கை

பாஜகவின் நயவஞ்சக நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் குழுவின் விரிவான அறிக்கை.

சூத்திரனக்கு எதை கொடுத்தாலும், கல்வியை கொடுக்காதேஎன்றது மனுதர்மம். இவர்கள் கூறும் சூத்திரன் என்பவன் கல்வியை பெற்றுவிட்டால் இயல்பான அறிவுடைய அவன், அதீத அறிவு பெற்று எங்கே இவர்களுக்கு இடையூறாக இருந்துவிடுவானோ என்ற பயத்திலே தான் மேற்கண்ட “தர்மங்கள்” பார்ப்பனிய மனுதர்மத்தில் எழுதிவைக்கபட்டது. இதனைத் தான் இந்துத்துவ பார்ப்பனிய பாஜக கும்பல் நீட், புதிய கல்விக் கொள்கை என தற்போது நிறைவேற்றி வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் உயிரைக் குடிக்கும் உயிர்க் கொல்லி என்றும் அது பாராபட்சமானது என்றும் அது வந்த நாள் முதலே தமிழ்நாடு அதை எதிர்த்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்துத்துவத்தை கடைபிடிக்கும் பாஜக அரசோ மருத்துவப் படிப்பில் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தின் மூலமாக கறாராகக் கூறி வருகிறது. ஆனால் அவர்கள் உருவாக்கிய நீட் நுழைவுத்தேர்வு தகுதி, திறமை என்பதைத் தாண்டி பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை தான் உருவாக்கியுள்ளது. எனவேதான் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் ஒருமித்துக் குரல் எழுப்பி வருகின்றனர்.

நீதிபதி ஏ.கே.ராஜன்

இந்த நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது அந்த குழு 165 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வு அறிக்கையும், பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதில் நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை, படித்த பள்ளிகள் விவரம் போன்றவையும், நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நிலையும் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சேர்க்கைக்கு நீட் சிறந்த தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதாக கருதினால், நீட் தேர்வுக்கு பின்னர் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களின் செயல்திறன் மற்றும் தேர்ச்சி விகிதம் சிறந்த முடிவுகளைக் காட்டியிருக்க வேண்டும், ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை என்று ஏகே ராஜன் குழுவின் ஆய்வு மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனவே, “நீட் நுழைவுத் தேர்வை மருத்துவம் பயில தகுதியான சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கருவியாக அல்லது முன்கணிப்பு முறையாக கருத முடியாதுஎன்பது ஆணித்தரமான உண்மை.

முன்பு பார்ப்பனிய சூழ்ச்சியால் நாம் அடிக்கப்பட்டு கீழே தள்ளப்பட்ட போது, தந்தை பெரியார் போன்ற பலரின் துணைக் கொண்டு மீண்டு எழுந்து வந்து கொண்டு இருக்கிறோம். இதை பொறுக்க முடியாத பார்ப்பனிய கும்பல் மீண்டும் நீட் எனும் சூழ்ச்சியால் நம்மை வென்று விட்டது. இப்போது நம்மை மீட்க பெரியாரும் இல்லை. அவர் விட்டு சென்ற வழிகளில் அவரைப் போன்றே போராடினால் மட்டுமே நம் உரிமைகளை மீட்க முடியும். பெரியார் எனும் அறிவாசான் இன்றும் நமக்கு தேவைப்படுகிறார்.

நீதிபதி .கே.ராஜன் குழு நீட் குறித்து அளித்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்!

  1. தமிழ்நாடு மாநில கல்வித் திட்டத்தின் (TNSBSE) கீழ் கடந்த 10 ஆண்டுகளாக 12ம் வகுப்பு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 2011 முதல் 2017 வரை மேல்நிலைக் கல்வியில் (HSC) அதிகரித்து வந்ததும், 2017ம் ஆண்டு நீட் தேர்வுக்கு பின் 2020ம் ஆண்டு வரை அதன் எண்ணிக்கை 12.7% குறைந்தும் உள்ளது. 2017-2020க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1,13,322 பேர் என்ற அளவில் மாணவர்கள் விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. நீட் தேர்வுக்கு முன்னர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மொத்த இடங்களின் எண்ணிக்கை சீராக வளர்ந்துள்ளது.ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர விண்ணப்பித்த எண்ணிக்கை நீட் தேர்வுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், நீட்-க்குப் பின்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்து உள்ளது. மேலும் இந்த நீட் தேர்வு மாணவர்களை மருத்துவ இடங்களுக்குப் போட்டியிடாமல் பின்வாங்க வைத்துள்ளதையும் காட்டுகிறது.ஒரேயொரு ஆறுதல் 2020-21ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்த 7.5% இட ஒதுக்கீடு, அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 239 மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 97 இடங்களைப் பெற்று கொடுத்து உள்ளது.

  1. நீட் தேர்விற்கு முன்பு 2016-17ல் எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் 537 ஆக இருந்த தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வுக்கு பிறகு 2017-18ல் 56 ஆக குறைந்துள்ளது.2020-21ல் (92.5%) 82 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு படி 217 பேர் என மொத்தம் 299 மாணவர்கள் மட்டுமே தமிழ்வழிக் கல்வி கற்றவர்கள். நீட் தேர்வுக்கு முன் 500க்கும் மேற்பட்ட தமிழ் வழி மாணவர்கள் மருத்துவம் படித்து வந்த நிலையில் நீட்-க்கு பின்பு இடஒதுக்கீடு வழங்கியும் பாதியை மட்டுமே நெருங்க முடிந்துள்ளது.

  1. நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் சதவீதம் குறைந்து உள்ளது. 2016-17ல் அரசு மருத்துவக் கல்லூரியில் 12.14% ஆக இருந்த தமிழ்வழி மாணவர்கள் சதவீதம் 2020-21ல் வெறும் 1.7% ஆக குறைந்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த சதவீதப்படி நீட் தேர்வுக்கு முன்பு ஆங்கிலவழி பயின்றவர்கள் 84.12% மற்றும் தமிழ்வழி பயின்றவர்கள் 14.88% ஆக இருந்தது. ஆனால் நீட்டுக்கு பிறகு 2020-21ல் ஆங்கில வழி பயின்றவர்கள் 98.01% ஆக அதிகரித்தும், தமிழ் வழியில் பயின்றவர்கள் சதவீதம் 1.99% ஆக குறைந்தும் உள்ளது.

  1. நீட் தேர்வுக்கு பின், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வது மிகவும் குறைந்துள்ளது. 2016-2017ல் மாநில பாடத் திட்டத்தில் படித்த 2,369 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்போது CBSE மாணவர்கள் 14 பேர் மட்டுமே எம்பிபிஎஸ்ஸில் சேர்ந்துள்ளனர்.இந்தநிலை நீட் தேர்வுக்கு பிறகு வெகுவாக மாறியுள்ளது. 2020-2021ல் CBSE மாணவர்கள் 1,108 பேர் எம்.பி.பி.எஸ்ஸில் சேர்ந்து உள்ளார்கள். இதன் மூலம் நீட் தேர்வு CBSE மாணவர்களுக்கு வெகுவாக உதவியது தெரிகிறது. நீட் தேர்வுக்கு முன், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அதிக இடங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  1. நீட் தேர்வுக்கு பிறகு சதவீத அடிப்படையிலும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களில், மாநில கல்வித் பாடத் திட்டத்தில் படித்தவர்களை காட்டிலும் CBSE மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

  1. 2011-2012 கல்வியாண்டின் மருத்துவ சேர்க்கையில் 99.29% மாணவர்கள் முதல் முயற்சியிலே தேர்வில் தேர்ச்சி பெற்றும், 0.71% மாணவர்கள் மட்டுமே மீண்டும் முயற்சித்தும் உள்ளனர். ஆனால் 2020-2021 கல்வியாண்டில் இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. 28.58% மாணவர்கள் மட்டுமே முதல் முயற்சியிலும், மீதமுள்ள 71.42% மாணவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தே இடங்களைப் பெற்றுள்ளனர்.நீட் தேர்விற்கு பின்னர் மீண்டும் முயற்சிப்பவர்களால் மட்டுமே மருத்துவம் பயில இயலும் என்பதையே இது காட்டுகிறது.

  1. நீட்-க்கு முன்னர் இருந்த SC/ST மாணவர்களுக்கான சில மருத்துவ இடங்களை நீட்தேர்வு பறித்துள்ளது 2011-12ல், 2.69% SC, 0.38% SCA (Scheduled Caste Assistance) மற்றும் 0.19% ST மாணவர்கள் பொது பிரிவில் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றதாக தரவு காட்டுகிறது. ஆனால் 2020-2021ல், இந்த சாதியினர் எண்ணிக்கை முறையே 1.10%, 0.11% மற்றும் 0% ஆக இடங்களைப் பெறுவது குறைந்துள்ளது.

  1. சமூக வளர்ச்சியின் மற்ற அளவீடுகளிலும் நீட் தேர்வு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை இதன் மூலம் அறியலாம். உதாரணமாக, நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளின் தரவுப்படி முதல் தலைமுறை அல்லாத பட்டதாரிகள் (Non-First Generation Graduates) மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு (FGG-First Generation Graduates) இந்த தேர்வு சாதகமாக இருந்ததுள்ளது.அதாவது 2010-2011ல், மருத்துவ இடங்களைப் பெற்ற FGG மாணவர்கள் சதவீதம் 24.61%  மற்றும் Non FGG மாணவர்கள் சதவீதம் 75.39% ஆக இருந்துள்ளது. ஆனால் 2017ல் நீட் தேர்வுக்குப் பிறகு, வெறும் 14.46% FGG மாணவர்கள் மட்டுமே மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள 85.54% (மிக அதிக எண்ணிக்கை) முதல் முறை பட்டதாரி அல்லாத மாணவர்களுக்கு சென்றுள்ளது. இதன் மூலம் முதல் முறை பட்டதாரி மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு தகர்த்துள்ளது புலனாகிறது.

  1. நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை பின்வரும் அட்டவணையில் காணலாம். 2020-21 கல்வியாண்டில் இவர்கள் அனைவரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து உள்ளது.

  1. பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன் 2016-17ல் 47.42%-ல் இருந்து நீட் தேர்வுக்கு பிறகு 2020-21ல் 41.05% ஆக குறைந்து உள்ளது. இந்த சதவீதம் நீட் தேர்வுக்கு பிறகு 30% அளவிற்கும் குறைந்துள்ளதை பார்க்கலாம்.

  1. நீட் தேர்வுக்கு முன்பு 2016-17ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் சதவீதம் 65.17% ஆக இருந்தது. ஆனால் நீட் தேர்விற்கு பிறகு அது 49.91% ஆக குறைந்துள்ளது. அதே நேரம் 34.83% ஆக இருந்த நகர்ப்புற மாணவர்களின் சதவீதம் 50.09% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் பாதகமாக உள்ளது புரிகிறது.

  1. முன்கணித்தல் என்பது பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination – CEE) முக்கிய அம்சங்களில் ஒன்றாகும், மேலும் அதனைக் கொண்டு எதிர்கால உயர் கல்வியில் மாணவர்களின் செயல் திறனை துல்லியமாக கணிக்க முடியும்.இந்தவகையில் மருத்துவ மாணவர்களின் செயல்திறனை சோதிக்க கொண்டு வந்த நீட் தேர்வுக்கு பிந்தைய காலத்தில் இரண்டாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததை விட குறைந்தே உள்ளது. ஆக, நீட்-க்குப் பின்பு மாணவர்களின் திறனில் முன்னேற்றம் இல்லை என்று முடிவு செய்யலாம். எனவே நீட் நுழைவு தேர்வு மாணவர்களை சோதிக்கும் திறனற்றது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இதன்மூலம் நீட் நுழைவு தேர்வு மாணவர்களின் திறனை சோதிக்க என்று கூறப்பட்டது பச்சை பொய் என்றும் நம் ஏழை, எளிய, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதை தடுக்கும் மனுதர்மம் கோட்பாடே இந்த நீட் என்பதும் எந்தவித ஐயமும் இல்லாமல் தெளிவாகிறது.

ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் கூறும் முக்கிய முடிவுகள் 

  1. நீட் தேர்வு கலாசாரம், பிராந்தியம், மொழி, சமூக பொருளாதார அடிப்படையில் பாரபட்சமாக இருக்கிறது. இது மொத்தத்தில் அநீதியான, பாராபட்சமான தேர்வு முறையாகும்.
  1. நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதை தடுத்து உள்ளது.
  1. நீட் தேர்வு தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் குறிப்பாக தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள் மருத்துவர் ஆவதையும் தடுத்து உள்ளது.
  1. நீட் தேர்வு முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துள்ளது.
  1. நீட் தேர்வு கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துள்ளது.
  1. நீட் தேர்வு SC/ST/SCA மாணவர்களின் மருத்துவ இடங்களைப் பறித்துள்ளது.
  1. நீட் தேர்வு ‘கோச்சிங்’ மையங்களை ஊக்குவிக்கிறது. பயிற்சி இல்லாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி 2, 3 ஆண்டுகளாவது படித்தால் மட்டுமே மருத்துவர் ஆகும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
  1. நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது.
  1. நீட் தேர்வு ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வருமானத்திற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில இயலாத சூழலை ஏற்படுத்தி உள்ளது.
  1. நீட் தேர்வுக்கு பிறகு தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
  1. நீட் தேர்வு கற்று கொள்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் தேர்ச்சியடைவதை முன்வைக்கிறது.
  1. நீட் தேர்வு ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமைகளைக் கணக்கில் கொள்வதில்லை.
  1. நீட் தேர்வில் தேர்ச்சி என்பது, கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
  1. நீட் தேர்வு, இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது மிகப் பெரும் அநீதியாகும்.
  1. நீட் தேர்வுக்கு பிறகு, தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவ உயர் கல்வியில் இடம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.
  1. நீட் தேர்வில் 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது பெரிய அளவில் பயிற்சி இருந்தால் மட்டுமே முடியும். ஆகவே இது பயிற்சி நிலைய வணிகத்தை வளர்க்கும் ஒன்றாகவே பார்க்க முடிகிறது.
  1. நீட்தேர்வு தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை உறுதிசெய்யவில்லை. மாறாக குறைந்த திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது.
  1. மொத்தத்தில் நீட் தேர்வு சமூக நீதி, மனிதத்தன்மை, மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. மேலும் அது மாநில கல்வி உரிமையில் தலையிட்டு அதைப் பறித்து விட்டது.

ஏகே ராஜன் குழுவின் பரிந்துரைகள்

ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் குழுவின் மூலம் ஆழ்ந்து பகுப்பாய்வு செய்து வழங்கப்பட்ட அறிக்கைகள், உண்மைகளை ஆதாரங்களுடன் நமக்கு எடுத்து காட்டியது. இந்தக் குழுவின் நியாயப்படியான அறிக்கை பின்வரும் பரிந்துரைகளை அரசுக்கு கூறியுள்ளது.

  1. மருத்துவத்துறையின் அனைத்து நிலையிலும் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம்.
  1. இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மருத்துவ கவுன்சிலின் சட்ட திட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள், அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.
  1. தமிழக மாநில அரசு, 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தைப் போல, மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நீக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.இதன் மூலம் சமூக நீதியை உறுதி செய்வதோடு, மருத்துவக் கல்வித் திட்டங்களில் சேர்வதில் பாகுபாடு இல்லாமல் அனைத்து பாதிக்கப் படக்கூடிய மாணவர் சமூகங்களையும் பாதுகாக்கலாம்.
  1. முதல் பட்டப்படிப்பு மருத்துவ திட்டங்களில் சேர்வதற்கான தனித்த சேர்க்கை அளவுகோலாக 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையே இருக்க வேண்டும். மேலும் வெவ்வேறு கல்வி திட்டத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வாய்ப்பில் சமத்துவத்தை உறுதி செய்ய இந்த மதிப்பெண் முறையே பின்பற்றப்பட வேண்டும்.
  1. மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணி அவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆகவே, அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அவர்களை மதிப்பிட “Adversity Score” என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.
  2. பள்ளிக் கல்வியில் 12ம் வகுப்பு வரை எல்லா மட்டங்களிலும் மனப்பாடம் செய்து, தேர்ச்சி அடைவதை ஊக்குவிக்காமல், கற்பதை ஊக்குவிக்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.மேலும் மாணவர்களை பகுத்தறிதல், முடிவெடுத்தல், சமூக மனப்பான்மை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பாட அறிவு மற்றும் உயர் ஒழுங்கு திறன்களைக் கொண்டவர்களாக மேம்படுத்தும் வகையிலும் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.குறிப்பாக, பயிற்சிக்கு‌ (கோச்சிங்) வழிவகுக்கும் கற்றல் மதிப்பீட்டின் முக்கிய வடிவம் நீக்கப்பட வேண்டும். அதோடு அறிவு மற்றும் திறன்களை வளர்க்கும் கல்வி முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  1. தமிழக அரசு எல்லா நிகர்நிலைப் பல்கலைக கழகங்களையும் (Deemed Universities) தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சட்டத்தை (Act 3/2007 போன்ற) இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இவ்வளவையும் மீறி ஒருவேளை தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவ கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். மேலும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும்.

மொத்தத்தில், தமிழ்நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு திரும்பலாம். அதோடு சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழ் நாடு செல்லும் நிலையும் ஏற்படலாம் என்று இந்த ஆய்வறிக்கை தரவுகளோடு எடுத்து காட்டுகிறது.

நீட் தேர்வு ரத்து ஒன்றே மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »