
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து ஐயா வைகோ அவர்கள் தலைமையிலான போராட்டம் ஜூன் 02, 2026 அன்று காலை 10 மணி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:
மேக்கேத்தாட்டு அணை தமிழ்நாட்டினுடைய எதிர்காலம் நாசமாகும் என்கின்ற எச்சரிக்கை மணியை அடிப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களைப் போராட்டத்திற்கு ஐயா வைகோ அழைத்திருக்கிறார். அரசு அடக்குமுறையினால் கைது செய்யப்பட்ட பொழுது, தேசிய பாதுகாப்புச் சட்டங்களில் எல்லாம் சிறைப்பட்ட பொழுது, எங்களுக்காக குரல் கொடுத்த முதல் குரல் ஐயா வைகோ. அந்த வகையில் இங்கே மேடையில் இருப்பவர்கள் எல்லாம் அவருடைய போராட்டத்தினுடைய தளபதிகளாக, அவரோடு என்றைக்குமே உடனிருக்கக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள், கூட்டணிகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் பிரச்சனைக்கு போராடுவதற்கு என்று ஒரு தலைவர் இருக்கிறார் எனில், அது ஐயா வைகோ அவர்கள் மட்டும்தான்.
முல்லைப் பெரியாறுக்கு ஐயா வைகோ அன்றைக்கு குரல் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு எழுந்திருக்காது. அந்த ஐந்து மாவட்டங்களினுடைய எதிர்காலத்தை பாதுகாத்த பெருமை அவருக்கு உள்ளது. அதேபோல ஹைட்ரோகார்பன் திட்டம், அதற்கு முன்பாக மீத்தேன் திட்டம் இரண்டையும் எதிர்த்த பரப்புரையில், அணிதிரட்டலில், அவர் பெரும் கட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு மக்கள் நலப் போராட்டங்களை நடத்துவதில்லை. மக்களுக்காக போராடுகின்ற அமைப்புகள், சிறு சிறு அமைப்புகளாக இருந்தாலும் சரி, தலைவர்களாக இருந்தாலும் சரி, சிந்தனையாளர்களாக இருந்தாலும் சரி, அறிவையும் போராட்ட உணர்வையும் ஒரு சேர இணைக்கக்கூடிய ஒரு பெரும் கூட்டமைப்பை உருவாக்குகிறார். தமிழ்நாட்டில் மிக முக்கியமானது அதுதான்.
டெல்டாவிலே ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திலிருந்து டெல்டாவை பாதுகாக்கக்கூடிய போராட்டம் வெற்றிகரமான போராட்டமாக மாறியது. அதற்கு அடுத்தபடியாக நியூட்ரினோ திட்டம். நியூட்ரினோவை நம்மால் தடுத்துவிட முடியாது என்கின்ற கவலை எங்களுக்கெல்லாம் இருந்த பொழுது, தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்த அமைப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, வட இந்தியாவில் இருக்கக்கூடிய போராளிகளை எல்லாம், மேதா பட்கர் போன்றவர்களை எல்லாம் அழைத்து வந்து, அந்த பிரச்சனையை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கக்கூடிய பெரும் நடைபயணம் நடத்தி, அண்டை மாநிலத்துக்கு சென்று அவர்களுடைய ஆதரவையும் வாங்கிக்கொண்டு அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார். அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை தமிழ்நாட்டில் யாரும் நடத்திவிட முடியாது. ஆனால் ஐயா வைகோ அவர்கள்தான் அதை நடத்தினார்.
மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு எழுச்சியான ஆர்ப்பாட்டத்தின் மூலமாக மேடையில் நின்று குரல் கொடுத்தார். “மாநில அரசுக்கு இவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது” என்று சட்டப் பிரிவுகளை எடுத்துச் சொன்னார். அதன் கீழாகத்தான் அவர்களுக்கான தூக்கு தண்டனை ரத்தானது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பெரும் போராட்ட வரலாறு மீண்டும் ஒரு உயிர்ப்புடன் இன்றைக்கு மறுபடியும் மேடையிலே நாங்கள் எல்லாம் ஏறி நிற்கிறோம்.
இந்த மேகதாது அணை என்பது மிக மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு தமிழன் காவிரி நீரைக் குடித்துதான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறான். சென்னை காவிரி நீரை தனது குடிநீராக வைத்துதான் பிழைத்துக் கொண்டிருக்கிறது. சென்னையினுடைய ஆதாரம் காவிரி நீராக இருக்கிறது. ஆக காவிரி என்பது ஏதோ டெல்டாவில் இருக்கக்கூடிய அந்த விவசாயிகளின் பிரச்சனை என்று அல்ல, இது அனைத்து தமிழர்களுடைய உரிமை பிரச்சனை. இது தேசிய இன உரிமை பிரச்சனை என்றுதான் சென்னையில் இந்தப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் ஐயா வைகோ. நான் தெளிவாகச் சொல்கிறேன், இது ஒரு தொடக்கப் போராட்டமாகத்தான் தொடங்கி வைத்திருக்கிறார். இதற்கு அடுத்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடக்கும். முல்லைப் பெரியாறு அப்படித்தான் பாதுகாக்கப்பட்டது.

அன்பானவர்களே, இந்த மேகதாது அணையை நாம் தடுத்தே நிறுத்தியாக வேண்டும். இல்லை என்றால், கிட்டத்தட்ட 13 மாவட்டங்களுக்கு ஊடாக பாயக்கூடிய காவிரி நீர், கிட்டத்தட்ட 25 மாவட்டங்களுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. 20 நகரங்கள் காவிரியினுடைய கரையில் அமைந்திருக்கின்றன. இந்த நகரங்கள்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் மையமாக இருக்கிறது. ஆக தமிழ்நாட்டு நகரங்களினுடைய பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருப்பதும் இந்தக் காவிரி நீர்தான். டெல்டாவினுடைய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதும் இந்தக் காவிரி நீர்தான். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதும் இந்தக் காவிரி நீர்தான். சென்னை நகரத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதும் இந்தக் காவிரி நீர்தான். அப்படியிருக்க, காவிரி நீரை நாம் பாதுகாக்கவில்லை என்றால், காவிரியில் நம்முடைய உரிமையை நாம் மீட்டெடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டின் எதிர்காலம் இருண்டு போய்விடும் என்பதை உணர்ந்துதான் அவர் இதை முதன்மைப் போராட்டமாக அறிவித்திருக்கிறார்.
இது தேர்தல் கூட்டமைப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, மக்களோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் ஐயா வைகோ அவர்கள். இந்தக் காவிரிக்கான உரிமை போராட்டம் தொடர்ச்சியாக வீறுகொண்டு எழுந்த ஒரு பெரும் போராட்டமாக கனன்று எழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மேகதாது அணை ஒருபோதும் வராது. ஏனென்றால் ஐயா வைகோ அவர்கள் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கையோடு, நாமெல்லாம் இந்தப் போராட்டத்தில் ஐயா வைகோ அவர்கள் பின்னால் அணிதிரண்டு வலுப்படுத்துவோம் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.