
இந்தோனேசியாவில் ஒரு குப்பைக் கிடங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக எரிகிறது. பிலிப்பைன்ஸில் குப்பை மலை சரிந்து தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் டெல்லி முதல் சென்னை வரை ஆண்டுதோறும் குப்பைக் கிடங்குகள் தீப்பற்றி நச்சுப் புகையை வெளியிடுகின்றன. இவற்றை வெறும் “தீ விபத்து” என்று சொல்வது உண்மையை மறைப்பதாகும். இவை அனைத்தும் மக்களின் வாழ்வை விட கார்ப்பரேட் லாபத்திற்கே முன்னுரிமை அளிக்கும் வளர்ச்சி மாதிரியின் அரசியல் விளைவுகள்.
ஒவ்வொரு குப்பை மலையும் ஒரு நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; அது ஒரு அரசியல் குற்றப்பத்திரிகை.
இன்று இந்தியாவில் நகரங்கள் வளர்கின்றன என்று அரசுகள் பெருமை பேசுகின்றன. ஸ்மார்ட் சிட்டி, அம்ருத், சுவச் பாரத், வளர்ச்சி, முதலீடு, Ease of Doing Business என்று விளம்பரங்கள் ஓடுகின்றன. ஆனால் அந்த வளர்ச்சியின் மறுபக்கம் என்ன? அதே நகரங்களின் ஓரங்களில் குப்பை மலைகள் வளர்கின்றன. அந்த மலைகளின் அருகில் வாழ்வது ஏழை மக்கள். நச்சுக் காற்றை சுவாசிப்பது அவர்களே. குப்பையை கையால் பிரிப்பது ஒப்பந்த தொழிலாளர்களே. உயிரிழப்பதும் அவர்களே. இதுதான் இந்தியாவின் “வளர்ச்சி” என்றால், அது வளர்ச்சி அல்ல; ஏழைகளை கழிவுகளோடு சேர்த்து புதைக்கும் அரசியல்.
இந்தோனேசியாவின் ஜட்டி வாரிங்கின் குப்பைக் கிடங்கில் 2026 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தீ, மீத்தேன் வாயு, பிரிக்கப்படாத கழிவுகள், அறிவியல் அடிப்படையற்ற மேலாண்மை ஆகியவற்றின் விளைவு.
பிலிப்பைன்ஸின் பினாலிவ் குப்பை மலை சரிந்து 36 தொழிலாளர்கள் உயிரிழந்ததும் இயற்கைப் பேரிடர் அல்ல.

இவை இரண்டும் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. கழிவுகளை உருவாக்கும் பொருளாதாரத்தை மாற்றாமல், குப்பையை மட்டும் அகற்ற முடியாது.
அதே நிலை இந்தியாவிலும். டெல்லியின் காசிபூர், குருகிராமின் பந்த்வாரி, புனேயின் மோஷி, சென்னை பெருங்குடி, கொடுங்கையூர், மதுரை வெள்ளக்கல்… போன்றவை பெயர்கள் மட்டும் மாறுகின்றன. ஆனால் அரசியல் ஒன்றே. குப்பையை அறிவியல் முறையில் குறைக்க எந்த அரசும் முயற்சிக்கவில்லை. குப்பையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதே “கழிவு மேலாண்மை” என்று மக்களை ஏமாற்றுகின்றன. இதற்குக் காரணம் தொழில்நுட்பக் குறைபாடு அல்ல. அரசியல் விருப்பமின்மை.
இன்று இந்தியாவில் கழிவுகளை உருவாக்குவது யார்? பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். பிளாஸ்டிக் நிறுவனங்கள். பேக்கேஜிங் தொழில்கள். மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.
ஆனால் அவற்றின் பொறுப்பு என்ன? கிட்டத்தட்ட பூஜ்ஜியம். குப்பையை உருவாக்கி லாபம் பார்க்கும் நிறுவனங்கள் தப்பிக்கின்றன. அந்தக் குப்பையை சுத்தம் செய்ய மக்களின் வரிப்பணம் செலவாகிறது. இதுதான் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் உண்மையான முகம். லாபம் தனியாருக்கு! கழிவு மக்களுக்கு!
ஒன்றிய அரசு “சுவச் பாரத்” என்ற விளம்பர அரசியலில் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கிறது. ஆனால் நகரங்கள் குப்பையை உருவாக்கும் பொருளாதார அமைப்பையே மாற்றுவதில்லை. Extended Producer Responsibility (EPR) சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை பொறுப்பேற்கச் செய்வதில்லை. Waste-to-Energy என்ற பெயரில் குப்பையை எரித்து புதிய மாசுபாட்டை உருவாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது சுற்றுச்சூழல் கொள்கை அல்ல. கார்ப்பரேட் லாபக் கொள்கை.
தமிழ்நாட்டிலும் நிலை வேறுபட்டதல்ல.
பெருங்குடி, கொடுங்கையூர் , வெள்ளக்கல் போன்றவை வெறும் குப்பைக் கிடங்குகள் அல்ல. அரசுகளின் தோல்வியை மறைக்க குவிக்கப்பட்ட அரசியல் நினைவுச் சின்னங்கள். Bio-mining, Resource Recovery Park, Source Segregation என்று பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அவை முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. மீத்தேன் தொடர்ந்து வெளியேறுகிறது. தீ தொடர்ந்து ஏற்படுகிறது. அரசியல்வாதிகளின் அறிவிப்புகள் உயர்வதைவிட வேகமாக, குப்பை மலை தொடர்ந்து உயர்கிறது.

காலநிலை மாற்றத்தைப் பற்றி உலகம் பேசுகிறது. ஆனால் மீத்தேன் வெளியேற்றத்தின் மிகப்பெரிய மூலங்களில் ஒன்றான குப்பைக் கிடங்குகள் குறித்து அரசியல் மௌனம் நிலவுகிறது. மீத்தேன் என்பது கார்பன் டையாக்சைடைவிட பல மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயு. அதனால் குப்பைக் கிடங்குகளை பாதுகாப்பது என்பது சுத்தம் செய்வது மட்டுமல்ல. அது காலநிலை நீதிக்கான போராட்டம்.
மே 17 இயக்கம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே. சுற்றுச்சூழல் என்பது மரம் நடும் நிகழ்ச்சி அல்ல. மக்களின் வாழ்வுரிமை. தமிழ்நாட்டின் நில உரிமை. நீர் உரிமை. காற்றின் உரிமை என்பதே இவற்றின் அரசியல்.
குப்பை மலைகள் எரிவதில்லை, மக்களின் வரிப்பணம் எரிகிறது, அரசுகளின் பொறுப்பின்மை எரிகிறது, கார்ப்பரேட் வளர்ச்சி மாதிரியின் தோல்வி எரிகிறது. குப்பை மலையை அகற்றுவது போதாது. அதை உருவாக்கும் அரசியலை அகற்ற வேண்டும். அப்போதுதான் நகரங்கள் உயிர் பெறும். இல்லையெனில், இன்று எரிவது குப்பை மட்டுமே. நாளை எரிவது மனிதகுலத்தின் எதிர்காலமாக இருக்கும்.