ஆளுநரின் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது, நேரு-நேதாஜி போன்றோரால் தேசியகீதமாக ஏற்கப்படாத ‘வந்தே மாதரம்’ பாடல் முன்னுக்கு இசைக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசப்பட்டது என தொடர்ந்து தமிழினத்தை இழிவு செய்துவரும் ஆளுநரை கண்டித்து, மே 31, 2026 அன்று காலை சைதை-பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தோழர்களும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது:
“தமிழ்நாட்டிலே தமிழர்களுடைய அடையாளங்களை அவமதிக்கின்ற வேலையை ஆளுநர் பதவிக்கு வரக்கூடியவர்கள் செய்து வருகிறார்கள். ஒன்றியத்தில் பாரதி ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு ஆளுநர் பதவியை பயன்படுத்திக் கொண்டு, தமிழ் மொழியை அவமானம் செய்வது, தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய ஒப்பில்லா திருவள்ளுவரை இழிவுபடுத்துவது, அவருக்கு மதச்சாயம் பூசுவது என்று தமிழ்நாட்டுக்கு விரோதமான, தமிழர் விரோதமான செயலை செய்து வருகிறார்கள். கடந்த ஆளுநரும் அதற்கு முன் இருந்த ஆளுநரும் இதேபோல தமிழர் விரோத வேலையை செய்தார்கள்.
இப்பொழுது வந்திருக்கக்கூடிய ஆளுநரும் தமிழர் விரோத செயலை தொடர்ச்சியாக செய்து வருகிறார். பிஜேபி அரசு தமிழருக்கு எதிராக இருக்கக்கூடியவர்களை மட்டும்தான் இங்கு ஆளுநராக அனுப்புகிறதா? என்பதுதான் எங்களுடைய கேள்வி. தமிழ்நாட்டை அவமானப்படுத்த வேண்டும், தமிழர்களை அவமானப்படுத்த வேண்டும், திருவள்ளுவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இங்கே ஆளுநர் என்கிற பதவியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆளுநர் பதவியால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை.
நேற்று திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி அவரை அவமானப்படுத்துகின்ற வேலையை செய்திருக்கிறார்கள். எவ்வளவு திமிர் இருந்தால் பிஜேபி இந்த வேலையைச் செய்யும்? நெடுங்காலமாக திருவள்ளுவரை மதத்திற்கு அப்பாற்பட்டவர், சாதிக்கு அப்பாற்பட்டவர், உலக பொதுமறையை கொடுத்து உலகத்திற்கே நீதி வழங்கியவர் என்று உயர்த்திப் பிடிக்கிறோம். அவருக்கு மதச்சாயம் பூசுகின்ற வேலையை பாஜகவினர் செய்கிறார்கள். வள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே சனாதனத்திற்கு எதிரான குரலாக அவர் குரல் எழுந்தது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சனாதனத்திற்கு எதிராகப் பேசியவர் வள்ளுவர்.
‘ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கர்மா இருக்கிறது, எனவே இந்த சாதியில் பிறந்தவர்கள் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும்’ என்று சனாதனம் கூறுகிறது. பாஜகவினர் யாராவது இதை மறுக்க முடியுமா? ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தர்மமும் ஒவ்வொரு கர்மமும் இருக்கிறது, ஒவ்வொரு கடமையும் இருக்கிறது. பார்ப்பனர்கள் கல்வியிலும், அதிகாரத்திலும், வேலையிலும் உயர் நிலையில் இருந்து பணம் சம்பாதிக்கும் போது, அவர்களுக்கு கீழ் வேலை செய்வதற்குத்தான் சூத்திர சாதிகளாக இருக்கக்கூடிய (தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு சாதியை சார்ந்த முக்குலத்தோர், நாடார், கவுண்டர், வன்னியர், பறையர், கோனார்) இப்படி எல்லா சாதியினரும் பார்ப்பனர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மனுஸ்மிருதியில் எழுதி வைத்திருப்பதுதான் சனாதனம். இதை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? உயர் சாதியை சார்ந்தவன் சனதானம் வேண்டுமென்று பேசுகிறான். இடைநிலை சமூகத்தை சார்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் சனதானம் வேண்டுமென்று பேசுகிறார்களா? அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் பேசுகிறார்களா? பார்ப்பனர்களுக்கு கீழ் சம்பளம் இல்லாமல் கூலி வேலை செய்வதுதான் எங்களுடைய வேலையா? மனிதனை சாதியாக, வர்ணமாக பிரித்து வைத்திருப்பதுதான் சனாதனம் என்று சொல்கிறார்கள். சனாதனத்தில் வருணாசிரமத்தை சேர்க்க மாட்டோம் என்று அவர்களால் கூற முடியுமா? வருணம் என்றால் என்ன? ஒவ்வொருத்தவற்கும் ஒவ்வொரு பிறப்பு இருக்கிறது, பிறப்பினுடைய அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாஜகவே கூறுகிறது.
கடந்த ஜென்மத்தில் என்ன செய்தீர்களோ அதனுடைய விளைவாகத்தான் இந்த ஜென்மத்தில் இந்த சாதியில் பிறந்திருக்கின்றீர்கள். இந்த ஜாதியில் பிறந்ததால் இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டும். ‘பார்ப்பனர்களுக்கு சேவையாக காசு வாங்காமல் கூலி வேலை செய்து நீங்கள் மோட்சத்தை அடையுங்கள்’ என்று சொல்வதுதான் சனாதனம். இதைத்தான் நம் மேல் திணிக்கப் பார்க்கின்றார்கள்.
சனாதனத்திற்கு எதிராகப் பேசினவர்தான் திருவள்ளுவர். அவருடைய குறளிலே ’வருணாசிரமம்’ கிடையாது. ’சனாதனம்’ என்ற வார்த்தையே கிடையாது. ’இந்து’ என்ற வார்த்தையே திருக்குறளில் கிடையாது. ராமன், கிருஷ்ணன் என்று எந்த பெயரும் கிடையாது. திருவள்ளுவர் கடவுளுக்கு அப்பாற்பட்டவராக, மதத்திற்கு அப்பாற்பட்டவராக, நிலத்திற்கு அப்பாற்பட்டவராக, உலகம் முழுவதும் வாழக்கூடிய அனைத்து மக்களுக்குமான ஒரு நீதியை போதித்தவர் தான் திருவள்ளுவர். அவருக்கு காவி சாயத்தை பூசுவது என்பது நஞ்சு தனமான வேலை மட்டுமல்ல தமிழர்களை அவமானப்படுத்துகின்ற வேலை.
அதே போல் வந்தே மாதரம் என்கின்ற பாடலை பாஜகவினர் தேசிய பாடல் என்று கூறுகின்றார்கள். 1936ல் வந்தே மாதரத்தை பயன்படுத்துவதா வேண்டாமா என்று முடிவெடுக்க ஒரு கமிட்டியை உருவாங்கினார்கள். நேதாஜிக்கு வங்கமொழி தெரியும் என்பதால் அவர் தலைமையில் தான் அதற்கான ஆலோசனை நடந்தது. “இந்த (வந்தே மாதரம்) பாடல் என்பது கடந்த காலத்தில் இந்துக்களின் பெருமைப்படுத்தி முஸ்லிம்களை சிறுமைப்படுத்துவதற்காக பாடப்பட்ட பாடல். வெள்ளைக்காரர்கள் தடை செய்தார்கள் என்பதற்காக மட்டுமே அதைக் கொண்டாட முடியாது. அதில் சில வரிகளை மட்டுமே பாடலாம்” என்று நேதாஜி சொன்னாரே ஒழிய அதை தேசிய கீதமாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ரவீந்திரநாத் தாகூரினுடைய பாடலைத் தான் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டார்கள்.
வந்தே மாதரத்தில் தமிழ் மொழிக்கு இடமிருக்கிறதா? தமிழர்களை அடையாளப்படுத்தும் சொல் ஏதாவது இருக்கிறதா? இல்லை. வந்தே மாதரத்தில் வங்க நிலத்தினுடைய பெருமையை பேசுவதுபோல் தஞ்சாவூர் பெருமையையும் காவிரி டெல்டாவின் பெருமையையும் தேசத்தினுடைய பாடலாக வைப்பார்களா? வங்க தேசத்தை பாராட்டுகின்ற பாடலை எங்கள் மேல் ஏன் திணிக்கின்றீர்கள்? அந்த பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளுவதற்கு என்னவொரு துணிச்சல்!!
சென்னையின் மையப் பகுதியில் 150 ஏக்கர் நிலத்தில் தமிழரின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு இவ்வளவு பெரிய வீடு எதற்கு? தமிழர்கள் வசிக்கும் பெரும்பாக்கத்தில் ஒரு வீடு ஒதுக்கி கொடுத்தால் போதாதா? தமிழ்நாட்டில் என்ன ஆக்கப்பூர்வமான வேலையை செய்கிறார்? அவருக்குக் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களை உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஆளுநர் என்ன செய்தார்? எம்மக்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கத்தில் துன்புறும் போது தமிழ்நாட்டின் தலைநகரத்தில் மைய பகுதியில் இவர் உட்கார்ந்திருக்கிறார்.
தமிழ் மொழியை இழிவு செய்யக்கூடியவர்களை, திருக்குறளை திருவள்ளுவரை இழிவு செய்யக்கூடியவர்களை தமிழ்நாடு ஒருபொழுதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் இதுபோல பல போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. தொடர்ச்சியாக போராட்டம் நடக்கும். எங்களை எல்லாம் மறுபடியும் போராட்ட களத்திற்கு வா என்று அழைக்கக்கூடிய ஒரு போர்குரலை அவர் எழுப்பி இருப்பதற்கு ஒரு வகையில் ஆளுநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு இது போல் பலரை பார்த்திருக்கிறது. பல தமிழின எதிரிகளை விரட்டி அடித்திருக்கிறது. தமிழர்கள் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல. ஆகவே தமிழ்நாட்டில் இது போன்ற நஞ்சு தனமான சில்லுண்டி வேலை செய்வதை பிஜேபி நிறுத்த வேண்டும். இதற்கு மேலும் இது போல் செய்தால் தமிழ்நாடு தழுவிய சனநாயக போராட்டங்கள் நடைபெறும்.
தவெக அரசு இது குறித்து உடனடியாக கடுமையான அறிக்கையை வெளியிட வேண்டும். கவர்னர் மாளிகை சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவசியம் இல்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் கூறியதை தவெக கட்சி தன் முழக்கமாக முன் வைத்திருக்கிறது. எனவே தவெக அரசு இதைக் கண்டித்துப் பேச வேண்டும். இதைப் பற்றி வலிமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
நீங்கள் (தவெக) அறிக்கை வெளியிடுவது மட்டுமல்ல, உங்கள் கட்சியினரை போராட்டக் களத்திற்கு அனுப்புங்கள். இரு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த நீங்கள், இதுவரை உங்கள் கட்சியினரை அரசியல் படுத்தவில்லை. அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி கண்டன ஆர்பாட்டத்தை நடத்த சொல்லுங்கள். ஆளுநருக்கு எதிராக போராட்ட முழக்கத்தை எழுப்ப சொல்லுங்கள். நீங்கள் ஆட்சியில் இருப்பதால் போராட வேண்டியதில்லை என்று அர்த்தம் அல்ல.
மக்களுக்காக தமிழ் மண்ணுக்காக தமிழ் மொழிக்காக ஏதேனும் இழுக்கு நேர்ந்தால் போராட்டக் களத்தில் நிற்பவர் தான் தமிழ்நாட்டை ஆள்வதற்கு தகுதியானவர். இதை கண்டும் காணாமல் சென்றால், எதிர்காலத்தில் அவர்களும் இந்த எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும். முதலமைச்சர் இந்தத் தமிழின இழிவை கண்டிக்க வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தமிழ்நாடு என்பது பேசிப் பேசி, அரசியலை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வளர்ந்த ஒரு மாநிலம். முதலமைச்சர் அரசியல் பேசவில்லை என்றால், வெளிப்படையாக துணிந்து நிற்கவில்லை என்றால், தமிழ்நாட்டை பற்றியான மதிப்பு என்னவாக இருக்கும்? தமிழ் மொழிக்கு இழுக்கு என்றால் முதலமைச்சர் முதலில் பேச வேண்டும், அந்த கட்சி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என்று அந்த கட்சியினுடைய நண்பர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கின்றேன்.
ஆளுநருக்கு எங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். பாரதி ஜனதா கட்சியினுடைய சங்கித்தனத்தை தேர்தலில் மக்கள் விரட்டி இருக்கிறார்கள். இனிமேலும் சங்கித்தனம் செய்தால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு சீட்டும் இல்லாமல் போகும் என்பதையும் இந்த சமயத்தில் தெரிவிக்கிறோம். எங்கள் போராட்டம் தொடரும் என்பதையும் இந்த சமயத்தில் தமிழ் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
தோழர்களே! தமிழ் மொழியைக் காப்பதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒப்பற்ற தோழர் சிவா திலீபன் அவர்கள் உயிர் கொடுத்திருக்கிறார். இந்த ஆளுநரை நாங்கள் கண்டிக்கின்றோம். தோழர் சிவா திலீபன் எங்களுக்கு உத்தரவிட்டு சென்றிருக்கிறார். ”தமிழ் மொழிக்கு இழுக்கு நேர்ந்தால் அது எவனாக இருந்தாலும் எதிர்த்து நில்” என்று. தோழர் சிவா திலீபனுடைய நினைவினை ஏந்தித்தான் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆகவே இந்த ஆளுநரை நாங்கள் எச்சரிக்க கடமைப் பட்டிருக்கின்றோம். இதுபோல அமைதியான போராட்டங்களை மட்டுமே நாங்கள் நடத்திக் கொண்டிருப்போம் என்று பாரதி ஜனதா கட்சியினுடைய ஆர்எஸ்எஸ் சங்கிகள் நினைத்தால் கடுமையான எதிர்ப்புகளை தமிழ்நாட்டின் அனைத்து சனநாயக இயக்கங்களையும் திரட்டி நாங்கள் நடத்த வேண்டி இருக்கும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஆளுநர் இல்லத்தை முற்றுகையிடுகின்ற போராட்டத்தை தோழர் சிவா திலீபனுடைய உத்தரவை ஏற்று நடத்துகின்ற நிலைக்கு நாங்கள் முன்னகர்வோம் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மொழிக்காக எங்கள் தோழன் சிவா திலீபன் களம் கண்டிருக்கிறார், உயிர் கொடுத்திருக்கிறார். அதனால் ஒரு காலத்திலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்கள் தோழர்கள் உயிருக்கு அஞ்சுபவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் உயிரை ஒரு பொருட்டாக பார்க்கவில்லை.
தமிழ் மொழிதான் எங்கள் உயிர்!
இது அடையாள போராட்டம் மட்டும்தான் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எவரேனும் தமிழ் மொழிக்கு இழுக்கு செய்வதை பார்த்துக் கொண்டு நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒன்று திரட்டி இந்த ஆளுநர் மாளிகையை எதிர்த்து ஒரு முற்றுகைப் போராட்டத்தை நாங்கள் நடத்தி காட்டுவோம் என்று எச்சரிக்கின்றோம். இதற்கு முன்னால் இருந்த ஆளுநர்கள் எல்லாம் அந்த இல்லத்தை விட்டு வெளியில் வர இயலாத அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தினார்கள். மோடி வரும்பொழுதே சாலையில் செல்வதற்கு அச்சப்பட்டு அவர் குறுக்கு வழியிலே சென்றது தமிழ்நாட்டில் நடந்த வரலாறு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழியை உயிரைக் கொடுத்து காப்போம் என்பதை இந்த சமயத்தில் ஆளுநருக்கும் பாரத ஜனதா கட்சியினுடைய கும்பலுக்கும் எச்சரிக்கை விடுத்து எங்கள் போராட்டத்தை நாங்கள் முன்னகர்த்துவோம்.”
“ஆளுனருக்கு அதிகார வரம்பு என்று எந்த வரம்பும் அரசியல் சாசனத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி இந்த ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு நம் மீது பல்வேறு விடயங்களைத் திணிக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வக்கில்லாத இந்த ஆளுநர் வங்கப் பாடலை நம் மீது திணிக்கின்ற திமிரோடு இங்கே செயல்பட்டு கொண்டிருக்கிறார். நம் தங்கை அனிதா இந்த நீட் தேர்வினால்தான் இறந்து போனார். அதற்கடுத்து 13 குழந்தைகள் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் தன்னைத்தானே அழித்து கொள்ளக்கூடிய அவலத்தை நாம் பார்த்தோம். நம் வீட்டு குழந்தைகளுக்காக நீட் தேர்வில் விலக்கு கேட்டால் அதை பேசுவதற்கு வக்கு இல்லை. நீட் தேர்வு என்றால் பெரிய யோக்கியமான தேர்வு என்று பேசினார்கள். இப்போது நீட் தேர்விலே வினாத்தாள் கசிந்து விட்டது, ஆகவே நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.
நம் குழந்தைகளினுடைய காதணிகளை கழட்டுவது, உடைகளை கிழிப்பது, அவர்கள் போட்டு வந்த செருப்பு வரை அனைத்தையும் பரிசோதனை செய்கிறோம் என்று சொல்லி நாடகம் நடத்திய இந்தத் திருட்டு கூட்டம், நீட் தேர்வின் வினாத்தாளை வைத்து வியாபாரம் செய்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை நாசப்படுத்திய கூட்டம்தான் நீட் தேர்வின் வினாத்தாளை வைத்து பணம் சம்பாதிக்கும் கொள்ளைக்கூட்டம். நம் மாணவர்கள் நம் ஊரில் நாம் கட்டிய கல்லூரியில் மருத்துவம் படிப்பதை தடுக்கக்கூடிய வகையில் நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக. அந்த நீட் தேர்வு பெரிய யோக்கியமான தேர்வு என்று கூறி மாணவர்களின் சட்டையை கிழிப்பது, காதணியை கழட்டுவது என்று பெரிய யோக்கியன் போல் நடந்து கொண்டது பாஜக. ஆனால் இப்போது நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்திருக்கிறது. அதனால் நீட் தேர்வு ரத்தாகி இருக்கிறது.
ஒரு தேர்வினை அவர்களால் முறையாக நடத்த முடியவில்லை. பிரதமர் இன்னும் அவருடைய கல்வி சான்றிதழை காண்பிக்கவில்லை. இவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டு நம் பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை நாசப்படுத்துகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தமிழ்நாடு சட்டசபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் கையெடுத்து போடுவதற்கு இந்த நபருக்கு (ஆளுநருக்கு) வலிக்கிறது. ஆனால் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும், வங்கம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு என்று பாராட்டும் வந்தே மாதரம் பாடலை நாம் பாட வேண்டும் என்று கூறுகிறது பாஜக. அந்தப் பாடலை அவன் வங்காள தேசத்திலே பாடட்டும். எங்கள் ஊரில் ஏன் திணிக்கின்றாய்? வந்தே மாதரமும் வங்கமொழி பாடல், தேசிய கீதமும் வங்கமொழி பாடல். ஏன் தமிழில் பாடல் இல்லையா? தமிழ்நாட்டில் தேசபக்தி பாடலை எழுதியவர் யாரும் இல்லையா?
வங்காளத்தில் தேர்தல் வந்தது. அங்கே ஓட்டு பொறுக்க வங்கமொழி பாடலைத் திணித்தார்கள். அதை எதற்கு இங்கே பாடுகிறார்கள்? தமிழ் மொழியை மூன்றாம் இடத்திற்கு தள்ளுபவர்க்கு நாம் ஏன் சம்பளமும்,150 ஏக்கர் நிலமும் கொடுக்க வேண்டும்?
தமிழினத்தை இழிவு படுத்தும் இந்தக் கூட்டம் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும். அதுவரை மக்களை அரசியல்படுத்தத்தான் நாம் இங்கே வந்திருக்கிறோம். இது ஆளுநர் காதுக்கு கேட்கவில்லையா? மூளை முளைத்தால் தானே காதும் முளைக்கும்.
ஆளுநர் என்ற பதவியே தேவையில்லாத பகுதி, வெள்ளைக்காரன் கொண்டு வந்த பதவி. பிஜேபிக்காரன் வெள்ளைக்காரனை கிறிஸ்தவன், அந்நிய கைக்கூலி என்று சொல்கிறான். ஆளுநர் பதவியை உருவாக்கியதும் வெள்ளைக்காரன் தானே? அந்தப் பதவியை தூக்கி போட வக்கு இருக்கிறதா? அதை வைத்துக்கொண்டு மாநில உரிமையை நசுக்குவதும் தமிழ் மொழியை இழிவு படுத்துவதும் செய்தால் தமிழினம் பார்த்து கொண்டிருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
நீங்கள்(மக்கள்) விடுமுறையில் வீட்டில் இருக்கலாம், விளையாட்டுப் போட்டியைப் பார்க்கலாம். ஆனால் மே17 இயக்கத் தோழர்கள் இன்று வீதிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் வெயிலைப் பார்த்து ஒதுங்கி நிற்கவில்லை. தமிழ் மொழிக்கு இழுக்கு என்றால் தோழர் சிவா திலீபன் சொன்னதைப் போல வீதிக்கு வர வேண்டும் என்ற அரசியலை உயர்த்திப் பிடித்து இங்கு நிற்கிறோம்.
தமிழ் மக்களே! நீங்கள் வீதிக்கு வாருங்கள்! வீதிக்கு வந்து போராடினால் தான் தமிழ்நாட்டை காக்க முடியுமே ஒழிய, ஒருவிரல் புரட்சியில் ஒன்றும் செய்துவிட முடியாது. ஓட்டு போடுவதால் எதையும் காப்பாற்றி விட முடியாது. நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு, இதை கண்டித்து இன்னும் பேசவில்லை. அவர்கள் வாய் திறந்து பேச வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற அரசு ஒன்றரை கோடி தமிழர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு. தமிழ் மொழிக்கு இழுக்கு என்றால் அந்த அரசுதான் துணிந்து நின்று பேச வேண்டும். துணிச்சலோடு பேச வேண்டும். முதுகெலும்போடு பேச வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழ் மக்கள் எப்பொழுதுமே வைத்திருக்கிறார்கள்.
எப்பொழுதுமே தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இருக்கக்கூடியவர்கள் தமிழ் மொழிக்கு இழுக்கு என்றால் தமிழனுக்கு இழுக்கு என்றால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால் முதல் குரலாக முதலமைச்சர் குரல் வேண்டும் என்று சொல்லுவார்கள். போராடுவார்கள். அதைத்தான் கேட்கின்றோம். உங்களை தேர்ந்தெடுத்த மக்களை அரசியல் படுத்துவதற்கும், உங்கள் கட்சியினரை அரசியல் படுத்துவதற்கும் நீங்கள் போராட்ட களத்திற்கு வரவேண்டும்.
தமிழ் மொழியை காப்பதில் எங்களுக்கு எந்த சமரசமும் கிடையாது. எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. நாங்கள் போராட்ட களத்தில் இருப்போம். ஒருவராக இருந்தாலும், இறுதி தமிழனாக இருந்தாலும், மே 17 தோழன் களம் காண்பான் என்பதை சொல்கின்றோம். எங்களுடைய போராட்டம் ஒரு நாளும் அடிபணியாது. யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதைத்தான் எங்கள் சிவா திலீபன் சொன்னார். சிவா திலீபனுடைய மறைவிற்குப் பிறகு நாங்கள் அந்த முழக்கத்தை முன்னெடுத்து களத்தில் நிற்கிறோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழன் திரண்டு எழுந்தான். காளை மாட்டிற்காக களம் கண்டவன் தாய்மொழி தமிழை காப்பதற்காக களம் வரமாட்டானா? சுயமரியாத தமிழன் களம் காண்பான். ஈழத்தில் களம் கண்டானே, தமிழ்நாட்டில் இந்தி மொழியை எதிர்த்துக் களம் கண்டானே, அந்தத் தமிழன் வந்து நிற்பான். துணிந்து நிற்பான். குரல் உயர்த்துவான். அந்த மரபு இன்னும் மாறவில்லை. அந்தக் குருதி இன்றும் தமிழன் உடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழர்களை பாஜக கிள்ளுக்கீரையாக நினைத்து விட வேண்டாம். சங்கிகளை நாங்கள் எச்சரிக்கின்றோம். தமிழ்நாட்டை தமிழ் மொழியை திருவள்ளுவரை திருக்குறளை இழிவு செய்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக கடந்து செல்ல மாட்டோம் என்பதை எச்சரிப்பதற்காகத்தான் நாங்கள் திரண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம் –
“தமிழ் மொழிக்கு ஏதாவது இழுக்கு என்றால் வீதிக்கு வருவதுதான் உண்மையான மாற்றம்.“ வீதிக்கு வந்தால்தான் மாற்றம் வரும். நீ வீதிக்கு வந்து உன் உரிமைக்காக போராடு, உன் மொழிக்காக நீ களம் காண். இதையெல்லாம் செய்யாமல் தமிழ்நாடு மாறிடாது, இந்தியாவை மாற்ற முடியாது, இந்துத்துவவாதிகளை விரட்டி விட முடியாது. தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் உன் வாழ்க்கையையும் நீ காப்பாற்ற வேண்டும் என்றால் விடுமுறையோ வேலைநாளோ வீதிக்கு வா!!
இதை எல்லாம் செய்யாமல் ஒரு ஓட்டு மாற்றத்தை கொண்டு வரும் என்கின்ற பூ சுத்துகின்ற வேலை எல்லாம் எடுபடாது. ஆகவே தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம். தமிழ்நாட்டில் சனநாயக அமைப்புகளுக்கும் அறைகூவல் விடுக்கின்றோம். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுகின்றோம். அனைவரும் ஒன்று திரண்டு தமிழ்நாட்டு உரிமையை, மாநில உரிமையை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.
இந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தோழர்களும், குறுகிய காலத்திற்குள்ளாக திரண்டு வந்திருக்கிறார்கள். பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கின்றன, நாளை வேலைக்கு செல்ல வேண்டும். வேலைக்கு போவதற்கு முன்பான தயாரிப்பு இருக்கிறது. இத்தனை பணிகள் இருந்தாலும் போராடுவதற்கு மனம் இருக்கிறது, துணிந்து நிற்பதற்கு வீரம் இருக்கிறது. எங்களை களத்தில் நிறுத்துவதற்கு தமிழ் மொழி இருக்கிறது என்பதை சொல்லி, இந்த ஆர்பாட்டம் இனிமேலும் தொடர்ந்து நடக்கும், இந்த போராட்டம் ஒருபொழுதும் அடிபணியாது என்பதை சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!”
தொடர்ந்து தோழர் சிவா திலீபன் அவர்களுடைய இணையர் மே 17 இயக்கத்தினுடைய பொறுப்பாளர் தோழர் கீதா அவர்களும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினுடைய தோழர் ஆவடி நாகராசன் அவர்களும் கண்டன உரையாற்றினர்.