வெள்ளையர்களிடம் அடிபணியாத வீரமங்கை – பேகம் ஹஸ்ரத் மஹால்

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பெண்களுள் பேகம் ஹஸ்ரத் மெஹலும் முக்கியமானவர். உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி  வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டி பார்த்தால் 18ஆம் நூற்றாண்டில் பரங்கியங்கியர்களின் படையை  மனத்தெளிவுடனும் துணிச்சலுடனும் எதிர்கொண்ட வீரமங்கை ஹசரத் பேகம் எனலாம். தாய் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போரிட்டு கடைசி வரை ஆங்கிலேயருக்கு வளைந்து கொடுக்காமல் தன்மானத்துடன் வாழ்ந்த பெண் சிங்கம் பேகம் ஹஸ்ரத் மஹால்.

ஆங்கிலேயருக்கு எதிராக மண்ணை காக்க தமது மக்களை அடிமைகளாக்க விருப்பாத குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க திட்டமிட்டனர் . மன்னர் பகதுர்ஷா ஜாபர் தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது. அதில் இரு வீரமங்கைகள் அடங்குவர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஆண்ட பேகம் ஹஸ்ரத் மஹால்.

அயோத்தியை ஆண்டுவந்த நவாப் வாஜித் அலி ஷா அவர்களின் மனைவி  ஹஸ்ரத் பேகம் என்கிற ஆவாத் பேகம். ’ஆவாத்’ என்பது ஒரு ஊர். அதை வைத்து ஒருவரின் பெயரை மக்கள் அழைத்திருந்திருக்கிறார்கள் என்றால் பேகம் அந்த மண்ணுக்காக எவ்வளவு போராடியிருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம். இவர் 1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயருக்கு தக்க பதிலடி கொடுக்க தனது மகனை முதுகில் சுமந்தவாரே யானை மீது படைகளம் அமைத்து போரிட்டுள்ளார்.  பின்னர் போரில் பின்னடைவு ஏற்பட்டாலும் ஆங்கிலேயரிடம் அடிபணியாமல் எந்த ஆணைக்கும் கட்டுப்படாமல், மன்னிப்பு கேட்டு அரச சலுகைகள் பெற மறுத்து தனது படையாட்களுடன் தப்பித்து நேபாளம் சென்று தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் பேகம் ஹஸ்ரத் மஹால்.

இன்றைய உத்திரபிரதேசம் பைசாபாத்தில் ’அவத்’ என்ற இடத்தில் 1820ல் ஏளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைதான் பேகம் ஹஸ்ரத். இவரது தந்தை பெயர் ’அம்பர்’ என்று அறியமுடிகிறது. பேகத்திற்கு பெற்றோர் வைத்த பெயர் ’முகம்மது கானும்’. இளம்வயதிலேயே இசையின் மீது அதிக பற்றுடன் வளர்ந்த இவர் முறையாக இசையை கற்றுக்கொண்டார். வசீகர தோற்றமும், கூர்மையான அறிவு திறனும் கொண்ட ஹஸ்ரத் பேகத்தை அவாத் மன்னர் வாஜித் அலி ஷா  இரண்டாவது மனைவியாக மணம் முடித்து கொண்டார். 1845 ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிறகே அவருக்கு ’மஹால்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

 சிறிது காலத்திலேயே மக்களுக்கு சரியான ஆட்சி நடத்தவில்லை என பொய்யான குற்றச்சாட்டு சொல்லி 1856ல்  வாஜித் அலி ஷாவை ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து கல்கத்தாவில் சிறைபடுத்தப்படுகிறார். பிறகு ’ஹென்றி லாரண்ஸ்’ என்ற ஆங்கிலேயர் கைக்கு அதிகாரம் செல்கிறது. அதே சமயம் சிப்பாய் கலகத்தின் போது இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களை போரில் வெற்றி பெற்றுக்கொண்டே தலைநகரை வந்தடைகின்றனர். மேலும் தங்களது அடுத்தகட்ட நகர்வை நகர்த்தவோ, வழிகாட்டவோ தனக்கான தலைவர் அல்லது அரசர் இல்லாதது அவர்களை குழப்பம் கொள்ள வைக்கிறது. அரசர் இல்லை என்றால் என்ன பட்டத்தரசிகள் யாரேனும் பொறுப்பு ஏற்கும் படி வேண்டுகோள் விடுக்கின்றனர் சிப்பாய்கள். ஆனால் உயிர் பயத்தில் யாரும் முன்வரவில்லை. இப்படியான நேரத்தில் தனது பத்து வயது மகனை அரசனாக நியமித்து காப்பாளராக பொறுப்புகளை மேற்கொண்டார் பேகம்.

குழப்பமான நிலையிலும் உறுதியுடனும், துணிச்சலுடனும் செயல்பட்டு  சிறப்பாக நிர்வாகத்தை நடத்திக்காட்டியுள்ளார். பர்தா போட்டு முகத்தை மறைத்துகொண்ட பெண் திறமையான நிர்வாகத்தையும், போர் வியூகத்தையும் தீட்டமுடிகிறது என்பது ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிராக இந்து, முஸ்லிம் என பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்தோடு நிற்காமல்,  பெண்களை போரில் பங்கு பெற ஊக்குவித்திருக்கிறார். முப்படைகளையும் ஒன்றிணைத்து தலைமை வகித்துள்ளார். அதில் மன்னர் ராஜா ’ஜெய் லால் சிங்’ இராணுவ தளபதியாகவும், ’மம்முகான்’ கண்காணிப்பாளராகவும் நியமித்தார். மகளிர் படையணிக்கு துப்பாக்கி சுடும் வீராங்கனை ’உதாதேவியை’ நியமித்தார். இதன் மூலம் மதம், பாலினம் வேறுபாடுகளின்றி அனைவரையும் கிளர்ச்சியில் ஈடுபட வைத்திருக்கிறார் என்பதை உணரமுடியும்.

1857ல் சிப்பாய் கலகத்தின்போது ஆங்கிலேய படை பலமாக எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஹஸ்ரத் தன்னிடம் எண்ணிக்கை குறைவாக இருந்த படை அணிகளை தினமும் சந்தித்து சரியான ஊக்கமும் , நுணக்கமாண போர்வழிமுறைகளையும், மனது சோர்வையடையாமல் தன் நாட்டை காக்க ஒவ்வொரு வீரரும் எப்படி உறுதியுடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்ததன் விளைவே லக்னோவில் இருந்த பிரித்தானிய தூதரகத்தை ஹஸ்ரத் பேகத்தின் படை முற்றுகையிட்டது. அங்கே இறுமாப்புடன் எழுந்து நின்ற அந்த கட்டடத்தையே இடித்து தரைமட்டமாக்கி, ஆங்கிலேய படைகளை சிறை பிடித்தது அவர்களுக்கு அச்சம் கொடுக்க செய்தது. இதனால் ஆங்கிலேயர்கள் பேரக்பூரில் இருந்த தனது படைகளே களைத்து ஓட்டம் எடுத்துள்ளனர்.

பேகம் தொடர்ந்து பிரகடனங்களை வெளியிட்டவாறே இருந்திருக்கிறார்.  ஆங்கிலேயரை எதிர்க்க சில பதாகைகள் விளம்பரங்கள் வெளியிட்டு அதில் ’இனத்தை காக்க ஒன்றுபடுவோம். நாட்டை காக்க போராட்டத்திற்கு வரும் படியும்’ என்று கேட்டு கொள்ளப்பட்டனர். அதனுடன் ஆங்கிலே ஆட்சியின் கொடுமையையும் கடுமையாக கண்டித்த வாசகங்களும் இடம்பெற்று இருந்திருக்கிறது. இது தவிர ஒவ்வொரு தாலுகா பிரிவு பொறுப்பாளர்களுக்கும் அரச உத்தரவுகள் அனுப்பப்பட்டு அதை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்து சுதந்திர வேட்கையை தூண்டி இருக்கிறார்.  அதன் விளைவு  சாமானிய மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்தது.  ஆங்கிலேயர்கள் எதிர்பாராத பின்னடைவை கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்தது. 1857ம் ஆண்டு ஜீன் 5ம் தேதியன்று ’அவத்’ தலைநகரம் வக்னோ பேகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த சம்பவமே மக்களுக்கு ஹஸ்ரத் பேகத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையும், மரியாதையையும் கொள்ள செய்திருக்கிறது.

தோல்வியை தழுவிய ஆங்கிலேயப்படை கான்பூரிலிருந்து பெரும்  படைகளை  அனுப்பி மூன்று மாத தொடர்தாக்குதலில் ஈடுபட்டது.   ஆங்கிலேய படை முன்னேற ஆயுத பலம் குறைய பேகத்தின் படைகளை தோல்வியை தழுவியது. மற்ற குறுநில மன்னர்கள் எல்லாம் சரணடைந்தனர். ஆனால் பேகம் சரணடைந்து கப்பம் கட்ட மறுத்து தனது மெய்க்காப்பாளர் மற்றும் படைகளுடன் தலைமறைவானார். பிறகு நேபாளத்தில் தங்கி தான் வைத்திருந்த விலை மதிக்கமுடியாத பொருட்களை எல்லாம் தனது படைவீரர்களுக்கும் அகதிகளுக்கும் செலவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ”1857ல் நடந்த முதல் சுதந்திர போரில் ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களால் பிடிக்கமுடியாத ஒரே தலைவர் பேகம் ஹஸ்ரத் தான்”.

ஆண்களை மட்டுமே வீரத்திற்கும், விவேகத்திற்கும் வரலாறுகள் எழுதப்பட்டாலும் பர்தா (ஹிஜாப்) அணிந்த சமூகத்தின் மத்தியில் மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு பெண்மணி அடக்குமுறைக்கு பணியாமல், சலுகைகளுக்கு சபலப்படாமல் தன் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்து காட்டியுள்ளார் என்பது பெரும் வியப்பை தருகிறது.

பேகத்தின் ஆட்சியையும் உடைமைகளையும், சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி ,வணங்கி, நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக அனைத்து வசதிகளுடன் மீண்டும் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால்  ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக  குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலை வந்தபோது 1858 நவம்பர் 1ம் தேதி அன்று, விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனம் வெளியிடுகிறார். அதில் இந்தியாவை தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக பிரகடனம் செய்தார். இந்தியாவில் உள்ள மற்ற மன்னர்களும், மாகாணங்களும் தலைவணங்கி ஏற்றுக்கொண்டன. ஆனால் பேகம் மட்டுமே அந்த பிரகடனத்தை ஏற்காமல் எதிராக கலகக்குரல் எழுப்பினார், அதோடு நிற்காமல் அதற்கு எதிராக ஓரு பிரகடனத்தை பேகம் வெளியிட்டார்.

அதில் “கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேயர் கைக்கு ஆட்சி மாறுகிறதே தவிர ஆட்சியாளர்கள் மாறப்போவதில்லை. எல்லாமே விக்டோரியா அரசியின் கீழ் அவரது கட்டளைப்படியே ஆட்சி நடக்கும் எப்போதும் போல் அவர்கள் சொற்படி கோவில்களையும், மசூதிகளையும் , இடித்துவிட்டு சாலைகள் போடவும், குளங்கள் ஏரிகளை சுத்தம் செய்வதற்கான வேலை வாய்ப்புகள் மட்டுமே இந்தியர்களுக்கு வழங்குவார்கள். இவர்களை நம்புவதற்கில்லை. ’அவத்’ நகர் அரசை எடுக்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டே நகரை ஆளுமையின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். எனவே இந்த பிரகடனத்தை கண்டு எவறும் ஏமாறவேண்டம்” என்று கேட்டு கொண்டார்.

நேபாளத்துக்குள் தலைமறைவான பேகம் அந்நாட்டின் அன்றைய அரசர் ராணாவின் பிரதம மந்திரி ஜாங்க் பகதூரிடம் புகலிடம் கோரினார். ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கு பயந்து அவருக்குப் புகலிடம் கூடத் தரப்படவில்லை. நாடு நகரங்கள் மற்றும் நவநிதியும் இழந்து நின்ற அரசிக்கு இறுதியில் நேபாளத்தில் புகலிடம் தரப்பட்டது. அன்றிலிருந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு 1874–ல் காத்மாண்டுவில் வறுமையிலேயே உழன்று தனது வாழ்வை நீத்தார் பேகம்.

பேகம் ஹஸ்ரத் மஹாலின் உடல் காத்மாண்டுவின் ஜூம்மா மசூதி மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு 15 ஆகஸ்ட் 1962 ஆம் ஆண்டு லக்னோவின் ’அஸ்ரத்கஞ்சில்’ உள்ள பழைய விக்டோரியா பூங்காவில் பேகம் மஹால் பெரும் கிளர்ச்சியில் பங்கு பெற்றதற்காக கெளரவிக்கப்பட்டார். லக்னோவில் ’பேகம்’ நினைவாக பளிங்குக் கல்லால் ஆன நினைவகம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 10 மே 1984 அன்று, இந்திய அரசு இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது. மேலும் ’பேகம்’ பெயரில் தேசிய உதவித்தொகை ஒன்றை அரசு தொடங்கி, மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பேகம் ஒரு எளிமையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தனது திறமையாலும் துணிச்சலாலும் அரசியாகி, பொன் பொருளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த பிறகு மீண்டும் தன் நாட்டிற்காக போராடி அனைத்தையும் இழந்தாலும் மண்டியிடாத மானத்துடன் வாழ்ந்து மடிந்த சரித்திரம் பேகம் ஹஸ்ரத்.

இவ்வாறு தாய் நாட்டிற்காக சுதந்திர வேட்கையுடன் போர்க்களம் கண்ட இரு வீரப்பெண்மணிகளில் ’ஜான்சிராணி லக்குமிபாய்’ வரலாற்று புத்தகங்களின் வாயிலாக இந்தியர் அனைவரும் அறியப்பெற்றோம். ஆனால் ’ஹஸ்ரத் பேகம்’ வரலாற்றில் இவர்பெயர் ஏன் இடம்பெறவில்லை வெறும் திட்டங்களின் பெயர்களில் இவர் பெயர் வைப்பதால் அனைவரும் அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு அனைத்து சமூகமும் பாடுபட்டு பெற்ற சுதந்திர நாட்டில் இஸ்லாமியர்களை வேற்றுமை உணர்வுடன் இரண்டாம் தர குடிமக்களாக பார்ப்பதும், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA ) கொண்டு வந்து மூன்று தலைமுறை வாழ்ந்ததற்கான சான்றிதழ் கேட்டு நிரூபிக்க சொல்வது என்பது இந்தியாவை முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே வாழக்கூடிய நாடாக (இந்து ராஜ்ஜியம்) மாற்ற புதுபுது சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பாசிசத்தை நோக்கி கேள்விகளை எழுப்புவோம், தலைத்தூக்க விடாமல் தடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »