தமிழ்நாட்டில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற தீரன் சின்னமலை, பொல்லான், திப்பு சுல்தான் நட்பு வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. அன்றைய வீரத் தமிழ் மறவர்கள் எவரும் சாதி, மதத்தினை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டானது.
சின்னமலை தமிழ்நாட்டில் கொங்குப் பாளையங்களை இணைத்து நல்லாட்சி நடத்தியவர். ‘கோவைக் கோன்’ என மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார்.
“சிறக்கப் புகழ் கொண்ட தீர்த்தகிரியின் நல்சேதி சொன்னால்
பிறக்கும் குழவியும் பால்என அழாதிருக்கப் பேருலகில்
கறக்கின்ற பாலை கலயத்தில் வைத்திடில் காகங் கண்டால்
பறக்கும் இருக்கும் அப்பாலைக் குடிக்கப் பயப்படுமே”
கொங்குப் புலவர் பாராட்டிய பாடலே தீரன் சின்னமலையின் ஆட்சி மாண்பினை அறிந்து கொள்ள வைக்கிறது.
தீரன் சின்னமலை 1746-ல் ஈரோடு மேலப்பாளையத்தில் பிறந்தவர். இவர் காங்கேயம் நாட்டின் பாளையங்கோட்டையின் பாளையக்காரராக இருந்தவர்.
தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. ஒரு சமயம் தாராபுரம் பகுதிகளில் மக்களிடம் வரி வசூல் வாங்கிச் சென்ற வீரர்களிடமிருந்த வரி வருவாயைப் பறித்து, அவர்களிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் சின்னமலை வாங்கிக் கொண்டதாக உன்னை அனுப்பியவனிடம் சொல் என முழங்கியதால் சின்னமலை என அழைக்கப்பட்டார். உழைக்கும் மக்களின் பணத்தை வரிப்பணமாக அபகரித்துச் செல்வதை கடுமையாக எதிர்த்தார். அவற்றை பறித்து மக்களிடமே திரும்பச் சேர்த்தார்.
தீரன் சின்னமலையிடமிருந்து தப்பியோடிய வீரர்கள், சங்ககிரியிலிருந்த திவானிடம் சொல்ல, 100 குதிரைப்படை வீரர்களை அனுப்பி தீரன் சின்னமலையை பிடித்து வர ஆணையிட்டான் அந்த அதிகாரி. அப்படை வரும் செய்தி அறிந்த சிறிது நேரத்தில் தனது நண்பர்களான வேலப்பன் என்கிற பொல்லான், கறுப்ப சேர்வையுடன் தீரன் சுழன்றார். மக்களும் இணைந்தனர். தீரனைப் பிடித்து வர வந்த படை தலைதெறிக்க ஓடியது. பொல்லான் அருந்ததிய சமூகத்தைச் சார்ந்தவர் எனவும் கருப்பசேர்வை மருத்துவர் சமூகத்தைச் சார்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் தீரன் சின்னமலை. சமூகப் பிரிவினைகளைத் துளியும் மனதில் கொள்ளாது இறுதி வரை நண்பர்களாகவும், படைத்தளபதிகளாகவும் சின்னமலைக்கு தோளோடு தோளாக இவர்கள் நின்றார்கள்.
தனது தந்தையான ஹைதர் அலி வரி வசூலிக்க அனுப்பி வைத்த வீரர்களை விரட்டிய தீரன் சின்னமலையைப் பற்றிக் கேள்விப்பட்டார் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்களை விரட்ட தனக்கு இணையான வீரர்களைத் தேடிக் கொண்டிருந்தவர், சின்னமலையே தனக்குத் தகுந்த வீரர் என எண்ணினார். ஓரணியில் திரள அழைப்போலை அனுப்பினார். ஏற்கெனவே வெள்ளையர் எதிர்ப்பு மனநிலை கொண்டதால் தீரன் சின்னமலையும் இசைந்தார். வெள்ளையர் பகை விரட்ட விடுதலை வேட்கைக் கொண்ட 1000 வீரர்களை சாதி, சமயம் பாராது திரட்டினார். விடுதலை உணர்வுடன் திரண்டவர்களுக்கு கடுமையான போர்ப்பயிற்சிகள் அளித்தார். இந்த கொங்குப்படை திப்பு சுல்தானின் படையில் அணிவகுக்க மைசூருக்கு சென்றது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் கொள்கையும் பிரிட்டிசு காலனியாதிக்கத்தை எதிர்த்து நின்ற பிரெஞ்சுப் படையும் திப்புவின் படையில் இருந்தது. தீரன் சின்னமலையின் கொங்குப் படை இவர்களிடமிருந்து நுட்பமான போர்ப்பயிற்சிகள் பலவும் கற்றது. தீரன் சின்னமலை திப்புவின் நெருங்கிய நண்பரானார்.
திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நான்காம் கட்ட மைசூர் போர் 1799-ல் துவங்கியது. வெள்ளையர் படை 40000 வீரர்களுடன் மோத வந்தது. தன் உற்ற நண்பன் திப்புவிற்காக களமிறங்கினார் தீரன் சின்னமலை. மழவல்லி என்னும் இடத்தில் சிறிய படையைக் கொண்டு, தலைசிறந்த வியூகங்களை வகுத்து போர் புரிந்து 40000 வெள்ளையர் படையையும் வீழ்த்தினார் சின்னமலை. வீரமும் தீரமும் இரு கண்களாகக் கொண்டு சாதியத்தின் சாயலே இல்லாமல் அணிதிரண்ட சின்னமலையின் கொங்குப்படை வென்றது. தீரன் சின்னமலை தனது நண்பன் திப்புவிற்கு இந்த வெற்றியை பரிசளித்தார்.
திப்பு சுல்தானுடனான தீரன் சின்னமலையின் நட்பு 1792-ல் துவங்கியது. திப்பு மரணித்த 1799 வரை தொடர்ந்தது. திப்புவின் படைத் தளபதிகளான பூர்ணய்யர், மீர் காசிம் போன்ற துரோகிகளின் துணையுடன் நயவஞ்சகமாக திப்புவை வீழ்த்திய வெள்ளையர்களின் மீது தீரன் சின்னமலை கடும் சினம் கொண்டார். திப்பு சுல்தானைக் கொன்றவர்களைப் பழிவாங்க பெரும்படையுடன் தயாராக வேண்டும் என்னும் உறுதியுடன் மைசூரிலிருந்து கிளம்பினார்.
வெள்ளையர்கள் தீரன் சின்னமலை மீதும் ஆத்திரம் கொண்டனர். போர் புரிய ஆயத்தமாயினர். ஆங்கிலேயப் படையின் நகர்வை கவனிக்க தனக்கு விசுவாசமான நபர் அவர்களிடம் உளவாளியாக பணியாற்ற வேண்டும் என தீரன் சின்னமலை எண்ணினார். அதற்கு தன் நண்பனான பொல்லானையே தேர்ந்தெடுத்தார். ஆங்கிலேயர் படையில் ஆயுதங்கள் சரி செய்யும் பணியாளராக பொல்லான் சேர்ந்தார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் பிறந்தவர்தான் பொல்லான். சிறு வயது முதலே வாள் வீச்சு, வில் பயிற்சிகளைக் கற்றவர். தீரன் சின்னமலை பொல்லானின் ஆற்றலைப் பார்த்து படைத்தளபதியாகவும், மெய்க்காப்பாளர் ஆகவும் ஆக்கிக் கொண்டார்.
1801-ம் வருடம் பவானியில் நடைபெற்ற காவிரி கரையோரப் போர், 1802-ம் ஆண்டு நடைபெற்ற சென்னிமலை போர், 1803-ம் ஆண்டு நடைபெற்ற அரச்சலுார் போர் ஆகிய மூன்று போர்களிலும் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலை வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தளபதி பொல்லான். இவர் ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவி ஆங்கிலேயர்களின் போர் நகர்வுகளை, போர் தந்திரங்களை, படை அளவுகளை சின்னமலைக்கு தெரிவித்தபடியால் எளிதில் தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
தீரன் சின்னமலை சிதறுண்டு கிடந்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பாளையங்களை இணைத்தார். பாளையக்காரர்களுக்கு வெள்ளைய ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலை சிந்தனையை, உரிமை உணர்வை ஊட்டினார். வெள்ளையர் எளிதில் நுழைய முடியாத வண்ணம பூந்துறை நாட்டின் புகழ்மிக்க ஊராக இருந்த ஓடாநிலையில் உறுதியான கோட்டையைக் கட்டினார். அதை மக்களே முன்னின்று உருவாக்க வைத்தார். பயிற்சிக் கூடங்கள் பல அமைத்தார். மக்கள் கருத்தறிய பெரிய வளாகங்கள், அறிஞர்கள் புலவர்கள் விவாதிக்க பேரவைகள் அமைத்தார். ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தலைமையேற்ற விடுதலைப் போராட்ட வீரராக வாழ்ந்தார்.
தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக அறிவிக்கப்பட வேண்டிய கோவைப் புரட்சியின் கூட்டமைப்பில் ஒருவர் தீரன் சின்னமலை. மருதுபாண்டியர்கள் ஒருங்கிணைத்த இந்த கூட்டமைப்பில் மைசூரிலிருந்து திப்பு சுல்தான், கர்நாடகாவிலிருந்து தூந்தாஜிவாக், சதமிழ்நாட்டின் தெற்குப் பகுதியான நெல்லைச் சீமையிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரை, சேது சீமையிலிருந்து முத்துராமலிங்க சேதுபதி, மேற்குப் பகுதியான கொங்குப் பகுதியிலிருந்து தீரன் சின்னமலை, வடக்கு, கிழக்குப் பகுதியான திருச்சி, தஞ்சை பகுதியில் மருது பாண்டியர்கள், மையப் பகுதியான திண்டுக்கல்லில் இருந்து விருப்பாச்சி கோபால் நாயக்கர், கேரளாவின் மலபார் பகுதியிலிருந்து பழசி அரசர் என விரிவாக தென் தமிழ்நாட்டின் அனைத்து தளங்களிலும் இருந்து உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பு வெள்ளையர்களை எதிர்க்க சாதி, மதம், இனம் கடந்து ஒன்று கூடியது. சின்னமலையின் படைத்தளபதியான கருப்பத் தேவர் திப்பு சுல்தானின் நெருங்கிய நண்பரான பிரெஞ்சு வீரன் நெப்போலியனிடம் தூது சென்றவர்களில் ஒருவர். ஆங்கிலேயர் வசம் இருந்த கோவைக் கோட்டையைக் கைப்பற்ற திரண்ட இந்தக் கூட்டமைப்பு காட்டிக் கொடுத்த துரோகிகளாலும், தொடர்புகளில் ஏற்பட்ட பிழைகளினாலும் தோல்வியைத் தழுவியது. இப்புரட்சியில் புத்தே முகமது, முகமது காசிம் உள்ளிட்ட 36 இஸ்லாமிய வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். கோவைப் புரட்சி தோற்றாலும் தீரனின் புரட்சி ஓயவில்லை.
சிவன்மலைக் காட்டில் சாதி, சமயம் என எதையும் பாராது இணைந்த தன் வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளித்தார் தீரன் சின்னமலை. திப்புவின் படைவீரர்கள் சிலரையும் தன் படையில் இணைத்துக் கொண்டார். துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை பிரெஞ்சு வீரர்களின் துணையுடன் தயாரித்தார். திப்புவைக் கொன்றவன் தன்னிடமும் வரும் காலத்தை பார்த்து காத்திருந்தார் சின்னமலை. அந்த காலமும் வந்தது.
“பல்வேறு படைகளை தன் பெரும் படையால் மாபெரும் வெற்றிகளைக் குவித்த ‘மேக்ஸ்வெல்’ கொங்கில் ஒரு சிறு படையிடம் தோற்றான்” என்று ஆங்கிலேயர்களே தங்கள் குறிப்பில் எழுதி வைத்த அளவுக்கு வீரத்திற்கு பெயர் பெற்றவர் சின்னமலை. 1801 -ல் மேக்ஸ்வெல் பெரும்படை திரட்டி காவிரி ஆற்றைக் கடந்து வந்தான். அவனைக் கோட்டைக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தது சின்னமலையின் படை. மீண்டும் ஒரு வருடம் கழித்து நன்கு பயிற்சி பெற்ற படைகளுடன் திரும்பி வந்தான் மேக்ஸ்வெல், தனது படையணிகளைக் கொண்டு வியூகம் அமைத்து அப்படைகளை சுற்றி வளைத்து தாக்கினார் சின்னமலை. மேக்ஸ்வெல்லின் தலை சின்னமலையால் சீவப்பட்டது. வெள்ளையர் படை அழிக்கப்பட்டது.
அதன் பின்னர், வெள்ளையர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தீரன் சின்னமலையின் பக்கமே வர அஞ்சினர். அதன் பின்னர் திப்பு சுல்தானை துரோகிகளைக் கொண்டு நயவஞ்சமாகக் கொன்ற ஆங்கிலேயத் தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையில் 3000 வீரர்களைக் கொண்ட படை புறப்பட்டது. சங்ககிரியிலிருந்து புறப்பட்ட அப்படை வழி நெடுக எதிர்த்து நின்ற தமிழக வீரர்களைக் கடந்து அப்படை முன்னேறியது. தம்பட்டப்பாறை என்னும் இடத்தில் தக்க தொலைவில் நின்று தனிமனிதனாக தீரன் சின்னமலை தன் துப்பாக்கியை ஹாரிசின் குதிரை மீது சுட்டார். குதிரை சுருண்டது. அது ஈரோடு வரை வந்து வீழ்ந்தது. அதைப் பின்பற்றி வந்த 300 குதிரைப் படை வீரர்களும் திரும்பி ஓடினர். இந்த நிகழ்வு ஹாரிசை கூனிக் குறுக வைத்தது. சின்னமலையின் படைகள் சூழத் துவங்க புறமுதுகிட்டு ஓடினான் ஹாரிஸ். மனம் குளிர்ந்தார் தீரன் சின்னமலை. தனது நண்பன் திப்புவின் கொலைக்குக் காரணமானவன் தலை தெறிக்க ஓடுவதைப் பார்த்து ஆரவாரம் செய்தார் சின்னமலை. வெற்றித்தூண் ஒன்று அங்கு நிறுவப்பட்டது.
பேரரசுகளையே அடிமைப்படுத்தி விட்டோம், பெரும் வெற்றிகளை ஈட்டி விட்டோம், ஆனால் கொங்குப் பகுதி வீரர்களைத் தோற்கடிக்க முடியவில்லையே என ஆத்திரம் கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். அதனால் 36 பீரங்கிகள், மிகப்பெரிய படையுடன் சங்ககிரி, கள்ளிக் கோட்டையிலிருந்து இருமுனைத் தாக்குதல் நடத்தலாம் என புறப்பட்டது ஆங்கிலேயப் படை. இதையறிந்த ஒற்றன் மூலமாக மடல் எழுதி சின்னமலைக்கு அறிவித்தார். பெரும் படை வருகிறது, எதிர்த்து நிற்கும் நேரம் இதுவல்ல, பெரும் ஆயுதங்கள் திரட்டும் காலம் போரிடலாம், கோட்டையை விட்டு சென்று மறைந்து கொள்ளுங்கள் என பொல்லான் எழுதியிருந்தார். பொல்லான் தான் தயாரிக்கும் செருப்புகளின் மூலமாக ரகசிய மொழிகளை எழுதி உளவுத் தகவல்கள் சொல்வார். இந்தத் தகவலும் கிடைக்க, தீரன் சின்னமலை விடுதலை நெருப்பை அணைந்து விடாமல் காத்து தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கலாம் என்று ஓடாநிலைக் கோட்டையிலிருந்து சென்றார்
பெரும்படையுடன் திரண்டு வந்த வெள்ளையர் படை ஓடாநிலைக் கோட்டை அமைதியாக இருப்பதைக் கண்டு திகைத்தனர். குவிந்திருந்த செருப்புகளைக் கண்டு சந்தேகம் கொண்டனர். பொல்லானின் ஒற்று வேலையைக் கண்டுபிடித்தனர். பொல்லானுக்கு தூக்கு தண்டனை கொடுத்தனர். தாய் நாட்டின் விடுதலைப் பணியை நிறைவுடன் செய்ததாக மகிழ்ச்சியுடன் மாண்டார் பொல்லான். உதவிய அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெள்ளையர்கள் பெரும்படையைக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் விட பெரிய ஆயுதமாக இங்கிருந்த துரோகிகளையே அவர்கள் கருதினார்கள். அந்த வகையில் சின்னமலையின் பரம்பரை சமையல்காரனான நல்லப்பனே பணத்திற்கு ஆசைப்பட்டு சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான். எப்பொழுதும் துப்பாக்கியுடன் இருக்கும் சின்னமலையை ஏமாற்றி துப்பாக்கியை வாங்கிக் கொண்டான் நல்லப்பன். ஒளிந்திருந்த வெள்ளையர்கள் பாய்ந்து வந்து பிடித்தனர். எதிரியை விட துரோகியை அழிப்பதே முக்கியம் என அவர்களை உதறியபடியே, துரோகியான நல்லப்பனை அங்கேயே மிதித்தே கொன்றார் சின்னமலை.
சின்னமலையைக் கைது செய்து இழுத்துச் சென்றனர் வெள்ளையர். கொங்கு மக்கள் கண்ணீர் சொரிந்து நின்றனர். விசாரணை நாடகம் நடத்தப்பட்டது. ஆசை வார்த்தை காட்டப்பட்டது. நாங்கள் சுமத்தும் வரியைக் கட்டினால் வாழலாம், ஆளலாம் என்று வெள்ளையர்கள் கூறினர். இம்மண்ணுக்கு உரிமையான நாங்கள் பிழைக்க வந்த கூட்டத்திற்கு வரியைக் கட்டி அடிமையாய் வாழ்வதற்கு மரணமே மேலானது என சீறினார் சின்னமலை. சின்னமலையும், அவரது சகோதரர்களும் தூக்கிலேற்றப்பட்டனர்.
இந்திய வரலாற்றிலேயே மூன்று வீரர்களே புலியுடன் நேருக்கு நேராக மோதும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள்தான் திப்புசுல்தான், தீரன் சின்னமலை மற்றும் பூலித்தேவன் என வரலாறு சொல்கிறது. அத்தகைய வீரர்களை தமிழகம் பெற்றிருக்கிறது என்பதும், சாதி மதம் பாராத மாந்த நேயர்களாய் இணைந்து நின்றதும் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டிய வரலாறுகள்.
கொங்கு மண்டலத்தின் பல்வேறு சமூக பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மக்கள் கருத்தையும் கேட்டு மக்களாட்சியை நல்லாட்சியாக வழங்கிய கொங்குக் கோமான் சின்னமலை, திப்பு சுல்தானுடன் கொண்ட நட்பும், மாற்று சமூகங்களைச் சார்ந்த படைத் தளபதிகளாக இருந்த பொல்லான், கருப்ப சேர்வையுடன் கொண்ட நட்பும் தமிழ்நாட்டின் அடையாளங்கள்.
தீரன் சின்னமலையின் சமையல்காரனாக இருந்து துரோகியாக மாறிய நல்லப்பன் தீரன் சின்னமலையின் சமூகத்தைச் சார்ந்தவனே. ஆனால் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொல்லான் முதலில் சின்னமலையின் தோழனாக சேர்ந்து, படைத்தளபதியாக மாறி, நண்பனுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி உளவாளியாக வெள்ளையர் கோட்டைக்குள் சென்று இறுதியில் உயிரையும் விட்டார்.
சாதி, மதப் பாகுபாடற்று இணைந்து வெள்ளையர்களைத் துரத்த ஒன்றிணைந்த கொங்குப் பகுதியில், இன்று ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி கும்பல்கள் மதவெறியை, சாதிவெறியைப் புகுத்துகிறது. தமிழர்களைப் பிரித்து வட இந்திய மார்வாடி – பனியாக்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த செயல்படுகிறது. இந்தக் கட்சிகள் தமிழர்களுக்கானவை அல்ல. வடநாட்டு முதலாளிகளுக்கான தரகு வேலை பார்க்கும் கூலிப்படைகளாகவே இருக்கின்றன.
தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியில் 225 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து ஆண்ட தீரன் சின்னமலையை சாதிய வட்டத்தில் சுருக்குவதும், தீரன் சின்னமலை திப்பு சுல்தானோடு கொண்ட நட்பைத் தவிர்த்து விட்டு திப்பு சுல்தான் மீது அவதூறுகள் சுமத்துவதும் இந்துத்துவவாதிகளின் சூழ்ச்சி அரசியல். சாதி மத வெறியர்களை அம்பலப்படுத்தி இந்த சூழ்ச்சியை வீழ்த்த வேண்டும், கடந்த கால வரலாறுகளை எடுத்துச் சொல்லி தமிழர்களின் ஒற்றுமையை.நிலைநாட்ட வேண்டும் என உறுதியேற்று மே 17 இயக்கம் ஜனநாயக ஆற்றல்களையும் இணைத்து பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. சாதி-மத பேதமற்ற தமிழ்நாட்டை உருவாக்க மக்களுடன் கைக்கோர்க்கிறது. தமிழர்களாய் இணைவோம், பிரிவினை செய்யும் ஆதிக்கவாதிகளை எதிர்ப்போம். நம் தமிழினத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களை என்றும் நினைவு கூர்வோம்.