ஸ்டெர்லைட் முதலாளிக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்
தூத்துக்குடியில் 15 தமிழர்களை படுகொலை செய்ய காரணமான ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை பெசன்ட் நகரில் புதிதாக துவங்க இருக்கும் சுரானா இன்டர்நேஷனல் என்கிற மார்வாடி பள்ளியை திறக்க வந்தார். தங்கள் மண்வளத்தைக் காக்கவும் ஆரோக்கியமான சுற்றுசூழலில் வாழ்ந்திடவும் சனநாயகவழியில் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய குற்றவாளி இந்த அகர்வால். இவர் தமிழ்நாட்டிற்கு வருவதை கண்டித்து, 05-08-2023 சனிக்கிழமை காலை சென்னை அடையார் பேருந்து நிலையம் அருகில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தமிழர்கள் பங்கேற்புடன் வீரியமாக நடைபெற்றது.
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றின் திறப்பு விழாவிற்கு அனில் அகர்வால் வருவதாக செய்தி கிடைத்தவுடன் மே 17 இயக்கம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட ஈகியரின் போராட்ட உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் தமிழர்களின் ஆரோகியமான வாழ்விட சூழலியலை மறுக்கும் அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தது.
இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் மேதா பட்கரின் நர்மதை ஆறு பாதுகாப்பு (NBA) அமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, எஸ்.டி.பி.ஐ. கட்சி, ஆம் ஆத்மி கட்சி , வெல்பேர் பார்ட்டி, தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம், தமிழக மக்கள் கட்சி, மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கெடுத்தன.
பெண்கள், குழந்தைகள் குழுமியிருந்த ஆர்ப்பாட்டம் பறையிசை மற்றும் பாடலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், தமிழ்நாடு திமுக அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
“வேதாந்தா நிறுவனம் எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது. தூத்துக்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் கைது செய்யப்பட வேண்டும்” என்று புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் அவலத்தை போபால் விச வாயு கசிவு நிகழ்வுடன் ஒப்பீடு செய்து எஸ்டிபிஐ கட்சி தோழர் பேசினார்.
“ஸ்டெர்லைட் படுகொலை எவ்வாறு திட்டமிட்டு நடந்தது என்பது குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 15 தமிழர்களை பூங்காவில் மறைந்து நின்று சுட்டு கொன்றிருக்கிறார்கள். இந்த அரச பயங்கரவாதம் நடந்து 5 ஆண்டுகள் கடந்து அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் நுழையும் அவலம் நடக்கிறது” என்று மகஇக தோழர் கூறினார்.
“மணிப்பூரில் மோடி அரசு ஊடகங்களை முடக்கியது போல ஸ்டர்லைட்டிற்கு எதிராக இங்கு ஒரு செய்தி நிறுவனம் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது” என்று தபெதிக தோழர் கூறினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூடியக்கத்தின் தோழர் பேசும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தின் நீர், நில வளங்களை நஞ்சாக்கிய நாசகார ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி ஐ.நா.வில் அம்பலப்படுத்தியவர் தோழர் திருமுருகன் காந்தி. இதற்கு முன்னர் மூடப்பட்ட நாசகார ஆலை மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் திறக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டிற்குள் அனில் அகர்வால் வருவது தமிழர்களுக்கு வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல அவமானத்திற்குரிய விடயம். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மோடி இன்னும் இரங்கல் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அத்தகைய வரலாற்றுப் பிழையைத் தடுக்க எங்கள் இன்னுயிரையும் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இணைந்து அனில் அகர்வால் வருகையைத் தடுக்க வேண்டும் என்று கூறினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தூத்துக்குடியில் நினைவேந்தல் நடத்துவதற்கு காவல்துறை நடத்தும் கெடுபிடிகளை விளக்கினார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர் பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்று கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் பின்னர் பேசிய தமிழ்நாடு மக்கள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் தூத்துக்குடியில் ஸ்டர்லைட்டினால் பெருகிய புற்று நோய் குறித்தும் 15 ஈகியருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். “ஸ்டெர்லைட் விளம்பரங்கள் வரும் ஊடகங்கள் தமிழர் விரோத ஊடகங்களாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும். பாசிச மோடி அரசு மணிப்பூரில் ஊடகத்தை முடக்கியது போல இன்று இங்கு எந்த ஊடகமும் வரவில்லை. இன்னும் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி ஏன் நடவடிக்கை எடுக்கபடவில்லை?” என்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், “இது வெறும் அடையாள ஆர்ப்பாட்டமல்ல, ஸ்டெர்லைட் நாசகார ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எடப்பாடி அரசைப் போலவே திமுக அரசும் எதிர்ப்பை சந்திக்கும். மிகக் குறுகிய நேரத்திலே, தமிழ்நாடு முழுவதுமிருந்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அணியமாகி இருக்கிறார்கள். அடக்குமுறை மூலமாகவோ சிறை மூலமாகவோ எங்கள் குரலை நசுக்க முடியாது. தூத்துக்குடி படுகொலை என்பது அழியாத கரையாக இருக்கிறது. ஸ்டெர்லைட் இந்த மண்ணில் இருந்து அகற்றப்படும்வரை நாங்கள் போராடுவோம் என்று சூளுரைக்கின்றோம்.” என்றார்.
“மேலும், இன்று செய்தி சேகரிக்க வராத ஊடகங்கள் விலை போயினவா? என்றும் கேள்வி எழுப்புகின்றோம். ஊடகத்தின் அற உணர்வு என்ன ஆனது? மோடி ஆதரவு ஆங்கில, இந்தி ஊடகத்தின் நிலையை இங்கும் கொண்டு வருகிறார்களா?”
“எனினும் நமக்கான போராட்டக்களத்தை யாரும் தடுத்துவிட முடியாது. நாம் மக்களோடு நிற்கிறோம். மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்காக உயிரைக் கொடுப்பதற்குக்கூட நாங்கள் அணியமாக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
ஊடக இருட்டடிப்பு
இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை செய்தியாக மாற்றி இருக்க வேண்டிய தமிழக ஊடகங்கள், இந்நிகழ்வை புறக்கணித்து, முற்றிலும் இருட்டடிப்பு செய்துள்ளன. வடநாட்டில் உள்ள ‘கோடி மீடியா’ எனப்படும் இந்துத்துவ பாஜக மார்வாடி பனியா ஆதரவு நிலையை தமிழ்நாட்டு ஊடகங்களும் கடைபிடிக்கின்றனவா? என்ற அச்சத்தையே நமக்கு உருவாக்குகிறது. 15 தமிழர்களை பதைபதைக்க சுட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் முதலாளிக்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தமிழர் அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாதது தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள பேராபத்து. ஊடக அறமற்ற இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த ஆர்பாட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து வந்து பல தோழர்களும், பொதுமக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்று அவர்களின் வலியை, வேதனையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய ஒரு மக்கள் பிரச்சனையை கூட பதிவு செய்ய தொலைக்காட்சி, யூடியூப் என எந்தவித ஊடகங்களும் வரவில்லை. தங்களை நடுநிலை, முற்போக்கு பேசும் திராவிட ஊடகங்கள் என சொல்லிக் கொள்ளும் யூட்யூப் சேனல்களும் வரவில்லை.
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் தனது பெயருக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க பிரிட்டன் குடிமகன் அனில் அகர்வால் தன்னை ஒரு மனித நேயவாதியாக பல்வேறு ஊடகங்களில் விளம்பரங்களை பெரும் பொருட்செலவில் செய்து வந்தார். இந்தச் சூழலில், சனிக்கிழமை அன்று அனில் அகர்வால் வருகையை கண்டித்து நடந்த கறுப்புக்கொடி போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த மிக முக்கியமான மக்கள் திரள் ஆர்பாட்டத்தை புறக்கணித்த இதே வேளையில், இந்த கொலைகார வேதாந்த நிறுவனம் சார்பில் தூத்துக்குடி பனிமயமாதா கோவில் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஊடகத்தில் விளம்பர படங்கள் வெளியாகிறது. மேலும், அகர்வால் பங்கெடுத்த பள்ளி விழாவில், “அமெரிக்காவின் சிலிகான் வேலியில் (மென்பொருள் நிறுவங்களின் தலைநகரம்) ‘ஜான்’க்கு பதிலாக ‘ராகவன்’ஐ கேட்கிறார்கள்” என்று அகர்வால் பேசி உள்ளார். இதை ‘அகர்வால் தமிழர்களை பெருமையாக பேசினார்’ என்று ஊடகங்கள் புளங்காகிதம் அடைந்தன. உண்மையில், ‘ராகவன்’ என்பது பார்ப்பனர் பயன்படுத்தும் பெயர். மார்வாடி அகர்வால் தனது சனாதன பார்ப்பன விசுவாசத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகங்கள் அறம் சார்ந்து, மக்கள் நலனை பிரதானமாக கொண்டு ஊடக தர்மத்தைக் காத்து செயற்படுவது அந்த ஊடகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அதோடு அது நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத தேவை. ஆனால், இன்று இருக்கும் ஊடகங்கள் வியாபாரத்துக்காக, ஊடக முதலாளியின் அரசியல் நன்மைக்காக, தனிநபர் விருப்பு வெறுப்புக்காக, பெருநிறுவன முதலாளிகளின் பணத்திற்காக, என ஒருசார்பாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. மேலும் அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கும் பணத்திற்கும் கட்டுபட்டு அவர்களின் தனிப்பட்ட ஊது குழலாகவும் செயலாற்றி வருகின்றன. ஜனநாயகத்தை காக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி பொறுப்பற்று சுயநல வியாபார இலாப நோக்கத்தில் செய்திகளை மக்களுக்கு தரும்போது அது மக்களை அழிவுப்பாதைக்கே இட்டு செல்லும் என்பது வேதனை அளிக்கிறது.
மக்களுக்கு அடுத்து, நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக ஊடகங்கள் செயற்பட்டு வரும் நிலையில், ஊடகங்கள் இப்படி பொறுப்பற்று போனதால் ஊடகங்களை யார் ஒருவர் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கிறாரோ அவர் வைப்பது தான் சட்டமாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையைதான் தமிழ்நாட்டில் ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.
பாஜக எதிர்ப்பு, திராவிட மாடல் என்றும், எதிர்க் கட்சியாக இருந்த போது ஸ்டெர்லைட் எதிர்த்த திமுக கட்சியின் ஊடகமும் இந்த மக்கள் திரள் ஆர்பாட்டத்தை பதிவு செய்ய வரவில்லை. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, அதிமுக, பாஜக என்று அனைத்து தரப்பும் ஸ்டெர்லைட் ஆதரவு நிலையில் உள்ளதையே இது வெளிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளும், அதிகார மோக தேர்தல் கட்சிகளும் கட்டுப்படுத்தி வரும் ஊடகங்களே இங்குள்ளவை என்பதை இது அம்பலப்படுத்தியுள்ளது. சனநாயகத்தின் நான்காவது தூணாக நின்று குடிமக்களின் கோரிக்கைகளை பதிவு செய்யவேண்டிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் இல்லாததையே ஊடகங்களின் இந்த ஸ்டெர்லைட் முதலாளிக்கு ஆதரவான போக்கு வெளிப்படுத்துகிறது.
2009ல் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையைப் பற்றிய செய்திகள் தமிழக மக்களை சென்றடையாமல் இந்த ஊடகங்கள் கவனமாக பார்த்துக் கொண்டன. அதன் விளைவாக தமிழினம் கண்முன்னே அழிக்கப்பட்டும் அதற்குரிய எந்த விதமான எதிர்வினையும் ஆற்றாமல் தமிழ்நாடு மெளனமாக கடந்து சென்றது.
ஊடகங்கள் இந்த சமூகத்தில் நிகழும் அவலங்களையும், அரசின் தவறுகளையும் படம் பிடித்துக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், மாற்றங்கள் ஏற்படவும் வழிகோல வேண்டுமே ஒழிய இப்படி அவர்களுக்கு துணை நிற்க கூடாது. இது மக்களுக்கும் இந்த மண்ணிற்கும் பேராபத்தை விளைவிக்கும்.