ஊடகங்களில் பார்ப்பனிய ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய பத்ரி கைது

மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு ஊடகங்கள் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட பாஜக மீது கலங்கம் கற்பிக்காத வகையில் விவாதங்களை நடத்தி வருகின்றன. தங்கள் உயிர், உடமை, வாழ்வாதாரத்தை தாக்குதலில் பறிகொடுத்த குக்கி இன மலைவாழ் பழங்குடிகளை “வந்தேறிகள், போதை மருந்து பயிர் செய்பவர்கள், காடுகளை அழிப்பவர்கள், இந்து விரோதிகள்” என்று மெய்தி வன்முறையாளர்கள் பாஜகவின் துணையுடன் பரப்பி வருகின்றனர். இந்த பின்னணியில் மணிப்பூர் கலவரத்தை குறித்து பத்ரி சேஷாத்திரி பேசிய வன்மம் மிகுந்த கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியது.

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் பாஜகவின் மெய்தி இனத்தை சேர்ந்தவர்கள் மலைவாழ் குக்கி பழங்குடியினரின் இன அழிப்பை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு ஆதாரமாக, இரு குக்கி பழங்குடிப் பெண்களை மெய்தி கலவரக்கார்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் அப்பெண்களை ஆடைகள் இல்லாமல் சாலையில் இழுத்து செல்லும் காணொளி வெளியாகி உலகெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழநாட்டிலும் பல்வேறு சனநாயக அமைப்புகள் கண்டன போராட்டங்களையும் நடத்தினர். இந்நிகழ்வை கண்டிக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அமைதியான முறையில் கூடினர். அமைதியாக கூடியவர்கள் மீது, பாஜகவை எதிர்ப்பதாக சொல்லும், திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ள கூத்தும் நடந்துள்ளது. இந்த கண்டனக்கூட்டம் குறித்தும், அரசு வழக்கு குறித்தும் விவாதிக்க தமிழ்நாட்டு ஊடகங்களுக்கும், அரசியல் பேசும் பிரபல யூடியூபர்களுக்கும் அறம் இல்லை என்பது வேறு விவாதம்.

இந்த மணிப்பூர் காணொளி குறித்து ஒரு யூடியூப் ஊடகத்தின் நேர்காணலில் கருத்து கூறிய பத்ரி சேஷாத்திரி தனது இயல்பான போக்கில் பார்ப்பன வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த நேர்காணலில், “இனக்குழுக்களுடனான பிரச்சினை காலங்காலமாக நடைபெற்று வருவது, பழங்குடி மக்கள் போதை மருந்து கடத்துபவர்கள், இராணுவம் மீது பழங்குடிகளின் தாக்குதல் நடைபெறும் சூழலில் பெண்கள் மீதான இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் நடைபெறத்தான் செய்யும்” என்று பத்ரி கூறுகிறார். மேலும், “இதுபோன்ற பாலியல் வன்முறைகளை தமிழ்நாட்டின் பெண் கவிஞர்கள், இலங்கை வெர்சன், கவிதைகளில் ஏதோ தாங்களே பாதிக்கப்பட்டதை போல உணர்ச்சி பொங்க எழுதுவார்கள். இது தமிழர்களின் பொறுக்கித்தனம்.” என்று பெண்கள் மீதான வன்கொடுமைகளை நியாயப்படுத்துவதோடு, “தமிழர்கள் பொறுக்கிகள்” என்கிற சுப்பிரமணிய சாமி பாணி ஆரிய பார்ப்பன வன்மத்தையும் கக்கிவிட்டுச் செல்கிறார்.

கூடுதலாக, தனது பார்ப்பன மேலதிகாரத்துடன், “உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூருக்கு அனுப்புவோம். அவரால் அமைதியை மீட்டெடுக்க முடிகிறதா என்று பார்ப்போம்” எனவும் பேசியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி குறித்த இந்த திமிர் பேச்சின் காரணமாகவே பத்ரி சேஷாத்திரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பத்ரியின் கருத்துரிமை

பத்ரி சேஷாத்திரி கைது நடவடிக்கையை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் எதுவும் “இராணுவம் செய்யும் பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தியது, தமிழர்களை பொறுக்கிகள் என்று இழிவுபடுத்தியது” குறித்து பேசவில்லை. மாறாக, பார்ப்பான் பத்ரி சேஷாத்திரியின் ‘கருத்துரிமை மறுக்கப்படுவதாக’ நீட்டி முழங்கின. தமிழ் நாட்டின் பார்ப்பன ஊடகங்கள் மட்டுமல்லாமல், திராவிட சமூகநீதி அரசியல் ‘படைப்புலக அறிவுஜீவிகளும்’ ஆரிய பார்ப்பான் பத்ரி சேஷாத்திரியின் கருத்துரிமைக்காக முண்டியடித்து அறிக்கை வெளியிட்டார்கள். “தமிழர்களின் பொறுக்கித்தனத்தை” பற்றிய பத்ரியின் கருத்தை இவர்கள் கேள்வி எழுப்புவார்களா?

“காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரி பார்ப்பானுக்கு நெறிகட்டுமாம்” என்று பெரியார் சொன்னார். ஆனால், இன்று தமிழ்நாட்டு திராவிட கொள்கைவாதிகளுக்கும் சேர்ந்தே நெறிகட்டுகிறது.

‘நீதிமன்றத்தின் கருத்துக்கள் பொதுசமூகத்தின் ஆக்கபூர்வமான விவாதித்திற்குளாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல’ என்று தமிழ்நாட்டில் முற்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து பேசி வருகின்றன. அப்படியாக, பொதுநலன் விமர்சனங்களை முன் வைக்கும் போது ‘நீதிமன்ற அவமதிப்பு’ செய்துவிட்டதாக குதிக்கும் பார்ப்பன ஊடகங்களும் அறிவுசீவிகளும் உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியிடம் “துப்பாக்கி கொடுத்து அனுப்புவோம்” என்ற பத்ரியின் திமிர் பேச்சை என்ன கேள்வி எழுப்பின? பார்ப்பான் பேசினால் ‘நீதிமன்ற அவமதிப்பு’ கிடையாதா?

ஊடகங்களை ஆக்கிரமித்த பார்ப்பனியம்

2014-இ ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் அனைத்தும் நேரடி அல்லது மறைமுக வலதுசாரி அரசியலை பேச வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டன. பெரும்பான்மை ஊடகங்கள் இந்துத்துவ மதவெறுப்பை 24×7 நேரமும் உற்சாகமாக பரப்பி வருகின்றன. ‘நடுநிலை’, ‘எதிர்ப்பாளர்’ என்று வெளிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஊடகங்களும் இந்துத்துவ மதவெறுப்பு அரசியலை பேசாமல், கண்டும் காணாமல் அல்லது பூசிமெழுகி, கடந்து செல்கின்றன. ஒன்றிய பாஜக அரசிடம் ஊடக உரிமம் வழங்கிடும் அதிகாரம் உள்ளவரை பிழைப்புக்காக நடத்தப்படும் ஊடக நிறுவனங்கள் அடிபணிவது இயல்பு தான்.

ஊடகத்துறையின் இன்றைய நிலையை குறித்த இந்த புரிதல் பொதுமக்களிடம் எதிர்பார்க்க முடியாது. இதன் விளைவாக, “மோடி ஊழல் இல்லாத ஆட்சி” தருவதாக ஊடக பரப்புரைகள் வாயிலாக வெகுமக்களை முழுமையாக நம்ப வைக்க முடிகிறது. இந்த பொய் பரப்புரைகளை மேற்கொள்ள பார்ப்பன உயர்சாதி சனாதானி கும்பல் இந்தியா முழுவதுமுள்ள மையநீரோட்ட ஊடகங்களில் குவிந்துள்ளன. பச்சிளம் குழந்தைகளை கொன்றாலும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாலும், ஆண்கள் கொல்லப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர் தலித் அல்லது மத சிறுபான்மையினர் சமூகமாக இருந்து குற்றம்புரிந்தவர் இந்துத்துவ வெறியனாக இருந்தால்; இந்த சனாதானி ஓநாய்கள் குற்றவாளிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும்.

தமிழ்நாட்டிலும் இப்படியான ஒரு பெருங்கூட்டம் உள்ளது. அவை, பாஜக ஆட்சிக்கு வந்த காலம் தொடங்கி, ‘பொருளாதார நிபுணர்’, ‘சமூக ஆர்வலர்’, ‘அரசியல் விமர்சகர்’, ‘கல்வி ஆய்வாளர்’, ‘வலதுசாரி ஆதரவாளர்’ எனப் பல்வேறு மாறுவேடங்களைப்பூண்டு கருத்து பேசும். சுமந்த் ராமன், பத்ரி சேஷாத்ரி, நாரயணன் திரிபாதி, ஸ்ரீராம், ரங்கராஜ் பாண்டே, மாலன் போன்ற   பெரிய பார்ப்பன பட்டாளமே தமிழக அரசியல் விவாதங்களில் முழுவதும் நிறைந்துள்ளது. இந்தக்கூட்டம், இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு ஆதரவாகவும் பேசும், சில சமயங்களில் நடுநிலையாளரை போலவும் பேசும். அதேநேரம், இந்துத்துவ அரசியலை எதிர்க்க வேண்டுமென்றால் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ராமசுப்பிரமணியன், டி.எம்.கிருஷ்ணா போன்ற ‘தாராளவாத’ பார்ப்பனர்கள் நுழைவார்கள். ஒருபுறம் சனாதானி சுப்பிரமணிய சாமி என்றால் மறுபுறம் மார்க்சிய முற்போக்காளர் போர்வையில் இந்து என்.ராம் என்ற ஏற்பாட்டில் தான் பாஜக ‘எதிர்ப்பு’ ஊடகங்களும் தங்கள் பிழைப்பை தக்க வைத்துக்கொள்கின்றன.

இவ்வாறு, ‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என அனைத்து கருத்தியல் தளங்களையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துகின்றன. இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இதையே வலியுறுத்துகிறது. இந்துத்துவ மோடி எதிர்ப்பு பேசும் பார்ப்பனர்களை பாஜக எதிராளிகளாக காண்பதில்லை. அவர்களுக்கான சில சலுகைகளை மறுக்க நினைக்குமே ஒழிய எதிர் நடவடிக்கை எடுக்காது. அப்படி ஏதேனும் எடுக்கப்பட்டால் ஆர்.எஸ்.எஸ் வக்காலத்துக்கு வந்து நிற்கும். அதேபோல, ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சொல்லும் காங்கிரஸ் அதை நிரந்தரமாக ஒழிக்க முற்படவில்லை என்பதற்கு காரணம் காங்கிரசினுள் உள்ள அதே பார்ப்பனீயம்.

இதே பார்ப்பனீய குணம் தான் வலதுசாரி பத்ரி சேஷாத்ரி கைதின் போது, இந்தியா முழுவதுமுள்ள ‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என ஒட்டுமொத்த பார்ப்பனர் கூட்டமும் பத்ரியின் கருத்துரிமைக்கு ஆதரவாக பேசியது.

மணிப்பூரில் மெய்தி-குக்கி-நாகா பழங்குடி இனத்தினரிடையே காலங்காலமாக சண்டை இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது பாஜக நடத்தும் மதரீதியான கிருத்துவர்கள் மற்றும் ஆலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற பாஜக-மெய்தியின் மதவாத கோரிக்கை எழுப்பப்பட்டதில்லை. ஒரு (மெய்தி) இனத்தினருக்கு மட்டும் மணிப்பூர் அரசு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ‘விநோயோகித்த’ அவலம் நடைபெற்றதில்லை. இதையெல்லாம் பாஜக பார்ப்பனர் பத்ரி பேச மாட்டார். தமிழர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியில்லாத பார்ப்பன ஓநாய்கள் ‘தமிழர்கள் பொறுக்கிகள்’ என்று ஊளையிட்டு ஓடி ஒளிந்துகொள்ளும்.

தமிழ்நாட்டில் இந்துத்துவ மதவெறி ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளை தடை செய்யக்கோரிய சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா கடந்த 2 வாரங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கருத்துரிமை, சனநாயக முறையில் போராடும் உரிமை இல்லையா? பத்ரியின் கருத்துரிமைக்கு குரல் எழுப்பியவர்கள் தமிழ்நாட்டில் இந்துத்துவ மதவெறிக்கு எதிராக போராடும் சகோதரிகளின் உரிமைக்காகவும் பேச முன் வரலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »