பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கும் சீமான்

தமிழ்நாட்டின் இசுலாமியர்-கிறிஸ்தவர்கள் பற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தினை மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், “இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் சாத்தான்களின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “இந்த நாட்டில் நடைபெற்றுள்ள அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய-கிருத்துவ மக்கள் தான்” என நாட்டில் நெருக்கடியை சந்தித்து வரும் சிறுபான்மை சமூகத்தவர்கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டியுள்ளார். திரு. சீமான் அவர்களின் இந்த பேச்சு, நாட்டில் சிறுபான்மை சமூகத்தவர்களை ஒடுக்கி வரும் பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மணிப்பூரில் சிறுபான்மை பழங்குடி கிருத்துவர்கள் மீதும், அரியானாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் ஆளும் ஒன்றிய-மாநில பாஜக அரசுகளின் ஒத்துழைப்புடன் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறைகளை நிகழ்த்தி வரும் இந்த வேளையில், ஒடுக்கும் பாசிச பயங்கரவாதிகளை கண்டித்தும், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு ஆதரவாகவும் பேச கூடிய கூட்டத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்களையே குற்றவாளிகளாக்கி திரு. சீமான் அவர்கள் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்ற செயலாகும்.

திரு. சீமான் அவர்களின் இந்த அருவருக்கத்தக்க பேச்சு, இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் தமிமுன் அன்சாரி,  நடிகர் ராஜ்கிரண் உட்பட பலர் இந்த பேச்சை கண்டித்தும், திரு. சீமான் அவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், திரு. சீமான் அவர்கள் தனது பேச்சை நியாயப்படுத்தும் விதமாக, தான் மன்னிப்பு கேட்டால் இஸ்லாமிய-கிருத்துவ மக்கள் தனக்கு வாக்களித்துவிடுவார்களா என்று எதிர்கேள்வி கேட்டு இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தவர்களை மீண்டும் கொச்சைப்படுத்தியுள்ளார். தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர்களின் பிரச்சனைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது வெறுப்பை விதைக்கும் செயலாகும். வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாக கருதும் மக்கள், அந்த வாக்கை யாருக்கு செலுத்துவது என்ற ஜனநாயக உரிமையையும், அப்படியாக செலுத்தப்படும் வாக்கை வெல்வதற்கான ஜனநாயக வழிமுறைகளை கட்சிகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தனக்கு வாக்களிக்காத காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட சாரரை இழிவுபடுத்தி பேசுவது ஜனநாயக விரோத செயலாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சியும், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியும் இருந்து வந்துள்ள நிலையில், இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தவர்கள் காங்கிரஸ்-திமுகவிற்கு வாக்களித்துவிட்டதால் நாட்டில் அநியாயம் அக்கிரமம் நிகழ்ந்துவிட்டதாக கூறுவது முற்றிலும் முரணானது. இதன் மூலம், செய்யாத குற்றத்திற்கு சிறுபான்மை இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தவர்களை குற்றவாளியாக்கியதோடு, அவர்கள் செய்யாத செயலுக்கு பாஜக ஆட்சியில் கடுமையான ஒடுக்குமுறைகளை அனுபவித்து கொண்டிருப்பதை நியாயப்படுத்துவது போல் உள்ளது  திரு. சீமான் அவர்களின் பேச்சு.

இத்தகைய போக்கு, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தினரை பொதுச் சமூகத்திலிருந்து தனிமைபடுத்தவும் உதவும். நாம் தமிழரின் கட்சி ஆவணத்தில் “இஸ்லாமியர்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்” என்றும், “இஸ்லாமியர்களை தமிழர்களாக நாங்கள் ஏற்கவில்லை” என்றும் கூறியதே இதற்கு அடிப்படையாக உள்ளது. இது, சிறுபான்மை சமூகத்தவர்களை பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு எதிரியாக காட்டி, சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டாக்கி வாக்கை அறுவடை செய்யும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் உத்தி ஆகும். தன்னுடைய சுய அரசியல் லாபத்திற்காக சிறுபான்மையினரை பலிகடாவாக்க அனுமதிக்க முடியாது.

இந்திய தேசிய அரசு, தமிழ்த்தேசிய இன மக்களை அங்கீகரித்து அவர்களுடைய மொழி, பொருளியல், பண்பாடு, அரசியல் உரிமைகள் மீது செலுத்திவரும் ஆதிக்க அரசியலை கேள்விக்குள்ளாக்குவதும், சாதி-மத ரீதியாக தமிழினத்தை கூறுபோடும் சனாதனம், மதவெறி அரசியலை வீழ்த்துவதும், பெண்களின் விடுதலையை வெல்வதும், தமிழ்நாட்டின் மீதான காலனிய காலம் முதலான ஏகாதிபத்திய ஆதிக்க அரசியலை எதிர்கொள்வதும், இந்து-இந்தி பேரினவாத அரசியலை தனிமைப்படுத்தி ஜனநாயக அரசியல் சூழலை அனைத்து மக்களுக்கும் உருவாக்கிக் கொடுப்பதே தமிழ்த்தேசியமாகும். சமஸ்கிருதம், வேத மரபு, பார்ப்பனிய ஆதிக்கம், மார்வாடி-பனியா பொருளியல் சுரண்டல், பெருநிறுவன கார்ப்பரேட் சுரண்டல் ஆகியவற்றினை எதிர்க்கும் அரசியலுக்கு தமிழர்களை அணியப்படுத்துதலே தமிழ்த்தேசியமாக அறியப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முரணாக சாமானிய மக்களை, சிறுபான்மை மக்களை குற்றவாளிகளாக்குவதும், தேசிய இன மக்களை மதரீதியாக பிரித்து அரசியல் செய்வதும் சீரழிவு அரசியலின் அடையாளம். இந்தியாவில் அதிகாரத்தில் உள்ள, இருந்த கட்சிகளிடத்தில் களையப்பட வேண்டிய சீரழிவுக் கூறுகளை தன் கட்சியினரிடத்தில் வளர்ப்பதால் நாம் தமிழர் கட்சி எவ்விதத்தில் மாற்றுக்கட்சியாகிவிட முடியாது. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வருமெனில் பிற கட்சிகளில் அவர் சுட்டிக்காட்டும் சீரழிவுகூறுகளுடனேயே அவரது அமைப்பும் செயல்படுமென்பதை அம்பலப்படுத்தியுள்ளார். இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.

தன்னை தமிழ்த்தேசியவாதி என்று கூறிக்கொள்ளும் திரு. சீமான், தமிழ்த்தேசியத்தின் அங்கமாக இருக்கும் சிறுபான்மை இஸ்லாமிய-கிருத்துவ சமூகத்தினரை தமிழ்த்தேசியதிலிருந்து விலக்கி வைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தமிழர்களை, சாதி-மத அடிப்படையில் பிரித்து பேசுவதும், தமிழர்களின் ஒரு பகுதியினரை தேர்தல் அரசியல் நலனுக்காக புறக்கணிப்பதும் தமிழ்த்தேசியமாகாது. பார்ப்பனியத்தின் கூறுகளை வெளிப்படுத்தும் இது போன்ற செயல்களை தமிழ்த்தேசியத்தில் வகைப்படுத்த முடியாது. இதை தமிழ்த்தேசியவாதிகளாக நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »