சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பினால் உருவாகும் குளறுபடிகளைக் குறித்து, கேள்வி கேட்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு நெருக்கடி ஏற்பட்டதால். நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பை சமூக வலைதளத்தில் பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் பரவியதும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் வீடியோ வெளியிட்டது தவறு என மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்டு 11, 2024 அன்று ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து தொழில்துறையினருடன் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அதில் கொடிசியா, டேக்ட், கிரில், கோபியோ, கன்ட்ரோல் பேனல், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், கொங்கு தொழில்முனைவோர், கோஸ்மா, சிட்கோ, சீமா, சைமா உள்ளிட்ட 30 தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் உரையாடினர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன் பேசுகையில், “ஒரே மாவில், ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு, வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் பில் போடும் போது கம்ப்யூட்டரே திணறுகிறது, இனிப்பு உணவுக்கு 5% ஜிஎஸ்டி, காரத்திற்கு 12% ஜிஎஸ்டி, பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ளே வைக்கும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி இருக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி பில் கொடுப்பது கடினமாக இருக்கிறது. வட நாட்டில் இனிப்பு அதிகம் சாப்பிடப்படுகிறது. இனிப்பு உணவுக்கு 5% வரிதான் விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இனிப்பு மட்டுமல்ல, இனிப்பு, காரம், காஃபி சேர்ந்து உண்பது தான் பழக்கமாக இருக்கிறது. பிரெட், பண்ணிற்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி. இதை காணும் வாடிக்கையாளர்கள், ஜாமை தனியாக கொடுத்துவிடுங்கள், நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரு குடும்பம் வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுகிறது.. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள், இது தவிர, உள்ளீடு கடன் (input credit) எடுக்கும் பொழுது அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே பலகார சமையல்காரர் (sweet master) என இருக்கும் பொழுது, அதிகாரிகளும் திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவும் வகையில் ஜிஎஸ்டி குளறுபடிகளை சரிசெய்யுங்கள்” என்று தனது கருத்தை தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்விக்கு, பதில் ஏதும் அளிக்காமல் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம், யாருடைய கருத்துக்கும் கவலை கிடையாது என பேசிவிட்டு சென்றார். இதே போன்று, இதற்கு மூன்று கடந்த ஆண்டில் நடந்த ஒரு கூட்டத்திலும் கேள்வி கேட்ட நபரை ‘யார் கேள்வி கேட்டது? வாங்க, மேடைக்கு வாங்க, மைக்கில் பேசுங்க,’ என மிரட்டும் தொனியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னபூர்ணா உரிமையாளரின் இந்த பேச்சு சமூக வலைதளம் முழுதும் பரவியது. GST- வரி விதிப்பால் சிறு நிறுவன முதலாளிகள் அடையும் பாதிப்பை எடுத்துக் காட்டுவதாக பலரும் பரப்பினர். இதனால் அவருக்கு யார் மூலமாகவோ நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து மன்னிப்பு கோரியிருக்கிறார். அவர் ”தயவு செய்து மன்னிச்சுகோங்க! நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை” என அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது..
கருத்து கேட்பு கூட்டத்தில், GST-யால் அவர் அடைந்த பாதிப்பை கூறிய கருத்திற்காக, இந்த அளவுக்கான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். தமிழ்நாட்டின் நிறுவனங்களின் சார்பில், அந்நிறுவனங்களுக்கான பாதிப்பு குறித்து, அவர்களின் பிரதிநிதியாக கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதிகாரிகளுக்குமே இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் குறித்து நியாயமாக கேள்வி எழுப்பியவர்களை மிரட்டும் தொனியில் பேசுவதும், தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட செயலை, சமூக வலைதளங்களில் வெளிப்படையாக ஒளிபரப்பியது, சனநாயக மாண்பை மீறியதாகும்.
நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசுக்கு சேர வேண்டிய நிதி, எவ்வகையிலும் கிடைத்து விடக் கூடாது என்பதில் தொடர்ந்து கவனமாக இருப்பவர். அதற்கு சிறந்த உதாரணமே, தேர்தல் சமயத்தில் கோவிலில் நின்று, உண்டியலில் பணம் போடாதீர்கள், தட்டில் பணம் போடுங்கள் என பேசியது. கோவில் வருமானம் கூட தமிழ்நாடு அரசுக்கு சென்று விடக் கூடாதென நினைத்தவர்.
ரயில்வே, பேரிடர் போன்றவற்றிற்கு நிதி மிகவும் குறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோவுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. கல்விக்கான நிதி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்.
சாமானிய மக்களை பற்றி கவலைப்படாமல், பெரு நிறுவனங்களின் வசதிக்காக ஜி.எஸ்.டி கொண்டு வந்தார் மோடி. சிறு குறு நிறுவனங்களில் ஏற்படுத்திய பாதிப்பை, தனது நிறுவனத்தில் ஏற்பட்ட பாதிப்பு மூலமே உணர்த்தியுள்ளார் அன்னபூர்ணா உணவக உரிமையாளர். அவரையும் மிரட்டியிருக்கிறது பாஜக.
மாநிலங்கள் இல்லையென்றால் ஒன்றிய அரசு என்ற ஒன்று கிடையாது என திரும்ப திரும்ப நாம் பாஜகவிற்கு சொல்ல வேண்டியிருக்கிறது.