அதிகாரத்தை அசைத்த “ஹல்லா போல்”
நாடகங்களில் போர்க்குரல் எழுப்பிய சப்தர் ஹாஷ்மி
சப்தர் ஹாஷ்மியின் உடல் மின் மயனாத்தில் எரியூட்டப்பட்ட பின், அவரின் மனைவி மாலா, அங்கு நின்று கொண்டிருந்த நாடக கலைஞர்களிடம் சென்று “எந்த இடத்தில் சப்தர் ஹாஷ்மி நாடகம் நடைபெறும்போது அடித்து கொள்ளப்பட்டாரோ, அதே இடத்தில் அதே நாடகத்தை நாளை அரங்கேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அவர் கேட்டு கொண்டதை போலவே சப்தர் ஹாஷ்மியின் ஜன நித்ய மன்ச் (Jana Natya Manch) – ஜனம் (JANAM) நாடகக் கலைஞர்களால் அடுத்த நாளே “ஹல்லா போல்” (குரலை உயர்த்துங்கள்) எனும் அதே நாடகம் அரங்கேற்றப்பட்டது.
ஜனவரி 1, 1989 ஆம் ஆண்டு காசியாபாத் நகராட்சி தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது சப்தர் ஹாஷ்மியின் தலைமையில் “ஹல்லா போல்” எனும் நாடகத்தை “ஜனம்” நாடகக்குழிவினர் உத்திரபிரதேசத்தில் உள்ள ஜாண்டபுர் எனும் ஊரில் அரங்கேற்றினர். நாடகம் நடைபெறும் போதே முகேஷ் ஷர்மா எனும் காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் தனது அடியாட்களுடன் உள்ளே நுழைந்து அனைவரையும் தாக்க தொடங்கினர். இதில் பலத்த காயமடைந்த சப்தர் ஹாஷ்மி மருத்துவ சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களில் உயிரிழந்தார்.
ஏப்ரல் 12, 1954ஆம் ஆண்டு ஹனீப் மற்றும் கமர் அசாத் ஹாஷ்மி தம்பதியினருக்கு சப்தர் ஹாஷ்மிமகனாக பிறந்தார். பிறந்தது முதலே மார்க்சிய சுற்றமும், நட்பும் சூழ் வளர்ந்த சப்தர் ஹாஷ்மிக்கு தனது கல்லூரி பருவத்திலும் அச்சூழல்கள் தொடர்ந்தன. தில்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் முடித்துவிட்டு, தனது முதுகலை படிப்பிற்காக தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து அரசியல் பணி செய்து வந்தார். பின்னர், இந்திய மக்கள் நாடக சங்கத்துடன் இணைந்து நாடகங்கள் பயின்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல நாடகங்களை மக்கள் முன் அரங்கேற்றினார்.
இந்தியாவில் நாடகங்களை மேல்தட்டு வர்க்கங்கள் மட்டுமே அதிக விலை கொடுத்து அடைக்கப்பட்ட அரங்குகளில் பார்க்கப்பட்டு வந்த நிலை 60களில் நிலவி வந்தது. அந்த வடிவத்தை உடைத்து, கலை மக்களுக்கானது; அது குறிப்பாக உழைக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று எண்ணிய சப்தர் ஹாஷ்மி, அவர்களுக்கான கதைகளை உருவாக்கி, அவர்களிடத்திலேயே சென்று அரங்கேற்றி வந்தார்.
1973 ஆம் ஆண்டு ஜன நாட்யா மன்ச் (Jana Natya Manch) – ஜனம் (JANAM) எனும் நாடகக் குழுவை சப்தர் ஹாஷ்மி தொடங்கினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நாடு முழுவதும் சர்ச்சை வெடித்தது. அதனை வைத்து சப்தர் ஹாஷ்மி எழுதிய குர்ஸி, குர்ஸி, குர்ஸி (நாற்காலி, நாற்காலி, நாற்காலி) என்ற நாடகத்தை எழுதினார். ஒரு அரசன் தன்னுடைய நாற்காலியை அடுத்த அரசனாக தேர்வு செய்யப்பட்ட நபரிடம் ஒப்படைக்கும் பொழுதெல்லாம் அந்த நாற்காலி அந்த நபரிடமிருந்து தானாக விலகி செல்லும். இப்படியாக எழுதப்பட்ட அந்த நாடகம், ஒரு வாரம் முழுவதும் தினமும் புது டில்லியில் உள்ள போட் கிளப்பின் புல்வெளிகளில் அரங்கேற்றப்பட்டது. ஜனம் நாடகக்குழுவிற்கு அது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் வரை சப்தர் ஹாஷ்மியின் தலைமையில் ஜனம் நாடகக்குழுவால் நாடு முழுவதும் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவசரகால நிலையில் தொடர்ந்து நாடகங்கள் அரங்கேற்ற முடியாத நிலையில், சப்தர் ஹாஷ்மி காஷ்மீர் மற்றும் தில்லியில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் 1977 ஆம் ஆண்டு அவசரகால நிலை முடிந்த பிறகு முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஜனம் நாடகக்குழு மீண்டும் செயல்பட தொடங்கியது.
1978 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி ஜனம் நடத்திய “மெஷின்” (இயந்திரம்) எனும் நாடகம் தொழிலாளர் சங்க சந்திப்பில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிறு, குறு தொழிலாளர்கள்படும் துன்பங்களை மையமாக வைத்து “காவுன் சே சஹர் தக்” (கிராமம் முதல் நகரம் வரை), வேலைவாய்ப்பின்மை பற்றி “தீன் குரோர்” (மூன்று கோடி), பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து “அவுரட்” (மகளிர்) என்று பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து நாடகங்கள் எழுதி, அரங்கேற்றி வந்தார்.
1979 ஆம் ஆண்டு தன் அமைப்பில் இருந்த சக தோழரான மொலோய்ஸ்ரீ என்கிற மாலாவை திருமணம் செய்துகொண்டார். பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் கட்சிகள் செய்யும் குற்றங்களை தனது நாடகங்கள் மூலம் நாடு முழுவதும் எளிய மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இதன் காரணமாக பல அரசியல் கட்சிகளுடன் சப்தர் ஹாஷ்மிக்கு விரோதம் உண்டானது. உழைக்கும் எளிய மக்களின் பிரச்சனைகளை தனது கலையின் வாயிலாக மக்களிடம் எடுத்து சென்றதற்காக சப்தர் ஹாஷ்மி அடித்து கொல்லப்பட்டார். சப்தர் ஹாஷ்மியின் இறுதி சடங்கிற்கு 15,000 த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள், காங்கிரஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தவிர, அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.
சப்தர் ஹாஷ்மி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே தில்லியில் நடந்த சர்வதேச திரைப்பட திருவிழாவில் தன்னிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குனர் யார் என்ற கேள்வி ஷபனா அசுமியிடம் எழுப்பப்பட்டது. “அந்த கேள்விக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால், தில்லியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரமே உள்ள ஒரு ஊரில் சப்தர் ஹாஷ்மி என்னும் ஒரு நாடகக்லைஞரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகேஷ் சர்மா அடித்தே கொலை செய்திருக்கிறார். ஒருபுறம் கலை படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக திரைப்பட திருவிழாக்கள் நடத்தி, மறுபுறம் கலைஞர்களை கொலை செய்வதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்று காங்கிரஸ் மத்திய மந்திரியின் முன்னிலையில் ஷபனா அசுமி துணிச்சலாக கூறினார். சப்தர் ஹாஷ்மி கொல்லப்பட்டு 14 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகேஷ் சர்மா உட்பட சப்தர் ஹாஷ்மி கொலையில் சம்மந்தப்பட்ட 10 நபர்களுக்கு தண்டனை வழங்கி காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சப்தர் ஹாஷ்மியின் கொலைக்கு பிறகும் ஜனம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. 2012 ஏப்ரல் 12 ஆம் தேதி சப்தர் ஹாஷ்மியின் பிறந்தநாள் அன்று ஜனம் நாடகக்குழுவால் “ஸ்டூடியோ சப்தர்” எனும் நாடக கலைஞர்களுக்கான பிரத்தியேக இடம் புதுடில்லியின் மைய்யப்பகுதியான படேல் நகரில் நிறுவப்பட்டது.
ஒவ்வொரு வருடம் சப்தர் ஹாஷ்மியின் நினைவு தினமான ஜனவரி 1 ஆம் தேதியை தீர்வுக்கான நாளாக அனுசரித்து, அவர் அடித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் “ஹல்லா போல்” எனும் அதே நாடகத்தை ஜனம் கலைக்குழு அரங்கேற்றி வருகிறது. புது டில்லியில் உள்ள மாந்தி இல்லம் எனும் இடத்தில் உள்ள ஓவர் தெருவிற்கு சப்தர் ஹாஷ்மியின் பெயர் சூட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டு “ஹல்லா போல்: சப்தர் ஹாஷ்மியின் சாவும் வாழ்வும்” எனும் புத்தகத்தை ஜனம் நாடகக்குழுவில் சப்தர் ஹாஷ்மியின் சக நாடகக்கலைஞரான சுதன்வா தேஷ்பாண்டே எழுதி வெளியிட்டார்.
வரலாறு நெடுக அதிகார வர்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் கலை படைப்புகள் மற்றும் கலைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்று பொழுதுபோக்காக வெகுஜனங்களால் காணப்படும் கலைத்துறை, தொடக்கம் முதலே ஒரு முக்கிய போராட்ட வடிவமாகவே இருந்து வந்துள்ளது.
கலையை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக சுருக்க நினைக்கும் முதலாளித்துவ மேடைகளிலேயே அரசியல் பொறுப்புணர்ந்து கலைஞர்கள் பலர் ஆதிக்கத்தை சுக்குநூறாக உடைத்துள்ளனர். 1973 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மார்லன் பிராண்டோவிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை பெற மறுத்த மார்லன் பிராண்டோ தனக்கு பதிலாக ஒரு செவ்விந்திய நடிகையை மேடைக்கு அனுப்பி ஒரு மடலை வாசிக்க செய்தார். அம்மடலில் அமெரிக்கா திரையுலகம் செவ்விந்திய கலைஞர்களுக்கான சரியான அங்கீகாரமும், மரியாதையும் தர மறுத்து வருகிறது. ஆகையால், இவ்விருதை பெற்றிட நான் மறுக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.