கடந்த மார்ச் 30-ம் தேதி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புடைசூழ, ஹைதராபாத்தின் மங்கள்கட் தெருக்களில் காவிக்கொடியுடன் மேடையேறினார் டைகர் ராஜா சிங். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த பார்ப்பனரான நாதுராம் கோட்சேயின் படம் கூட்டத்தில் பதாகையாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. சுற்றி எழுந்த ஆரவாரங்களின் மத்தியில் சூழ்ந்திருந்தவர்களிடம் தனது உரையை நிகழ்த்தினார்.
“நமது ஹிந்து ராஷ்டிரத்தின் அரசமைப்புச் சட்டத்தில் புது தில்லி தலைநகராக இருக்காது. பதிலாகக் காசியோ, அயோத்தியோ, மதுராவோதான் இருக்கும். அந்த ராஷ்டிரத்தில் யாருக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் யாருக்கு கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்வோம். இந்து ராஷ்டிரத்தில் பசுக்கொலைகள் நடக்காது. ஜிகாதிகள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்படுவார்கள். நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு ராமர் கோவில் கனவினை நனவாக்கியிருக்கிறார்கள். ராமர் கோவில் வெகு விரைவில் திறக்கப்பட்டுவிடும். நமது அடுத்த வேலைத்திட்டம் காசி மற்றும் மதுரா கோவிலுக்காக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு சண்டையிடத் தயாராக இருக்கவேண்டும். இந்துக்கள் பயப்படக்கூடாது. ஒரு இந்து 10,000 பேருடன் சண்டையிட முடியும். அகண்ட இந்துராஷ்டிரத்தை உருவாக்க வேண்டுமெனில் இந்துக்கள் யாரைக் கண்டும் பயப்படக்கூடாது.” என்று கூற, கூடியிருந்த கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டது.
கடும் மூர்க்கமாக இருந்த கூட்டத்தினரை சில உறுதிமொழிகளை எடுக்கச் செய்தார் ராஜா சிங். அவை முழுக்க இந்துத்துவ வாதிகளின் கனவு இலக்கான இந்துராஷ்டிரத்தினைப் பற்றியதாக இருந்தது. “நான் ராமரின் பெயரால் இந்தியாவை அகண்ட இந்துராஷ்டிரமாக மாற்றுவேன். அதுவரை ஓய்ந்திருக்க மாட்டேன். நமது சாதுக்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவேன்.” என மார்ச் 30, 2023 ராம நவமி நாளன்று டைகர் ராஜா சிங்குடன் ஆயிரக்கணக்கானோர் உறுதி பூண்டனர்.
இது ஒரு சம்பவம் மட்டுமே. இதே ராமநவமி நாளில் மேற்கு வங்காளத்திலும் மகாராஷ்டிரத்திலும் இன்னும் பல மாநிலங்களிலும் இந்துத்துவ வாதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். சுவாமி விவேகானந்த இளைஞர் சேவா சங்கம் மற்றும் பல இந்துத்துவ அமைப்புகள் கையில் ஹாக்கி மட்டைகளுடனும் ஆயுதங்களுடனும் மேற்கு வங்காளத்தின் ஹவுரா வீதிகளில், குறிப்பாக இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் வலம் வந்தனர். நான்கு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் நொறுக்கப்பட்டன. நேற்றைய நிலவரப்படி (மார்ச் 30, 23) ஒருவர் கொல்லப்பட்டார். காவலர் உட்பட 6-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேர் காயமடைந்திருக்கின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் ராம நவமி பேரணியின் போது மசூதியை மையமாகக் கொண்டு கலவரத்தைத் துவங்கினர்; மசூதியின் மதில்களில் காவிக் கொடியைப் பறக்கவிட்டனர்.
அனைத்து கலவரங்களும் மசூதியைச் சுற்றி நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் பேசும்போதுகூட மதுராவையும் காசியையும் ஒட்டிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.
75 ஆண்டுகளுக்கு முன்பாக 1949-ல் இந்திய ராமாயண மகாசபா என்னும் இயக்கத்தினை உருவாக்கி ராமர் சிலையை பாபர் மசூதிக்குள் வைத்து இந்துத்துவம் வளர்வதற்கான பாதையினை உருவாக்கினார் திக்விஜய் நாத். (திக்விஜய் நாத் என்பவர் இன்றைய உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் முன்னோடி ஆவர்) இந்துத்துவ வாதிகளின் பெரும் கனவாக இருந்த பாபர் மசூதி இடிப்பும் அதற்கான சட்ட அங்கீகாரமும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிடைத்தது.
பாபர் மசூதி இடிப்பினை நியாயப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு இஸ்லாமிய அடையாளங்கள் இந்நாட்டில் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. வாரணாசியின் ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி இட்காஹ் (Shahi Idgah) மசூதி, தில்லியின் குதூப் மினார், மத்தியப் பிரதேசத்தின் கமால் உத் தின் மசூதி ஆகிய வழிபாட்டிடங்கள் முன்னொருகாலத்தில் இந்துக் கோயில்களாக இருந்தன என்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றன. தற்போது ராஜா சிங் கூறியிருக்கும் ஷாஹி இட்காஹ் மசூதி (1669-70 இல் தற்போது மசூதியின் அருகிலேயே அமைந்திருக்கும்) கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ராஜா சிங் கூறிய மற்றொன்று காசியில் (வாரணாசி) அமைந்திருக்கும் ஞானவாபி மசூதி. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இம்மசூதிக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனை வழிபட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறி 2021 ஏப்ரலில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்தியாவில் இத்துத்துவமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமும், மத அடையாளங்கள், வழிபாட்டிடங்கள் இடிக்கப்படுவதும் சட்டப்பூர்வமானதாக மாறி பல காலங்களாகிவிட்டன. மத அடிப்படைவாதம் பெரும்பான்மைவாதமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு தளங்களில் இஸ்லாமியர்களதும் சிறுபான்மையினரதும் அடையாளங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதுவும் அதிகாரப் பூர்வமாக. பசு புனிதமும் அதைச் சுற்றி நடத்தப்படும் வன்முறையும் பல மடங்காக அதிகரித்திருக்கின்றன. உடை, திருமணத் தேர்வு, கருத்துச் சுதந்திரம் என அனைத்தும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியர்களை ஒடுக்குமுறை கொண்டும் பொருளாதார ஒதுக்கல்களை நடத்தியும் நகரங்களுக்குள்ளாகவே தனிமைப் படுத்தும் வேலை ஒருபக்கமும், சிஏஏ போன்ற குடியுரிமை சட்டங்களைக் கொண்டுவந்து இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுதல் ஒருபக்கமும் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் பரப்பப்படும் வெறுப்பு பிரச்சார காணொளிகளின் மூலமாக இஸ்லாமிய வெறுப்பு மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாக ஆக்கப்படுகின்றன.
காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் பாபர் மசூதியின் கதவுகள் சட்டப்பூர்வமாக இந்துத்துவ வாதிகளுக்கு திறந்துவிடப்பட்டன. அன்று துவங்கி மசூதிகளும் இஸ்லாமிய மத அடையாளங்களும் ஒவ்வொன்றாக, அதுவும் சட்டப்பூர்வமாகக் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டைகர் ராஜா சிங் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர் எனச் சொல்லப்பட்டாலும் இந்துத்துவ வாதியாக அவர்களது வேலைத்திட்டத்தை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார். அவர் பேசியிருப்பது பாஜகவின் வேலைத்திட்டம். அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆயுதங்களுடன் தயாராக இருங்களென மக்களிடம் அவர் அறைகூவல் விடுக்கிறார். “பாசிசத்தைத் தேர்தலில் வெற்றி பெற்று ஒழித்துக் கட்டிவிட முடியாது. அவர்களை மக்களுடன் சேர்ந்து அணியமாகி போராடிதான் வெற்றிகொள்ளவேண்டும். அதற்கு மக்களை ஒருங்கிணைத்து அரசியல்மயப்படுத்தல் அவசியமாகிறது எனத் தொடர்ந்து மே பதினேழு இயக்கம் கூறி வருகிறது. அதனடிப்படையில் வளர்ந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியம் ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது என்பதனை உணர்வோம்.