திராவிட மாடலா? திமுக மாடலா?

போராடி பெற்ற தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் வகையில், தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில் திமுக அரசு திருத்தம் மேற்கொள்கிறது. இதனையடுத்து, திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோத செயலின் நோக்கத்தை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு கீழே:

தூத்துக்குடி கோரல் மில் போராட்டம் வ.உ.சி. அவர்களால் வழிநடத்தப்பட்டு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை வென்றெடுத்தது. இது நடந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர்கள் தமிழர்கள். பர்மா ஆயில் மில் தொழிலாளர் போராட்டம், B&C கர்நாடிக் மில் போராட்டம் என சென்னை தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பலர் படுகொலையானார்கள். சிங்காரவேலர், திரு.வி.க உள்ளிட்டோரின் கடுமையான ஒருங்கிணைப்பில் 1920-களில் இது நடந்தது. அதன்பின் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டம், மதுரை மில் போராட்டங்கள், கோவை மில் போராட்டங்கள். இவற்றிற்காக போராடியவர்கள் சுட்டுப்படுகொலையானார்கள், தூக்கிலேற்றப்பட்டார்கள். இப்படியாக தொடர் போராட்டங்கள் மூலமும், உலகளாவிய தொழிலாளர் போராட்டம், சிகாகோ முதல் சோவியத்தின் எழுச்சி என தொழிலாளர் இரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளே 8 மணி நேர வேலை, உழைப்பிற்கேற்ற முறையான ஊதியம் மற்றும் இதர உரிமைகள்.

இந்த உரிமைகளை மோடி அரசு நசுக்கி நீக்கும் வகையில் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. கொரோனா இழப்பு, உலகளாவிய முதலாளியம் எதிர்கொள்ளும் லாபவிகித இழப்பு, பெரும் கடன் ஆகியவற்றை ஈடுகட்டும் பொறுப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தினார்கள். நடுத்தர-தொழிலாள வர்க்கம் வேலையற்று போனாலும் வரியும், வங்கிக்கடனும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு தமது வங்கிகளின் ‘நிதி மூலதனத்தை’ காப்பாற்றிக்கொண்டார்கள். இந்நிலையில் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்திற்கும், அதிக வேலைநேரத்திற்கும் உள்ளாக்கினால் முதலாளிகளின் லாபமும், உற்பத்தியும் அதிகரிக்கும் எனும் நோக்கில் மோடி அரசு இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.

இதை எந்த மாநிலமும் (பாஜக ஆளும் மாநிலம் உட்பட) நிறைவேற்றாத நிலையில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அவசர அவசரமாக யாருக்கும் முறையாக தெரிவிக்காமல், சட்டசபையில் விவாதத்தை நடத்தாமல் திமுக அரசு இச்சட்ட திருத்தங்களை நிறைவேற்றி உள்ளது. இதன்படி வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாகவும், சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். தொழிலாளர் நல உரிமைகளுக்காக போராடிய வ.உ.சி., சிங்காரவேலர், திருவிக, சக்கரைச்செட்டியார், தந்தை பெரியார், ஜீவா உள்ளிட்ட பல தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வென்றெடுத்த உரிமைகள். அண்ணல் அம்பேத்கரால் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதை திமுக அரசு தட்டிப் பறிப்பது தொழிலாளர் விரோதமானது, நேர்மையற்றது.

இன்றைய திமுக முதலாளி வர்க்க நலனை உயர்த்தி பிடிக்கும் திமுக என்று மே 17 இயக்கம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. பாட்டாளி திராவிடர் இயக்க சித்தாந்தத்தை சிதைத்து முதலாளித்துவ, தாராளமயம், தனியார்மயத்தை கைக்கொண்டு செயல்படுகிறது என்பதை 2021 பிற்பகுதியில் மே 17 சொன்னது.

திராவிடர் இயக்கம் முன்வைத்த சோசலிச கொள்கைகளை என்றோ திமுக கைவிட்டுவிட்டது. இன்று ஒப்பந்த ஊழியர் முறையை ஊக்குவிக்கிறது, பணி நிரந்தரம் செய்ய மறுக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே வளர்ச்சி என்று காட்டுகிறது. தந்தை பெரியாரின் பாட்டாளி திராவிடம் என்பதை நீதிக்கட்சியின் பண்ணையார்கள் ஒதுக்கித் தள்ளியதையே இந்த மாற்றங்கள் சொல்லுகின்றன. இதன் வெளிப்பாடாகவே கல்விக்கொள்கையில் மாற்றம், தொழிலாளர் சட்டத் திருத்தம், எட்டுவழிச் சாலைக்கு விருப்பம், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை இணைத்தல், இல்லம் தோறும் கல்வி, ஈழ விடுதலை எதிர்ப்பு, தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை கைவிட்டு நிற்பது என பட்டியல் நீள்கிறது.

திமுக அரசு அவசர அவசரமாக யாருக்கும் தெரிவிக்காமல் சில நிமிடத்தில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத மசோதா உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதை அம்பலப்படுத்தி சி.பி.எம்., சி.பி.ஐ., விசிக, மதிமுக, மமக தோழர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், CITU அமைப்பும் பேசியுள்ளன. இந்த தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக அணிதிரள்வது அவசியம். தமிழ்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சியல்ல. ஒரு ட்ரில்லியன் டாலர் GDP எனும் மாயவித்தைகளை காட்டி ஏமாற்றாதே. இந்த GDP வளர்ச்சிகள் என்றுமே அடித்தட்டுமக்களை சென்றடையக்கூடியவை அல்ல.

உலகெங்கும் முதலாளிகளுக்கு மட்டுமே பயனளித்த trickledown economy மாடலை ‘திராவிட மாடல்’ என சொல்லாதீர்கள். இது திமுக மாடல் என்றே அழைக்கவேண்டுமென மே17 இயக்கம் கடந்த 2 வருட காலமாக சொல்லி வருகிறது. உங்களது டில்லி-முதலாளித்துவ சமரசங்களை பெரியார் மீதும் திராவிடர் இயக்கத்தின் மீதும் சுமத்தாதீர். உங்களுக்கும், திராவிடர் இயக்க பெரியாரியலுக்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

இச்சட்டத்தினை கொண்டு வந்த நீங்கள் பெரியாரிஸ்டுகளென்றோ திராவிடர் இயக்கத்தவர் என்றோ வரலாறு அழைக்குமா?

திமுக கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை வன்மையாக மே 17 இயக்கம் கண்டிக்கிறது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு கொண்டுவரும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் 1948-இன் சட்டத்திருத்தத்தை கண்டித்து, அதனை உடனடியாக கைவிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை கீழே:

தமிழ்நாடு அரசே! தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் தொழிலாளர் விரோதமானது! சட்டத்திருத்த முன்வரைவை உடனடியாக கைவிடுக! – மே பதினேழு இயக்கம்

‘தொழிலாளர் நலன் மற்றும் முதலாளிகள் நலன்’ என்பதை முன்மொழிந்து தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் 1948-இல் திருத்தம் செய்ய சட்ட முன்வரைவு ஒன்றை திமுக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சி.வி. கணேசன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 12, 2023 அன்று தாக்கல் செய்தார். போராடி பெற்ற தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் வகையில் இச்சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. திமுக அரசின் இந்த முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தொழிற்சாலைகள் சட்டம் உள்ளிட்ட 13 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து ‘தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் சட்டம் – 2020’ என்கிற சட்டத்தை முதலாளிகள் பயனடையும் வகையில் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த செப்டம்பர் 2020-இல் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாத இந்த சட்டத்தின் பிரிவு 127 – வேலை நேரம் குறித்த சட்ட விதிகளில் விலக்களிக்க மாநில அரசுகளுக்கு உரிமை வழங்குகிறது.

தொழிலாளர்களின் வேலை நேரம் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கக்கூடிய மிக மோசமான திருத்தங்கள் அடங்கிய ஒன்றிய அரசின் முடிவை அனைவரும் உறுதியாக எதிர்க்க வேண்டிய நிலையில், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டம் 1948-ஐ திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு துணிந்திருப்பது. இந்த சட்டத்திருத்தை மேற்கொள்ளும் பாஜக அல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. இச்செயல், தொழிலாளர் நலனுக்காக பாடுபடுவதாக காட்டிக்கொள்ளும் திமுக அரசின் இரட்டை தன்மையை அம்பலப்படுத்துகிறது.

தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவுகள் 51, 52, 54, 55, 56 மற்றும் 59 ஆகியவை வேலை நேரம், கூடுதல் வேலை நேரம் மற்றும் அதற்கான ஊதியம், கூடுதல் வேலை நேரத்தை ஈடுகட்டும் விடுமுறை, பணியின் ஓய்வு நேரம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது. இந்த உரிமைகள் எந்த அரசுகளும் மனமுவந்து தானே அளித்தவைகள் அல்ல. தொழிலாளர் வர்க்கம் காலம் காலமாக தங்கள் போராட்டங்களின் மூலம் இரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள். தற்போது இவற்றிலிருந்து குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்தை திமுக அரசு மேற்கொள்கிறது.

தற்போதைய நிலையில் இந்த சட்டம், ஒரு நாளுக்கு 8 மணி நேரம் என வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் என்கிறது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மேலும் வேலைக்கு நடுவே ஒய்வு, கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் சம்பளம் ஆகிய உரிமைகளை தொழிலாளர்களுக்கு உத்தரவாதப்படுத்துகிறது. பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கு தடையாக இருக்கும் இந்த சட்டப்பிரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு, வாரத்தின் எல்லா நாளும் 12 மணி நேரம் வரை வேலை வாங்கி தொழிலாளர்களிடம் உழைப்பு சுரண்டலை சட்டபூர்வமாக செய்வதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டால், மேலே குறிப்பிட்ட உட்பிரிவுகளில் ஏதேனும் சிலவற்றிலிருந்தோ அல்லது அனைத்து விதிகளிலிருந்தும் மாநில அரசு எந்தவொரு தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழுவிற்கும் விலக்கு அளிக்க முடியும் என்பதுதான் இந்த அரசின் தொழிலாளர் நலன் பற்றிய சிந்தனை குறித்து ஆழமான கேள்வியை எழுப்புகிறது.

வேலை நேரத்தை உயர்த்தி தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை வாங்க அனுமதிக்க வேண்டுமென முதலாளிகள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதலாளிகளின் சங்கங்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில், பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை முன்வைத்து, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் பயனடையும் வகையில், தொழிலாளர்களின் வேலை நேர உரிமையை முதலாளிகளிடம் கையாளிக்கிறது திமுக அரசு. இது தொழிலாளர் நலனுக்கு எதிரான திமுக அரசின் மிக மோசமான நடவடிக்கையாகும்.

சமீபத்தில் தான் பாஜக ஆளும் கர்நாடக மாநில அரசு இதே போன்ற ஒரு சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஒர் உற்பத்தி மாநிலம். தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் பாக்ஸ்கான் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களோடு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு முதலாளிகள் விரும்பும் தொழிலாளர் விரோத சட்டத்திருத்ததை கொண்டு வருவது கண்டனத்துக்குரியது.

திமுக அரசு பதவி ஏற்றப் பின்னர் தான் தொழிலாளர் நலன் துறையின் பெயர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டது. இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாடு என்பதன் உள்ளர்த்தம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது அரசின் இந்த செயல்பாடு. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களால் மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டை கொண்டாடக் கூடிய வேளையில் இச்செயல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலன் விரும்பிகளுக்கும் பேரிடியாக உள்ளது.

மக்கள் நலன் அரசாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் திமுக அரசு தொழிலாளர் விரோத இந்த சட்ட முன்வடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் ஓட்டுகளை பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், திமுக அரசின் கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கக் கூடிய அனைவரும் இந்த சட்ட முன்வடிவை நிராகரிக்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் இந்த அறிக்கையின் வாயிலாக கோரிக்கை வைக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010
21/04/2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »