சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் 126-வது பிறந்தநாள் விழா ‘பராக்ரம் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 23/01/2023 அன்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத், “இந்திய தேசத்தை உயர்ந்த தேசமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், தேசத்தை வல்லரசாக மாற்றும் கனவு இன்னும் நனவாகவில்லை.” என்று பேசினார்.

(படம்: அனிதா போஸ்)
அனிதா போஸ்

முன்னதாக, “ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தமும், நேதாஜியின் கருத்துக்களும் எதிரெதிர் துருவங்கள். இடதுசாரி கருத்துள்ள நேதாஜியின் கொள்கைகளை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் பின்பற்றவில்லை” – நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளைக் கொண்டாட ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகள் அனிதா போஸ் கொடுத்த சம்மட்டியடிதான் மேற்கூறிய வார்த்தைகள்.

இன்று தங்களை தேசபக்தர்கள் என்று காட்டுவதற்காக தேசத்தந்தை காந்தியார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட பல தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகக் காட்டிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ கும்பல்களால் போற்றப்பட்ட சாவர்க்கரின் தலைமையிலான ‘இந்து மகாசபை’ இத்தகைய தலைவர்களுக்கு இழைத்த கொடூரமான துரோகத்தைப் பற்றி இன்று வெகு சிலருக்கே தெரியும். ஏனெனில் இந்த உண்மை வரலாறுகளை மறைத்து தனது தேசபக்தி நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியாவின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளின் ஆதரவைப் பெற முயன்று கொண்டிருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரின் இந்திய தேசிய ராணுவம் (INA) ​​நாட்டின் வடகிழக்கு நோக்கிய தாக்குதலை ஏற்பாடு செய்ய முயன்ற அந்தக் காலகட்டத்தில், தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியவர் சாவர்க்கர்.

1941-இல் பாகல்பூரில் நடந்த இந்து மகாசபையின் 23-வது கூட்டத்தில் உரையாற்றும் போது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், கடற்படை, வான்வழிப் படைகள் மற்றும் பல்வேறு போர்த் தொழிற்சாலைகளில் இந்துக்கள் சேர வேண்டும் என்று உரையாற்றினார் சாவர்க்கர். ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருப்பதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு நல்லது என்று விவரித்த சாவர்க்கர், எந்த அளவிற்கு ஆங்கிலேயர்களுக்கு உதவத் தயாராக இருந்தார் என்பது அவரது பின்வரும் வார்த்தைகளின் மூலம் தெளிவாகத் தெரியும்.

“நாம் (இந்து மகா சபையினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தும் இந்தப் போருக்கு எதிராக இருக்க வேண்டும். நாம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்கள், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஆங்கிலேய இராணுவப் படைகளில் சேர, முடிந்தவரை இந்துக்களைத் தூண்ட வேண்டும்.”

இவ்வாறு இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

இன்று சிறுபான்மை இசுலாமியாரை தேச விரோதிகளாக சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் உண்மை முகம் இதுவே. ஆனால் நேதாஜி ஆங்கிலேயருக்கு எதிரான போரை திட்டமிட்ட போது, முஸ்லீம் லீக் அமைப்பு பிரிட்டிஷ் ராணுவத்தின் எந்த போர் முயற்சிகளிலும் இணைய மறுத்தது குறிப்பிடத்தக்கது.

பாகல்பூரில் நடந்த கூட்டம் மட்டுமல்ல, அதற்கு முன்னர் நடந்த இந்து மகா சபையின் 22-வது கூட்டத்திலும் ஆங்கிலேயருக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர் சாவர்க்கர். அந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து தோற்கக் கூடாது என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறினார். இவ்வாறு ஆங்கிலேயருக்கு துணை நின்று அவர்களுக்கு அடிமைகளாக சேவை செய்வது தான் இந்துக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை தனது உரைகளின் மூலம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி அடிமைத்தனத்தை ஊக்குவித்தார் சாவர்க்கர்.

இந்தியாவை விடுவிக்க நேதாஜி மேற்கொண்ட முயற்சிகளை முற்றிலும் எதிர்த்தவர் சாவர்க்கர். மேலும் அவர் ஆங்கிலேயர் நடத்திய போரை நியாயப்படுத்த பல்வேறு வழிகளைத் தேடினார். இத்தகைய அடிமைத்தனத்தை மானமிக்க மக்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள், அதனால் விமர்சனம் எழக்கூடும் என்று அறிந்திருந்தும், எந்த விமர்சனங்களையும் சாவர்க்கர் கண்டு கொள்ளவில்லை. தொடர்ச்சியாக தனது ஆங்கிலேய எஜமானனுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

அடிமைத்தனத்தின் உச்சமே எஜமானனை அடிக்கடி பாராட்ட வேண்டும் என்பதால், சாவர்க்கர் ஆங்கிலேயரின் போர் வியூகத்தைப் பாராட்டி புகழ்ந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைநோக்குப் பார்வை கொண்டதால் இராணுவமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலைக் கொண்டு வருவதற்கே போரை நடத்துகிறது என்று சாக்குகள் கூறி தனது தேச துரோகத்தை நியாப்படுத்தினார் சாவர்க்கர்.

அந்தக் காலகட்டத்தில் மலேசியா மற்றும் பர்மாவில் ஆங்கிலேயரின் அடிமைத்தளையில் துன்புற்று இருந்த தமிழர்களை திரட்டினார் நேதாஜி. இவ்வகையில் பெரும்பான்மைத் தமிழர்கள் தாமாக விரும்பி அவரின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொண்ட ஒரு படை அன்று உருவானது. அதற்கு போட்டியாக, தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு சாவர்க்கர் மும்முரமாக உதவிக் கொண்டிருந்தார்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ​​சாவர்க்கரின் நேரடி பரிந்துரையின் கீழ் அவரது அமைப்பினர் பலர் ஆங்கிலேய படையில் சேர்ந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் தான் போர் புரிந்த நேரங்களில் எல்லாம் சாவர்க்கருடன் தொடர்பில் இருந்து வந்தது. இதனால் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட நபர்கள், பிரிட்டிஷ் ராணுவத்தில் அதிகாராமிக்க பதிவிகளில் இருந்தனர். அதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் நன்றித் தந்தியும் அனுப்பியுள்ளார்.

BHIDE’S VOLUME எனும் நூலில் இந்த தந்தி விவரங்கள் பின்வருமாறு உள்ளன.

The following Telegram was sent by Barrister V.D. Savarker [sic], the President of the Hindu Mahasabha to (1) General Wavell, the Commander in-Chief; and (2) the Viceroy of India on the 18th instant (July 18, 1941).

“YOUR EXCELLENCY’S ANNOUNCEMENT DEFENCE COMMITTEE WITH ITS PERSONNEL IS WELCOME. HINDUMAHASABHA VIEWS WITH SPECIAL SATISFACTION APPOINTMENT OF MESSERS KALIKAR AND JAMNADAS MEHTA.” [As per the original text.]

ஜப்பான் மற்றும் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு எதிரான ஆங்கிலேயரின் போர் ஆலோசனைக் குழுவில் இந்து மகா சபை உறுப்பினர்களான காளிகர் மற்றும் ஜம்னாதாஸ் மேத்தா ஆகியோரை பணி நியமனம் செய்ததற்கு பகிரங்கமாக ஆங்கிலேயரை வாழ்த்தி இந்த தந்தியை அனுப்பி உள்ளார் சாவர்க்கர்.18 ஜூலை, 1941அன்று ஜெனரல் வேவல் (பிரிட்டிஷ் தலைமை தளபதி) மற்றும் இந்தியாவின் 18வது வைஸ்ராய் ஆகியோருக்கு சாவர்க்கர் அனுப்பிய இந்த தந்தி பின்னாளில் வெளியுலகிற்கு வெளியிடப்பட்டது.

பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்திய சாவர்க்கர், தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இளைஞர் கூட்டங்களில் உரையாற்றினார். இதனால் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பிரிட்டிஷ் ஆயுதப் படையில் சேர்ந்தனர். சாவர்க்கர் சேர்த்த இந்தப்படை தான் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்களை படுகொலை செய்தது.

ஆங்கிலேயரின் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக, பல வாரியங்களை (தற்போது நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் போல்) சாவர்க்கர் உருவாக்கினார். இதற்காக மத்திய வடக்கு இந்து இராணுவமயமாக்கல் வாரியம் டெல்லியில் உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக கணபத் ராய் என்ற வழக்கறிஞர் செயல்பட்டார். மத்திய தெற்கு இந்து இராணுவமயமாக்கல் வாரியம் ( தலைவர் – எல்.பி. போபட்கர்), மகாராஷ்டிரா மாகாண இந்துசபா ( தலைவர் – சதாசிவ் பெத் பூனா), தேசிய பாதுகாப்பு கவுன்சில் அல்லது ஆலோசனைப் போர்க் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் (ஜ்வாலா பிரசாத் ஸ்ரீவஸ்தவ், பாரிஸ்டர் ஜம்னாதாஸ்ஜி மேத்தா, வி.வி. காளிகர்) என மும்பை, நாக்பூர் மற்றும் இந்தியாவெங்கும் பல இடங்களில் இந்து மகா சபை மூலம் ஆங்கிலேயருக்குப் படை திரட்டப்பட்டது. இவ்வாறு படைகளில் சேர்பவர்கள், ஆங்கிலேய இராணுவ கட்டளைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் சாவர்க்கர். இப்படி சாவர்க்கரும் இந்து மகாசபாவும் வெளிப்படையாக பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நின்ற காரணத்தினால்தான், இந்திய தேசிய இராணுவத்தின் (INA) வீரர்கள் தோல்வியை தழுவ நேரிட்டது.

மேலும், ‘இந்து மகா சபையும் பெரும் போரும்’ என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை சாவர்க்கர் முன்மொழிந்தார் என்று பிடேவின் நூல் கூறுகிறது. ராணுவம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்தியாவும் இங்கிலாந்தும் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம்.

இவ்வாறு ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்ட சாவர்க்கரின் துரோகத்தை எதிர்த்து பல முறை பேசியும் எழுதியும் வந்தார் நேதாஜி. மார்ச் 1940-இல், கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் இந்து மகாசபை ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேர்ந்ததை விமர்சித்து எழுதினார். மேலும் ஆகஸ்ட் 1942-இல் அவர் ஆற்றிய ஒரு வானொலி உரையில், சாவர்க்கர் போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பவர்கள் சுதந்திர இந்தியாவில் இல்லாமல் போவார்கள் (non-entities) என்று வெளிப்படையாகவே எச்சரித்தார் நேதாஜி.

இப்படி நேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கரைத்தான் தனது முன்னோடியாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் இந்த வரலாற்று உண்மைகள் பெருமளவில் மறைக்கப்பட்டதற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ்சின் திட்டமிட்ட சதி இருக்கிறது. இந்த உண்மைகளைப் படித்தால் தேச துரோக செயல்களின் மொத்த உருவமாகவே ஆர்எஸ்எஸ் இருப்பது புலப்படும். ஆனால் இந்த தேச துரோக ஆர்எஸ்எஸ்தான், மக்களுக்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய சொல்கிறது. இதே தேச துரோக ஆர்.எஸ்.எஸ். தான் தமிழ் நாட்டில் பேரணி நடத்தி கால் பதித்து விடுவதற்காக நீதிமன்றம் வரை சென்றது. எனவே ஆர்.எஸ்.எஸ். செய்த இந்த வரலாற்று துரோகத்தை மக்களறியச் செய்வதும் இன்றைய காலத்தின் தேவையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »