ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

 கடந்த 2017இல்  உலக நாடுகளைத் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப்  போராட்டம், இந்த நூற்றாண்டின் தன்னெழுச்சிப் போராட்டங்களில் மிக முக்கியமானது. நாட்டு மாடுகளை  ஊக்குவிப்பதிலும் அவற்றைப்  பாதுகாப்பதிலும்  முக்கிய பங்கு வகிக்கும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின்  பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது. ஆனால் இதில்  விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, நீதிமன்றம் மூலம் ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்க விலங்குகள் நல வாரியம்  முயன்றது. இதற்கு எதிர்வினையாக,   லட்சக்கணக்கான தமிழுணர்வு மிக்க இளைஞர்களால், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தமிழர் கடலில் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் பின்  வரலாறாகவும் மாறியது.

(படம்: ஜல்லிக்கட்டுப் போராட்டக்களத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.) 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை (Prevention of cruelty to animals (PCA) amendment)  நிறைவேற்றியது. இந்த PCA சட்டத் திருத்தத்தைத் திருத்தத்தை ரத்து செய்ய, பீட்டா (People for Ethical Treatment of Animals (PETA)), Compassion Unlimited plus action, Federation of Indian Animal Protection Organisation, Animal Equality உள்ளிட்ட சில  அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில்  ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன. கடந்த பிப்ரவரி 2, 2018 அன்று, அரசியலமைப்பின் 29(1) பிரிவின் கீழ்  சல்லிக்கட்டைத் தனது பண்பாட்டு  உரிமையாகத் தமிழ்நாடு  பாதுகாக்க முடியுமா என்பது குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றியது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் 8  அன்று நடைபெற்றது.  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்,  தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு மட்டுமன்றி கர்நாடகா, மராத்தியம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் கம்பாளா மற்றும்  மாட்டு வண்டி பந்தயம் ஆகியவற்றை  எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி அந்த  வாதங்களின் சுருக்கமான தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர்: “சல்லிக்கட்டில்  தேவையற்ற இடர்கள்  ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் புதிய விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  மேலும் சல்லிக்கட்டில்  வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து நிகழ்வுகளும் பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதி செய்கிறார்கள்.”

பீட்டா வழக்கறிஞர்: “2017 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும்  தயாரிக்கப்பட்ட பல அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளோம். இதை  அங்கு நேரில் சென்று  பார்த்தவர்கள் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கைகள் அரசால் எதிர்க்கப்படவில்லை.”

அரசு தரப்பு வழக்கறிஞர்: “அவர்கள் எங்களுக்கு அறிக்கைகளை வழங்கவில்லை”.

பீட்டா வழக்கறிஞர் : “ சல்லிக்கட்டில் நடக்கும் மரணங்களை ஆண்டுதோறும் அறிக்கைகள் ஆவணப்படுத்துகின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்த அறிக்கைகள் மூலம் நிறுவப்பட்ட உண்மைகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது. ‘ கொடூரமான விளையாட்டு’ (Blood Sport) என்றால் என்ன என்பதையும் நாங்கள் வரையறுத்துள்ளோம். ஜல்லிக்கட்டு ஒரு கொடூரமான  விளையாட்டு. (Blood Sport)”

நீதிபதி: இதைக் கொடூரமான  விளையாட்டு (Blood Sport) என்று எப்படி விவரிக்கிறீர்கள்? யாரும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவதில்லை.

பீட்டா வழக்கறிஞர்: கொடூரமான  விளையாட்டு என்பது பொதுவான அர்த்தத்தில் (மட்டையால்) விலங்குக்குக் கொடுமையை ஏற்படுத்துவது. இவை தற்செயலான ஊடக அறிக்கைகள் அல்ல. நம்பகமான ஊடக நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சல்லிக்கட்டில் பார்வையாளர்கள் இறக்கின்றனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்பதை எதிர்ப்பதற்காக, “வெறும் பண்பாடு என்று சொல்வதை மட்டும் பண்பாடாகக் கருத முடியாது. விலங்குகள் கண்ணியத்துடன் வாழவும், கொடூரமாக நடத்தப்படாமல் இருக்கவும் வரையறுக்கப்பட்ட உரிமை உண்டு” என்று வாதிட்டார் பீட்டா வழக்கறிஞர். மேலும் “இந்தத் தீர்ப்பின் மூலம் விலங்குகளுக்குக் கண்ணியம் ஏற்படவில்லை என்று கூறினால், சட்டத்துறைக்கு நாம் பெரும் அநீதி இழைத்து விடுவோம்” என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு மீதான  தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது ஒன்றிய பண்பாட்டு அமைச்சரான மீனாட்சி  லேகி , “ஒரு தேசிய பாரம்பரிய விழாவிற்கு மாற்றாக மற்றொன்றைத்  தேர்வு செய்ய முடியாது ” என்ற மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே, அதற்கு எதிராகச் செய்தி வெளியிட்டவை  “தினமலர்”, “தி இந்து” போன்ற  தமிழின விரோத பத்திரிக்கைகள்.

படம்: ஜல்லிக்கட்டுக்கு எதிராக தி இந்து வெளியிட்ட சில கட்டுரைகள்

இதேபோன்று, தற்போது  பீட்டா போன்ற நிறுவனங்களில் உயர் பதவி  வகிக்கும் பார்ப்பனர்களின் ஆணைக்கிணங்க பணியாற்றும்  ஒன்றிய பாஜக அரசு, தன் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவில்லை.

2017 முதல் இன்று வரை மே 17 இயக்கம் போன்ற தமிழர் நலன் சார்ந்த அமைப்புகளே இன்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றன.

 எந்த வித அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களை ஒன்றிணைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், இன்று பீட்டா போன்ற  அமைப்புகளால்  நீதிமன்றத்தின் தயவை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.   தமிழ்நாடே எதிர்நோக்கியிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பில் பொதிந்திருப்பது நாட்டு மாடுகளின் வாழ்வியல்  மட்டுமல்ல, தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு அரசியலும் கூட.

ஒருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டே மறுபுறம் தனது அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க பாஜக முயல்கிறது. மேலும் பீட்டா அமைப்பிற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது பாஜக.

தமிழர் பண்பாட்டை அழிக்க வேண்டும், ஒற்றை இந்துத்துவ ஆரியக் கலாச்சாரத்தைத் தமிழர்கள் மீது திணிக்க வேண்டும் என அத்தனை முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. தமிழர்களுக்கு எதிரான பாஜகவின் இந்த சதியை முறியடிக்கத் தமிழர்கள் அணியமாவோம். ஒன்றிய அரசிற்கு எதிராகத் தமிழர்கள் உரிமைக் குரலை எழுப்புவோம். மீண்டும் மெரினா புரட்சிக்குத் தயாராவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »