கருத்து சுதந்திரம் கானலாகவும், எதிர் கருத்து உடையவர்களை முடக்கவும் சட்டங்களை வளைத்து சிறையில் அடைப்பது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது. ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் ஒன்றான கருத்து சுதந்திரம் ஒன்றிய பாஜக அரசின் பாசிசத்தை நோக்கிய பாய்ச்சலுக்கு தடைகல்லாக இருப்பதை உணர்ந்த மோடி அரசு, அதனை முடக்கும் வேலையை செய்து வருகிறது. அதேவேளை, பாஜக பொய் செய்திகளை பரப்பி திரிபுகளை வரலாறாக மாற்றும் எதிர் கட்டமைப்பு ஒன்றையும் வைத்துள்ளது. இந்த பொய் செய்திகளை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் பொய்யென நிறுவும் செய்தி நிறுவனங்கள் தான் இந்துத்துவ சக்திகளின் தற்போதைய இலக்கு.
அப்படியான ஒரு செய்தி நிறுவனத்தை நடந்தி வந்த ஊடகவியலாளர் முகம்மது சுபைர் கடந்த ஜூன் 27, 2022 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153A (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்) மற்றும் 295A (மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் புது டில்லி காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
முகம்மது சுபைர் (Mohammed Zubair) ஆல்ட் நியூஸ் (Alt News) செய்தி தளத்தின் இணை நிறுவனர். பொய்யான, அவதூறான செய்திகள் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் இன்றைய சூழலில் அந்த செய்திகளின் உண்மைத் தன்மையை சோதனை செய்து சோதனை முடிவை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடும் பத்திரிக்கையாளர்.
அப்படி என்ன செய்தார் சுபைர்?
1983-ம் ஆண்டு வெளியான ஓர் இந்தி திரைப்படத்தின் காட்சியில் காட்டப்படும் பெயர்ப் பலகையைக் குறிப்பிட்டு ‘இது 2014-க்கு முன் ஹனிமூன் ஹோட்டல், 2014-க்கு பின் இது ஹனுமன் ஹோட்டல்’ என 4 ஆண்டுகளுக்கு முன் சுபைர் டிவிட்டரில் ஒரு பதிவினை இட்டிருந்தார். சுபைரின் இந்த டிவீட் தனது மனதை புண்படுத்திவிட்டதாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட @balajikijaiin என்ற அநாமதேய கணக்கினை (Twitter Fake ID) வைத்திருந்தவர் 4 வருடம் கழித்து புகார் அளித்திருக்கிறார். இந்த டிவீட்டினை அடிப்படையாகக் கொண்டு சுபைர் கைதாகியிருக்கிறார்.
அதேவேளை, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகம்மது நபி பற்றி இழிவாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை அம்பலப்படுத்தியதால், இஸ்லாமிய நாடுகளிடையே இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரும் நெருக்கடி காரணமாக திட்டமிட்டு இவரின் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய டிவிட்டினை சர்ச்சையாக்கி கைது நடவடிக்கை வரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
பாஜக பொறுப்பாளர் நிறுவிய போலிக் கணக்குகளின் வலைப்பின்னல்:
சமூக வலைதளங்களில் ஒரு தனி நபர் தனது தனிப்பட்ட கருத்தை பல நபர்களின் கருத்தைப் போல உருவாக்க முடியும் என்னும் தொழிற்நுட்பத்தை வாய்ப்பாகக் கொண்டு அநாமதேய கணக்காக உருவாக்கப்பட்டது தான் @balajikijaiin என்கிற போலி டிவிட்டர் கணக்கு. இதனைப் பற்றி ஆய்வு செய்து ‘தி வயர்’ (The Wire) பத்திரிக்கை பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தப் போலியான நபர் டிவிட்டரில் சுயவிவரப் படம், டிவீட்கள் மற்றும் பயனர் பெயர் (User name) போன்ற ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டு AltNews நிறுவனர்களை (முகம்மது சுபைர், பிரதிக் சின்ஹா) குறிவைக்க எட்டு டிவிட்டர் கணக்குகளை தொடங்கியதாக ‘தி வயர்’ கூறுகிறது. இந்த எட்டு கணக்குகளில் ஐந்து கணக்குகள் நீக்கப்பட்டாலும், மற்ற இரண்டு கணக்குகள் – @balajikijain மற்றும் @HanumanBhakt101 – பகுப்பாய்வு செய்த நேரத்தில் செயலில் இருந்தன. மேலும் இதனுடன் தொடர்பிலிருந்த 757 கணக்குகளின் வலையமைப்பை உன்னிப்பாக ஆராய்ந்ததில் 283 கணக்குகள் துணைக்குழுவாக “Bot Account” (மென்பொருளால் கையாளப்படும் போலியான தானியங்கி கணக்கு – ஒரு செய்தியை பல மடங்கு எண்ணிக்கையில் தன்னிச்சையாக பரப்பும் தன்மை கொண்டது) போன்ற நம்பகத்தன்மையற்ற, பெயர் தெரியாத தன்மையுடன் கூடிய கணக்கினால் பரப்பப்பட்டன. இந்த டிவிட்டர் போலி கணக்குகள் கடந்த மாதத்தில் நாளின் எல்லா நேரங்களிலும் 500 முறைக்கு மேல் பதிவு செய்துள்ளன. சுபைரின் கைது தொடர்பாக ஹேஷ்டேக்குகளை தானியங்கியான மலிவான Bot, Done quick போன்ற சாதனங்கள் கொண்டு 18,364 கணக்குகளாக பெருக்கி ஒரு தொழில்நுட்ப வலைப்பின்னலாக பெரிய அளவில் #zubairarrest (சுபைரை கைது செய்) என்ற செயல்பாட்டினை செய்திருக்கின்றனர். ஒரு தனிநபரின் எண்ணத்தை பல்லாயிரம் நபர்களின் கருத்தாக தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மடை மாற்றியிருக்கின்றனர். கூட்டு மனசாட்சி என்னும் போலி பிம்பத்தை உருவாக்குவது தான் இந்த கும்பலின் உள்நோக்கம். அதனைத் திறம்பட செய்திருக்கின்றனர்.
முகம்மது சுபைரைக் குறிவைத்த #ArrestZubair, #ArrestMohamedZubair and #ArrestBlasphemerMdZubair போன்ற ஹேஷ்டேக்குகளை இந்த நம்பகத்தன்மையற்ற கணக்குகள் பயன்படுத்தியதை ‘லாஜிக்கலி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. ஜீன் 1 முதல் 30 வரை பகுப்பாய்வு செய்ததில், அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்ட வலதுசாரி சித்தாந்தவாதிகள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த கட்டமாக குறைவான பின்தொடர்பாளர்களைக் கொண்ட கணக்குகளால் Bot போன்ற தானியங்கியான சாதனத்தை பயன்படுத்தி இந்த டிவிட்டர் தளங்களில் அதிகமாக பரப்பப்பட்டிருக்கிறது.
டிவிட்டர் தளத்தில் பலரும் இந்த வழக்கினை கவனத்தில் கொண்ட பிறகு இந்த அநாமதேய கணக்கு தற்காலிமாக முடக்கப்பட்டது. இதனால் இந்த வலைப்பின்னலைக் கண்டறியும் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட Alt News இணை நிறுவனரான பிரதிக் சின்ஹாவின் டிவீட்டையும், அந்த புகாரை மறுடிவீட் செய்த கணக்குகளையும், சுபைர் மீது புகார் செய்யப்பட்ட டிவீட்டையும் பகுப்பாய்வு செய்யத் துவங்கினர். அதில் தான் 757 கணக்குகளைக் கொண்ட ஒரு பட்டியல் அல்ல என்பதையும், பட்டியல்களே 757 என்பதையும் கண்டறிந்தனர். ஒரு பட்டியலில் பல போலிக் கணக்குகளை நிறுவப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியல்கள் அனைத்திலும் இந்த அநாமதேய கணக்கான @balajikijaiin இருப்பதும் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் இந்த போலிக் கணக்கு விகாஷ் அஹிர் என்பவருடையது என்று அவனுடைய இணையதளத்துடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவன் ‘ஹிந்து யுவ வாகினி’ என்கிற யோகி ஆதித்யநாத்தினால் நிறுவப்பட்ட அமைப்பின் மாநில தலைவர், ‘யுவ மோட்சா’ என்கிற அமைப்பின் பாரதிய ஜனதா மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர். அவனுடைய சமூக ஊடக தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் அதிக அளவில் பரப்பப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு டிவிட்டர் செயலியின் பலவிதமான தொழிற்நுட்ப முடிச்சிகளைக் கையாண்டு, டிவிட்டர் ஹேஷ்டாக் மூலம் ஒரு செயலை அதிக எண்ணிக்கையில் பரப்பி, அவற்றை வெகு மக்களின் உளவியலாக சித்தரிக்கும் செயல்பாடுகளை பாஜகவின் இணைய கூலிகள் செய்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு வளர்ப்பு:
ஹனிமூன் ஹோட்டலை அனுமன் ஹோட்டல் என்று சுபைர் டிவிட் செய்ததால் மனம் புண்பட்டுப் போன பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரான விகாஷ் அஹிர் தன்னுடைய டிவிட்டர் கணக்கினில் பதிவிட்ட பதிவுகளெல்லாம் மற்றவர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் மனதினை புண்படுத்தாமல் தான் இருந்ததா என்பதையும் பார்ப்போம்.
சம்புலால் ரீகர் என்ற இந்துத்துவ வெறியன், ஒரு இஸ்லாமிய இளைஞரை அடித்து துன்புறுத்தி உயிருடன் எரித்து கொன்றதை காணொளியாகவும் எடுத்து வெளியிட்டான். இஸ்லாமியரை எரித்த அந்த கொடியவனுக்கு 51000 கொடுத்து உதவி செய்வதாக பதிவிட்டதோடு, அவன் குடும்பத்திற்கு 10 லட்சம் திரட்டி நிதி உதவி செய்யும் முயற்சியும் செய்வதாகவும் காணொளியில் வெளியிட்டான் இந்த விகாஷ் அஹிர். இந்த கேடு கெட்ட செயல் இஸ்லாமியர்கள் மனதுகளை புண்படுத்தும் பட்டியலில் வராதா?
இந்து ராச்சியம் அமைப்பதற்கு முஸ்லீம்களைக் கொல்லவும் தயாராக வேண்டும் என்று சுதர்சன் நியூஸ் என்கிற வட நாட்டு ஊடகத்தின் தலைமை எடிட்டர் உத்திரபிரதேச அமைச்சர் கலந்து கொண்ட இந்து யுவ வாஹினி ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே உரையாற்றினான். இதில் இஸ்லாமியர்கள் மனது புண்படாதா? இந்த இந்து யுவ வாஹினியின் குஜராத் மாநில தலைவர் தான் விகாஷ் அஹிர். இந்த அமைப்பு யோகியின் சேனை என்றும் கூறப்படுகிறது. “பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத் எதிர்ப்பு, மத மாற்ற எதிர்ப்பு” – இவை தான் இந்த அமைப்பின் கொள்கை. மக்களை அச்சுறுத்தி, அடித்து கொன்றாவது தங்களின் இந்த கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது அவர்களின் உறுதி மொழி. இதனால் மற்ற மதத்தவர் மனங்களெல்லாம் புண்படாதா என்று இந்துத்துவ அடிப்படைவாதிகள் புகார் அளிக்கும் நபர்கள் மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கும் காவல் துறையும், உடனே காவலில் வைக்க உத்தரவிடும் நீதிமன்றமும் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
பாஜக உருவாக்கும் செய்திகளில் உண்மைகள் நிறுவ பாடுபடும் பத்திரிக்கையாளரான முகம்மது சுபைரை கைது செய்ய Bot போன்ற மலிவான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வலைப்பின்னலை செயல்படுத்தியிருப்பது பாஜகவின் சாதாரண தொண்டனல்ல. பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோட்சா அமைப்பின் தலைவன். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நெருக்கமான முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவன். ‘தி வயர்’ பத்திரிக்கை இவன் ஒருவனை தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியை நாடி கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறது. இவனைப் போல எத்தனையெத்தனை இணைய அடியாட்கள் செயல்படுகிறார்கள் என்பதை யார் கண்டுபிடிப்பார்கள்? இந்த போலி கணக்குகள் மூலமாக கட்டமைத்த மத வெறுப்புணர்வில், மக்களின் உளவியலை மடை மாற்றி நாயகனாக்கப்பட்ட போலி பிம்பம் தான் மோடி என்பதற்கு இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.
மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக சுபைர் மீது முதல் குற்றப் பத்திரிக்கை (FIR) ஆறு இடங்களில் பதிவு செய்யப்பட்டன. உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் இரண்டு மற்றும் சீதாபூர், லக்கிம்பூர் கெரி, முசாபர்நகர், காஜியாபாத் மற்றும் சந்தௌலி காவல் நிலையத்தில் தலா ஒன்று. இந்த வழக்குகளை விசாரித்து ஜூலை 20 அன்று இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அனைத்து உத்தரபிரதேச குற்றப் பத்திரிக்கைகளையும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டது. “அவர் ட்வீட் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. அவரது பேச்சுரிமையைப் பயன்படுத்துவதை நாம் முன்கூட்டியே தடுக்க முடியாது. அவர் சட்டப்படி பதில் சொல்ல வேண்டும். சாட்சியங்கள் அனைத்தும் பொதுத்தளத்தில் உள்ளன” என்று கூறி பிணை வழங்கியது. சுபைர் 23 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு சட்டப்படி செல்லுபடியாகாது எனத் தெரிந்தும் இத்தனை இடங்களில் வழக்குப் பதிவு செய்து அலைக்கழிப்பு செய்ததிலிருந்தே இந்துத்துவ கும்பலின் நோக்கம் நமக்கு தெளிவாகிறது.
மக்களின் குரலாக உண்மையான பிரச்சனைகளை பேசும் மக்கள் போராளிகளை முடக்கும் வேலையும் ஒரு பக்கம் டிவிட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் வலதுசாரிக் கும்பல்களால் நடக்கிறது. இன்னொரு பக்கம் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வெளியிடும் பத்திரிக்கையாளர்களை, மனித உரிமைப் போராளிகளை கைது செய்வதும் தொடர்கிறது. நாட்டின் அச்சாணியாக செயல்படும் இவர்களை முடக்கி எதிர் கருத்தும் இருக்கக் கூடாது, பாசிச தன்மையுள்ள தங்களின் செயல்பாடுகளும் வெளியே பரவி விடக் கூடாது எனக் கருதும் மோடி அரசு, இந்திய ஒன்றியத்தை பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடிக்கும் வேலையையும், மதச்சார்பின்மையை அழித்து மனித மனங்களில் வெறுப்புகள் சூழ்ந்த இந்து ராச்சியத்தை உருவாக்கும் பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது.
முகம்மது சுபைரின் கைதும், வழக்குப் பதிவுகளின் நோக்கமும் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அடிப்படைவாத கும்பலுக்காக தொழில்நுட்பங்களை மோசமாக பயன்படுத்தும் இணைய கைக்கூலிகள் சமூக வலைதளம் எங்கும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செய்திகளின் உண்மைத் தன்மைகளை பகுத்துப் பார்க்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.