பழங்குடியினரின் பாதுகாவலரா திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஜுலை 24, 2022 அன்று முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 18, 2022 அன்று நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கடந்த ஜுன் 9, 2022 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது .

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜுன் 15 அன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, 27.06.2022 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய யஸ்வந்த் சின்ஹா, மோடி மற்றும் அமித்ஷாவால் ஓரங்கட்டப்பட்டதால், எப்ரல் 21, 2018 அன்று அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் மார்ச் 13, 2021 அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வேட்புமனு தாக்கல்

ஜுன் 21, 2022 அன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து 24 ஜுன் 2022 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரின் முன்னிலையில், கூட்டணி கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து திரௌபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் அதிமுகவை சார்ந்த திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றார்.

1958-ஆம் ஆண்டு ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், பைடாபோசி கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்மு, சந்தல் என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். இளங்கலை பட்டம் பெற்ற பின் தனியார் கல்லுரியில் உதவி பேராசிரியாக பணியை துவங்கிய இவர், பின்னாலில் ஒடிசா அரசின் நீர்வளத் துறையில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார். பிறகு அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, 1997-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, ரைராங்பூர் நகரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில், ரைராங்பூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6, 2002 வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஆகஸ்ட் 6, 2002 முதல் மே 16, 2004 வரை மீன் வளம் மற்றும் விலங்கு வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இரண்டுமுறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும் இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுனர் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பழங்குடி இனத்தை சார்ந்த முதல் நபர் என்ற சொல்லுக்குரியவர்.

பழங்குடி மக்களுடன்

பழங்குடியை சார்ந்த, ஒரு பெண்மணி இத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற ஒற்றை காரணத்தை மேற்கோள் காட்டி அனைத்து ஊடகங்களும் இவரை குறித்த நேர்மறையான கருத்துக்களை மட்டுமே முன்வைத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவதும் மிகப்பெரிய ஆளுமையாக வளர்வதும் வரவேற்க வேண்டிய விடயம். ஆயினும் பழங்குடியை சார்ந்தவர் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் அவரை எற்றுக்கொள்வதென்பது பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணானது. முர்முவை குடியரசுத் தலைவர் பதவிக்காக முன்மொழிந்துள்ள பாசிச பாஜக அரசு பழங்குடியினரையும், அவர்களுக்காக போராடியவர்களையும் எப்படி அடக்குமுறைக்குள்ளாக்கியது என்பதை நாம் நினைக்க வேண்டும்.

சிறையில் உடல்நலம் குன்றிய நிலையில் முறையான சிகிச்சை வழங்காமல் இழுத்தடித்து, கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து போன அருட்தந்தை ஸ்டான்சுவாமியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

ஜார்கண்ட் மாநிலப் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கவும் அடிப்படை தேவைகளுக்காகவும் 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் போராடியவர் ஸ்டான் சுவாமி. கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காக விரட்டியடிக்கப்பட்ட பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். 1947-ஆம் ஆண்டிலிருந்து 2004-ஆம் ஆண்டுவரை சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்களின் 2.5 கோடி ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி அவர்களை வெளியேற்றிய பார்ப்பன பனியா அரசின் அயேக்கியதனத்தை, “Homeless in our own Homeland ” என்ற அறிக்கையின் மூலம் அம்பலபடுத்தியவர்.

ஸ்டான் சுவாமி

அக்டோபர் 8 , 2020 அன்று மாவோயிஸ்டுகளோடு சேர்ந்து பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக எல்கார் பரிஷத் ‘சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 84 வயதான இவர் பார்கின்சன் நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். படிப்படியாக கேட்கும் திறனையும் இழந்து கொண்டிருந்த தருவாயில், சிறையில் நிற்க முடியாமல் நிலைத்தடுமாறி பல முறை கீழே விழுந்துள்ளார். கைநடுக்கம் காரணமாக தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், குடிப்பதற்கு சிப்பர் (உறிஞ்சு குழாய் கொண்ட தண்ணீர் குவளை) வேண்டுமென்று கோரியிருந்ததை கூட மறுத்து அவரை சித்திரவதை செய்தது சிறை நிர்வாகம்.

எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவரை கைது செய்தனரோ அவை அனைத்தும் தொலைதூரத்திலிருந்து, அவருடைய கணிணியில் திருட்டுத் தனமாக பதியப்பட்டன என்பதை ஆர்சனல் கன்சல்டிங் என்கிற நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் ஸ்தம்பிக்க வைக்கும் உண்மைகளை வெளியிட்டன. இவை உறுதி செய்யப்பட்ட பின்னரும், எதையுமே பொருட்படுத்தாமல், அவரின் உடல் நிலையையும், வயதின் மூப்பையும் பற்றிக் கூட சிந்திக்காமல், விசாரணை என்ற பெயரிலே பழங்குடிகள் நலனுக்கான வாழ்க்கையையே அர்ப்பணித்த அவரை பச்சை படுகொலை செய்தது இந்த பாசிச பாஜக அரசு.

இன்று பழங்குடி சமூகத்தைச் சார்ந்த, பெண் தலைமை ஒருவருரை  குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் இவர்கள் பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்றாகிவிடுவார்களா? பழங்குடி இனத்தை சார்ந்தவர் என்பதாலேயே அச்சமுகத்துக்கு அநீதி இழைக்க மாட்டார் என்று எண்ணுவது அறியாமையின் உச்சமல்லவா?

பழங்குடி பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் திரெளபதி முர்மு தன் பதவி காலத்தில் அவர்களுக்ககாக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. மாறாக அம்மக்களுக்கு எதிராகதான் செயல்பட்டு வந்திருக்கிறார். இப்போது, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகளுக்கு எதிராக பாசிச பாஜக அரசு ஏவும் அடக்குமுறைகளை மறைத்திட, முர்மு ஒரு பழங்குடி பெண் என குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி வந்திருந்த போது

ஆகஸ்ட் 13, 2017 அன்று நடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர மசோதா (2017) மற்றும் நிலம் கையகப்படுத்துதல் (2013) சட்டத்திருத்த மசோதா, ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு அப்போது ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013-இல் செய்யப்பட்ட திருத்தங்கள் யாதெனில், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க ஆறு மாத கால அவகாசம் வழங்குவது, மேலும், நீர் வழங்கல், மின்சாரம் கடத்தும் பாதைகள், சாலைகள், பள்ளிகள் போன்ற குறைந்தபட்சம் 10 வகையான திட்டங்களுக்கான சமூக தாக்க மதிப்பீட்டிற்கான (SIA) தேவை நீக்கப்பட்டது.

இச்சட்டம், சுரங்கம் தொழில்களுக்கென, வளர்ச்சியின் பெயரால் பழங்குடிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும், நிலங்களை ஒப்படைக்க ஏற்ப்படுத்திய பாஜகவின் சதித்திட்டமாகும்.

மத சுதந்திர மசோதா (2017)-இன் கீழ், யாரையும் வற்புறுத்தி அல்லது கவர்ச்சியான திட்டங்கள் மூலம் மதமாற்றம் செய்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் மதம் மாறியவர் அட்டவணை சாதி/ அட்டவணை பழங்குடியினர், மைனர் அல்லது பெண்ணாக இருந்தால், அபராதம் தவிர நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மதமாற்றம் என்பது அவரவருடைய சுதந்திரமாகும். ஆனால் இந்துத்துவா அமைப்புகள் இதை ஒரு கருவியாக உபயோகித்து, அதை தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சட்ட திருத்தங்களின் மூலம் அவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்த முயல்வதை தவிர இதன் மூலம் எந்த பயனும் யாருக்கும் கிடையாது. இப்படி கார்பரேட்டுகளின் லாபத்திற்காகவும், இந்துத்துவ அமைப்புகளின் கொள்கைகளுக்காகவும், திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தை ஆதரித்தவர் தான் திரௌபதி முர்மு.

இவருக்கான ஆதரவு பல்வேறு தரப்பிடமிருந்து வந்துக்கொண்டிருக்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் இவருக்கு ஆதரவாக, கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்றை ஆதரிக்கின்றது என்றாலே அது மக்களுக்கு எதிரான ஒன்றாக தான் இருக்கும்.

சிவாலயத்தை சுத்தம் செய்த போது

நன்கு படித்த, அரசாங்க பணியிலும், அரசியலிலும் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், அவர் சனாதன தர்மதை ஏற்று அதன்படி நடப்பவர் என்பதை மிக முக்கியமான தகுதியாக பார்க்க வேண்டும் என்கின்றனர். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு தனது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள சிவாலயத்தை கூட்டி சுத்தம் செய்து, வழிபாடு செய்து, அங்குள்ள நந்தி சிலையை ஆரத்தழுவி வழிபட்ட முறையை சுட்டிக்காட்டி, இவர் தனித்துவம் வாய்ந்தவர் என்றும், இந்திய அரசியலையே மாற்றியமைக்ககூடிய அமைப்பை பெற்றவர் என்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் பிதற்றிக்கொண்டிருக்கிறது.

அறிவையும், அனுபவத்தையும், பதவி காலத்தில் இருந்த போது அவரின் திறமைகளையும் வைத்து அவர் தகுதியானவரா இல்லையா என்று கணக்கிடாமல். வழிபடும் முறையை வைத்தும், பாசிச பாஜக அரசோடு சேர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கும், இந்துத்துவாவிற்க்கும் பணிந்து வேலை செய்ததற்கும் புகழாரம் சூட்டி, குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியான ஒரே நபர் இவர் என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் நாடுகள் உருவாவதற்கு முன்பே எண்ணற்ற பழங்குடிகள் காடு, மலைகளை தங்களின் வாழ்விற்குரியதாக கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய வருகைக்கு பின் இவர்கள் சந்திக்க தொடங்கிய சிக்கல்கள், இன்று மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறதே தவிர தீர்ந்தபாடில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பழங்குடிகளின் அடையாளமும், பண்பாடும் சிதையத் தொடாங்கின. இவர்களின் மொழியையோ, பண்பாட்டையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரே பழங்குடி மூன்று மாநிலங்களின் ஆட்சியமைப்பின் கீழ் வாழும் நிலமைக்கு ஆளாயினர்.

மாற்றம், வளர்ச்சி என்ற பெயரால் தங்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு அவற்றை பெற்றுத்தர போராடியவர்களையும் படுகொலை செய்து, தன்னுடைய இனத்தின் பிரச்சனைகளையும், தேவைகளையும் தெரிந்தும் கூட அவற்றிற்கு தீர்வு காணாமல் அம்மக்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அனுமதித்த ஒருவரை தான் பழங்குடிகளின் அடையாளமாக முன்னிருத்துகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன்

இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில், இந்தியாவின்  குடியரசுத் தலைவர்யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல் கலாம் . இவர் பதவியிலிருந்த காலத்தில் தான் , அவரின் சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவெறியின் உச்சத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளை தமிழிழத்தில் கொத்து கொத்தாக கொன்று குவித்தனர். பதவி ஏற்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் (27-02-2002) குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் இந்துத்துவவாதிகளின் மதவெறியால் தீக்கிரையாக்கப்பட்டனர் . சிறுபான்மை இனத்தை சார்ந்தவர் என்பதால் சிறுபான்மையினருக்கும் , பிறந்த ஊர் என்பதால் அங்கே கொல்லப்பட்ட மக்களுக்கும் , தமிழன் என்பதால் தமிழீழ உறவுகளுக்கும் இவரின் பதவியால் எந்த பயனுமே இல்லை, குறைந்தபட்ச எதிர்ப்பு கூட இல்லை. இவை அனைத்திற்கும் இவரின் பதில் கள்ள மொளனம் மட்டுமே.

”ஆட்டுக்கு தாடியும் , நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்ற பேரறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வியை போல இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »