Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு!

கடந்த 2018இல் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி, 2020இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணியைத் தொடர்ந்து, மே 29, 2022 அன்று மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த செஞ்சட்டை பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

மதுரை காளவாசல் பகுதியில் மாலை4.30 மணியளவில்,  மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

“பாட்டாளி வெல்லட்டும், பாசிசம் ஒழியட்டும்” என்ற பதாகை ஏந்தி மே 17 இயக்கத் தோழர்கள் பேரணியில்  அணிவகுத்துச் சென்றனர்.

அவர்களுடன் பல்வேறு தோழமை இயக்கங்களும் கட்சிகளும் பாசிசத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து  செஞ்சட்டை அணிந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து சென்றதால், தூங்கா நகரான மதுரை அன்று செங்கடல் போல் ஆனது. 

காளவாசலில் தொடங்கிய பேரணி மாநாடு நடைபெறும் பழங்காநத்தம் பகுதியை அடைந்ததும், மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. முதலில்  நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நடைபெற்றது. தொடர்ந்து மகஇக கலைக்குழு மற்றும் தோழர் கோவன் ஆகியோர் புரட்சிப் பாடல்களைப் பாடினர்.

தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன் தலைமையில் தொடங்கி நடந்த மாநாட்டில், தோழர்கள் முனைவர்.தொல்.திருமாவளவன் (விசிக), ஜி.இராமகிருட்டிணன் (மார்க்சிய பொதுவுடமைக் கட்சி), சு.வெங்கடேசன் (மார்க்சிய பொதுவுடமைக் கட்சி), சந்தானம் (இபொக), குமரேசன் (தி.க), அப்துல்சமது (ம.நே.ம.க), நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ), தனியரசு (த.கொ.இ.பேரவை), தியாகு (த. தே.வி.இ), இராஜு (மக்கள் அதிகாரம்), கணகுறிஞ்சி (த.தே.ந), மீ.தா. பாண்டியன் (த.தே.ம.மு), அதியமான் (ஆதித்தமிழர் இயக்கம்), பேராசிரியர் செயராமன் (தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்), செரீப் (த.ம.ஜ.க), க.அன்பரசன் (பு.இ.மு), செல்வமணியன் (த.பொ.க), நிலவன் ( நீரோடை), நிலவழகன் (த.ஒ.வி.இ), அரங்க குணசேகரன் (த.ம.பு.க) ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி), பசும்பொன் பாண்டியன் (ஆதி மக்கள் முன்னேற்றக் கழகம்), வழக்கறிஞர் ப.பா.மோகன், என்றி திபேன் (பீபிள்ஸ் வாட்ச்), இரமணி (சா.ஒ.மு), கிறிஸ்டினா சாமி (சுய ஆட்சி இந்தியா), கே.பாலகிருஷ்ணன் (ஐ.வி.மு), பார்த்திபன் (ஏ.எ.இ) உள்ளிட்டோரும், கூட்டமைப்பின் பொறுப்பாளர் தோழர்கள் கொளத்தூர் மணி (திவிக), கோவை இராமகிருட்டிணன், பொழிலன், வாலாசா வல்லவன், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன் ஆகியோரும் உரையாற்றினர்.

மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தி

மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.

அன்பிற்கினிய தோழர்களே! மதிப்பிற்குரிய தலைவர்களே!

தமிழ்நாட்டின் அரசியலை நாம் தான் முடிவு செய்திருக்கின்றோம். 2018ல் திருச்சியிலே கருப்பு சட்டையோடு களம் கண்டோம்.  நம்மையெல்லாம் சாதியாக, மதமாக, கட்சியாக பிரித்து வைத்து காவி இங்கே வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்ததை, திருச்சியில் கருஞ்சட்டை பேரணியிலே நாம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்ல அவர்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். 

தோழர்களே! தமிழ்நாட்டின் அரசியலை முடிவு செய்வது நம்மை போன்ற இயக்கங்களும் நம்மை போன்ற கட்சிகளும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் தான் துணிந்து எதிர்த்து நிற்கின்றோம். நாம் தான் வழக்குகளுக்கு அஞ்சாமல் வீதியில் இறங்குகின்றோம். நாம் தான் அடக்குமுறைகளைக் கண்டு துவண்டுவிடாமல் திரும்பத்திரும்ப போராட்டக்களத்தில் நிற்கின்றோம். நாம் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம். நாம் தான் இந்திய துணைக்கண்டத்தின் விடிவு காலமாகவும் இருப்போம் என்பதை தமிழ்நாடு இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறது.

 நம் எல்லோரையும் நான்கு வர்ணமாகப் பிரித்தார்கள். இதில் “தலைமை வர்ணம் அவர்களுடையது” என்று கூறினார்கள். மூன்று வர்ணங்கள் சேர்ந்து நான்காவது வர்ணமான காவி வர்ணத்தை மிதித்துத் துவைத்துக் கொண்டு இருக்கின்றோம். கருப்பு வர்ணமோ நீல வர்ணமோ சிவப்பு வர்ணமோ, எந்த வர்ணத்தை எடுத்தால் காவியை ஒழிக்க வேண்டுமோ அந்த வர்ணத்தை எடுத்துக் காவியை ஒழிப்பதற்காக இருக்கின்றோம்.

நல்ல பாம்பு வீட்டிற்குள் நுழைந்து விட்டால், கையில் எது கிடைக்கிறதோ, அதை எடுத்து அந்த பாம்பை விரட்டிவிட வேண்டும், துவைத்து விட வேண்டும். கொன்று விட வேண்டும்.  விட்டுவிடக்கூடாது தோழர்களே!!

இன்று இந்தியாவில் உள்ள காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டிய  ஒரு வடிவத்தை நாம் தான் இந்தியாவிற்குக் கொடுத்து இருக்கின்றோம். இங்கே பெரியாரிய தோழர்களும், அம்பேத்கரிய தோழர்களும், தமிழ்தேசிய தோழர்களும், மார்க்சிய தோழர்களும், இசுலாமிய தோழர்களும், சூழலியல் நண்பர்களும், பெண்ணிய தோழர்களும்  இணைந்து நின்று ஒரு கூட்டணியை கட்டி இருக்கின்றோம். மற்ற மாநிலங்களில் இவர்களை எல்லாம் பிரிக்கின்ற வேலையை  செய்கின்றார்கள். அதனால் தான் மற்ற மாநிலங்களில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டிலே பாரதிய சனதா கட்சி வீழ்த்தப்பட்டதற்கு மிக முக்கியமான காரணமும் வட மாநிலங்களில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றததற்கு மிக முக்கியமான காரணங்களையும் பார்த்தோமென்றால், வடமாநிலங்களில் அம்பேத்கரிய தலித்திய தோழர்களை ஒரு சனநாயக கூட்டணிக்குள் சென்றுவிடக்கூடாது என்று பிரிக்கின்ற வேலையை திறம்பட  செய்து காட்டினார்கள்.

தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை தொடர்ச்சியாக அவர்கள் எடுத்து வந்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் ”நாங்கள் ஒரு சனநாயக கூட்டணியாக இங்கே இருப்போம். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் உருவாக்கிவிட முடியாது” என்று அறுதியிட்டுக் கூறிய காரணத்தினால் தான் இன்று வெற்றி பெற்றிருக்கின்றோம்.

தோழர்களே!! இங்கே நாம் திரண்டு இருப்பது கட்சிக்காரர்களாக அல்ல. நாம் கொள்கைகாரர்களாக திரண்டு இருக்கின்றோம். இதுதான் வித்தியாசம். நம்மை யாரும் பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, சாராயம் கொடுத்து திரட்ட முடியாது. நம்மை கொள்கையால் தான் திரட்ட முடியும். பெரியார் திரட்டி இருக்கின்றார். அம்பேத்கர் திரட்டி இருக்கின்றார். மார்க்ஸ் திரட்டி இருக்கின்றார்.

ஆகவே தோழர்களே, இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 2024ல் தேர்தலில் மட்டுமே பாசக வீழ்த்தப்பட வேண்டிய கட்சியல்ல. தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஆர்எஸ்எஸ் என்பது வேரறுக்கப்பட வேண்டும். அதை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

இறுதியாக ஒன்றைக் கூறி உரையை முடிக்க விரும்புகின்றேன். தந்தை பெரியார், “பொதுவுடைமை வெற்றி பெற வேண்டுமென்றால் பொது உரிமை வெற்றி பெற வேண்டும்” என்று கூறுவார். பொதுவுடைமை பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால்  உரிமை பொதுவாக இருக்க வேண்டும். தனிவுடைமையை ஒழித்து பொதுவுடைமை உருவாக்குவது போல தனி உரிமை ஒழித்து பொது உரிமை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் பொதுவுடைமையைக் காப்பாற்ற முடியாது.

நாம் உடமைகளை பொதுவாக்கிவிடலாம். ஆனால், பார்ப்பனர் “இதிலே எனக்கு உரிமை இருக்கிறது, உனக்கு இதில் உரிமை இல்லை” என்று சொல்லக்கூடிய அந்தத் தனி உரிமையை அழிக்கவில்லை என்றால் பொதுவுடமை வெற்றி பெறாது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள். அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பொதுவுடைமையும் பொது உரிமையும் சேர்ந்து நின்ற மேடையாக இந்த மேடை இருக்கின்றது தோழர்களே!! நாம் வெற்றி பெறுவோம்.

இந்த செம்படைக்கு வரலாற்றில் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அவர்கள் பாசிசத்தை எதிர்த்து போரிட்டவர்கள் மட்டுமல்ல தோழர்களே, பாசிசத்தை அழித்தவர்கள் செம்படையினர் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் பாசிசத்தை எதிர்த்து அழிப்பதற்காக  வந்திருக்கின்றோம். அதை அழித்து முடித்தால்தான் நமது அரசியல் நோக்கம் நிறைவேறும் என்றால் அதை செய்து முடிப்போம்.

அதற்கான உறுதிமொழி எடுக்கக் கூடிய வகையில் இங்கே நாம் திரண்டிருக்கின்றோம். சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் இந்த சனநாயகக் குரலை எழுப்பக்கூடிய தோழர்கள் இங்கே இருக்கின்றார்கள். சட்டமன்றமும் பாராளுமன்றமும் சனநாயக முறையில் இயங்கக் கூடிய பணியை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புரட்சியாளர் ஸ்டாலின் அவர்கள், “ஜெர்மனியில் பாசிஸ்டுகள் வெற்றி பெற்றதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் தோல்வி மட்டும் காரணமல்ல. சமூக சனநாயகவாதிகள் தொழிலாளர் வர்க்கத்தினரை காட்டிக் கொடுத்ததும் காரணம்” என்று கூறுவார். தமிழ்நாட்டிலே சமூக சனநாயக கட்சி கூட்டமைப்பை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்த அந்த கூட்டமைப்பு போராடுகின்ற நம்மை ஆதரித்து, நம்மை ஊக்குவிக்கவில்லை என்றால் பாசிசம் வெற்றி பெறும் என்பதை நாம் இந்த சமயத்தில் தமிழ்நாட்டு அரசுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். ஆகவே தான் கூறுகின்றோம், தமிழ் நாட்டின் அரசியலை முடிவு செய்யக்கூடிய திசைவழி நாம் தான்!

இவ்வாறு தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

மாநாட்டின் தீர்மானங்கள் 

மாநாட்டின் தீர்மானங்களை தோழர்.குடந்தை அரசன் முன்மொழிந்தார். அவை பின்வருமாறு.

 1. ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித்தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசிய இன அடையாள உரிமையின்கீழ்த் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 2. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆளுநர் என்கிற அதிகார வடிவம் இன்றும் தொடர்ந்து கொண்டு மொழித் தேசங்களான மாநிலங்களை அடக்கி ஆள்கிற நடைமுறையை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிருக்கிறது. எனவே, ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை என இம்மாநாடு தீர்மானிக்கிறது. அந்த அதிகார அமைப்பை எதிர்க்கிறது.
 3. தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி  மொழியியல் தொடர்புடைய இயக்ககங்கள், தொல்லியல் தொடர்புடைய துறைகள் என அனைத்து அதிகாரங்களும், அந்தந்தத் துறைகளுக்கான பணியாளர்கள் அமர்த்த அதிகாரங்களும் தமிழக அரசிடமே இருத்தல் வேண்டும்.
 4. நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களுக்குமான (பால் உள்ளிட்ட பொருள்களுக்கு) விலை உறுதிப்பாட்டை (நிர்ணயத்தை)யும் தமிழக உழவர்களின் முழு ஒப்புதலோடு தமிழ்நாடு அரசே செய்தல் வேண்டும்.
 5. தமிழ்நாட்டில் இயங்கும் அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறைகளின் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் தெரியாதவர்களைப் பணியில் அமர்த்தவே கூடாது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அனைத்து  நிறுவனங்களிலும், தனியார்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். தமிழ் தெரியாத யவரையும் பணியில் அமர்த்தக்கூடாது. அதேபோல், தமிழ்நாடு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் வேலைவாய்ப்புகள் அனைத்திலும் தமிழ்வழி படித்தவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும். தமிழ் தெரியாதவர் தமிழர்களாக இருந்தாலும்கூட இடம் அளிக்கக்கூடாது.
 6. தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம் (எல். ஐ.சி) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அம்பானி, அதானி உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து வரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தனியாருக்குத் தாரை வளர்க்கப்படும் எல்.ஐ.சி, தொடர்வண்டித்துறை, வானூர்தி, கப்பல் போக்குவரத்து அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஆளுகைக்குள்ளாகவே இயங்குதல் வேண்டும்.
 7. தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை, விற்பனை வரிகள், வருமான வரிகள், தொழில் வரிகள் உள்ளிட்ட எந்த வரிகளானாலும் அவற்றை நீக்குவதும், அளவிடுவதும், பெறுவதுமான உரிமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கே இருத்தல் வேண்டும்.
 8. தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகத் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படியானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அதற்கென அது குறித்த உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்துகொள்கிற வகையில் அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
 9. அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக்காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.
 10.  தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு, டாட்டா உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளைப் படிப்படியாக நிறுத்தி, அவற்றைத் தமிழக அரசே தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் நடத்திட முன் வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்துகிற மீத்தேன், ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிச் சட்டமியற்றி தடுத்து நிறுத்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 1. சமூக நீதியில் அரசும் மக்களும் கவனம் செலுத்துவது சிறப்புடையது போலவே சமஅறவுணர்வுடன் முழுநலன் சார்ந்த தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த பத்தொன்பது தொழிலாளர் உரிமைச் சட்டங்களை நான்காகக் குறைத்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது இந்தியப் பாசிச கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு.  அவ்வகையில் ஒராண்டுக்கும் மேற்பட்ட பயிற்சித் தொழிலாளர்கள் அனைவரையும் நிலைப்படுத்திட வேண்டும். தொழிலாளர்களை நிலைப்படுத்தாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 1.  சென்னை உயர்நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலேயே அமைந்திடும் வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உச்ச நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழியாகிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்றவும் வேண்டுமென இம்மாநாடு வலியறுத்துகிறது. 
 2.  தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ள, நுழைய உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெருமுதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க வழிவிடக்கூடாது என இம்மாநாடு கட்டாயப்படுத்துகிறது. அதேபோல், வணிகர்களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து வரிகளையும் தமிழக அளவில் மறுத்திட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
 3.  நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வழிப்பறிக் கொள்ளையர்கள் போல  இந்திய அரசு, எடுபிடிகளையும், அடியாட்களையும் வைத்துக் கொண்டு சுங்கச்சாவடிகள் அமைத்து வெகுமக்களிடம் வரிகள் பிடுங்கிக் கொண்டிருப்பதை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமாய் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
 4.  (செயல் தீர்மானம்) 
  நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோல்), சேலம் இரும்பு உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கனிமவளங்கள், கடல் வளங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கே சொந்தமான நிலையில் தமிழ்நாட்டுக் கனிமவளங்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் சூறையாடிக் கொள்ளையடித்துச் செல்லும் இந்திய அரசின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் துறைகளின் அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாட்டு அரசிடமே இருத்தல் வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசிடம் அவ்வாறு அந்தத் துறைகளிலிருந்துக் கொள்ளையடித்ததைத் திருப்பித் தருவதுடன், தமிழ்நாடட்டிடம் கையளிக்காது தொடர்ந்து இந்திய அரசு கொள்ளையடித்துக் கொண்டு போகுமானால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், நரிமணம் கன்னெய் (பெட்ரோல்)  நிறுவனம், சேலம் இரும்பாலை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் முன்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் திரண்டு மிகப்பெரும் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என இம்மாநாடு அறிவிக்கிறது.

மாநாட்டில் தோழர் பொழிலன் அவர்கள் ஒருங்கிணைத்து தொகுத்த ‘வீழட்டும் பார்ப்பனியம், சாதியம், முதலாளியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை தோழர் குடந்தை அரசன் வெளியிட, தோழர்கள் இளமாறன், முனைவர் முத்தமிழ், தபசி குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இடதுசாரி தோழர்களுக்கு ஒற்றை எதிரி பாசிச பாசக என்ற அறைகூவலுடன், தொடர்ச்சியாக அதற்கு துணை நிற்கும் பார்ப்பனியம் மற்றும் அம்பானி, அதானி போன்ற பனியா முதலாளித்துவத்தை வீழ்த்திடும் நோக்கோடு  புரட்சிகரமாக மதுரை செஞ்சட்டைப் பேரணி நடந்து முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!