ஆங்கிலேய அரசின் விசுவாசியாக சிறை மீண்ட சாவர்க்கர்

நேதாஜியின் இந்திய இராணுவத்தை வீழ்த்த இந்துத்துவ படைகளை ஆங்கிலேய படைகளுடன் இணைத்த சாவர்க்கர்.

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு ஆயுதமேந்தியும், ஆயுதமேந்தாமலும் போராடிய பலரின்  ஈடற்ற, தன்னலமற்ற தியாகங்களால் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. உயிரினும் மேலாக இந்திய விடுதலையை  நேசித்து  தன்  இன்னுயிரையும் ஈந்த  தலைவர்களை புறந்தள்ளி இன்று இந்துத்துவ அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ் கும்பல்களால் தலைசிறந்த தேசபக்தர் எனவும், மிக சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் எனவும் கொண்டாடப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனும் சாவர்க்கர் முன் நிறுத்தப்படுகிறார். இந்திய விடுதலைப்  போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை விரட்ட போராடிய போராளிகள்  மீதுமோடி, அரசின் கைப்பாவையாக மாறி போராட்ட திசைவழியையே மாற்றி, சாவர்க்கர்  விளைவித்த கடுமையான  நெருக்கடிகளும், கொடூரமான இன்னல்களும் பலரும் அறியாமல் மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளாகும். இன்று நச்சுமரமாய் கிளைபரப்பி வளர்ந்து கொண்டிருக்கும் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் சிந்தனை வித்து  சாவர்க்கர்  விதைத்ததே ஆகும்.

நேதாஜிக்கு செய்த  துரோகமும், இந்துத்துவ அடிப்படைவாதத்தின் துவக்கமும்
இந்திய தேசிய ராணுவம் என்னும் பெரும் படையைக் கட்டியெழுப்பி பிரிட்டிஷ் படைகளை  எதிர்த்து  நின்ற சுபாஷ் சந்திர போசினை இப்பொழுது இந்த அடிப்படைவாத  கும்பல் புகழத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் உலகப் போரின் பொழுது சுபாஷ் சந்திரபோசுக்கு இந்துத்துவ படைகளும் அதனை தலைமையேற்று வழிநடத்திய சாவர்க்கரும் செய்த துரோகங்கள் வரலாற்றில் மன்னிக்க முடியாதவை.      

ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி உருவாக்கிய இந்திய இராணுவ படை.

ஒருபுறம் சுபாஷ் சந்திர போஸ் இந்தியா விடுதலை பெற ஜெர்மன், ஜப்பானிய படைகளின்  உதவிகளைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்க மறுபுறம் சாவர்க்கர்  பிரிட்டிஷ்  காலனிய எஜமானர்களுக்கு சேவகராக இருந்து இந்திய தேசிய ராணுவத்தை முறியடிக்க மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

1941இல் பகல்பூரில் நடந்த இந்து மகாசபையின் 23 ஆவது அமர்வில் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் உள்ள இந்து மகாசபை கிளைகளும் இந்துக்களைத் தூண்டுவதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் இராணுவம், கடற்படை மற்றும் போர்த்தளவாட தயாரிப்புகளில் இணைவதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என்று  உரையாற்றுகிறார். இந்து மகாசபை குறிப்பாக வங்காளம், அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களைத் தூண்டி ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மக்களை வெள்ளம் போல் திரட்டி பிரிட்டிஷ் படைகளில் சேர்க்கும் வழிகளில் ஈடுபட வேண்டும். நமக்கு வாய்த்த இன்றைய சூழலுக்கு ஏற்ப வலிமையாகவும், நமக்கு நன்மை பயக்கும் வகையாகவும்  இந்து படைகளால் கட்டமைக்கப்படும் இந்து தேசம் சக்தி வாய்ந்ததாகவும், ஒப்புமையின்றியும் போருக்குப் பிறகும் உதவும் என்பதால் சந்தேகத்திற்கிடமின்றி பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். இதனால் போருக்குப் பின்பான சூழலிலும் இந்துக்களுக்கு எதிரான உள்நாட்டுப்போர், அரசியலமைப்பு நெருக்கடி, ஆயுதப்புரட்சி போருக்கு பின்பான சூழல்களில் உருவானாலும் கூட சமாளிக்க உதவும்” என்று பேசுகிறார்.

     மதசார்பற்ற தன்மையை  எந்த நிலையிலும் இந்தியாவில் தோன்றாமலிருக்க இந்துக்கள் மட்டுமான ஒரு படையைக் கட்டி எழுப்பி மற்ற மதத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக உருவாக்கும் சூழ்ச்சியின்  ஒருவகையினை  இந்துமகாசபையின் மூலம்  பரவலாக உருவாக எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவுகளே இவையெல்லாம். இந்தப் போரினை வாய்ப்பாக பயன்படுத்தி  இராணுவமயமாக்கலிலும், தொழிற்மயமாக்கலிலும் நமது இந்து மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

   இவ்வாறு சுபாஷ் சந்திரபோஸ் மதசார்பற்ற, ஜனநாயகத் தன்மை நிறைந்த  இந்திய விடுதலைக்கு பாடுபட்டு கொண்டிருக்க; சாவர்க்கர் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவி செய்ய ஒரு இந்து படையைக் கட்டமைக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவை இந்திய தேசிய ராணுவத்தின் வடகிழக்குப் படைகளை  அழித்தன. பிரிட்டிஷ் ஆயுதப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்யும் பணிகளில் சில ஆண்டுகள் தீவிரமாக இருந்தார். பிரிட்டிஷ்  படைகளில் இந்துக்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக “உடனடி வேலை திட்டம்” என்கிற  செயல் திட்டத்தை உருவாக்கினார். இந்த முயற்சிகள் மூலம் பிரிட்டிஷ் படையில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் இந்துக்கள் சேர்க்கப்பட்டனர். 

“பிரிட்டிஷாருடனான  இந்த ஒத்துழைப்பை நம் நாட்டிற்கு லாபகரமானதாக மாற்றுவது இன்றைய சூழலில் சாத்தியமாகும். அரசுடன் ஒத்துழைக்காத  போருக்கு எதிரான பாசாங்குடன் அகிம்சை என்பவர்கள் சுய ஏமாற்றுதல் மற்றும் சுய மனநிறைவு போக்குடன் செயல்படுவார்கள்’ என்று அன்றைய அமைதி வழியில்  போரிட்டவர்களுடன் இனணயக்கூடாத ஒரு  கருத்துருவாக்கத்தையும் ஊட்டுகிறார். மத்திய வடக்கு இந்து ராணுவ மயமாக்கல் வாரியம், மத்திய தெற்கு இந்து ராணுவ மயமாக்கல் வாரியம் என்று வாரியங்கள் நிறுவி பிரிட்டிஷாருடன் நேரடி தொடர்பு கொள்ளும் வகையில் பிரிட்டிஷ் படைகளில் சேரும் இந்துக்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய கட்டமைக்கிறார்.

     பிரிட்டிஷ் படைகளில் சேரும் இந்துக்கள் ராணுவ ஒழுங்கிற்கு கீழ்ப்படிந்தவர்களாக, கட்டுப்பட்டவர்களாக இல்லாமலிருப்பது இந்துக்களின் கவுரவத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்கிறார். ஆனால், காலனிய படைகளில் சேர்வதே எந்த  தேசபக்தி, சுயமரியாதை கொண்ட இந்தியனுக்கும் அவமானம் என்பதை உணர முடியாதவராக இருந்திருக்கிறார்.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கூட்டமைப்பான  “முஸ்லீம் லீக்” கூட யுத்த முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்காத போதும், முன்முனைப்புடன் சென்று பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பு குழுவில் தனது சபையினரை சேர வைத்து, இந்திய மக்களின் பிரிட்டிஷ் எதிர்ப்பு மனநிலையை துச்சமாக மதித்து அனைத்தையும் செய்திருக்கிறார். இத்தகைய அணுகுமுறையினால் மக்களுக்கு தோன்றும் மனக் கசப்பையும், வெறுப்பையும் கூட புறந்தள்ளி நாம் அரசாங்கத்திடம் கைக்கோர்ப்பது இன்றியமையாதது என்கிறார்.

    பிரிட்டிஷ் படையுடன் இணைந்து போரில் பங்கேற்று இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களை கொல்லக் காரணமானது சாவர்க்கரும், இந்துமகாசபையும் சுபாஷ் சந்திர போசுக்கு செய்த மிகப்பெரும் துரோகம் ஆகும். இந்துராஷ்டிரம், இந்துத்துவம், சனாதனம்  என மூன்று குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவமயமாக்கவும், அதை  வைத்து தேசியவாதம் உருவாக்கி ஜெர்மானிய நாசி படையின் குறிக்கோளான “ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவன்” என்ற இலக்கை அடைய பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இந்து படைகளை கட்டமைக்கப்பட்டது இந்துத்துவ அடிப்படைவாதத்தின் முதல் துவக்கம்.

இஸ்லாமிய,கிறிஸ்துவ மதங்களின் மீதான வெறுப்புணர்வைக் கட்டமைத்தல்
1894-95 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்து முஸ்லீம்  கலவரத்தின் விளைவாக பள்ளிப் பருவத்திலேயே பயிலும் மாணவர்களுடன் இணைந்து மசூதிகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதை பின்நாட்களில் குறிப்பிடுகையில் “இதயம் கூறியபடி மசூதிகளை அழித்து அங்கு கொடியேற்றி துணிவை வெளிப்படுத்தினோம்” என்று கூறுகிறார். சிறுவயதிலேயே ஆழமாக பதிய வைக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பை தன்  உணர்வில்  சுமந்து கொண்டே திரிந்திருக்கிறார். சாவர்க்கார் 1909 ஆம் ஆண்டு எழுதிய ‘வார் ஆஃப் இண்டிபெண்டன்ஸ் ஆப் 1857’ என்ற புத்தகத்தில், ‘முகம்மதியர்களும், இந்துக்களும் தங்கள் பழைய மத விரோதங்களை மறந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக இணைய வேண்டும்’ என்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம், இந்து மத விதிகளுக்குள் உள்புக ஏற்றவாறு உருவ வழிபாட்டுக்கு எதிரான சட்டம் என அனைத்தும் ஆத்திரம் கொள்ளச் செய்ய சாவர்க்கர் தனது புத்தகத்தில்,  ‘இந்த அரசு இந்துக்கள், முகம்மதியர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான சட்டங்களை  இயற்றியும், ரயில் நிலையங்களை கட்டமைத்து , ரயில் வண்டிகளை தயாரித்து இந்துக்களின் சாதி அமைப்பை புண்படுத்துவதாகவும், அதிகமான நிதி உதவி அளித்து பெரிய மிஷினரிப் பள்ளிகளை உருவாக்கி இந்தியர்கள் அனைவரையும் கிருத்துவமயமாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றும் எழுதுகிறார்.

முதன்மை இலக்காக  சிப்பாய்களுக்கு பல சலுகைகளை வழங்கி கிருத்துவ மத மாற்றத்திற்கு ஊக்கப்படுத்தி மற்றவர்களையும்  கிறித்துவராக்கும் வேலையை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்கிறது என்ற ஆத்திரத்துடன் ‘ஒவ்வொரு தேவாலயத்தையும் உடனடியாக அழித்து, சிலுவைகளை நொறுக்கி, ஒவ்வொரு கிறிஸ்துவரையும்  வெட்ட வேண்டும்’ என்று  புரட்சியாளராக முழக்கமிட்டதாக எழுத்தாளர் ஜோதிர்மய சர்மா குறிப்பிடுகிறார். இந்த அளவுக்கு கிருத்துவ மத வெறுப்புடன் இருந்தவர்தான் சிறைவாசத்திற்கு பிறகு பிரிட்டிஷ் அரசின் ஆதரவாளராக, விசுவாசியாக மாறினார். அரசியல் நாணயமற்று, நாணமற்று விளங்கியவரைத் தான் வீரசாவர்க்கர் என்று  இந்து அடிப்படைவாத ஆர்எஸ்எஸ் கும்பல்கள் அழைக்கின்றன.

            கிறித்துவர்களோ, இஸ்லாமியர்களோ தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தாய் நிலத்தை தான் புனிதமாக கருதுவார்களேயொழிய  தாங்கள் இந்தியாவில் வாழ்வதினால் இந்தியாவின் நலனை பெரிதாக  எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவில் வசிப்பதனால் ஒரு முகம்மதுவை இந்து என்று கூற முடியுமா? என்றெல்லாம் எழுதியும் பேசியும் இஸ்லாமிய வெறுப்புணர்வை இந்து மக்களின் மனங்களில் பதிய வைக்கும் கருத்துருவாக்கத்தை திறம்பட செய்கிறார். 

சாவர்க்கர் சிறைபட்டதும், ஆங்கில அரசின் விசுவாசியாக சிறை மீண்டதும்
இந்தியாவில் அபினவ் பிந்த்ரா என்ற அமைப்பையும், படிக்கச் சென்ற இங்கிலாந்தில்  இந்திய சுதந்திர கழகம் (Free India Society)  என்ற அமைப்பையும் உருவாக்கி பிரிட்டிஷாரை எதிர்க்க ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டுகள் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்துடன்  சாவர்க்கரும் அவரது சகோதரர்களும் இயங்கினார்கள். சாவர்க்கரின் சகோதரர் பாபுதேவை பிரிட்டிஷார் தேச துரோக சட்டத்தில் கைது செய்ததற்கு பழிவாங்க நாசிக் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.எம்.டி ஜேக் ஜான்சனை கொலை செய்ய திட்டம் தீட்டிய அபினவ் பாரத் அமைப்பு உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வினியோகம் செய்த குற்றத்திற்காக சாவர்க்கர் சிறைப்படுத்தப்பட்டார். 1911ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானில் இருந்த செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார்.

          “நல்ல தொப்பிக்காரர்” என்று உள்ளூர் மக்கள் புகழ்ந்த, உள்ளுர்  கலாச்சார பண்பாட்டை விரும்பிய, இரக்கமுள்ளவராக  விளங்கிய, வரலாற்று பண்பாட்டு ஆய்வில் ஆர்வம் கொண்டு இந்திய வரலாற்றை ஆய்வு செய்து  புத்தகம் எழுதிய, சமஸ்கிருதம் தெரிந்த ஜான்சன் கொலை செய்யப்பட்டதன் பின்னணி வெறும் பழிவாங்கல் மட்டும் தானா? அல்லது, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என இந்துத்துவத்தின் மண்டிக்கிடந்த மூடத்தனங்களை தனது புத்தகத்தில் விரிவாக ஆய்வு செய்ததா? என்பது சாவர்க்கரின் இந்துத்துவ அடிப்படைவாத பின்னணியை  அறிந்த  அவரவர்  அறிவின்பாற்பட்டது.

          ‘நாம் பிரிட்டிஷ் அரசையோ அவர்களின் சட்டங்களையோ குறை சொல்வதை நிறுத்த வேண்டும். நமது இயக்கத்தின் நோக்கம் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் படைத்ததாக மாற வேண்டும்’ என்று முழங்கியவர் தான் சிறைவாசத்தால் ஆங்கில அரசின் விசுவாசியாகி அவர்கள் சட்டத்தின் கீழ்ப்படிதலுள்ள வழக்கறிஞராக மாற்றம் பெற்று விடுதலையானார்.

மன்னிப்புகளால் சறுக்கிய  புரட்சியாளர் பிம்பம்
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய புரட்சியாளர் என்று அடையாளம் காணப்பட்ட சாவர்க்கரின் உண்மை முகத்தை அவர் எழுதிய கருணை மனுக்களால் (மன்னிப்பு கடிதங்களால்) அறியலாம். சாவர்க்கர் கடுமையான சிறைக் கொடுமைகளும், உளவியல் தாக்குதல்களும் சிறைவாசத்தால் அனுபவித்ததாகவும், விடுதலை பெற்று நாட்டு விடுதலையில் பங்காற்ற வியூகத்திற்காக எழுதிய கடிதங்களே தவிர தனது விடுதலைக்கானவை அல்ல என்று இந்துத்துவவாதிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவரின் கருணை மனுவான மன்னிப்பு கடிதங்களை வாசிப்பவர்கள்  எவரும்   இதனை ஏற்கமாட்டார்கள்.

         1911இல் சிறையில் அடைக்கப்பட்ட சில மாதத்திற்குள் அரசிற்கு முதல் மன்னிப்பு கடிதம் எழுதினார். அக்கடிதம் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 1913ஆம் ஆண்டு மீண்டும் எழுதுகிறார். சிறைக்காவலர்கள் சிறையில் தன்னுடன் கைது செய்தவர்களை நடத்தும் போக்கையும் தன்னை நடத்தும் போக்கையும் ஒப்பிட்டு எழுதுகிறார். தன்னுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் ‘டி’ குற்றவாளி பட்டியலில் வகைப்படுத்தப்படாத போதும் தன்னை மட்டும் அந்தப் பிரிவில் வகைப்படுத்தியதாகவும், தான் மட்டும் தனிமைச் சிறையில் இருக்க வேண்டியிருந்ததாகவும், தன்னுடன் வந்த மற்றவர்கள் ஆறு மாதங்களில் விடுவிக்கப்பட்டாலும் தான் விடுவிக்கப்படவில்லை என்றும் புகார் கூறுகிறார்.

         அவரின் அபினவ் பாரத் இயக்கத்திலிருந்த இளைஞர்கள் இருவர், இயக்கம் எடுத்த முடிவிற்காக இரு ஆங்கில அலுவலர்களை சுட்டுக் கொன்று எவரையும் காட்டிக் கொடுக்காமல் தூக்குத் தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்த வீரசாவர்க்கர் தன்னுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை ஒப்பிட்டு பேசுகிறார். இவரைத் தான் பிதாமகர் என்று ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தூக்கிப் பிடிக்கின்றன.

 “என்னுடன் இருக்கும் பயங்கர குற்றவாளிகள் அனுபவிக்கும் சலுகைகள் எனக்கு மறுக்கப்படும் பொழுது தார்மீக பலத்தை நான் எப்படி பெற முடியும். ஆங்கில அரசு கருணையுடன் என்னை விடுவித்தால் அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன், அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடப்பேன். மாட்சிமை பொருந்திய நீங்கள் கருணையுடன் நடந்துகொள்ள  வேண்டும். இந்த ஊதாரி மகனுக்கு தந்தையைப் போன்ற அரசே கருணை காட்டவில்லை என்றால் வேறு போக்கிடம் ஏது?” இந்த  வரிகளெல்லாம் எந்த சுதந்திரப் போராட்ட புரட்சியாளரும்  நினைத்திருக்கக் கூட முடியாதவை.

1920ல் “வீர” சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரி எழுதிய கடிதம்.

1920 மார்ச் 30 அன்று எழுதிய நான்காவது கருணை மனுவில், “என்னுடனிருந்தும், என் சகோதரனிடமிருந்தும் மேலும் ஒப்புதல் அரசிற்கு தேவைப்பட்டால், அரசு சொல்லும் காலம் வரை எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். மாநில பாதுகாப்புக்கு என்று எந்த நிபந்தனைகள் விதித்தாலும் நானும் என் சகோதரனும் மகிழ்வாக ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஒரு ஒப்புதல் பிரகடனத்தையே ஆங்கில அரசிற்கு தெரிவிக்கிறார்.

பகத் சிங் மற்றும் நேதாஜி

     “நாங்கள் போர்க் கைதிகள். அதனால் போர்க்கைதிகளை சுட்டுக் கொல்வதைப் போல எங்களையும் கொல்லவேண்டும் என்று இராணுவத் துறைக்கு ஆணையிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்”. இவை, உண்மையான புரட்சியாளராக, ஆங்கில அரசின் அனுதாபத்தை நாடாமல் தீரத்துடன் வாழ்ந்து மடிந்த பகத்சிங்கின் புரட்சிகர வரிகள்.

        தொடர்ச்சியான ஆறு மன்னிப்பு கடிதங்களுக்கு பிறகு பத்தாண்டுகள் கழித்து சாவர்க்கரும், அவரது சகோதரரும் 1921ல் ரத்தினகிரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர். எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். இந்த நிபந்தனை 1937 வரை தொடர்ந்தது..

முஸ்லீம் லீக் மற்றும் பிரிட்டிஷ்  அரசுடனான கூட்டமைப்பு
சிறைவாசத்திற்கு பிறகு ஆங்கிலேய அரசின் நம்பிக்கைக்குரியவராக மாறியதில் கூட வியப்பில்லை. ஆனால் சிறுவயதிலிருந்தே முஸ்லிம்களின் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்ட சாவர்க்கர், முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டமைப்பு அமைத்துக் கொண்டது பலரையும் வியக்க வைத்தது.

            “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கைது  செய்யப்பட்டிருக்கும் பொழுது இந்துமகாசபை, முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.  சிந்து மட்டும் பெங்கால் மாகாண  அரசுகளின் ஆட்சி தொடர முஸ்லிம் லீக்குடன் கைக்கோர்த்தார் சாவர்க்கர்.  முஸ்லிம்கள் இந்தியாவை ஒருபொழுதும்  புனித நிலமாக கருத மாட்டார்கள் என்றும், அவர்கள் எப்பொழுதும்  இந்திய தேசியவாதிகள் ஆகமுடியாது என்றும் கூறிய அதே சாவர்க்கர் தான்  முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தார்.

         1943 சிந்து சட்டசபையில் பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை தீர்மானமாகக் கொண்டு வந்த போதும் இந்துமகாசபையின் அமைச்சர்கள் தொடர்ந்து கூட்டமைப்பில் தான் இருந்தார்கள். இந்தப் பிரிவினை கோரிக்கை எழுவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களும், முஸ்லிம்களும் வேறுபட்ட தேசத்தவர்கள் என்று இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்தவர் சாவர்க்கர்.

        இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பொழுது பாகிஸ்தான் பிரிவினைக்கு மகாத்மா காந்தியே காரணம் என்று குற்றம் சுமத்தியவர் தான் இந்த சாவர்க்கர். இந்தப் பழியால் காந்தியிடம் மிகுந்த பற்று வைத்திருந்த தேசபக்தி உடையவர்கள்  பலரின்  சீற்றத்திற்கு ஆளானார் காந்தி. காந்தியைக் கொலை செய்த கோட்சேவும் அதில் ஒருவர்.

சாவர்க்கர் பற்றிய இந்துத்துவ, ஆர்எஸ்எஸ் கூட்டத்தின்  புகழாரங்கள்
தளராத ஆன்மாவாக, விலைமதிப்பற்ற பங்களிப்பை இந்திய வரலாற்றிற்கு அளித்தவர்  என்று அவரின் உருவசிலை முன்னர் தலைகுனிந்து வணக்கம் செலுத்தும் பிரதமர் மோடியும், பாஜக அமைச்சர்களும் சாவர்க்கரின் பிறந்த நாட்களில் புகழ்ந்து பேசுவது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது.

சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் இந்திய பிரதமர் மோடி.

அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதும் இந்துத்துவ எழுத்தாளர்களும் நவீன இலக்கியத்தின் வெட்டி ஒட்டும் கலையை  பயன்படுத்தி அவரை ஒரு கதாநாயகனாகவே சித்தரிக்கும் பணியை செய்து வருகின்றனர். ஒரு இந்துத்துவ அடிப்படைவாதியை இந்துக்களின் காவலர் என்று திரிக்கவும், சுதந்திரப் போராட்டத்தை மடைமாற்றியவரை தன்னிகரில்லா சுதந்திரப் போராட்ட வீரர் என்று எழுதவும், வகுப்புவாதத்தை வளர்த்தவரை பிறப்பிலேயே கதாநாயகன் என்று புகழவும், இந்துமத மூடத்தனங்கள் ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கம்  சட்டம் இயற்றியக் காரணத்தால் பிரிட்டிஷ் அலுவலர்களைக்  கொன்ற இயக்கங்களின் தலைமையேற்றவரை பெரும் புரட்சியாளர் என்றும் திட்டமிட்டு கட்டமைத்து அவரின் இந்துத்துவ அடிப்படைவாத சித்தாந்தத்தை வளர்க்க இந்துத்துவ எழுத்தாளர்கள் இன்று அரும்பாடுபடுகிறார்கள்.

தில்லி பல்கலை கழகத்தில் சாவர்க்கர் சிலை.

           இந்த சாவர்க்கருக்கு தான் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் நேதாஜி, பகத்சிங் ஆகியோர்களின் மார்பளவு சிலைகளின் அருகில் ஒரு பீடத்தில் சிலை அமைத்தார்கள்.  நேதாஜி, அனைத்து மத மக்களும் அனைத்து பகுதிகளும் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற ஆயுதப்படை கட்டியவர். பகத்சிங் சமூக, ஜனநாயக, மதசார்பற்ற குடியரசு அமைய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நேதாஜியும், பகத் சிங்கும் எந்த சூழலிலும் பிரிட்டிஷ் அரசிற்கு அடிபணிய மறுத்தவர்கள். பகத்சிங் ஆங்கில அரசின் எந்தக் கருணையையும் எதிர்பாராதவர். இவர்களுடன் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்தவரும், இந்து மக்களிடம் இஸ்லாமிய வெறுப்புணர்வை கட்டமைத்து ஒரு இந்து படையை தனியாக கட்டமைக்க வேண்டும் என்ற பிரிவினைவாத நோக்கத்துடன் செயல்பட்டவரின் சிலையையும் இணைத்து வைத்தது பகத்சிங்கையும் நேதாஜியையும் இரண்டாவது முறையாக கொல்வதற்கு சமமானது.

          சாவர்க்கரின் இந்து மகாசபையும், ஹெட்வார்க்கரின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து ஆயுதம் ஏந்தாமல் மகாத்மா காந்தியின் தலைமையில் அகிம்சைப் போராளிகள் முன்னெடுத்த தண்டி உப்பு சத்தியாகிரகம் முதல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை அவர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்தும், ஆயுதமேந்தி பிரிட்டிஷ் படையை எதிர்த்து நின்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவ ஆயுதப் படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் படைகளுடன் ஒன்றிணைந்து இந்திய நாட்டு விடுதலையை ஆதிக்க சனாதனவாதிகள் கையில் மாற்ற எந்த சமரசத்திற்கும் தயாராக இருந்தவர் தான் சாவர்க்கர்.

இந்துத்துவ, சனாதன நாடு என்பது இந்திய விடுதலைக்கு போராடிய எண்ணற்ற வீரர்கள் மற்றும்  இஸ்லாமிய மக்களை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்தி இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது தான். அதாவது சனாதன, வர்ணாசிரம கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நாடாக மாற்றுவது. சனாதனமும், வருணாசிரமமும் இந்து மக்களை சாதிரீதியாக பிரிவினைப்படுத்தும் கோட்பாடுகளே. பார்ப்பனியம் தலைமையாகவும் அதன் கீழ் மற்றவர்கள் கீழ்ப்படிந்து வாழும் தன்மையாகவும் இருக்கும் மனுவின் சித்தாந்தத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அகற்றி அந்த இடத்தில் நிலை நிறுத்துவதே அவர்களின் வேலைத்திட்டம்.

அன்று பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து இந்திய தேசிய ராணுவத்திற்கு சாவர்க்கர் செய்த துரோகங்களைப் போல இன்று  இந்திய பெருமுதலாளி வர்க்கமான பனியா கும்பலுடன் பார்ப்பனிய அதிகார அமைப்புகள் சேர்ந்து சாவர்க்கர் முன்னெடுத்த சித்தாந்தத்தின் படி இந்து ராஷ்டிரம் அமைக்கும் வேலையை செய்கிறார்கள். இந்து மக்கள் என்று அழைக்கும் பல தேசிய இனங்களின் உரிமைகளையும் பறித்து  இந்துத்துவ  அடிப்படைவாதக் கூட்டம் தங்கள் ஆதிக்க மேலாண்மையை நிலை நிறுத்தும் வேலையையும் தொடர்ந்து  செய்து கொண்டிருக்கிறார்கள். சாதிய பெருமைகளை உயர்த்திப் பேசி சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் உயர தலைவர்கள் போராடி வாங்கிய சமூகநீதி உரிமையான இட ஒதுக்கீட்டை அழிக்கும் பணியை மிகவும் நுட்பமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளாமலிருக்க  சாதிய பெருமைகளை பரப்பி விடுகிறார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையும், உண்மையாகப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் மக்களிடம் பரவலாக கொண்டு சென்று இந்துத்துவ அமைப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். வரலாற்று ஆய்வாளர்களும் மவுனம் காக்காமல் இந்தப் பணிகளை துரிதமாக செய்வது ஒன்றே இந்திய மக்களை இந்துத்துவ இட்டுச்செல்லும் மத வெறுப்புணர்வு சிந்தனைகளிலிருந்து மீட்கும் வழியாக அமையும்.

2 thoughts on “ஆங்கிலேய அரசின் விசுவாசியாக சிறை மீண்ட சாவர்க்கர்

  1. கட்டுக்கதைகளை எழுதி வரலாற்றை மாற்றி மக்கள் மனதில் நஞ்சை விதைத்து குளிர்காய்கிறிர்கள் .

  2. Good content, but cud’ve been presented/written more (layman) reader friendly.. its more like a college text book content.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »