தோழர் செந்தில்நாதனை அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை – பாகம் 1

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ‘பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் முழக்கத்தோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தோழர். செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து மொடக்குறிச்சியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:

அன்பான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, 2026 தேர்தல் இந்த தேர்தல் நாம் இதற்கு முன்னால் பார்த்த தேர்தல் மாதிரி எல்லாம் இல்லை. அது மாநில கட்சிகளுக்குள்ளாக நடக்கக்கூடிய தேர்தல். காமராஜரா, அறிஞர் அண்ணாவா, எம்ஜிஆரா, கலைஞரா அல்லது ஜெயலலிதா அம்மையாரா என்றெல்லாம் மாநில கட்சிகளுக்குள் நடந்த தேர்தல். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், டெல்லியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியை இறக்குமதி செய்து “தமிழ்நாட்டை கைப்பற்றுவோம்” என்று நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். முதலில் குஜராத்துக்காரர்களுக்கு தமிழ்நாட்டின் மேல் என்ன அக்கறை என்று நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. நரேந்திர மோடிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதை இதுவரைக்கும் நரேந்திர மோடியே சொன்னதில்லை, பாஜகவும் சொன்னதில்லை.

நரேந்திர மோடி 12 வருடமாக பிரதமராக இருந்து நமக்கு என்ன நல்லது செய்தார்? அவர் “தமிழ்நாட்டை நாங்கள் கைப்பற்றுவோம்” என்று பேசுகிறார். இது என்ன பாகிஸ்தானா கைப்பற்றுவதற்கா? தமிழ்நாடு இந்திய நாட்டுக்குள்ளாக இருக்கிறது. இந்த நாட்டுக்குள்ளாக இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தை “கைப்பற்றுவேன்” என்று சொல்லுகின்ற வகையில் ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால், இதுபோல இதுவரைக்கும் எந்த பிரதமரையும் தமிழ்நாடு பார்த்ததில்லை. நேருவில் ஆரம்பித்து எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறோம், போடாமலும் இருந்திருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் யாரும் “தமிழ்நாட்டை கைப்பற்றுவோம்” என்று சொன்னதில்லை.

இந்த பாஜக வேட்பாளர் அவர்களை பார்த்து நாம் கேட்கிறோம். நம் ஊரில் இருக்கும் பாஜக வேட்பாளர் மேல் நமக்கு எந்த வருத்தமும் எல்லாம் கிடையாது. என் மாநிலத்துக்கு நல்லது செய்ய ஆயிரம் கட்சி இருக்கிறதே, அதை விட்டுவிட்டு ஒரு குஜராத்திலிருந்து வரக்கூடிய கட்சி, டெல்லியிலிருந்து வருகின்ற கட்சிக்கு எதற்கு போய் தேர்தலில் நிற்க வேண்டும்? அந்த கட்சி தமிழ்நாட்டுக்கு என்ன நல்லது செய்திருக்கிறது? இதையெல்லாம் எதுவும் கேட்காமல் அந்த டெல்லிக்காரன் கட்சியில் நமது ஊர்க்காரர்கள் போய் நிற்கிறார்கள் என்பதற்காக நாம் ஆதரிக்க முடியுமா? நமது ஊரில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒரு அந்நிய கட்சிக்கு, வெளிநிலத்து கட்சிக்கு நாம் எப்படி ஓட்டு போடுவது? அதுதான் முதல் விடயம் கேட்க வேண்டியது.

பாஜகவில் இப்போது நரேந்திர மோடி நேற்றைக்கு நமது கன்னியாகுமரியில் தலைவர்கள் படத்துக்கு மாலை போட்டிருக்கிறார். என்னென்ன தலைவர்களுக்கு மாலை போட்டார் எனில், காமராஜர் படத்துக்கு மாலை போடுகிறார், எம்ஜிஆர் படத்துக்கு மாலை போடுகிறார், அறிஞர் அண்ணா படத்துக்கு மாலை போடுகிறார், முத்துராமலிங்க தேவர் படத்துக்கு மாலை போட்டார்.

அதில் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரர், முத்துராமலிங்க தேவர் பார்வர்ட் பிளாக் கட்சிக்காரர், எம்ஜிஆர் அதிமுக கட்சிக்காரர், அறிஞர் அண்ணா திமுக கட்சிக்காரர். பாஜக 40 வருடமாக கட்சி நடத்துகிறீர்களே, மாலை போடுகின்ற அளவுக்கு தமிழ்நாட்டுக்கு நல்லது செய்தேன் என்று உங்கள் கட்சியில் யாராவது ஒரு தலைவர் பெயராவது சொல்ல முடியுமா? அப்படி யாராவது இருக்கிறார்களா? என்று நான் பிரதமரை பார்த்து கேட்கிறேன். அப்போது 40 வருடமாக தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினேன் என்று சொல்வதற்கு ஒரு தலைவர் கூட இல்லாத ஒரே கட்சி பாஜகதான்.

நீங்கள் திமுகவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆயிரம் பேர் சொல்ல முடியும், அதிமுகவில் நான்கு பேர் சொல்ல முடியும். கம்யூனிஸ்ட் கட்சியில் புத்தகமே போடலாம் என்னென்ன தியாகம் செய்தார்கள் என்று. மதிமுகவில் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. நான்கு மொழிய படித்து பார்க்கலாம். இப்படி எல்லா கட்சி, கட்சியிலும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த தலைவர் படங்கள் 10 பேராவது போட முடியும். ஆனால் ஒரே ஒரு கட்சியில் மட்டும் ஒரு பெயர் கூட போட முடியாது என்றால் அது பாஜக மட்டும்தான். இப்படிப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா? அதனால்தான் நாங்கள் வந்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்கிறோம்.

நமது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடிய நிதியை மோடி நிறுத்திவிட்டார். அப்போது நமது பிள்ளைகளோட எதிர்காலம் என்ன? நாம் எல்லாம் உழைக்கிறோம், நாள் முழுக்க வேலை பார்க்கிறோம், வெயிலில் வேலை பார்க்கிறோம். எதற்கு வேலை பார்க்கிறோம்? பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போக வேண்டும், ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் வேலை பார்க்கிறோம், கடினப்படுகிறோம். அந்த பிள்ளைகளோட படிப்பில் மண்ணை அள்ளி போட்ட பாஜகவை நாம் எப்படி ஆதரிப்பது என்று நீங்கள் தயவு செய்து நியாயமாக சொல்லுங்கள். இதற்குப் பிறகும் அவர்களை ஆதரித்தீர்கள் என்றால் நாடு நன்றாக இருக்குமா?

தமிழ்நாட்டிலேயே மொடக்குறிச்சியில் ஒரு பாஜக ஆள் வென்றார் என்று தமிழ்நாடு திரும்பிப் பார்த்தது. “என்ன இங்கே போய் பாஜக எப்படி வென்றது?” என்று கேட்டார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. “சரி, ரொம்ப ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லி பார்த்து நமது ஆளுக்கு போட்டார்கள் போலிருக்கிறது என்று பார்த்தால், அந்த அம்மா ஐந்து வருடம் சட்டசபையில் வாயைத் திறந்து மொடக்குறிச்சிக்காக பேசவில்லை. நமது பிள்ளைகளுடைய படிப்பு என்ன ஆனது என்று கேட்கவில்லை. இப்படி பாஜகவுக்கு திரும்பத் திரும்ப ஓட்டு போட்டால் எப்படி ஊர் உருப்படும்? நாடு எப்படி உருப்படும்?

பாஜக இதை மட்டும் செய்யவில்லைங்க. நான் கோயம்புத்தூர்க்காரன். கோயம்புத்தூரில் 30 வருடத்துக்கு முன்னால் என்ன செய்தார்கள் பாஜககாரர்கள் வந்தபோது? “ஏப்பா, அந்த கடை இந்து கடைப்பா, இந்த கடை முஸ்லிம் கடை, அந்த கடை கிறிஸ்தவர் கடை” என்று ஒவ்வொரு கடையாக காட்டி சண்டையை மூட்டிவிட்டார்கள். “நாமெல்லாம் இந்து, அவனெல்லாம் முஸ்லிம்” என்று சண்டை போட விட்டார்கள். அங்கே சோபா டெக்ஸ்டைல்ஸ், ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் இருந்தது, இப்படி பல கம்பெனி இருந்தது. அது இந்துவா, முஸ்லிமா என்று நமக்குத் தெரியாது. நல்ல கடை, போவோம், சாமான் வாங்குவோம், துணிமணி வாங்குவோம், வருவோம். ஆனால், இவன் என்ன செய்தான் என்றால், “இவன் எல்லாம், இவன் வந்து முஸ்லிம், இவன் கிறிஸ்தவன், இவன் இந்து” என்று பிரித்தான். நமது ஆட்கள் புத்தி கெட்டுப் போய் சண்டை போட ஆரம்பித்தார்கள். சண்டை போட்டு, ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு, சோபா டெக்ஸ்டைல்ஸையும் மூடிவிட்டார்கள், ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸையும் மூடிவிட்டார்கள்.

அப்புறம் இரண்டு வருடம் கழித்து படிப்பு முடித்துவிட்டு நான் போகிறேன். பார்த்தால் கோயம்புத்தூரில் ஒப்பனக்காரத் தெரு, ராஜா தெரு, வெரைட்டி ஹால் ரோடு, ரங்கே கவுடர் ரோடு, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் எல்லா இடத்திலும் பார்த்தால், இந்து-முஸ்லிம் என்றெல்லாம் சண்டை நடந்ததே, அந்த இடத்தில் எல்லாம் இந்து கடையும் கிடையாது, முஸ்லிம் கடையும் கிடையாது. “ஏதோ ஜெயின் கடை, மார்வாடி கடை, சேட்டு கடை என்கிறான்”. நமது ஆள் கடையெல்லாம் அடித்துப் பற்ற வைத்துவிட்டான். இங்கே பிசிபி பேக்கரி இருக்கிறது, வேல் பேக்கரி இருக்கிறது, செல்போன் கடை இருக்கிறது, மருந்து கடை இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. இந்த மாதிரி இருந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டு சேட்டு கடையை மாற்றி விட்டான்.

அப்படி இந்துவா, முஸ்லிமா இப்போதும் வருவான் பாருங்கள். நாமெல்லாம் இத்தனை காலம் சாமி கும்பிட்டுத்தான் இருக்கிறோம். பாஜக காரன் வந்தா நமக்கு எப்படி சாமி கும்பிட வேண்டும் என்று கத்துக் கொடுத்தானா? நமக்கு சாமி கும்பிடத் தெரியாதா? “எது சாமி? எப்படி பூஜை போடு” என்று கற்றுக் கொடுத்தார்களா? இவர்கள் வந்து சாமியை காப்பாற்றுகிறார்களா? நாம் இவ்வளவு நாள் காப்பாற்றவில்லையா? இது என்ன கொடுமையாக இருக்கிறது?

சாமியை வைத்து யாராவது சண்டை போடுவானா? சாமியை வைத்து எவனாவது கலவரம் செய்வானா? சாமியை வைத்து நல்லது செய்ய வேண்டும். நான்கு விடயம் செய்யலாம். அன்னதானம் போடுகிறீர்கள், படிக்காத அல்லது படிக்க முடியாத பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் கட்டலாம், துணிமணி எடுத்துத் தரலாம், இப்படி ஏதாவது செய்தால் அது நல்ல விடயம். சண்டையை மூட்டி கலவரம் செய்வதையே ஒரு வேலையாக வைத்துதான் கோயம்புத்தூர் நாசமாகப் போனது. நான் கோயம்புத்தூர்க்காரரன் என்பதால் சொல்கிறேன்.

தமிழ்நாடு வளர வேண்டுமென்றால் இந்த பாஜகவை தயவு செய்து மூட்டை கட்டி டெல்லிக்கு அனுப்பிவிடுங்கள். வேண்டவே வேண்டாம். உனக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டுக்கு நல்லது செய்கிறேன் என்று ஒரு வார்த்தை பிரதமர் வாயிலிருந்து வரவில்லை.

இங்கு திமுக, அதிமுக போன்று நாம் எந்த கட்சியாக இருந்தாலுமே அண்ணன் தம்பியாக பழகுவோம். சண்டை போட்டுக்கொள்ள மாட்டோம். இன்றைக்கு பாஜககாரன் வந்து என்ன செய்கிறான்? நம்மையெல்லாம் எதிரி மாதிரி பார்க்க வைக்கிறான். விட்டால் குரல்வளையை கடித்துவிடுவான் போல இருக்கிறது.

அதிமுக பெரிய கட்சி. தமிழ்நாட்டில் ஆண்ட கட்சி. முதலமைச்சர் நிறைய பார்த்துள்ளது. உங்கள் கட்சியை ஐந்தாக உடைத்தது யார்? கம்யூனிஸ்ட் உடைத்தார்களா? திமுக உடைத்ததா? முஸ்லிம்கள் உடைத்தார்களா? யார் உடைத்தது? அதிமுகவை பாஜகதான் உடைத்தது.

அதிமுக கட்சியில் இருக்கிற தலைவர்கள் எல்லாம் மற்ற கட்சியில் கொண்டு போய் சேர்த்துவிடுகின்ற வேலையை பாஜக பார்த்தது. செங்கோட்டையன் எங்கே இருக்கிறார்? விஜய்யோடு இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கட்சித் தலைவரையும் வேறு வேறு கட்சிக்குப் போய்விட்டார்கள். பாஜகவோட தலைவர்(நயினார் நாகேந்திரன்) உங்கள் கட்சியில் இருந்து போனவர்தான். இப்படி உங்கள் கட்சியை உடைத்து நாசம் செய்த கட்சியோடு போய் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, நாளைக்கு உங்கள் கட்சியை இன்னும் நாசம் செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம் இருக்கிறது? இதற்கு மேல் உங்கள் கட்சியை நாசம் செய்ய வேண்டுமா?

கடந்த தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வைத்தது இல்லையா? அந்த கூட்டணிக்கு “அதிமுக கூட்டணி” என்று சொன்னார்கள். இன்றைக்கு அது “பாஜக கூட்டணி” என்கிறான். ஐந்து வருடத்துக்குள் பாஜக எப்படி வளர்ந்துவிட்டது? ஒரு கவுன்சிலர் இடம் கூட வெல்ல முடியாத கட்சி பாஜக. அதிமுககாரர்கள் எல்லாம் பார்த்து வெல்ல வைத்தால்தான் பாஜக வெல்லும். இல்லையென்றால் வெல்ல வாய்ப்பில்லை.

அதிமுக போன தேர்தலில் கஷ்டப்பட்டு பாஜகவுக்காக உழைத்து நான்கு எம்.எல்.ஏ இடங்களை வாங்கிக் கொடுத்தீர்கள். அந்த கட்சி என்ன செய்தது? உங்கள் கட்சியை நாசம் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலைமையை நீங்கள் மாற்றாமல், விரட்டிவிடாமல், அவனோடு கூட்டணி போட்டு 40 இடங்களில் தாமரை சின்னத்துக்கு போட்டியிடுவதற்கு நீங்களே வாய்ப்பு கொடுத்து, இத்தனை சிறிய கட்சி, ஒரு கவுன்சிலர் இடம் வெல்ல முடியாத கட்சி, 1% ஓட்டு வாங்கிய கட்சி, இன்றைக்கு உன் தலை மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறானே, உங்கள் கட்சித் தலைமையை அவன் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறான். அந்த கட்சிக்கு ஓட்டு கேட்க அதிமுக எப்படி வீதி வீதியாக வருகிறீர்கள்? ஒரு நியாயம் வேண்டாமா?

அது எப்படிப்பட்ட கட்சி! ஜெயலலிதா அம்மா என்ன சொன்னது? “மோடியா, லேடியா?” என்று தைரியமாக கேட்டது. ஏறி அடித்தது. “மோடியால் தமிழ்நாடு வர முடியாது” என்று சொன்னது. அது தைரியம். அது துணிச்சல். “இது தமிழ்நாடு, மோடியோட பருப்பெல்லாம் இங்கே வேகாது” என்று சொன்னார் ஜெயலலிதா அம்மையார். “பார்க்க மாட்டேன்” என்று சொல்லி உட்கார வைத்து திருப்பி அனுப்பிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு ஆளுமை மிக்க தலைவர் உங்கள் கட்சியை வழிநடத்திக் கொண்டு போனார்கள். 2016ல் உங்கள் கட்சி தனியாக நின்று வென்றது. அப்படிப்பட்ட கட்சியை கொண்டு போய் அடகு வைத்திருக்கிறீர்களே எடப்பாடி அவர்களே!

இப்போது பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்து அதை ஆறாக உடைத்துவிட்டான். சரி, பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைந்துவிட்டது. அப்பாவையும் பையனையும் பிரித்துவிட்டது.

தமிழ்நாட்டுக்காக போராடக்கூடிய காவிரி பிரச்சனை, கரும்பு விலை பிரச்சனை, மஞ்சள் விலை பிரச்சனை, முல்லைப்பெரியாறு பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை, இத்தனை பிரச்சனைகள், கெயில் குழாய் பிரச்சனை போன்றவற்றிற்கு எதிர்த்து நின்று போராடியது எதிர்த்து கேள்வி கேட்டது மதிமுக கட்சி. ஐயா வைகோ அவர்களும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும், கம்யூனிஸ்ட் தோழர்கள், இஸ்லாமிய அமைப்புகள் போராடினார்கள். இப்படி எல்லாருமே போராடித்தான் இந்த மண்ணை காப்பாற்ற வேண்டும். அன்றைக்கு பாஜககாரன் வந்தானா? இதெல்லாம் இந்துக்கள் நிலம், எதற்கு இந்துக்கள் நிலத்தில் கெயில் குழாய் போடுகிறீர்கள்?” என்று பாஜககாரன் கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்டானா? கேட்கவில்லை. அப்போதெல்லாம் ஒரு இந்து ஞாபகம் வராது. நாம் அடி வாங்கும்போது இந்து ஞாபகம் வராது. நமது நிலமெல்லாம் போகும்போது “இந்து இந்து” என்று ஞாபகம் வராது. ஆனால் கோயில் பிரச்சனையை வைத்து சண்டையை மூட்டிவிட்டு, நம்மை இரண்டாக பிரித்துவிட்டு, அண்ணன் தம்பியாக இருக்கக்கூடிய முஸ்லிமையும் நம்மையும் பிரித்துவிட்டு, ஊருக்குள் சண்டையை மூட்டிவிட்டு, மார்வாடியை கொண்டு வந்து இறக்கிவிட்டு நாசம் செய்வதற்கு மட்டும் “இந்துவா இல்லையா?” என்று வந்து நிற்பான். தயவு செய்து இவ்வளவு நம்பாதீர்கள்.

இந்து என சொல்லி இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனை ஊரில் “ஒழுக்கம் சொல்லித் தருகிறேன், நான் இந்து மதத்தைப் பற்றி காப்பாற்றப் போகிறேன்” என்று வருகிறான். அவன் உங்கள் பிள்ளைகளையெல்லாம் வந்து “ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்துவிடுகிறேன், சாகா சொல்லித்தருகிறேன், நான் சிலம்பம் சொல்லித்தருகிறேன், உடற்பயிற்சி சொல்லித்தருகிறேன்” என்று கூட்டிக்கொண்டு போவான். அவன் குண்டு வைப்பதற்கு கற்றுத் தருவான். பாலியல் வன்கொடுமை செய்வதற்கு கற்றுத் தருவான். கலவரம் செய்வதற்கு கற்றுத் தருவான்.

உத்தரப் பிரதேசம் என்ன ஆனது? பீகார் என்ன ஆனது? சத்தீஸ்கர் என்ன ஆனது? டெல்லி என்ன ஆனது? எல்லா இடத்திலும் கலவரம் நடக்கிறது. மணிப்பூரில் கலவரம் நடக்கிறது. ராணுவத்தில் இருந்த ஒரு வீரர். காஷ்மீர் எல்லையில் இருக்கக்கூடிய ஒரு ராணுவ வீரனின் மனைவி மணிப்பூரில் இருக்கிறார்கள். இந்த பாஜககாரர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன செய்தார்கள்? அந்த ராணுவ வீரரின் மனைவியை அடித்து கற்பழித்து, அந்த அம்மாவை நிர்வாணமாக 2 கிலோமீட்டர் இழுத்துக்கொண்டு வந்தார்கள். இது செய்தி வீடியோ இருக்கிறது. ஒரு ராணுவ வீரனின் மனைவிக்கே இதுதான் நிலைமை என்றால், நமது வீட்டின் நிலைமை என்னவாக ஆகும்? தமிழ்நாட்டின் நிலைமை என்னவாக ஆகும்? அதை யோசித்துப் பாருங்கள், இது தினமும் வட இந்தியாவில் தினமும் நடக்கிறது. அப்படிப்பட்ட பாஜகவை இங்கே வளர விடலாமா? ஆர்.எஸ்.எஸ்.காரனை வளர விடலாமா? இந்து முன்னணியை வளர விடலாமா? என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.

இந்த மண்ணுக்கு வளர்ச்சி தருவதற்கு, இந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்கு, நம்மவர்கள் வளர்வதற்கு, நமது பிள்ளைகள் நன்றாக படித்து மேலே வருவதற்காக இந்தப் பகுதியில் ஒரு வெற்றி வேட்பாளரான மரியாதைக்குரிய தோழர் செந்தில் செல்வன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர் நன்கு படித்தவர், மிக்க ஒழுக்கம் நிறைந்தவர், அன்பு நிறைந்தவர், பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு போராளி. ஐயா வைகோ அவர்களுடைய படைத்தளபதி. இப்படிப்பட்ட ஒரு தமிழ்நாட்டை நேசிக்கக்கூடிய, தமிழனை நேசிக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் உதயசூரியன் சின்னத்திலே அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அவரை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. இல்லையென்றால் ஊர் நாசமாகப் போய்விடும், நாடு நாசமாக இந்த பாஜககாரர்களிடம், குஜராத்துக்காரர்களிடம் நாட்டை கொடுத்துவிடாதீர்கள். வீடு வீடாக வருவார்கள். அதற்காக நாட்டை கொடுக்க முடியாது. சாமி கோவிலில் எல்லாம் நாம் பார்த்துக்கொள்ளலாம். இவர்கள் வந்து கோவிலெல்லாம் கட்டித் தரவில்லை. நமது முன்னோர்கள் கட்டி வைத்தது. நாம் காப்பாற்றிக்கொள்வோம். அதெல்லாம் நமக்குத் தெரியும்.

ஆகவே அன்பானவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இது தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான பொறுப்பு. ஏற்கனவே எம்.பி-களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டான். இனி தமிழ்நாட்டு எம்.பி-க்கு அங்கே இடமே கிடையாது, பார்லிமெண்டில். உட்கார்வதற்கு இடம் வரமாட்டான். அந்த நிலைமை ஆகிப்போனது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் வந்து நின்று நாங்கள் பேசுகிறோம். தமிழ்நாட்டை காப்பாற்றக்கூடிய வேலையில் நீங்களும் எங்களோடு சேர்ந்து நில்லுங்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லதும் செய்யாத பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள்.

கிட்டத்தட்ட 30 வருடத்துக்கு முன்னால் தமிழ்நாட்டில், இந்தியாவே அலற வைத்த இடம் மொடக்குறிச்சி. கிட்டத்தட்ட 1066 வேட்பாளர்கள் இங்கே போட்டி போட்டார்கள். விவசாயிகளுடைய கோரிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லி போராடிய மண் இந்த மண். அதை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் இங்கே பெரு வெற்றி பெற்றார்கள். அந்த மண்ணில், அப்படிப்பட்ட போராளிகளுக்கு இடம் கொடுத்தீர்கள். விடுதலைப் புலிகளுக்காக தன்னுடைய இடத்தை கொடுத்து பயிற்சி கொடுத்து, அதனால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன் அம்மாவை தேர்ந்தெடுத்த மண் உங்கள் மண். போராளிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய மண் உங்கள் மண். இதில் போய் பாஜககாரரை எல்லாம் தேர்ந்தெடுத்தால் நமக்கு அசிங்கமாக இல்லையா? அதனால் அதையெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த மண்ணினுடைய பெருமையை காப்பாற்றுங்கள். போராளிகளை வளர்த்தெடுங்கள். போராளிகளுக்கு இடம் கொடுங்கள். போராளிகளை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்புங்கள். தோழர் செந்தில்நாதன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அங்கே வரட்டும். அப்போது நடக்கக்கூடிய நன்றி அறிவிப்பு கூட்டத்திலே நானும் உங்களோடு பங்கெடுக்கின்றேன் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »