தோழர் பூமிநாதன் அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும் ‘ எனும் முழக்கத்தோடு, தோழர் பூமிநாதன் அவர்களை ஆதரித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:

2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக நடக்கிறது. இதுவரைக்கும் தமிழ்நாடு அதனுடைய மாநில கட்சிகளுக்கு உள்ளாக தேர்தலை நடத்திக்கொண்டது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், டெல்லியிலிருந்து ஒரு கூட்டம் வந்து, “நான் தமிழ்நாட்டை கைப்பற்றுவேன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் வேரோடு அழிப்பேன்” என்று சொல்லி பாஜக கூட்டம் தமிழ்நாட்டை கைப்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு ஒரு பங்களாதேஷா? அல்லது தமிழ்நாடு ஒரு அந்நிய நாடா? தமிழ்நாடு என்றாலே நரேந்திர மோடிக்கு ஏன் பிடிக்கவில்லை? தமிழ்நாட்டுக்கு எப்போதும் பிரச்சனையை கொடுப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கக்கூடிய பாஜக, இந்த தேர்தலில் “நாங்கள் தமிழ்நாட்டை கைப்பற்றுவோம்” என்கிறார். ஒரு எதிரி நாட்டை கைப்பற்றுவது போல தமிழ்நாட்டை பார்த்து சொல்கிறார்.

எந்த மாநில தேர்தலுக்கு போனாலும் நரேந்திர மோடி தமிழ்நாட்டைத்தான், தமிழர்களைத்தான் கொச்சைப்படுத்துகிறார். ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு போனவர் “தமிழர்கள் ஒடிசாவினுடைய பூரி ஜெகநாதர் கோயிலினுடைய சாவியை திருடிக் கொண்டுவிட்டார்கள். தமிழர்களை ஒடிசாவிற்குள் அனுமதிக்காதீர்கள்” என்று பேசியவர். பிறகு பீகார் தேர்தலுக்கு போனவர் “தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். பீகாரிகளை தமிழர்கள் அடிக்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள்” என்று பேசுகிறார். இப்படியெல்லாம் ஒரு பிரதமரை பார்த்திருக்கிறோமா? இதெல்லாம் ஒரு பிரதமர் பேசுகின்ற பேச்சா?

மோடி ஆட்சிக்கு வந்த 12 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்தேன் என்று எதையும் சொல்ல முடியவில்லை. மோடியாரே “நான்தான் நல்லது செய்தேன்” என்று இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு எதையும் பட்டியல் போடவே இல்லை. இப்போது மோடியே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பிரதமரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பாஜக இன்றைக்கு தமிழ்நாட்டை நாசம் செய்வதற்காக அதிமுகவோடு கூட்டணி வைத்து இங்கே இறங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக கூட்டணியை தோற்கடித்தாக வேண்டும். இதற்கு முன்னால் வரைக்கும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்திருந்த போதெல்லாம் என்ன சொன்னார்கள்? “அது அதிமுக கூட்டணி” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் தனியாக போட்டியிட்டால் ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காத பாரதிய ஜனதா கட்சி, அதிமுக என்கின்ற ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இன்றைக்கு அது “பாரதிய ஜனதா கட்சி கூட்டணி” என்று அறிவிக்கிறார்கள். அது அதிமுக கூட்டணியா ?அல்லது பாஜக கூட்டணியா? என்று அந்த கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை.

அதிமுகவை நான்காக ஐந்தாக உடைத்தது பாஜகதான். இப்போது பாமகவையும் இரண்டாக உடைந்திருக்கிறது. இந்த கட்சியை திமுக உடைத்ததா? கம்யூனிஸ்ட்கள் உடைத்தார்களா? யார் உடைத்தார்கள்? உடைத்தது பாஜக. அப்படி உங்கள் கட்சியை உடைத்த பாஜகவோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?” என்று யாராவது பார்த்து கேள்வி கேட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். “நரேந்திர மோடி எங்கள் டாடி” என்று சொல்லக்கூடிய வகையில் அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர்களும் இருக்கக்கூடிய அளவிற்கு அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். ஆனால் அதிமுக கட்சியை ஐந்தாக ஆறாக உடைத்திருக்கிறானே, நாளைக்கு அதிகாரத்துக்கு வந்தால் தமிழ்நாட்டை என்ன செய்வான்? என்று நீங்கள்தான் கேட்க வேண்டும். அதேபோல அதிமுகவையே காப்பாற்ற முடியாத எடப்பாடியார் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறார்? அப்போது இவர்களை நம்பி ஓட்டு போட்டால் தமிழ்நாட்டினுடைய எதிர்காலம் என்னவாகும்?

மதுரைதான் இந்தியாவிலேயே மூத்த நகரம். முதல் நகரம் என கீழடி சொல்லிவிட்டது. “அயோத்திதான் பழைய நகரம், அயோத்திதான் பழைய நகரம், ராமர்தான் பிறந்தார், தோண்டிப் பார், தோண்டிப் பார்” என்று தோண்டினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. குஜராத்தில் துவாரகையில் தோண்டினார்கள்.  4,000 கோடி, 5,000 கோடி செலவு செய்தார்கள். “சரஸ்வதி நகரம் இருக்கிறது” என்றார்கள், “துவாரகை நகரம் இருக்கிறது” என்றார்கள், “கிருஷ்ணர் பிறந்த ஊர் இருக்கிறது” என்றார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. கல் கிடைத்தது, மண் கிடைத்தது, வேறு எதுவும் கிடைக்கவில்லை. எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஆனால் வைகை நாகரிகத்தை தோண்டியவுடன் ஒரு பெரிய நாகரிகமும், மதுரை நகரினுடைய எச்சமாக இருக்கக்கூடிய கீழடி கிடைத்தது. 2,700, 2,800 வருடங்களுக்கு முன்னால் இங்கே நாம் தொழிற்சாலை வைத்திருந்தோம். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்குரிய துணிகளை நெய்யக்கூடிய நகரமாக கீழடி இருந்தது. அன்றைக்கு வைகையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கப்பல்கள் வழியாக ஏற்றுமதியாகி, இன்றைக்கு சொல்கிறோமே இத்தாலி நகரம், கிரேக்க நகரம், அந்த கிரேக்கத்திற்கும் ரோமாபுரிக்கும் இங்கிருந்து துணிகளை ஏற்றுமதி செய்தவன் மதுரைத் தமிழன்.

எங்கள் கீழடி பெருமையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று முயற்சிக்கக்கூடிய பாஜகவையும், அதிமுக கூட்டணியையும் அனுமதிக்கலாமா? வேரோடு அறுத்தெறிய வேண்டும். தமிழ்நாட்டின் பெருமை அல்ல, உலகத்தின் பெருமையாக கீழடி இருக்கிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் இருக்கிறது. 2,900 வருடங்களுக்கு முன்பாகவே தமிழை பானையோட்டில்எழுதி வைத்தான். அவனுக்குத் தெரிந்திருக்கிறது, 3,000 வருடம் கழித்து தமிழன் தோண்டிப் பார்ப்பான், நமது பெயர் தெரியட்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அப்பேர்பட்ட நகரம் இந்த மதுரை நகரம்.

இதற்கு மெட்ரோ தரமாட்டாயா நீ(மோடி)? எவ்வளவு திமிர் இருந்தால் எங்களிடம் வரி வாங்குவாய்? தமிழன் வரி உனக்கு இனிக்கிறது, தமிழருக்கு கிள்ளிக் கொடுப்பது கசக்கிறதா? ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வரி கொடுத்து உங்கள் நாட்டை நடத்துவதற்கு பணத்தை கொடுப்பவன் தமிழன். “மதுரைக்கு மெட்ரோ ரயில்” என்று கேட்டால் அதற்கு ஆயிரம் காரணம் சொல்கிறான். “நீங்கள் கொடுத்த லெட்டரில் முற்றுப்புள்ளி வைக்கவில்லை, கமா வைக்கவில்லை, கோடு போடவில்லை”. இதெல்லாம் ஒரு காரணமா?

இந்தியாவிலேயே மிகப் பழைய நகரம். அயோத்தியை விட பழைய நகரம் மதுரை. தமிழர்களுடைய பாரம்பரிய நகரம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற நகரம். கண்ணகி நீதி கேட்ட நகரம். இப்படி மதுரைக்கு எத்தனையோ பெருமை இருக்கிறது. இன்றைக்கு கீழடி இந்தியாவிலேயே மூத்த நாகரிகமாக தமிழர் நாகரிகம் இருந்தது, அது வைகை ஆற்றங்கரையில் இருந்தது, அது மதுரையில் இருந்தது என்று ஆதாரம் கிடைத்திருக்கிறது.

இன்றைக்கு அப்படி ஒரு ஆதாரத்தை அயோத்திக்கும் காட்டிவிட முடியுமா? “அயோத்தி பழைய ஊரா? டெல்லி பழைய ஊரா? குஜராத் பழைய ஊரா? இல்லை, மதுரை பழைய ஊர். தமிழ்நாடு பழைய ஊர். தமிழன்தான் இந்த நிலத்தினுடைய முதல் குடி, மூத்தகுடி. தமிழன்தான் முதல் குடி. இந்தியாவிலேயே முதல் இனம், தமிழினம். முதல் மொழி, தமிழ் மொழி. முதல் நாகரிகம், தமிழர் நாகரிகம். அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. பாஜககாரனுக்கு என்ன பெருமை இருக்கிறது? சாணி தின்கிற பயல்களுக்கு என்ன பெருமை? மாட்டு கோமியம் குடிக்கிறவனுக்கு என்ன பெருமை இருக்கிறது?

எங்கள் ஊரில் வந்து என்ன திமிர் இருந்தால், “நான் மெட்ரோ ரயில் தரமாட்டேன்” என்று சொல்லுவீர்கள்? “உனக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாட்டேன்” என்று சொல்லுவீர்கள். ”எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடத்துக்கு நிதி தரமாட்டேன்” என்று சொல்லுவீர்கள். பிள்ளைகள் படிப்பதற்கான பாடப் புத்தகம் அச்சடிப்பதற்கு காசு தரமாட்டேன் என்று சொல்லுவீர்கள். எங்கள் ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பதற்கு 18% வரி போட்டான், அப்புறம் 12% வரி போட்டான். ஆனால் சப்பாத்தி இயந்திரத்துக்கு 5% வரி. நமக்கு 12% வரி. என்ன காரணம்? தமிழன் தோசை சாப்பிடுகிறான், இட்லி சாப்பிடுகிறான், “போடு வரி”. ஆனால் சப்பாத்தி இயந்திரத்துக்கு வரி கிடையாது. வெறும் 5% வரி. ஏனென்றால் வடநாட்டுக்காரன், இந்திக்காரனெல்லாம் சப்பாத்தி சாப்பிடுகிறான். யோசித்துப் பாருங்கள்.

ஒரு நாடு, ஒரு பிரதமர், ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தால் அது நல்ல பிரதமரா? அது ஒரு நல்ல ஆட்சியா? இவர்களெல்லாம் நல்லவர்களா? பாஜக மாதிரி கேடுகெட்ட தீயசக்தி உலகத்திலே கிடையாது. பலி கொடுக்கின்ற, மக்களை வஞ்சிக்கக்கூடிய கட்சி நல்ல கட்சியாக இருக்க முடியுமா?

தமிழ்நாட்டில் 40 வருடங்களாக கட்சி இருக்கிறது என்று பெருமை பேசுகிறார்கள். பாஜகவில் ராம. சீனிவாசன் இருக்கிறார். அவரிடம் கேட்கிறேன். ராம. சீனிவாசன் அவர்களே, நீங்கள் பாஜக வேட்பாளராக நிற்கிறீர்கள். உங்கள் கட்சி 40 வருடம் தமிழ்நாட்டில் கட்சி நடத்துகிறீர்களே பாஜககாரர்களெல்லாம், உங்கள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர் படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த தலைவர்கள் என்று சொல்லி இவர்களுடைய படத்துக்கு எல்லாம் மாலை போடுகிறார் நரேந்திர மோடி/ பாஜககாரர். உன் கட்சியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு தலைவர் படத்தையாவது காட்டியிருக்கிறீர்களா? அதற்கு மாலை போட்டிருக்கிறீர்களா?

காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரர், முத்துராமலிங்கத் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சிக்காரர், எம்.ஜி.ஆர் அதிமுக கட்சிக்காரர். மற்ற கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் மாலை போடுகிறீர்களே, உன் கட்சியில் ஒரு தலைவனும் இல்லையா? ஒரு நல்லவன் கிடையாதா?

எல்லா கட்சியிலும் எந்த கட்சி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டை எடுத்தால் ஒரு புத்தகமே போடலாம். திராவிட இயக்கத்தை எடுத்தால் அதற்கு ஒரு புத்தகத்தை போடலாம். இப்படி எல்லா கட்சிக்கும் அதற்கு ஒரு பெரிய புத்தகத்தை போடலாம். கணிசமான காகிதத்தில் இருந்து பெரிய பட்டியல் போடலாம். இப்போது எல்லா கட்சியிலும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் நல்லது செய்த நான்கு பேராவது இருப்பார்கள். நான்கு பக்கத்துக்கு பெயர் இருக்கும். ஆனால் 40 வருடமாக கட்சி நடத்துகிறான் பாஜககாரன். அவன் கட்சியில் நல்லது செய்த, தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு தலைவனுடைய பெயர் கூட அந்த கட்சிக்காரனாலேயே சொல்ல முடியாது. அந்த கட்சிக்காரன் சொல்ல முடியாது.

ஒக்கி புயல் வந்தது, வர்தா புயல் வந்தது, நிவர் புயல் வந்தது. சென்னையில், தமிழ்நாட்டில் யாரெல்லாம் கேட்டார்கள்? ஜெயலலிதா அம்மையார் கேட்டார்கள். அதற்குப்பிறகு வந்த ஓ.பன்னீர்செல்வம் கேட்டார். அதற்குப்பிறகு எடப்பாடி கேட்டார். அதற்குப்பிறகு வந்த ஸ்டாலின் கேட்டார். எல்லாரும் கேட்டார்கள். இந்த கட்சி, எந்த கட்சி, இந்த முதல்வர், எந்த முதல்வர் இல்லை, எல்லாரும் கேட்டார்கள். ஒன்றே கால் லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு நட்டமாகி இருக்கிறது, டெல்லியிலிருந்து கொடுங்கள் என்று கேட்டால், ஒன்றே கால் லட்சம் கோடி தருவதற்கு பதிலாக வெறும் 12,000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ₹100 கேட்டால் ₹10 தந்திருக்கிறான்.

நான் கேட்கிறேன், வருடத்துக்கு 2 லட்சம், 3 லட்சம் கோடி ரூபாய் தமிழன் வரிப்பணமாக கொடுக்கிறோம் நாம். நீங்கள் ஒவ்வொருவரும் மாதத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் குறைந்தபட்சம் 1,200 ரூபாய் நீங்கள் வரி கட்டுகிறீர்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் மாதம் மாதம் மளிகை சாமான் கணக்கு போடுகிறீர்கள், வீட்டுச் செலவு கணக்கு போடுகிறீர்கள் என்றால், அதில் எவ்வளவு செலவு என்று மட்டும் போடாதீர்கள், எவ்வளவு வரி என்று போட்டுப் பாருங்கள்.

₹10,000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்றால் ₹1,200 ரூபாய் வரி கொடுக்கிறீர்கள் டெல்லி சர்க்காருக்கு. ₹5,000 ரூபாய் சம்பாதித்தாலும் வரி கட்டுகிறான், ₹50,000 சம்பாதித்தாலும் வரி கட்டுகிறான். அம்பானியைத் தவிர, அதானியைத் தவிர, குஜராத்தின் மார்வாடியைத் தவிர, அத்தனை பேரும் வரி கட்டுகிறோம். ஆனால் நமக்கு நல்லது செய்யவில்லை இந்த பாஜககாரன்.

இப்படிப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் எந்த நல்லதும் செய்யாதவன், திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை இடிக்க வேண்டும் என்று கலவரம் செய்வதற்கு கடப்பாரையை தூக்கிக்கொண்டு வருகிறான். எவ்வளவு தைரியம் உங்களுக்கு? மதுரைக்காரர்கள் நல்லவர்கள். அமைதியாக அவனை விட்டுவிட்டீர்கள். மதுரை எவ்வளவு பெரிய பழைய நகரம், இது பழைய ஊர் இது. இங்கே மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் கோவில் இருக்கிறது.

இது மட்டுமா இருக்கிறது? காஜிமார் பள்ளிவாசல் இருக்கிறது. காஜிமார் பள்ளிவாசல் எப்போது திறந்தது? யார் திறந்தார்கள்? யார் அதற்கு காசு கொடுத்தார்கள்? இடம் கொடுத்தார்கள்? 800 வருடத்துக்கு முன்னால் மதுரையை ஆண்ட மாரவர்மன் சுந்தரபாண்டியன் என்கின்ற பாண்டிய அரசன் காஜிமார் பள்ளிவாசலுக்கு நிலம் கொடுத்து, காசு கொடுத்து, “அங்கே இஸ்லாத்தை நீங்கள் வளர்த்திடுங்கள்” என்று அன்றைக்கு பாண்டிய மன்னன் சொன்னான். அதற்கு முன்னால் சோழ மன்னர்கள் சொன்னது.

அதுதான் தமிழ்நாடு. அதுதான் மதுரை. இங்குள்ள பெருமை நமக்குத்தான் தெரியும். தமிழன் ஜாதி மதம் பார்க்காமல் அண்ணன் தம்பியாக இருக்கிறோம். யார் ஜாதி மதம் பார்க்கிறோமா? எந்த கடையில் யார் இருக்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோமா? இல்லையே. ஆனால் இவன்(பாஜக காரன்) என்ன செய்கிறான்? கலவரம் செய்ய எல்லா வேலையும் செய்கிறான். உன்னை விடலாமா ஊருக்குள்ளே?

நான் கோயம்புத்தூரில் இருந்தேன். கோயம்புத்தூரில் ஒரு விடயம் நடந்தது. 20 வருடத்துக்கு முன்னால் அங்கே பாஜககாரன் கலவரம் கொண்டு வந்தான். என்ன? எப்படி ஆரம்பித்தான் தெரியுமா? “இது இந்து கடை, இது முஸ்லிம் கடை, இது கிறிஸ்தவர் கடை” என்று ஆரம்பித்தான். சண்டையை மூட்டி விட்டான். ஊர் முழுக்க சண்டை நடந்தது. இரண்டு வருடம் சண்டை நடந்தது. இந்து கடையும் இல்லை, முஸ்லிம் கடையும் இல்லை, கிறிஸ்தவன் கடையும் இல்லை. இரண்டு வருடம் கழித்து வந்து பார்த்தால் எல்லாமே சேட்டு மார்வாடி கடை. எல்லா இடமும் சேட்டு மார்வாடி கடை.

இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு கட்சியை நாம் விட முடியுமா? கோயம்புத்தூர் நிலைமை என்ன ஆகிப்போனது? இன்றைக்கு ஜாதியா மதமா பார்த்து உள்ளுக்குள்ளே கலவரம் வந்து தமிழன் கடை வைக்க முடியவில்லை. சேட்டு மார்வாடி கடையாக இருக்கிறது. சேட்டு மார்வாடி கடையாக மாறிப் போய்விட்டது. அதே மாதிரி மதுரை மாறிவிட வேண்டாம்.

மதுரையில் பாஜக வளர்கிறது என்று சொல்கிறார்கள். பாஜக வளர்கிறது என்றால் தமிழன் கடை எல்லாம் சேட்டு கடையாக மாறிவிட்டது என்று அர்த்தம். கோயிலை சுற்றி யார் கடை வைத்திருக்கிறார்கள்? அவர்கள் வந்ததற்கு அப்புறம்தானே பாஜக வளர்ந்தது? அவர்கள்தானே பாஜகவுக்கு காசு தருகிறார்கள்? தமிழ்நாட்டு கட்சிக்காரன் காசு தருகிறானா? தமிழ்நாட்டு கட்சிக்கு ஓட்டு போடுகிறானா? அப்போது என்ன அர்த்தம்? அவன் ஒரு கட்சியை குஜராத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான், சேட்டு மார்வாடி. அந்த கட்சிக்கு அவன் காசு தருகிறான். அந்த கட்சியை வளர்த்தெடுக்கிறான். அந்த கட்சிக்கு அவன் ஓட்டு போடுகிறான்.

குஜராத்துக்காரன் கட்சியை எதற்கு அதிமுக தூக்கி சுமக்கிறது? நாம் கேட்க வேண்டுமா இல்லையா? நமக்கு நண்பர்கள் அதிமுகவில் இருப்பார்கள் இல்லையா? இருக்கிறார்களா இல்லையா? கேட்போம். “ஏய்யா, நல்ல கட்சியே உனக்கு கிடைக்கவில்லையா? நாட்டில் நல்ல கட்சியே உனக்கு கிடைக்கவில்லையா? குஜராத்திலிருந்து ஒரு கட்சியை கூட்டிக்கொண்டு வந்து இங்கே மார்வாடி சேட்டுக்காரன் கடை போடுவதற்கு ஒரு கட்சியை வளர்த்துவிடுகிறாயே, இங்கே நாளைக்கு ராம. சீனிவாசன் ஜெயித்தால் சேட்டு மார்வாடி கடைதான் இருக்கும்” என்று எச்சரிக்கிறேன். ஆம், இதுதான் இதுதான் கோயம்புத்தூரில் நடக்கிறது.

வானதி சீனிவாசன் ஜெயித்ததற்கு அப்புறம் தமிழனுக்கு கடை கொடுப்பதற்கு ஆள் இல்லை. தமிழனுக்கு கடை கொடுக்க ஆள் இல்லை. ஆனால் சேட்டு மார்வாடிக்குதான் எல்லா கடையும் இருக்கிறது. அதோடு விட்டார்கள் என்றால் பரவாயில்லை. கோயம்புத்தூரில் நமது திண்டுக்கல் ரோடு மாதிரி பழைய தெரு இருக்கிறது, பழைய ரோடு இருக்கிறது. ரங்கய கவுடர் ரோடு என்று பெயர். ரங்கய கவுடர் ரோட்டுக்கு சேட்டு பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன பெயர்? சேட்டு பெயர்.

நமக்கு வடக்குமாசி தெரு, பெருமாள் மகேஸ்வரி தெரு, இப்படி இப்படி தெருக்களெல்லாம் இருக்கிறது. இந்த தெருக்களையெல்லாம் மாற்றி நாளைக்கு சேட்டு பெயராக வைப்பானா மாட்டானா? ராம. சீனிவாசன் வைப்பார். நாளைக்கு மதுரையில் எல்லா தெருவுக்கும் பெயர் சேட்டு மார்வாடி பெயர் இருக்கும். தமிழன் கடை நடத்த முடியாது. “கேட்டால் மார்வாடியும் இந்து, நீயும் இந்து” என்று போய்விடுவான். நாம் போய் வைத்தால், “நீ முஸ்லிமா? அவன் வந்து கிறிஸ்தவனா?” இவன் வந்து இந்து என்று நம்மை பிரிப்பான். தமிழனை மதமாக பிரிப்பான்.

ஆனால் குஜராத்துக்காரனை இந்து என்று சொல்லி குழுவாக ஓட்டு வைத்துக்கொள்வான். இது நடக்கலாமா? சேட்டு மார்வாடியிடம் வேலை பார்க்க முடியுமா? நமது ஆட்கள் வேலை பார்க்க முடியுமா? வியாபாரம் செய்ய முடியுமா? நான் ஒரு நியாயம் கேட்கிறேன். நமது ஆள் இத்தனை கடை வைத்திருக்கிறார்களே, போத்தீஸ் எல்லாம் இருக்கிறதா? இங்கே சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் இருக்கிறதா? எல்லாமே இருக்கிறதா? அந்த கடையில் என்றைக்காவது சேட்டு மார்வாடி வீட்டிலிருந்து பொருள் வாங்குவதற்கு வந்திருக்கிறார்களா ஆட்கள்? தமிழன் கடையில், தமிழன் கடையில், தங்க மயில் ஜுவல்லரி இருக்கிறது, எல்லா கடையும் இருக்கிறதா? இந்த கடையில் சேட்டு மார்வாடிக்காரர்கள் என்றைக்காவது நகை வாங்குவதற்கோ, துணி வாங்குவதற்கோ, பொருள் வாங்குவதற்கோ வந்திருக்கிறார்களா பார்த்திருக்கிறீர்களா? பார்த்தது இல்லையே. ஆனால் நாம் அவன் கடையில் போய் வாங்குகிறோம்.

நம்மை எல்லாம் உடைக்கிறான். ஆனால் குஜராத்துக்காரனை வளர்த்தெடுக்கிறான். நீங்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். நான் கோயம்புத்தூரில் இதையெல்லாம் பார்த்துவிட்டேன். நான் கல்லூரியில் படித்த காலத்தில், கல்லூரியில் படித்த காலத்தில் இதையெல்லாம்தான், எல்லா அநியாயத்தையும் பார்த்துவிட்டேன். இன்றைக்கு கோயம்புத்தூர்காரர்களுக்கு வேறு வழி இல்லை. எல்லா கடையும் பறிபோய்விட்டது. எல்லா கடையும் பறிபோய்விட்டது. சென்னையில் சவுக்கார்பேட்டை அதே மாதிரிதான் ஆகிப்போனது.

இப்படியே விட்டோம் என்றால் நாடு நாசமாகப் போய்விடும். இதை கேட்டால் “பாரத் மாதா கி ஜே” என்று வருவார்கள். உன் பாரத் மாதா கி ஜே டெல்லியில் வைத்துக்கொள், குஜராத்தில் வைத்துக்கொள். இது தமிழ் தாய் நடமாடிய மண். இது தமிழனுடைய மண். இங்கே தமிழ் மொழிதான் இருக்கும். தமிழ்நாடுதான் எங்கள் மண். எங்கள் மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டை நாங்கள் தூக்கிப் பிடிப்போம்.

நரேந்திர மோடி தற்போது ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார். என்னவென்றால், உத்தரப் பிரதேசத்துக்கு, பீகாருக்கு மூன்று மடங்கு எம்.பி-க்களை அதிகம் செய்துவிட்டார். தமிழ்நாட்டுக்கு ஒன்றையும் காணோம். 70 எம்.பி இருக்கிற உ.பி-யில் இப்போது 150 எம்.பி கொண்டு வந்துவிட்டார்கள். 40 எம்.பி இருந்த பீகாருக்கு 70 எம்.பி கொண்டு வந்துவிட்டார்கள். இன்றைக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆறு மாநிலம் சேர்ந்தால் கூட பீகார், உத்தரப் பிரதேசத்தினுடைய எம்.பி-க்களின் எண்ணிக்கைக்கு சமமாக முடியாது.

இனி தமிழ்நாட்டுக்காரன் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர முடியாது. நமக்கு கடல் இருக்கிறதா? மீனவன் இருக்கிறானா? மீனவனுக்கு ஒரு சட்டம் கொண்டு வந்தான் மோடி சர்க்கார். மீனவனுக்கு சட்டம் கொண்டு வந்தானே, அந்த சட்டத்தை எழுதியவன் யார் தெரியுமா? ஆதரித்தவன் யார் தெரியுமா? உத்தரப் பிரதேசக்காரனும், பீகார்காரனும், மத்திய பிரதேசக்காரனும். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சட்டம் கொண்டு வந்தார்கள். இந்த மூன்று மாநிலத்துக்கும் கடலே கிடையாது. கடலே இல்லை. கடலே இல்லாதவனெல்லாம் நமது ஊருக்கு சட்டம் கொண்டு வந்துவிட்டான். நல்லா கவனமாக இருங்கள். இவர்களை வளர விடாதீர்கள். தோற்கடியுங்கள். தாமரைக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது. தாமரைக்கு தண்டு கூட முளைக்கக் கூடாது. மொத்தமாக என்ன செய்து தமிழ்நாட்டுப் பக்கம் வரக்கூடாது என்று தமிழர்கள் அனுப்ப வேண்டும்.

திருப்பரங்குன்றத்தை வைத்து கலவரம் செய்யப் பார்த்தார்கள். எச். ராஜா என்ன சொன்னார்? “சிக்கந்தர் தர்காவை பாபர் மசூதியைப் போல இடிப்போம்”. பாபர் மசூதி இடித்ததற்கு பிறகு உத்தரப் பிரதேசம் உருப்பட்டதா? எதற்கு தமிழ்நாட்டுக்கு வருகிறாய்? தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யாதவன். தமிழ்நாட்டுக்கே வேண்டாம். புரிகிறதா? தாமரைக்கு தப்பித் தவறி ஓட்டு போட்டுவிடாதீர்கள். ஓட்டு போட்டாலும் மெட்ரோ வராது, கலவரம்தான் வரும். சேட்டுக்காரன் கடை வைப்பான்.

அந்த வகையில் பூமிநாதன் அவர்களை நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் சட்டமன்றத்துக்கு வெற்றி வேட்பாளராக உள்ளே நுழைந்து, இங்கே போட்டியிடுகின்ற அந்த ராம. சீனிவாசன் கட்டுத்தொகை இழக்கக்கூடிய வகையில் ஒரு தேர்தலை நீங்கள் வெற்றிகரமாக மாற்றித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »