பழங்குடி மக்களின் போராட்டக் குரலாக இருந்த பேராசிரியர் சாய்பாபா மறைந்தார். பழங்குடியினரின் நில வளத்தைச் சுரண்டும் பெருநிறுவனக் கொள்ளையர்களை அம்பலப்படுத்திய ஜனநாயகவாதி. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தும், நேர்மையானக் கருத்தியலில் நெஞ்சுறுதி கொண்ட போராளி. பாஜக அரசு அஞ்சும் இடதுசாரிக் கருத்தியலில் வலுவுள்ளவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் சாய்பாபா.
பேராசிரியர் சாய்பாபாவின் வயது 57. நான்கு வயதிலேயே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர். உடல் ஊனமுற்ற நிலையிலும் முனைவர் பட்ட ஆய்வை முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியானார். மிக சிறந்த எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 2009-ம் ஆண்டில் பசுமை வேட்டை (ஆபரேசன் கிரீன் ஹண்ட்) என்ற பெயரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, பெரு நிறுவனங்களின் கனிமக் கொள்ளைக்கு நிலத்தை கொடுக்க மறுத்த பழங்குடி மக்களை, இராணுவத்தை வைத்து அப்போதைய காங்கிரஸ் அரசு வேட்டையாடிய போது, படுகொலை செய்யப்பட்ட பழங்குடி மக்களுக்கான நீதி கோரிய போராட்டங்களை நடத்தினார். உடல் பலகீனத்தை கருத்தில் கொள்ளாமல் பல நகரங்களுக்கு சென்று பரப்புரை நிகழ்த்தினார். சர்வதேச ஊடகங்களில் இந்திய ராணுவம் பழங்குடி மக்களுக்கு செய்த கொடுமைகளை துணிவுடன் அம்பலப்படுத்தினார்.
பேராசிரியர் சாய்பாபா மீது சுமத்தப்பட்ட குற்றம்:
மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரின் வீட்டை 2013-ல் சோதனை செய்தனர். அவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பின் நடவடிக்கைகளில் இணைந்திருந்த ஆதாரம் இருந்ததாகவும் கூறப்பட்டு 2014, மே 9-ல் சாய்பாபா கைது செய்யப்படுகிறார். ‘உங்கள் வாயை அடக்கவே கைது செய்கிறோம்’ என்று காவல்துறை அதிகாரி கூறியதாக சாய்பாபா பின்னாளில் பிணையில் வெளிவந்த போது பதிவு செய்தார். காங்கிரஸ் அரசு கருத்து சுதந்திரத்தைக் குற்றமாக கருதியதால் தன்னைக் கைது செய்ததாகப் பேசினார். அவருடன் சேர்த்து ஒரு பத்திரிக்கையாளர், JNU மாணவர் ஒருவர் உட்பட ஐந்து பேர் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டமான உபா (UAPA) சட்டத்தின் கீழ் 2014-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சாய்பாபாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்ட மின்னணு சாதனங்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக சாய்பாபா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர். 90% உடல் ஊனமுற்ற ஒருவரைப் பாதுகாப்பதற்கு உரிய வசதிகள் சிறையில் இல்லை என்று நீதிபதியால் 2015-ஜூலையில் பிணை வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவர் கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் 2016-ஏப்ரலில் பிணை கொடுக்கப்படுகிறது.
அதன் பின்னர் மகாராஷ்டிராவின் கட்சிரோலி என்ற பகுதியில் நடந்த ஒரு கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மாவோயிஸ்ட்களும், நக்சல் அமைப்புகளும் தான் காரணம் எனக் குற்றம் சுமத்தியது அரசு. இதற்கு புரட்சிகர ஜனநாயக முன்னணியின் செயலாளராக இருந்த சாய்பாபா திட்டம் வகுத்துக் கொடுத்தாரெனக் கூறப்பட்டு மீண்டும் 2017-ல் கைது செய்யப்பட்டார். புரட்சிகர ஜனநாயக முன்னணி என்பது ஒரிசா மற்றும் ஆந்திராவில் மட்டுமே தடை செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உடல் 90% அளவிற்கு ஊனமுற்றிருந்தாலும் இவரின் சிந்தனை தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை ஆயுள் தண்டனை விதிப்பதற்கான காரணமாக முன்வைத்தார் நீதிபதி.
சாய்பாபாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களாக ஊடகங்களில் காவல்துறையினரால் 13 கடிதங்கள் வெளியிடப்பட்டது. அதில் 7 கடிதங்கள் காம்ரேட். பிரகாஷ் (COMRADE PRAKASH) என்பவராலோ அல்லது அவருக்கோ எழுதப்பட்டுள்ளது. அதில் ராசீவ் காந்தியைப் போல மோடியையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டதின் ஆவணம் இருந்ததாக காவலர்கள் கூறினர். பேராசிரியர் சாய்பாபாதான் பிரகாஷ் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இவர் மார்ச் 7, 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் 2018-ல் எழுதப்பட்டதாக இந்த கடிதங்களை காவல்துறையினர் வெளியிடுகின்றனர். 2017-ல் சிறை சென்றவரை 2018-ல் கடிதங்கள் எழுதினார் என்று புனைந்த அரசு மற்றும் காவல்துறையினரின் உள்நோக்கத்தை மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கண்டித்தனர்.
சாய்பாபாவிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கின் மீது நடந்த விசாரணையில்தான், இந்த அமர்வு அவரை 14 அக்டோபர் 2022 அன்று விடுவித்தது. உபா (UAPA) சட்டத்தினுடைய கடுமையான விதிகள், சாய்பாவின் வழக்கிற்கு செல்லாது என்று எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பளித்தது மும்பை உயர்நீதிமன்றம்.
இதனை எதிர்த்து உடனே மகாராஷ்டிரா அரசும், தேசிய புலனாய்வு முகமையும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றமும் மற்ற எந்த வழக்கிற்கும் அளிக்காத முக்கியத்துவமாக இந்த வழக்கை சனிக்கிழமை என்ற போதிலும், உடனே விசாரணைக்கு எடுத்தது. எம்.ஆர்.ஷா உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்த மனுவினை விசாரித்தது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், ‘உடல் ஊனமுற்றவர் என்ற காரணத்தால் மட்டுமே, தேசத்திற்கு எதிராக யுத்தம் செய்பவர்களை விட்டு விட முடியாது‘ என்று சொல்லி, சாய்பாபா உள்ளிட்டவர்களை சிறைக்கனுப்பினர்.
சாய்பாபாவின் விடுதலைக்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா மோடியை வானளாவ புகழ்ந்தவர். நாம் நேசிக்கும் பிரபலமான, துடிப்பான, தொலைநோக்கான தலைவர் என்றும் மோடியே கதாநாயகர் என்றும் தான் கலந்து கொண்ட விழாக்களில் பேசியவர். அவரின் தீர்ப்பினால்தான் மும்பை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட வழங்கிய தீர்ப்பு உடனடியாக தடை விதிக்கப்பட்டது.
சாய்பாபா எதிர்கொண்ட இன்னல்கள் :
சக்கர நாற்காலியுடன் வாழும் சாய்பாபா சிறைவாசத்தில் இன்னும் பல நோய்களைப் பெற்றார் . முதுகுத் தண்டுவட பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சனை, இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளானார் சாய்பாபா. அவரின் உடல் நிலைக்கு அதிகமான வெப்ப நிலை தாக்கும் அறை ஆகாது என்ற மருத்துவர்களின் பரிந்துரையையும் மீறி கடும் வெயில் தாக்கும் ஹண்டா என்னும் முட்டை வடிவ சன்னல்களே இல்லாத அறையில்தான் அடைத்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் குளிரும், வெயில் காலத்தில் வெப்பமும் அதிகமாக இருக்கும் இந்த அறையினால் அவருக்கு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் அவர் உடல் நலனுக்கு ஏற்ற சிறப்பு உணவுகளும் ரத்து செய்யப்பட்டன. பல உடல் உபாதைகளுக்கு ஆளான இவருக்கு அஞ்சி சிறைச்சாலையில், இவரது குளியலறை, கழிப்பறை போன்றவை கூட தெரியுமளவுக்கு கண்காணிப்பு கேமராக்களை சிறை நிர்வாகம் வைத்தது. தனியுரிமை மீதான கொடுஞ்செயல் இதுவென உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் சாய்பாபா. உடல் ரீதியான சித்திரவதையோடு மனரீதியான சித்திரவதைகளும் அவருக்கு தொடர்ந்தன. இதனால் அவரின் உடல் மிகவும் பலகீனமாக கைகளிலும் நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாக்பூர் சிறையிலிருந்து ஹைதராபாத் மத்திய சிறைக்கு சாய்பாபாவை மாற்றக் கோரிய உறவினர்களின் வேண்டுகோளையும் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
2016-ல் அவருக்கு பிணை வழங்கப்பட்ட போது அவர் பணி செய்த கல்லூரியில் நடந்த விழாவில் அவரின் மீது கொண்ட நன்மதிப்பு கொண்டிருந்த பல மாணவர்களின் அழைப்பின் பேரில், கலந்து கொள்ள வந்தார் சாய்பாபா. அப்போது ஏபிவிபி என்கிற ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவ அமைப்பு அவரைத் தடுத்து கூச்சலிட்டது. இதனால் தற்காலிக பணிநீக்கத்திலிருந்த அவர் கல்லூரி நிர்வாகத்தால் 2021-ஆம் ஆண்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சிறையில் இருக்கும் பொழுது இவரது தாய் மறைந்தார். தாயாரின் இறுத நிகழ்வுக்கு பங்கேற்கக் கூட இவர் அனுமதிக்கப்படவில்லை. சிறு வயதில் பள்ளிக்கு தன்னை தூக்கி சுமந்து சென்ற தாயிற்கு இறுதி மரியாதை செலுத்தக் கூட முடியவில்லை என ஒரு நிகழ்வில் கண்கலங்கிப் பேசியிருந்தார் சாய்பாபா.
மோடி அரசின் சூழ்ச்சிகள் :
பழங்குடி மக்களின் நிலங்களை அடித்துப் பிடுங்கி அம்பானி, அதானி போன்ற பனியா பெருநிறுவனக் கொள்ளையர்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து, கணினி போன்ற மின்னணு கருவிகளைக் கைப்பற்றி, கொலைவழக்கு புனைவதற்கேற்ற சாட்சியங்களை செருகுவதற்கென்றே, பெகாசிஸ் போன்ற செயலிகளை பல அது கோடிகளை செலவு செய்து வாங்கியிருக்கிறது மோடி அரசு.
மோடி அரசினால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங். ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென், கவிஞர் வரவரராவ், வெர்னன் கல்சால்வெஸ், கௌதம் நவ்லக்கா, அருண் ஃபெரைரா, சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே என நீளும் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும், பாஜக அரசின் மக்கள் விரோதங்களை விமர்சித்த பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என மிகச் சிறந்த அறிவாளர்கள். சாய்பாபா கைதைக் கண்டித்த அருந்ததி ராய்க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசு வழங்கியது நாக்பூர் நீதிமன்றம்.
சிறையில் தண்ணீர் அருந்த ஒரு உறிஞ்சு குழல் கூட கொடுக்காமல் சிறையிலேயே வைத்துக் கொன்ற 87 வயது முதியவரான, மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி முதல் 90% உடல் உபாதைகள், சிறைக் கொடுமைகளை தாங்கியும் நேர்மை தவறாத சாய்பாபா வரையுள்ள சிந்தனையாளர்களின் கருத்தியல்களைக் கண்டு முதலாளித்துவ வலதுசாரி அரசான மோடி அரசு அச்சமடைந்தது. பழங்குடி மக்களுக்கான குரல்களாக இருப்பவர்களை அர்பன் நக்சல்கள் என்றார் பார்ப்பனிய, பனியா நிறுவனங்களின் ஊதுகுழலான மோடி. இயற்கையை நேசித்து, கனிம சுரண்டலை எதிர்த்து, பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான மனிதர் சாய்பாபா.
சிறையிலிருந்து வெளிவந்த ஒரு வருடத்திற்குள் அவரின் மரணம் நேர்ந்திருக்கிறது. 57 வயதேயான சாய்பாபாவின் உடல்நிலை மோசம் அடைந்ததற்கு சிறையில் அவர் அனுபவித்த துன்பங்களே காரணமாகி இருக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதிகளால் கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாதவர் சாய்பாபா. உடலியல் சீரழிவுகளை ஏற்படுத்தி நிறுவனப் படுகொலை செய்திருக்கிறது பாஜக அரசு.
அவரின் அறிவாற்றலை, மக்களுக்கான செயல்பாட்டினை, சமரசமற்ற போராட்டங்களை நினைவு கூர்ந்து சாய்பாபாவிற்கு வீரவணக்கம் செலுத்துகிறது மே 17 இயக்கம்.