மஞ்சள் பட்டாணி இறக்குமதி: உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் மறைமுக போர்

இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் “உள்ளூர் பொருட்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுப்போமென்று” வீரவசனம் பேசினார். இப்போது கூகுளுக்கு மாற்றாக உள்ளூர் மென்பொருளான ஜோகோ (ZOHO) நிறுவனத்தின் மின்னஞ்சலையே இனி பயன்படுத்த வேண்டுமென்று ஒன்றிய அரசு தனது அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி 08.10.25 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தனது மின்னஞ்சலை மாற்றிவிட்டதாக தனது எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். இப்படி உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்போம் என்று பேசும் பாசிச பிஜேபியின் மோடி அரசு தான் மஞ்சள் பட்டாணி (Yellow Peas) எனும் கடலை பருப்பு, துவரம் பருப்புக்கு மாற்றான ஒரு பருப்பு வகையை வெளிநாட்டிலிருந்து மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து சொந்த நாட்டு விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்தியாவில் தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் அவர்களின் அன்றாட உணவு தேவைக்கும் மற்றும் இனிப்பு வகைகளுக்கும் இந்த பருப்புகள் அத்தியாவசியமானது. ஆகவே தான் வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகளவிலான பருப்பு வகைகள் விவசாயிகளால் பயிடப்படும். அதுவும் தற்போது ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இனிப்புகள் செய்ய கடலை மாவு அதிகமாக தேவைப்படும். அது இந்த பருப்புகளிலிருந்து தான் கிடைக்கும்.

இப்படி வடமாநிலங்களில் பெரும்பாலான மக்களின் தேவையாக இருந்த பருப்பு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான், 2014இல் ஒன்றிய மோடி அரசு இரஷ்யா, கனடா, உக்ரைன் போன்ற நாடுகளிலிருந்து இந்த ’மஞ்சள் பட்டாணி’ எனும் பருப்பு வகையை இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்தது. அப்போதே விவசாயிகள் இதற்கு மிககடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஆனால் மோடி அரசோ விவசாயிகளை பொருட்படுத்தாமல் இறக்குமதியை தொடர்ந்தது.

இந்நிலையில் தான் தற்போது இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் பட்டாணிக்கான இறக்குமதி வரி (Import Duty) முழுவதுமாக நீக்கியிருக்கிறது மோடி அரசு. இதன் மூலம் சந்தையில் மிகக் குறைந்த விலையில், அதாவது உள்ளூரில் தயாரிக்கப்படும் பருப்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக குவிண்டாலுக்கு ரூபாய் 7000/- என நிர்ணயித்துவிட்டு, இப்போது அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் வரியே இல்லாமல் குவிண்டாலுக்கு 3000/-க்கு இந்த இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகள் சந்தையில் கிடைக்கும்.  இதனால் வணிகர்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பருப்புகளை கொள்முதல் செய்யாமல், இந்த இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளைத்தான் வாங்குவார்கள். இதனால் உள்ளூரில் பயிரிடப்பட்ட பருப்புகள் தேங்கி பின்  அழிந்து விவசாயிகளை கடன் தொல்லைக்கு தள்ளும். இவ்வளவு பெரிய மோசடியை மோடி செய்துவிட்டு, உள்ளூர் பொருட்களுக்கு மாறுங்கள்  என்றும், காந்தியின் சுதேசிக் கொள்கையை கடைபிடியுங்கள் என்றும் வாய்கூசாமல் பொய் பேசுகிறார்கள் மோடியும் அவரது பாசிச பாஜக அரசும்.

சரி, இந்த இறக்குமதி செய்யப்பட்ட பருப்பால் மக்களுக்கு பருப்பின் விலை குறையுமே என்றால், இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஏனென்றால் வரிகள் இல்லாமல் மிக குறைந்த விலைக்கு இவர்கள் வாங்கும் இந்த இறக்குமதி செய்ப்பட்ட பருப்பை நேரடியாக அரசே வாங்கி மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கொடுத்தால் ஒருவேளை மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதை இறக்குமதி செய்வது பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள். இவர்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துடன் தான் விற்பார்கள் என்பது சிறு குழந்தைக்குக்கூட தெரியும்.

இந்தியாவில் இந்த பருப்பை 489 நிறுவனங்கள், உலகளவில் 513 சப்ளையர்களிடமிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இதில் ஜூன் 2024 முதல் மே 2025 வரையிலான காலகட்டம் வரை அதானி வேர்ஹவுசிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நேரடியாகவே சுமார் 19% இறக்குமதி செய்திருக்கிறது. மேலும் சில துணை நிறுவனங்கள் மூலமும் இறக்குமதி செய்திருக்கிறது. ஆக மொத்தத்தில் சுமார் 45% இறக்குமதி அதானி நிறுவனங்களில் மூலம் தான் நடைபெறுகிறது.

ஏற்கனவே அதானி நிறுவனத்திற்காகத்தான் விவசாயிகளை வஞ்சிக்கும்  மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்தது. பின்னர் விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் பயந்து போய் பின்வாங்கிய மோடி அரசு. தற்போது அதானிக்காக மறைமுகமாக விவசாயத்தை அழிக்கும் வேலையை செய்கிறது. இதையும் நாம் எதிர்த்து போராடுவோம்.

பார்ப்பனியத்தின் அதிகார மேலாண்மைக்காகவும், அதானி அம்பானி போன்ற மார்வாடி குஜராத்தி பனியாக்களின் பொருளாதார நலனுக்காகவும் இந்தியாவின் ஏழை எளிய மக்களின் வாழ்வை அடமானம் வைக்க பாசிச பாஜக மோடி அரசு முடிவெடுத்தவிட்ட பின்பு, இந்திய ஒன்றியத்தில் இருக்கும் ஓவ்வொரு தேசிய இன மக்களும் ஒன்றாக இணைந்து பார்ப்பனிய பனியா மேலாதிக்கத்தை வீழ்த்துவோம். அதுவே இந்திய ஒன்றியத்தில் வாழும்  மக்களை காக்கும் வழியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »