பாஜக ஆளும் மாநிலங்களில் மூன்று வேளை உணவும் எட்டாத நிலை

பாஜகவின் இந்துத்துவ ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஏழைகள் மூன்று வேளை கூட உணவு கிடைக்காத நிலையில் இருப்பதாக நிதி ஆயோகின் தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2015இல் மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருந்த திட்டக்குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை கொண்டு வந்தது பாஜக அரசு. ஆண்டுதோறும் உலகளாவிய குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களை பொருளாதாரம் மட்டுமின்றி கல்வி, மருத்துவம் எனப்பல்வேறு துறைகளில் தரவரிசைப்படுத்துகிறது நிதி ஆயோக். மேலும் இது குறித்தான அறிக்கைகளையும் வெளியிடுகின்றது.

அண்மையில் (சூலை 20, 2024 அன்று) நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ என்ற குறியீட்டில், இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் ’தமிழ்நாடு’ தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை வெளியிட்டுள்ளது. அதேபோல் மற்றொரு ஆய்வான வீட்டு உபயோக செலவினக் கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey-HCES)படி, இந்தியாவில் 56% மக்களுக்கு மட்டுமே மூன்று வேளையும் உணவு கிடைப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில் “மாநில அளவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 98% மூன்று வேளையும் உணவு கிடைக்கும் நிலையில், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தானில் வெறும் 31% மட்டுமே மூன்று வேளையும் உணவு கிடைப்பது” அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு உபயோக செலவினக் கணக்கெடுப்பின் (HCES) ஆய்வறிக்கையில் மூன்று வகையாக பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெரும் பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் மிக முக்கியமான இருபத்தொன்று மாநிலங்களில் ஆய்வு எடுக்கப்பட்டது. அதில் நாட்டில் 44% மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்காத அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. மாநில அளவில் கணக்கிடும் பொழுது இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.

அதில் நாட்டிலேயே தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஏழைகள், நடுத்தர குடும்பம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் 98% மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது. இந்த பட்டியலில் மோடியின் சொந்த மாநிலமான ’குஜராத்’ கடைசி இடத்தில் உள்ளது. இதேபோல் பாஜக ஆட்சி நடைபெறும் உத்திரப்பிரேதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி ஐந்து இடத்தில் உள்ளன.

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களில் ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டில் 97%, கேரளாவில் 98% பேருக்கு மூன்று வேளையும் உணவு கிடக்கிறது. ஆனால் இந்துத்துவத்தை முன்னிறுத்தும் மாநிலங்களான உத்திரப் பிரதேசத்தில் 41%, மத்தியப் பிரதேசத்தில் 39%, மராட்டியம் 34%, ராஜஸ்தானில் 34%, குஜராத்தில் 33% ஏழைகளுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையிலும் முன்னணியில் இருப்பது ஆய்வு முடிவில் உறுதியாகி இருக்கிறது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவுகள் தமிழ்நாடு (2023-2024) எந்ததெந்த இடங்களில் உள்ளது என அட்டவணையில் பார்க்க:

எண்வளர்ச்சி இலக்குக்கான படிகள்தமிழ்நாடு சராசரிதேசிய சராசரி
1வறுமை ஒழிப்பு92%72%
2பட்டினியின்மை75%52%
3ஆரோக்கையம், நல வாழ்வு77%77%
4தரமான கல்வி76%61%
5பாலின சமத்துவம்53%49%
6சுத்தமான நீர், சுகாதாரம்90%89%
7மலிவான தூய்மையான எரிசக்தி100%96%
8பொருளாதார வளர்ச்சி81%68%
9தொழில், புத்தாக்கம் & கட்டமைப்பு67%61%
10நிலையான நகரங்கள் & சமூகங்கள்81%68%

மேலும் தமிழ்நாட்டில் பேறுகால இறப்பு மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் தேசிய சராசரியை விட மிக சிறப்பாக உள்ளது என பாராட்டியுள்ளது. இதுமட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 81.5% (தேசிய சராசரி 51.6%) ஆகவும் மற்றும் உயர்கல்வி மாணவர்களின் சேர்க்கை 47% (தேசிய சராசரி 28.4%) ஆகவும் உள்ளது.

மேலும் கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ’நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள்’ பற்றிய நான்காவது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம் விட, இந்த 2023-24-ம் ஆண்டுக்கான அறிக்கை தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதை கூறியுள்ளது.

குறிப்பாக, வறுமை ஒழிப்பில் 92% பெற்று மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டு புள்ளிவிவரங்கள் நிதி ஆயோக் வெளியிட்ட 14 இலக்குகளில் 13 இலக்குகள் பெற்று தமிழ்நாடு மாநிலம் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பின் தங்கிய நிலையே உள்ளதை இந்த இரு ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு விட்டதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், அதையெல்லாம் பொய் என நிரூப்பிக்கும் வகையில் இந்த (HCES) நடத்திய ஆய்வில் ’இந்துஸ்தான் டைம்ஸ்(HT)’ பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. அதாவது நாட்டில் கிட்டத்தட்ட சரிபாதி மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கூட கிடைக்காத நிலை நீடிக்கவே செய்கிறது. பாஜகவின் தவறான கொள்கைகளாலும் திட்டங்களாலும் அம்மாநில மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சிரமப்படுகின்றனர் என்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது.

இந்நிலையில் தான் ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் திட்டங்களுக்கும் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 27.07.2024 அன்று மோடி தலைமையில் நடைபெறும் ’நிதி ஆயோக்’ கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே அதிக நிதியளித்து, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களிடம் நிதி பாரபட்சம் காட்டுவதாக கருதி, தமிழ்நாடை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் முதல்வர்களும் புறக்கணித்துள்ளனர். தில்லி முதல்வர் சிறையில் உள்ளதால் அந்த அரசும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்திய மோடி, ’2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே இலக்கு’ என கூறுகிறார். ஆனால் இன்னும் வட மாநிலங்கள் தென் மாநிலங்களை விட பின்தங்கிய நிலையில் இருப்பதையே இந்த ஆண்டு நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முறையான நிதிப் பங்கீடு கிடைக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் திராவிட கொள்கை கொண்ட ஆட்சிமுறைகளே அதன் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன என்பது இந்த ஆய்வுகளின் வழியே தெளிவாகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காமராசர் கல்விக்காக பள்ளியில் மதிய உணவு ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை அரசு அதை தொடர்கிறது, இன்னும் சேர்த்து சிறப்புடன் காலை உணவு தரும்வகையில் இத்திட்டம் உயர்ந்துள்ளது. அதனால் வளர்ச்சிக்கான படிகளை தமிழ்நாட்டின் திராவிட கொள்கை சாதித்தும் காட்டியுள்ளது.

முற்போக்கு சிந்தனைக்கொண்ட மாபெரும் தலைவர்களால் தென்னிந்திய மாநிலங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, நல்வாழ்வு, சுகாதாரம், தொழில், கட்டமைப்பு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வளர்ச்சிக்கான படிகளை எட்டியுள்ளது.

இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லும் பாஜக, நாட்டில் 50% மக்கள் தொகையில் முக்கால் பாகம் இந்துக்கள் தானே இவர்கள் பார்வையில், இவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்பது ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு செய்யும் துரோகம். ஒருவனுக்கு உணவை கொடுத்தால் தானே உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பான், தேசத்தை காப்பான். ஆனால் எப்போதும் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கிலே மதவெறி, சாதிவெறி ஊட்டும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ கும்பல்களால் பாஜக வளர்க்கப்பட்டு, பிற்போக்கு சனாதன சிந்தனைகளில் ஊறி, தற்போது இவர்கள் ஆளும் மாநிலங்களில் மூன்று வேளை உணவு உண்ணக்கூட கடினப்படுகிறார்கள் என்ற நிலைமையே இந்த ஆய்வு உணர்த்துகிறது.

ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான போதிய நிதி பங்கீடு இல்லை என்பது எவ்வளவு பாரட்சமானது. புயல், மழை, பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் போதும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை, தேசிய பேரிடராக வரும்போது எட்டிப்பார்ப்பதில்லை, வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. புதிய திட்டங்களை அறிவிக்காமல், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதியும் வழங்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு. 

மோடி அரசின் தேசிய கல்விக்கொள்கையை மாநில அரசு ஏற்காததால் கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது மோடி அரசு. தமிழ்நாட்டிற்கு நிதி தேவை என்று தெரிந்தும் வஞ்சகத்தோடு நிர்மலா சீதாராமன் செயல்படுகிறார். ’கோயில் உண்டியலில் பணம் போடாதீர்கள் அர்ச்சகர் தட்டில் போடுங்கள்’ என சொல்லும் போதே நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட வெறுப்பும், பார்ப்பனிய நலன் தன்மையும் அப்பட்டமாக தெரிகிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வர் ஸ்டாலினும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதேப்போல் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஜார்கண்ட, பஞ்சாப் முதல்வர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

“நிதி பகிர்வு இல்லையெனில் எதற்கு கூட்டம்? கட்டமைப்பு இல்லை, முறையான கூட்டாச்சி செயல்பாடுகள் இல்லையெனில் இந்த நிதி ஆயோக்கை கலைத்துவிடுங்கள்” என அக்கூட்டத்தில் பங்கெடுத்த மேற்குவங்க முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் என்று கூறி பாஜக கொண்டு வந்த நிதி ஆயோக், இன்று எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அமைப்பாக மாறி இருக்கிறது. மாநிலங்களின் உரிமையைப் பற்றி பேசாமல் பாஜகவின் திட்டங்களை பறைசாற்றும் இடமாக நிதி ஆயோக் கூட்டம் மாறி இருக்கிறது.

தென் மாநில மக்களின் வரிப்பணம் வட மாநிலங்களுக்கு செலவிடப்பட்டதா? அவ்வாறெனில் தொடர்ந்து நாம் செலுத்தும் வரி யார் நலனுக்காக? எனும் கேள்வி மக்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது.

நூற்றாண்டு காலத்திற்கு முன்பே நீதிக்கட்சி காலத்தில் மதிய உணவை அறிமுகப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்தது நீதிக்கட்சி. சுமார் 20,000 பள்ளிகள் துவங்கப்பட்டன. அடுத்து காமராசர் ஆட்சிக் காலத்தில் நீதிக்கட்சி காலத்தில் துவங்கி, இராஜாஜி ஆட்சியில் மூடப்பட்ட 16000 பள்ளிகள் மீண்டும் துவங்கப்பட்டு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மாணவர்கள் மட்டுமல்ல, உணவுக்காக கையேந்தும் நிலையில் நீடித்திருந்த பண்ணையார்களிடம் இருந்து மீண்டு வர, அடுத்தடுத்து பொது விநியோகத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு தடையில்லாமல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பசியாறிய மக்கள் வறுமையிலிருந்து மீள, பிள்ளைகள் பள்ளிக்கு செல்லலாயினர்.

இவ்வாறு படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ்நாட்டில் கல்லூரிக்குச் செல்வோரின் உயர் கல்வி விகிதம் 70% மேல் எட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் 2047-க்குள் 50% எட்டுவோம் என இலக்கு நிர்ணயிக்கும் போது, தமிழ்நாடு என்றோ அந்த இலக்கை அடைந்து விட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் தமிழ்நாட்டு மாடலை பின்பற்றாமல், குஜராத் மாடல் என திட்டமிட்டே இந்துத்துவ கூட்டம் ஆர்ப்பரித்து நின்றதே இன்று அம்பலமாயிருக்கிறது. 52% கூட மூன்று வேளை உணவு உண்ணாதவர்கள் குஜராத்தில் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »