மோடி ஆட்சியில் பெருகும் வேலைவாய்ப்பின்மை -ஓர் அலசல்

அண்மையில் இந்தியாவில் நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை இரு வேறு நிகழ்வுகள் மூலம் சுட்டிக்காட்டலாம். மும்பையில் M.Com, BBA, BA படித்த பட்டதாரிகள் ஏர் இந்தியாவில் சரக்கு பெட்டிகளை ‘ஏற்றும்’ (Loader) பணிக்கு விண்ணப்பித்தது முதல் நிகழ்வு. 600 காலியிடங்களுக்கு பணி விண்ணப்பங்களை நேரில் கொடுப்பதற்காக 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடியதால் மிகப்பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த இளைஞர்களில் பலர் மயங்கி விழும் சூழலும் ஏற்பட்டது.

மும்பையில் நடந்த இந்த நிகழ்வைப் போன்றே குஜராத்தின் அங்கலேஷ்வரிலும் நடந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 40 பதவிகளுக்கான நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையே தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வேளையில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் மோடியின் ‘மாடல் மாநிலமான’ குஜராத்திலும் நிகழ்ந்தவை இவை.

இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் ‘recession’ எனப்படும் மந்த நிலை, ஆட்குறைப்பு, தொழிலாளர் பணிநீக்கம் என ஒவ்வொருநாளும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவிலும் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த மே2024 இல் 7% ஆக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் ஜூன்2024 இல் 9.2% ஆக அதிகரித்துள்ளது. 

CMIE அமைப்பு போன்றே பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை உறுதி செய்துள்ளபோது, ஒன்றிய பாஜக அரசு வழக்கம்போல் தன் இயலாமையை மூடி மறைக்கிறது.

‘பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் வேலையின்மை விகிதத்தை 6%இல் இருந்து (2022-23 ஆண்டில்) 3.2% ஆகக் குறைத்து விட்டோம்’ என்று நாடாளுமன்றத்தில் கூறினார் நிர்மலா சீதாராமன். ஆனால் முன் எப்போதையும் விட தற்போது ‘வேலையின்மை‘ எனும் சிக்கல் இளைஞர்களை மிக அதிகமாக பாதித்துக் கொண்டிருக்கிறது.

‘அண்மைய தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ பரப்புரையைப் பின்னுக்குத் தள்ளி மோடியின் வாக்கு வங்கியைப் பதம் பார்த்தது இந்தியாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையே‘. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 140 கோடியில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலை தேடும் இளைஞர்கள். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கல்லூரிகளில் இருந்து வேலைவாய்ப்புக் கனவுகளோடு வெளிவருகிறார்கள். ஆனால் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் ஒன்றிய பாஜக அரசு செய்த பல நிர்வாக சீர்கேடுகள் இந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை சிதைத்திருக்கின்றன.

இன்று இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குப் பின்னால் மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, முன்னறிவிப்பின்றி கொரோனா கால பொதுமுடக்கத்தை அறிவித்தது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியது, ஒப்பந்த ஊழிய முறையைக் கொண்டு வந்தது,  GST வரி கொண்டு வந்தது போன்ற பல காரணங்கள் உள்ளன. இவற்றில் GST, பணமதிப்பிழப்பு, பொதுமுடக்கம் ஆகியவை ‘பொருளாதார பேரழிவுகள்’ என்றே வல்லுநர்களால் கூறப்பட்டன.

இந்த பொருளாதார பேரழிவுகளின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அண்மையில் தனது சுதந்திர தின உரையில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதாகக் கூறினார் மோடி. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் அம்பானி வீட்டுத் திருமணம் நடந்த இதே இந்தியாவில், மூன்றில் ஒரு விழுக்காடு மக்கள்தொகை நாளொன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு இரு வேளை உணவிற்கும் ஒரு புட்டி தண்ணீருக்குமே பத்தாது. மேலும்  உணவு/தண்ணீர் நீங்கலாக வீட்டு வாடகை, படிப்பு செலவு, பயண செலவு, சுகாதாரம் என இன்னும் பல செலவுகளுக்கும் பெருன்பான்மை நடுத்தர வர்க்க மக்கள் திண்டாட வேண்டிய சூழலே இந்தியாவில் நிலவுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற மோடி நிர்வாகத்தின் பொருளாதார பேரழிவுகள் (GST, பணமதிப்பிழப்பு, பொதுமுடக்கம்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பெருமளவில் பாதித்தது. பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தையே குலைத்துப் போட்டது. தேர்தலில் இந்துத்துவ பரப்புரையில் மட்டுமே கவனம் செலுத்திய பாஜகவிற்கு வேலைவாய்ப்பின்மை வேறொரு முடிவை வழங்கியது.

வேலைவாய்ப்புகள் குறைந்து போனதற்கு சான்றாக மோடி அரசின் பொய்த்துப்போன ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கூறலாம். பாஜக அரசு பிரம்மாண்டமாக பரப்புரை செய்து இளைஞர்களின் வாக்கு வங்கியை குறி வைத்து கொண்டு வந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தற்போது பத்தாவது ஆண்டை எட்டியுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தால் குறிப்பிடத்தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் MSME (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்) பல தடங்கல்களை சந்தித்தன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கடனை அள்ளிக் கொடுக்கும் வங்கிகள், சிறு/ குறு தொழில்களுக்கான கடனுதவி திட்டங்களை செயல்படுத்த காலம் தாழ்த்தின. கடுமையான அளவுகோல் கொண்டு வங்கிகள் இயங்கியதால் MSME துறை பின்னடைவை சந்தித்தது. நல்ல உள்கட்டமைப்பும், மின்சாரம் போன்ற தளவாட வசதிகளும் சரியாக இல்லாததால் சிறு வணிகங்கள் நட்டத்திற்குத் தள்ளப்பட்டன. இவ்வாறு வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் அரணாகக் கூறப்படும் MSME (சிறு, குறு) தொழில்களின் சரிவால் வேலையில்லாத் திண்டாட்டம் உயரத் தொடங்கியது.

மேலும் இந்தியாவில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006 முதல் 2024 வரை சராசரியாக 5.81% மட்டுமே இருந்துள்ளது. இந்த விகிதம் 12%-14%ஐ எட்டினால் மட்டுமே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது சாத்தியப்படும். ஆனால் “India Ratings ஆய்வின்படி, 2015-16இல் 25.7% இருந்த முறைசாரா துறைகளின் வளர்ச்சி 2022-23 இல் 18.2% ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் உற்பத்தி துறையில், முறைசாரா துறையின் பங்கு 12.5% ​​இல் இருந்து 10.2% ஆக குறைந்தது“.

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் தொடர்ந்து இயந்திரமயமாக்கப்பட்டதால் தொழிலாளர் ஆட்சேர்ப்பு குறைந்தது. 2022ம் ஆண்டிற்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கு மாறாக 2017-2021 வரையான ஆண்டுகளில் இரண்டரை கோடி வேலைவாய்ப்புகள் குறைந்தன.

மேக் இன் இந்தியா திட்டத்தைப் போலவே தோல்வி அடைந்த பிற பொருளாதார திட்டங்களும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை கானல் நீராக்கின. 2014 – 2021 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2,700 வெளிநாட்டு நிறுவனங்களும் (MNC) அவற்றின் துணை நிறுவனங்களும் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

நகரங்களில் உள்ள படித்த இளைஞர்களை போலவே கிராமங்களிலும் முறைசாரா அமைப்புகளிலும் பணிபுரியும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ளன. கடந்த ஆண்டுகளில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மத்தியில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசாங்கத்தின் புள்ளியியல் அலுவலகமே ஒப்புக் கொண்டிருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசு செய்த குளறுபடிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு பட்ஜட்டிலும் அத்திட்டத்திற்குத் தேவையான ₹1.05 லட்சம் கோடியை விட ₹19,297 கோடி குறைவாக (₹86,000 கோடி) ஒதுக்கி உள்ளது ஒன்றிய அரசு. (நிதி நிலை அறிக்கை குறித்த விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/middle-class-crushed-avoided-tamilnadu-in-budget/)

இத்தகைய பாரபட்சமான நிதி பங்கீடு, மோசமான பொருளாதார கொள்கை போன்றவற்றை பாஜக அரசு தொடருமானால் வேலைவாய்ப்பின்மை மிகத் தீவிரமடையும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட 83% இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று கூறியது. இதே போன்று உலக வங்கி முதல் பல்வேறு பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகள் இனி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளன. மிகத் தீவிரமாக இப்பிரச்சினையைக் கையாள வேண்டிய நேரத்தில் பாஜக அரசு இந்த ஆய்வுகளை மறுத்து வருவது மேலும் சிக்கல்களைப் பெரிதாக்கும்.

மேலும் 2021இல் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்பட்டிருந்தால் வேலைவாய்ப்பின்மை விகிதம் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும். ஆனால் கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டிய ஒன்றிய அரசு இன்னும் கணக்கெடுப்பை நடத்தவில்லை. வேலைவாய்ப்பின்மை தரவுகளிலும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே ஒன்றிய அரசு முதலில் வேலைவாய்ப்பின்மையை தீவிர பிரச்சினையாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வேளாண்துறையில் தொடங்கி சிறு வணிகங்கள், பெரு நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் வேலையின்மை சிக்கல்களில் இருந்து விடுபட, முறையான பொருளாதார திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.

கென்யா, உகாண்டா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் தற்போது வேலையின்மை சிக்கல்களுக்கு எதிராக இளைஞர்கள் தெருக்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். பல இன்னல்களை சந்தித்துக் கொண்டு வாழ வழியில்லாமல் இடம் பெயர்கின்றனர். தற்போது வங்காளதேசத்தில் ‘இரும்பு பெண்மணி’ என்று கூறப்பட்ட ஷேக் ஹசீனாவை வீழ்த்தியதும் வேலையின்மை எதிர்ப்பு போராட்டங்களே. ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதும் ஒன்றாக இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை இருக்கிறது. எனவேதான் ‘வேலையிவாய்ப்பின்மை’ எனும் சிக்கலை நாம் எளிதாக கடந்து செல்ல இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »