தமிழின அழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக, “இந்திய அமைதிப் படையால் (Indian Peace Keeping Force-IPKF)” 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் பட்டியலில், 1787 பேரின் பெயர் விவரங்களை சர்வதேச ஊடகவியலாளரான ‘ப்ரான்ஸிஸ் ஹாரிசன்‘ என்பவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் 2009 -இறுதிப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்கள் பற்றியான ‘Still counting the dead’ எனும் புத்தகத்தை எழுதியவர். கடந்த 15 வருடங்களாக இலங்கையை அம்பலப்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து அவர் வெளியிட்ட இந்த விவரங்கள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இத்தனை வருடங்கள் முன்பு நடந்த இந்த இனப்படுகொலையை காலவோட்டத்தில் தமிழர்கள் மறந்து விடுவார்கள் என, இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இன்று புகழ்ந்து பேசப்படுகிறார். இலங்கை சார்பான அவரின் அரசியல் முடிவுகளால் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகள் தமிழர்களின் நினைவிலிருந்து என்றென்னும் மறக்காதவை.
இந்த வரலாற்றுத் துயரம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் நீட்சியாக துவங்கியது. அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்தனே ஆகியோரால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் நாள் கையெழுத்தான இந்த ஒப்பந்தப்படி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா அனுப்பிய இராணுவம்தான் இந்திய அமைதி காக்கும் படை (IPKF- Indian Peace Keeping Force).
இந்திய அமைதிப் படை 10 ஆயிரம் இராணுவத்துடன் இலங்கைக்கு சென்றது. இந்திய அமைதிப்படை ஈழ மண்ணில் கால் வைத்த பொழுது அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றவர்கள் ஈழத் தமிழர்கள். ஆனால் இலங்கை சென்ற இரண்டு மாதங்களிலேயே Indian Peace Keeping Force என்று சொல்வதற்கு பதிலாக அதை Indian People Killing Force என்று அழைக்குமளவுக்கு, தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை ஆரம்பித்து சிங்கள இராணுவத்திற்கு இணையாக தமிழின அழிப்பை நிகழ்த்தியது இந்திய அமைதிப் படை.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் குறித்து தம் மக்கள் மத்தியில் 1987, ஆகஸ்ட் 4 அன்று ‘‘நாம் இந்தியாவை நேசிக்கிறோம்’’ எனும் தலைப்பில் தலைவர் பிரபாகரன் நீண்ட உரையாற்றினார். “ …. நாம் இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை… ஈழத் தமிழன் ஒவ்வொருவரதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கே இடித்துக் கூற விரும்புகிறேன்…“ என ஆயுதம் ஒப்படைப்பதைப் பற்றிப் பேசினார்.
தன் மக்கள் முன்பாக இந்தியா நமக்கு சாதகமாக இருக்குமென நம்புகிறோம் என்று அவர் பேசிய மறுநாளே ஆகஸ்ட் 5-ந்தேதி விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதி யோகி தலைமையிலான போராளிகள், அமைதிப்படை ஜெனரல் குபேந்தர் சிங்கிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் அந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு அதனை அங்குள்ள இந்திய ரா(RAW) உளவுத்துறை தங்களால் வளர்க்கப்பட்ட மற்றைய போராளி குழுக்களுக்கு ரகசியமாக கொடுத்தது. இதனை IPKF-ன் தலைமைக் கட்டளைத் தளபதியே ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்த போராளிக் குழுக்கள் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் விடுதலைப் புலிகள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகமானது.
விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத் தளபதிகளிடம் பல முறை முறையிட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இதை கண்டித்து செப்டம்பர் 13, 1987 அன்று விடுதலைப்புலிகள், இந்திய ஒன்றிய அரசுக்கு இந்திய ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். இந்திய அரசு இதனையும் அலட்சியம் செய்ததால் மாவீரன் ‘திலீபன்‘ உண்ணாவிரதம் இருந்தார்.
அறவழிப் போராளியான திலீபனின் கோரிக்கைகள் நிறைவேற்றாது அவரை இறக்க விட்ட இந்திய அமைதிப் படையின் மீது மக்கள் மிகுந்த கோவமுற்றனர். தமிழ்நாட்டு தமிழர்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்த நெருக்கடியில் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி இடைக்கால நிர்வாகசபை அமைக்க இலங்கை பிரதமரை வலியுறுத்த, பேச்சுவார்த்தை பலாளி என்ற இடத்தில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே 1987 அக்டோபர் 2 அன்று பருத்தித்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தது சிங்கள ராணுவம்.
அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றனர் விடுதலைப் புலிகள். ஆனால் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சரான ’லிலித் அத்துலத் முதலி’ இதனை மறுத்து கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு கொண்டு செல்ல முயன்றார். அங்கு சென்றால் அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.
கைது செய்யப்பட்ட 17 பேரையும் இந்திய அமைதிப்படை இருந்த ’பலாளி’ ராணுவ தளத்திலேயே இலங்கை ராணுவம் வைத்து இருந்தது. விடுதலைப்புலிகள் சார்பாக பாலசிங்கம், மாத்தையா இருவரும் அவர்களை 2 முறை சந்தித்து பேசினர். மூன்றாவது முறை உணவு பொட்டலம் மூலம் சயனைட் குப்பி சிறைக்குள் அனுப்பப்பட்டது. சையனைட் குப்பியை கடித்து 12 போராளிகள் இறந்தார்கள், 5 போராளிகள் உயிர் ஊசலாடியது.
இந்த தன்னிகரற்றப் போராளிகள் இறந்த தகவல் மக்களுக்குத் தெரியவந்தது. இதனால் தமிழர்கள் கடும் சினம் கொண்டனர். இந்தியாவின் சதி என்று இந்திய-சிங்கள ராணுவ அலுவலகங்களைத் தாக்கினர். இத்தகவலை அறிந்து 1987 அக்டோபர் 7 அன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பாண்ட், மற்றும் ராணுவத் தளபதி சுந்தர் ஆகியோர் கொழும்பு சென்று அதிபர் ஜெயவர்தனேவுடன் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜீவ் அரசு முடிவெடுத்தபடி, “ஆப்ரேஷன் பவன் (Operation Pawan)” எனும் போர் நடவடிக்கையைத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கவும், விடுதலைப் புலிகளிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவுமே இந்த ‘ஆப்ரேஷன் பவன்’ போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய இராணுவம் அறிவித்தது.
ஆனால் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் அனைத்தையும் பிடுங்கி அவர்களை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று ரகசிய முடிவு எடுத்தே இந்தப் போர் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சண்டை ஆரம்பித்தது.
அக்டோபர் 7ம் தேதி இராணுவத் தளபதி(Chief of Army Staff) IPKFக்கு அது மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய செயல்பாட்டு நடவடிக்கைகளை வகுத்து அதை செயல்படுத்த உத்தரவுகளை வழங்கினார்.
அவர்களின் முக்கிய நடவடிக்கையாக, முதலில் செய்தி தெரிவிக்கும் ஊடகங்களை வெடி வைத்து தகர்த்தனர். தங்களின் அட்டூழியங்கள் குறித்த எந்த செய்திகளும் வெளிவர முடியாதபடி ஈரமுரசு, முரசொலி நாளேடுகள் மற்றும் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையங்களை அழித்தனர். மக்களுக்கு செய்திகளை தரும் ஊடகங்களை முழுவதுமாக முதலில் நசுக்கிய பிறகு, இந்திய இராணுவம் மக்களுக்கு எதிரான இராணுவ வேட்டையில் இறங்கியது.
இந்திய அமைதிப்படை அக்டோபர் 26, 1987 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையை குறிவைத்து தாக்கியது. யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய இராணுவம் கைப்பற்றிய அக்டோபர் 21 அன்று தீபாவளி பண்டிகை. விடுமுறை நாளான அன்று 50 நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அந்த உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே தரையில் வீசப்பட்டன.
அதற்கடுத்த அக்டோபர் 23 அன்று 83 நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களும் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தவர் இந்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். இந்த எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண தலைமை இராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு இந்தப் படுகொலைகளை செய்ய உதவியாக இருந்தவர்கள் டாக்டர் கனகராஜா மற்றும் டாக்டர் பன்சாரி. இந்த இருவரும் இந்திய அமைதிப்படை அதிகாரிகள்தான்.
யாழ் மருத்துவமனை, வீடுகள், எனப் பல இடங்களிலும் இந்திய படைகள் அக்டோபர் மாதம் முழுக்க கோரத் தாண்டவங்கள் நிகழ்ந்தின. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த மாதமாக இந்த அக்டோபர் மாதம் ஆக்கப்பட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை “போர்க் குற்றம்” என்று சர்வதேச சட்டங்கள் கூறும் நிலையில் இந்திய அமைதி படையின் இந்த போர் குற்றத்திற்காக விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அமைதிப்படை சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகளை தமிழீழப் பகுதிக்குள் நுழைய தடை விதித்தது
இந்திய இராணுவம் நவம்பர் 21,1987 அன்று, 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்த அந்த நேரத்தில் திருகோணமலையில் 7 அப்பாவி தமிழர்களை இந்திய இராணுவம் சுட்டது. இதில் 2 பேர் இறந்தனர்.
அதேபோல யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் 35 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வந்த அனைத்து தமிழ் மக்களும் இந்தியப் படைகளால் சுட்டுக் கொன்றழிக்கப்பட்டனர்.
வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் 1989 -ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று, இந்தியப் படையினர் V வடிவத்திலான வியூகம் அமைத்து புறப்பட்டனர். இந்த ராணுவ வீரர்களுக்கு தலைமை தாங்கியது முறையே மேஜர் சுதர்சன் சிங், கேப்டன் கோபால கிருஷ்ண மேனன், கேப்டன் கபூர் ஆகியோர். இவர்களை எதிர்த்து புலிகள் நடத்திய தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய அமைதிப் படை 71 பொதுமக்களை சுட்ம் வெட்டியும், எரித்தும் கொன்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள், நூலகம், மீன்பிடி படகுகளை எரித்தனர்.
இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்களை வேட்டையாட வந்த படையாக மாறியது. 10,000-க்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது. 600-க்கும் அதிமான தமிழ் போராளிகளைக் கொன்றது. 800-க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள தமிழர்களின் சொத்துகளை சேதமாக்கியது. அன்றைய சிங்கள அரசான பிரேமதாசாவே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கான படுகொலைகளை வெறியுடன் செய்தது.
இந்திய ராஜீவ் காந்தி அரசும், இந்திய பார்ப்பன அதிகார மட்டத்தின் வெளியுறவுக் கொள்கையும் வடிவழமைத்த தவறான கொள்கைகளை இந்திய ராணுவ தளபதிகளே பின்னாளில் குற்றம் சாட்டினர். “இலங்கையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், தமிழர்களுக்கென்று தனிநாடு அமைவதை இந்தியப் பிராமணர்கள் விரும்பவில்லை. அதற்காகவே இந்திய அமைதி காப்புப் படை இலங்கைக்கு சென்றது“ என ‘X’ வலைதள பதிவில் இந்திய அமைதிப் படை தலைமைத் தளபதியாக இருந்த சுந்தர்ஜி கூறியதாக இந்தியத் தளபதி ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அமைதி காப்புப் படையின் தளபதியாக இருந்து ஹர்கிரத் சிங், “புலிகள் வாக்கு தவறாதவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள். மக்கள் பிரபாகரனை மிகவும் நேசித்தார்கள். ஏன் இந்தியா இந்தப் போரில் எங்களைத் தள்ளியது என்றே தெரியவில்லை“ என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும், இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில், “எந்தக் காரணமும், நோக்கமும் இல்லாமல் தமிழ் சகோதரர்களுக்கு எதிராகப் போரிட்டதால் இந்திய வீரர்கள் பலர் இந்தியா திரும்பியதும் மகிழ்ச்சியற்றும், குழப்ப நிலையிலும் இருந்தனர்” எனக் குறிப்பிட்டார்.
இந்திய இராணுவப் படையால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களில் ஒரு சில நிகழ்வுகளே ஆவணப்படுத்தப்பட்டன. ஆவணப்படுத்தா நிகழ்வுகள் எண்ணிலடங்காதது. அந்த காலகட்டத்தில் IPKF- நடத்தப்பட்ட படுகொலைகளில் பலியான பல ஆயிரக்கணக்கானவர்களில், 1787 பேரின் பெயர் மற்றும் முகவரி விவரங்களையே பிரான்ஸிஸ் ஹாரிசன் இப்போது வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை செய்தவர்கள் மீதான பழியைத் துடைத்து, மக்களைக் காக்கும் போராளிகள் மீது குற்றச்சாட்டுகளைத் திருப்பி விடும் இங்குள்ள இந்து, துக்ளக் போன்ற பார்ப்பனிய ஊடகத்தினருக்கு துளியும் இல்லாத நேர்மையுடனும், அறத்துடனும் இந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அமைதி காப்புப் படை தமிழினத்தின் மீது நடத்திய இந்த இனப்படுகொலைக்கு ராஜீவ் காந்தியும், இந்தியப் பார்ப்பனிய அதிகாரிகளுமே காரணம். தமிழர்களுக்கு தனிநாடு என்பதை விரும்பாத பார்ப்பனர்கள், இங்கிருந்த தங்களின் ஊடக வலிமையால் ராஜீவைக் குற்றச்சாட்டிலிருந்து காக்க புலிகளின் மீது குற்றங்களை மடைமாற்றி விட்டனர். தமிழர்களை 2009-ல் இனப்படுகொலை செய்ய ராஜபக்சே அனுப்பிய சிங்கள இராணுவப் படைக்கும், ராஜீவ் 1987 -ல் அனுப்பிய இந்திய இராணுவத்திற்கும் அதிகமான வித்தியாசங்கள் இல்லை. ராஜபக்சே போல ராஜீவ் காந்தியும் இனப்படுகொலை குற்றவாளியே என்பதற்கான ஆதாரங்கள் பிரான்சிஸ் ஹாரிசன் வெளியிட்ட இந்த பட்டியலாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பனீய அதிகார வர்க்கம் வடிவமைத்த வெளியுறவுக் கொள்கையே 2009-லும், 1988-யிலும் தமிழர்களைக் கொன்று தீர்த்தது.
இந்தப் பார்ப்பனிய சூழ்ச்சிக் குழுக்களைப் பற்றி தமிழக அரசியல் மட்டங்கள் பேச வேண்டும். தமிழர்கள் இந்த அரசியலை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு தன் எல்லையோர பகுதிகளைப் பற்றியான வெளியுறவுக் கொள்கையை முடிவெடுக்கும் அதிகாரம் பெற வேண்டும் என்பதை மே 17 இயக்கம் நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனை மீண்டும் நினைவுபடுத்தவே பிரான்சிஸ் ஹாரிசன் வெளியிட்ட இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களின் பெயர்ப் பட்டியல் ஆவணம் இருக்கிறது.