பொலிவியாவின் இராணுவப் படை அதிபர் மாளிகையை கைப்பற்றி, ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய முயன்றதை பொலிவியாவின் காவல் துறை முறியடித்துள்ளது. பொலிவியாவில் தொடர்ச்சியாக நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு, அங்கு கிடைக்கும் லித்தியம் கனிம வளமே முக்கியக் காரணமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிசக்திக்கு மாற்றாக லித்தியத்தில் உருவாகும் மின்கலமே (battery) இனி உலக சந்தையை முடிவு செய்யும் பொருளாக மாறுவதால், பொலிவியாவை மேற்குலக நாடுகள் குறிவைக்கின்றன. அதன் அறிகுறியே இந்த ஆட்சிக் கவிழ்ப்புகள்.
ஆட்சி கவிழ்ப்பு என்பது பொலிவியாவிற்கு புதியது அல்ல. 1825-ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 190-க்கும் மேலான ஆட்சி கவிழ்ப்புகளை எதிர்கொண்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல், பொலிவியா எந்த நாடும் எதிர்கொள்ளாத அளவிற்கு ஆட்சிக்கவிழ்ப்புகளை எதிர் கொண்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் 2024-ல் கூட ஜெனரல் ‘ஜுவான் ஜோஸ் சூனிகா‘ தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சமீபத்திய முயற்சியாக நடந்தது. ஆனால் அது முறியடிக்கப்பட்டிருக்கிறது.
தென் அமெரிக்கா கண்டத்தில் அமைத்துள்ள ஓரு வளமான நாடுதான் பொலிவியா. பிரேசில், பெரு, சிலி, அர்ஜென்டினா மற்றும் பராகுவேவை அதனது எல்லைகளாக கொண்டுள்ளது. பொலிவியா புவியியல் ரீதியாக மிகவும் வளமான நாடு. சுரங்கங்கள் வெள்ளீயம், வெள்ளி, லித்தியம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்கின்றன. கோகோ ஆலைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோகோயின் உற்பத்திக்காகவும் இந்த நாடு அறியப்படுகிறது.
உலகமே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளினால் வரும் மாசுக்களை குறைக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable energy) ஆதாரங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளுக்கு மாற்றாக தற்போது வந்துள்ளதே மின்சார வாகனங்கள்(Electric vehicles). இது சேமித்து வைக்கும் எரிசக்தியில் இயங்கும். இந்த எரிசக்தியை சேமித்து வைக்க உதவுவது லித்தியம் என்னும் உலோகத்தினால் ஆன பேட்டரி ஆகும். லித்தியம் எனும் உலோகத்தை மூலப்பொருளாக விற்பதை விட உற்பத்திப் பொருளான பேட்டரி, மற்றும் இதர லித்தியம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கலாம் என பொலிவியா கருதுகிறது.
பொலிவியாவில் 21 மில்லியன் டன்கள் லித்தியம் உள்ளது என யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (USGS) 2022-ஆம் ஆண்டின் படி மதிப்பிடப்பட்டுள்ளது. லித்தியம் “வெள்ளை தங்கம்” என அழைக்கப்படுகிறது. உலகின் அதிக லித்தியம் இருப்பில் முதலிடத்தில் இருப்பது பொலிவியா. அதனை தொடர்ந்து அர்ஜென்டினாவும், சிலியும் உள்ளது.
எண்ணெய்க்கு மாற்றாக விளங்கும் இந்த மூலப்பொருள்தான் நாளைய உலகின் வல்லாதிக்கத்தை முடிவு செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. ஆதலால் இந்த லித்தியம் தான் ஆட்சி கவிழ்ப்பிற்கான சதிக்கு மூலகாரணமென பொலிவியாவின் அதிபர் லூயில் ஆர்ஸ் கூறுகிறார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் (SPIEF), பொலிவிய ஜனாதிபதியான லூயிஸ் ஆர்ஸ் கேடகோரா மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் சந்திப்பு ஜூன் 6, 2024 அன்று நடைபெற்றது. அதில் இரு தலைவர்களும் தென் அமெரிக்க நாட்டில் லித்தியம் மின்கலம் (battery) உற்பத்தி தொடர்பான கூட்டு முயற்சிகளுக்கான ஒப்பந்தங்கள் விவாதித்தனர்.
கடந்த 2023-ல் பொலிவியா அரசுக்கு சொந்தமான YLB நிறுவனத்துடன் இணைந்து ரஷ்யாவின் ‘யுரேனியம் ஒன்‘ நிறுவனமும், சீனாவின் ‘சிட்டிக் குவான்’ நிறுவனமும் இணைந்து ஆண்டுக்கு சுமார் 11600 கோடி (1.4 பில்லியன் டாலர்) எட்டக்கூடிய, லித்தியம் கார்பனேட்டை உற்பத்தி செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் 45000 டன் உற்பத்தி செய்யக்கூடிய 2 ஆலைகள் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. சனவரி மற்றும் நவம்பர் 2022-க்கு இடையில் பொலிவியா 635.5 டன் லித்தியம் கார்பனேட்டை மட்டுமே உற்பத்தி செய்தது. இந்த புதிய ஒப்பந்தங்களின் மூலம், [லித்தியம் கார்பனேட்] உற்பத்தி 2025-க்குள் கிட்டத்தட்ட 100,000 டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொலிவியாவில் லித்தியம் மின்கலங்கள் (batteries) மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முதலீடு செய்வது குறித்து சீனாவின் ‘சிட்டிக் குவான்‘ நிறுவனம் யோசித்து வருகிறது.
சீனாவும், ரஷ்யாவும் பொலிவியாவில் முதலீடு செய்வதை தடுக்கவே அமெரிக்கா இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி வேலையை செய்ததாக கூறப்படுகிறது. பொலிவியாவின் முன்னாள் அதிபரும் சோசலிசத்திற்கான இயக்கம் (Movement to socialism – MAS) தலைவருமான ‘ஈவா மோரல்ஸ்சும்‘ இதே கருத்தையே அவர் பதவி விலகியபோது முன்மொழிந்தார். ‘அமெரிக்காவைக் காட்டிலும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் லித்தியம் பிரித்தெடுக்கும் கூட்டாண்மைகளை நாடுவதற்கு வாஷிங்டன் பொலிவியாவை மன்னிக்க விரும்பவில்லை’ என்று மோரல்ஸ் கூறுகிறார். பொலிவியா ஒரு கோடி மக்கள் வசிக்கும் நாடாக இருந்தாலும் லித்தியம் தொழில்நுட்பத்தில் விரைவில் அதற்கான விலையை நிர்ணயிப்போம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மோரல்ஸ் 2004-லிருந்து 3 முறை பொலிவியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர். அவருடைய ஆட்சியில் பொலிவியா வளர்ச்சியை அடைந்தது. நான்காவது முறை அவருக்களிக்கப்பட்ட ஓட்டுகள் செல்லாதவை என அமெரிக்க சார்பு அமைப்பான OAS (அமெரிக்க கூட்டமைப்பு) அறிவித்ததால், அவர் பதவி பறிக்கப்பட்டது. அதனால் அர்ஜென்டினா சென்ற அவர் அடுத்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னரே பொலிவியாவிற்கு வந்துள்ளார்.
அர்ஜென்டினா தற்போது உலகில் லித்தியம் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளது. தற்போது அர்ஜென்டினா லித்தியத்தை மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய்கிறது. அர்ஜெண்டினாவின் அதிபர் ‘ஜேவியர் மிலெய்’ (Javier Milei) இவர் ஒரு யூதர் ஆவார். அமெரிக்க சார்பாளராக அறியப்படுகிறார். அமெரிக்க கூட்டுறவு நாடுகளில் கைப்பாவையான அதிபர்களை ஆட்சியில் அமர வைக்கவே சூழ்ச்சிகளை செய்து ஆட்சிக்கவிழ்ப்புகளை நிகழ்த்துகிறது அமெரிக்கா.
உலகின் எந்த நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு, ஆட்சி மாற்றம், போர்கள், இனப்படுகொலைகள் நடந்தாலும் அவற்றிற்கு காரணமாக அமெரிக்காவின் கரங்களே ஓங்கி இருக்கிறது என்பதற்கு சான்றாகவே பொலிவியாவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீது இனப்படுகொலையை அரங்கேற்றியதே இதற்கு சான்று. தமிழீழத்தின் திரிகோணமலையின் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிக்க, இராணுவ கடற்படை முகாம் அமைக்க இலங்கையின் ராசபக்சே அரசுக்கு துணை நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்தது அமெரிக்கா .
இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த, அதற்கு விடுதலைப் புலிகள் எதிராக இருப்பார்கள் என்பதற்காகவே இனவெறி நாடான இலங்கை அரசோடு சேர்ந்து தமிழர்களை இனப்படுகொலை செய்தது அமெரிக்கா. இதற்காகவே விடுதலைப் புலிகளை உலகம் முழுக்க தீவிரவாதிகளாக சித்தரித்தது. இனப்படுகொலைப் போருக்கான சர்வதேசம் எங்கும் கருத்துருவாக்க தளத்தை இராணுவ அதிகாரிகள் மூலமாக நகர்த்தியது. இராணுவ பயிற்சி, ஆயுத உதவி, நிதி உதவி என தாராளமாக வழங்கியது. ராசபக்சேவின் சீனா சார்பு நிலை தலைதூக்கியதும், பொருளாதார நெருக்கடிகளால் உள்நாட்டு கலவரங்களை மூட்டி விடக் காரணமாக இருந்தது. இதனால் ராசபக்சே பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு நிதி ஆயுத உதவியிலிருந்து, ரஷ்ய – உக்ரைன் போருக்கு உக்ரைனுக்கு ஆதரவு வரை இப்போது நடக்கும் போருக்கும் காரணம் அமெரிக்கா. நேச (NATO) நாடுகளில் ஒன்றாக்கி தனது பிடியில் வைத்திருக்க ரஷ்ய எல்லையோர நாடான உக்ரைனில் போரை மூட்டி விட்டது அமெரிக்கா. பனிப்போர் நடந்த காலங்களில் மட்டும் 72 நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தியது. இன்னும் லத்தீன் அமெரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள், வடகிழக்கு நாடுகள் என எண்ணெய் வளம், கனிம வளம் மிக்க நாடுகளில் நடக்கும் போர்களும், ஆட்சிக் கவிழ்ப்புகளிலும் அமெரிக்காவின் கரங்களே மறைமுகமாக இருக்கின்றன.
பொலிவியாவில் இருக்கும் லித்தியம் கனிம வளம் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி உள்ளதாக இருக்கிறது. பொலிவியாவில் 10% மக்களின் பண வர்த்தகம் சீன நாணயமான யுவானில், நடைபெறுகிறது. நாளை லித்தியம் எனும் வெள்ளை தங்கத்திற்கான விலையை நிர்ணயிப்பதன் மூலம் அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை மாற்றி அமைக்கும் நிலைமை வரலாம் என்றே அமெரிக்கா ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளை செய்து பொலிவியாவில் சாதகமானவர்களை அமர்த்த முனைகிறது.