மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை

இன்று உலகில் சனநாயகம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, சமாதான நாடு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் அமெரிக்கா பல சட்டவிரோத குற்றங்களை, கொலைகளை உலகம் முழுவதும் செய்து வருகிறது. இதனை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

உலகெங்கிலுமுள்ள அரசுகளும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக பல அநீதிகள் இழைப்பதை கண்டுபிடித்து அவற்றை அம்பலப்படுத்தும் நேர்மையான ஊடகவியலாளர்களை, தேசியப் பாதுகாப்பின் அடிப்படையில் உளவு பார்ப்பது குற்றம் என்று அந்த ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்படலாம் என்பதைத்தான் ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கு நமக்கு உணர்த்துகின்றது. இதன்மூலம் ஊடக சுதந்திரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆட்சியாளர்களோ தங்களை, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களை, சமூக செயற்பாட்டாளர்களை, ஊடகவியலாளர்களை பெகாசஸ் போன்ற செயலியை கொண்டு உளவு பார்க்கலாம், அவர்கள் யாரை வேண்டுமானாலும் அத்துமீறி சட்ட விரோதமாக உளவு பார்க்கலாம், அது தப்பில்லை. அதுவே அரசு செய்யும் சட்டவிரோத செயல்களை, மனித உரிமை மீறலை, ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்துவது தவறு. அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவது என்பது இங்கு பெரும் முரணாக உள்ளது. இதனால் தவறிழைத்த அமெரிக்கா, இலங்கை, இந்தியா, இஸ்ரேல் போன்ற வல்லாதிக்க நாடுகள் எளிதாக தப்பித்துக் கொண்டு மேலும் இதுபோன்ற தவறுகளையும் தீங்குகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன.

உண்மையில் முதலாளித்துவ ராஜதந்திரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப் பற்றிய அதிமுக்கிய தகவல்களை தான் விக்கிலீக்ஸின் அசாஞ்சே மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆட்சியாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் மற்றும் அவர்களின் சதித் திட்டங்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தி உள்ளார். அதோடு போர்களின் உண்மை முகத்தை எடுத்துக் காட்டியுள்ளார். மேற்குலகின் பொய்களை குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தானில் மேற்குலகம் செய்த கொலைகளை காணொளிகளாக அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் குறித்த பல ரகசிய ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினார் அசாஞ்சே. இதனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி அவரை பலவகையில் துன்புறுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அசாஞ்சேவை பல வழிகளில் வேட்டையாடிய அமெரிக்காவை தோலுரித்து ஏற்கனவே மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை: https://may17kural.com/wp/julian-assange-an-american-nightmare/

மேலும் அசாஞ்சேவை கொல்ல தீட்டப்பட்ட சதியை அம்பலப்படுத்தி மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை

தற்போது இந்த எதேச்சதிகார அமெரிக்காவின் கொடும் அடக்குமுறைக்கு எதிராக நீண்ட கால சட்டப் போராட்டத்தை நடத்திய ஜூலியன் அசாஞ்சே இறுதியாக தன்மீது சுமத்தப்பட்ட உளவு பார்த்தல் (Espionage), அமெரிக்கப் பாதுகாப்புக்குக்கு கேடு விளைவித்தல் (National Security Breach) போன்ற குற்றங்களை ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில், அவர் 5 ஆண்டுச் சிறைத்தண்டனையை ஏற்க வேண்டும். ஏற்கனவே அவர் பிரிட்டன் சிறையில் 5 ஆண்டுகள் இருந்ததால் தற்போது விடுதலையாகி பிரிட்டனிலிருந்து தன் தாய்நாடான ஆஸ்திரேலியா திரும்புகிறார். அமெரிக்கா உடனான இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய அரசும் அவருக்கு துணையாக ஈடுபட்டுள்ளது.

வியட்நாமில் 1945 முதல் 1967 வரையில் அமெரிக்காவின் அரசியல் இராணுவ பங்கு குறித்தும், வியட்நாம் போரில் அமெரிக்க அரசின் இரகசிய தகவல்கள், முறைகேடுகள் உள்ளடக்கிய அரசாங்க ஆவணங்களும், உயர்மட்ட உரையாடல்களும் அடங்கிய பென்டகன் கோப்புகள் 1971ல் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் அரசு இதற்கு எதிராக அந்த பத்திரிகைகள் மீது வழக்கு தொடுத்தது. அரசின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிடுவது தேசத்துரோகம் எனவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் என்றும் அரசுத்தரப்பில் வாதிட்டனர். ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அன்று அந்த இரு பத்திரிகைகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது. அதாவது ஒரு அரசின் திட்டங்களும், ரகசியங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவை அதிகாரவர்க்கத்தின் குற்றங்களை மறைப்பதற்கு பயன்படுமெனில் அவற்றை வெளிக்கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. எனவே அந்தப் பத்திரிகைகளின் சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிட கூடாது என தீர்ப்பு கூறியதை இந்நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் தற்போது இத்தனை போராட்டத்திற்கு பிறகும்கூட அசாஞ்சே, அமெரிக்காவின் ரகசியத்தை வெளியிட்டது தவறு என ஒப்புக் கொண்டதின் அடிப்படையிலே அவரின் இந்த விடுதலை நிகழ்ந்ததுள்ளது. ஆக, தன் அரசியல் இலாபத்திற்காக எளிய நாட்டு மக்களை போர் என்ற பேரில் அழித்து கொடுமை படுத்தும் அமெரிக்கா போன்ற அரசுகளின் சட்டவிரோத தவறுகளை அம்பலப்படுத்திய அசாஞ்சேவின் ஊடக நேர்மையை சிதைத்து, அவரை மிரட்டி தன்வழிக்கு கொண்டு வந்து தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ளது அமெரிக்கா.

ஒருவேளை இந்த ஒப்பந்தத்திற்கு அசாஞ்சே ஒத்துவரவில்லை என்றால் அசாஞ்சேவுக்கு என்ன நடந்திருக்கும்? அவர் 150 ஆண்டுகள் அமெரிக்காவின் கொடும் சிறையில் அடைக்கப்பட நேரந்திருக்கும். அங்கேயே அவர் மரணம் நிகழ்ந்திருக்கும்.

போர்கள் ஏன் நடைபெறுகின்றன?

உலக வரலாற்றில் போர்கள் ஏன் நடைபெறுகின்றன, அதில் அப்பாவி மக்கள் ஏன் கொல்லப்படுகின்றார்கள், இதில் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் தங்கள் நலனுக்காக எவ்வாறு உலகளவில் பல அழிவு வேலைகளை செய்து வருகின்றன என்பது அசாஞ்சே வெளியிட்ட தகவல்களின் வழியாக தெரிய வந்ததுள்ளது.

காலங்காலமாக எளிய மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்துவம், தங்களுக்கு ஆதரவான அரசை அமைத்துக் கொண்டு, அவர்களின் வழியாக மக்களை சுரண்டி கொழுத்து வருகின்றது. அவ்வாறான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப வெறிக்காக தூண்டி விடப்படும் போர்களால் வல்லரசுகளுக்கு இடையில் பதட்டமான சூழலே நீடித்து வருகின்றன. அதேபோல உழைக்கும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களுக்காக அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளால் நாடுகளிடையேயான முரண்பாடுகள் மட்டுமே அதிகரிக்கின்றன. இதானாலே பேரழிவை உண்டாக்கும் போர் நாடுகளிடையே ஏற்படுகிறது.

இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்வது தான் பத்திரிக்கை துறை (Journalism). ஆனால் உலகின் மொத்த ஊடகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் அரசுகளாலும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஊடகவியல் துறையில் ஒரு ஊடகவியலாளரின் பணி எப்படி இருக்க வேண்டுமென அசாஞ்சே காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் நடந்த எல்லா போர்களும் பொய்களால்தான் துவக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போர், வியட்நாம், ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் போர்கள் எல்லாம் பொய்களாலே நடத்தப்பட்டன. உண்மையில் மக்கள் போர்களை விரும்புவது இல்லை. ஆனால் அவர்கள் ஏமாற்றப்பட்டு போர்களுக்குள் தள்ளிவிடப்படுகிறார்கள். ஊடகங்களின் பொய்களே இதற்கு முக்கிய காரணம். அரசாங்கம், அதிகாரிகள், இராணுவத்தினர் மட்டும் போர்க்குற்றவாளிகள் அல்ல ஊடகவியலாளர்களும் தான் என்று அசாஞ்சே கூறியுள்ளார்.

அசாஞ்சே கூறியப்படித்தான் ஈழத்தில் நடந்த போரும் பொய்களைக் கொண்டே நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகளை குற்றவாளிகள் எனவும், இலங்கை அரசை உத்தமராகவும் சித்தரித்த இந்திய ஊடகங்களே இப்போரின் முக்கிய காரணிகள். இந்த பிரச்சாரத்தின் மூளையாக செயல்பட்ட ‘தி இந்து’ இதழின் என்.ராம் இடதுசாரிய, முற்போக்காளர் முகமூடியோடு இயங்கி வருகிறார். ஈழத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையுடன் சேர்ந்து அரங்கேற்றிய தமிழர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இணைக்கப்பட வேண்டியவர்களில் ‘தி இந்து’ நிறுவனமும், என். ராமும் முக்கியமானவர்கள்.

இலங்கை செய்த தமிழர் இனப்படுகொலையை மூடி மறைத்து இலங்கையை ஆதரித்து எழுதியதாலேயே இலங்கை அரசின் உயரிய விருதான லங்கா ரத்னா விருதை பெற்று இலங்கையால் கெளரவிக்கப்பட்ட என்.ராமும் அசாஞ்சே கூறியப்படி ஒரு போர்க்குற்றவாளி ஆவார்.

தமிழீழத்தில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை உலகறிய செய்தது “நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின்” டப்ளின் தீர்ப்பாயம்தான். ஜெர்மனியின் பிரேமன் நகரில் துவங்கிய இதன் இரண்டாம் கட்ட விசாரணையில் இலங்கை இனப்படுகொலையில் பங்கெடுத்த இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பங்களிப்புகளைப் பற்றி விசாரணைக்கு உட்படுத்த முடிவு எடுக்கப்பட்டதில், இந்திய பங்களிப்பு பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க மே 17 இயக்கம் அழைக்கப்பட்டது. 2013 டிசம்பரில் நிகழ்ந்த இந்த விசாரணையில் இந்தியா குறித்த தனது ஆவணங்களை மே 17 இயக்கம் சமர்ப்பித்ததும் விக்கிலீக்ஸ் தகவல்களின் வழியாகத்தான். ஈழப்போரில் நடந்த விதிமீறல்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் நடத்திய நாடகங்களை, இந்திய அதிகாரிகளின் மின்னஞ்சல் விவரங்களை மே 17 இயக்கம் கண்டறிந்ததும் அசாஞ்சே அம்பலப்படுத்தி இருந்த தகவல் மூலமாகவேயாகும்.

விக்கிலீக்ஸில் வெளியிடப்பட்ட முதல் தகவல் சோமாலியாவில் அரசு அதிகாரிகளை படுகொலை செய்ய கூலிப்படையினரை ஏவிய சோமாலியா தலைவர் ஒருவரை பற்றிய தகவல்தான். இதுபோல பல நாடுகளின் அரசாங்க ரகசியங்களை அவர் விக்கிலீக்ஸில் வெளியிட்டார்.

அமெரிக்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

ஈராக் போரில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட அத்துமீறல்கள் அடங்கிய ரகசிய வீடியோ பதிவுகளை 2010ம் ஆண்டு ஏப்ரலில் வெளியிட்டார். அதில் 2007ல் நடந்த ’பாக்தாத்’ வான்வழித் தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் இருந்த ராய்டா் நிறுவன புகைப்பட செய்தியாளா் உள்ளிட்ட ஈராக் மக்கள் 18 பேரை அமெரிக்க வீரா்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது அம்பலமானது.

மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போர்களின் பின்னணியில் உள்ள தகவல்கள், அமெரிக்கா எப்படி தனது நட்பு நாடுகளையே உளவு பார்க்கிறது, போரின்போது பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அரசின் அக்கறையின்மை போன்ற பல தகவல்களும் அம்பலமாகியது.

அதோடு ‘ஆப்கன் போர் சுவடுகள்’ என்ற தலைப்பில் 2004 முதல் 2009 வரை அமெரிக்க ராணுவத்தினர் தங்களிடையே பரிமாறிக் கொண்ட 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட போர் குறித்த தகவலறிக்கைகளையும் அசாஞ்சே வெளியிட்டார்..

அதற்கடுத்து 2010 நவம்பரில் அமெரிக்க தூதரக உரையாடல்கள் அடங்கிய கோப்புகளையும் வெளியிட்டார். இதன் மூலம் ஐநா அமைப்புக்கும் பிற உலகத் தலைவா்களுக்கும் எதிராக அமெரிக்கா உளவு பார்த்ததும் அம்பலமானது. அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவிய உட்பூசல், மற்றும் அமெரிக்கா உலகம் முழுவதும் நடத்திய முறைகேடுகளை தூதரக அதிகாரிகளின் உரையாடல்கள் அம்பலப்படுத்தின. அதோடு மேற்காசிய நாடுகளில் அந்த அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா தூண்டி விட்ட போராட்டங்கள் பற்றிய பல ரகசியங்களையும் அம்பலப்படுத்தினார்.

அதேபோல காஷ்மீரில் இந்திய அரசு அம்மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொண்டு வரும் சதி வேலைகளை அமெரிக்கா மூடி மறைத்துள்ளதையும் அம்பலப்படுத்தியுள்ளார். ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமா ஆட்சியின் போது காஷ்மீரில் நடந்து வரும் சதிகளை அவர்கள் அறிந்திருந்த போதிலும் அதனை மூடி மறைத்து உள்ளனர். அதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா இந்தியாவை சீனாவுக்கு எதிரான பகடைக்காயாக, துருப்பு சீட்டாக பயன்படுத்தும் நோக்கமேயாகும்.

அதேபோல ஈரான் நாட்டை பொருளாதார ரீதியாக ஒடுக்கி தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா திரைமறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் விக்கிலீக்ஸில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உலக சிந்தனையை மாற்றும் வகையிலான ISIS என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழுவை உருவாக்கியதும் அமெரிக்காதான்.

இப்படியாக உலக நாடுகளை எல்லாம் காக்கும் சனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா ஏகாதிபத்தியம், அது செய்த பல திரைமறைவு அழிவு வேலையை அம்பலப்படுத்திய அசாஞ்சேவை, தனிச்சிறையில் கொடுமைப்படுத்தி அச்சுறுத்தி பணிய வைத்துள்ளது.

உலகெங்கிலுமுள்ள அரசுகளின் உயர்மட்டத்தில் நடந்துள்ள தவறுகளை, விதிமீறலை, ஊழல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்ற விடயங்கள் மக்கள் அனுபவிக்க வேண்டியவை. அதோடு உயர்மட்டத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான உரிமையாக இத்தகைய விடயங்களை மக்களுக்கு ஊடகங்களே தெரிவிக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் தங்களது கடமையை தவறியுள்ள நேரத்தில் விதிவிலக்காக அசாஞ்சே அமெரிக்காவினை அம்பலப்படுத்தியுள்ளார்.

அசாஞ்சேவின் மீது ஏவப்பட்ட அடக்குமுறை என்பது சனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும். இது வெறும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் செய்த குற்றங்கள் அம்பலப்படுத்தப் படுவதை தடுப்பதை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. மாறாக, இத்தகைய அரசுகளின் இரகசிய குற்றங்களை இனிமேல் அம்பலப்படுத்த யாரேனும் முயற்சித்தால் அவர்களை அச்சறுத்துவதையும், அமைதியாக்குவதையும் இலக்காகக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »