ஊடகத்தை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவரே மக்களின் மனதைக் கட்டுப்படுத்துகிறார் – ஜிம் மோரிசன், அமெரிக்க இசைக் கலைஞர்.
பத்திரிக்கை என்பது வரலாற்றின் முதல் வரைவைப் போன்றது. எந்த ஒரு தகவலும் யாரிடமிருந்து வந்தாலும் அதன் உண்மைத் தன்மை அறிய முற்படவேண்டும் தவறெனில் கேள்வி கேட்க வேண்டும் . எந்த ஒரு வாசகரும் இந்த திறனை வளர்த்துக் கொண்டால் பொய் செய்திகள் நம்மை நெருங்கத் தயங்கும். இல்லையென்றால் நமது வரலாற்றை யாரோ எழுதுகிறார்கள் என்று அர்த்தம்.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்த தொழில் குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர நிறுவனத்துக்குப் பல வருடங்களாக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் உச்சக்கட்டமாக 2018ல் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த போராட்டத்தின் 100வது நாளில் அதைக் கட்டுப்படுத்த அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் தன் இன்னுயிரைத் தந்து அந்த தாமிரம் (காப்பர்) ஆலையை மூடவைத்தனர். இது ஒரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டம்.
இந்த படுகொலையை விசாரிக்கத் தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் நியமிக்கப்பட்டது. 22.5.2018 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள், இறந்தவர்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், மற்றும் தூத்துக்குடி மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்தும் விசாரணை நடத்த இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைப் படி அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 -காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 சுற்று சுட்டுள்ளார். காட்டில் வேட்டையாடுவதைப் போலச் சுட்டுள்ளார். ஒரே காவலரை 4 இடங்களில் வைத்துச் சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்திலிருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் மறைந்துகொண்டு காவல்துறை சுட்டுள்ளனர். அன்றைய ஆட்சியர் தனது பொறுப்புகளை தட்டி கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். அறவழியில் நடந்த போராட்டத்தில் எந்த ஒரு தள்ளு முள்ளும் இல்லை, காவல் துறையோடு எந்த வாக்குவாதமும் இல்லை , கண்ணீர் வெடிகுண்டு வீசப் படவில்லை, மக்களைக் களைந்து போகவும் சொல்லவில்லை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் குறி பார்த்துத் தாக்கப்பட்டுள்ளனர். இது காவல் துறையின் திட்டமிட்ட தாக்குதல் என்று தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடந்தது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைப் பணிக்கு (சிவில் செர்வீஸ்) தயாராகும் மாணவர்களிடையே பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 40% தாமிரம் தூத்துக்குடி ஆலையின் மூலமாகக் கிடைக்கிறது எனவும் மக்களைத் தூண்டிவிட்டு இந்த ஆலை மூடப்பட்டதால் நாட்டிற்குப் பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார். மோடி தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு சில நாட்களுக்கு முன்பு இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அங்கீகரிக்கும் வகையில் “வெளிநாட்டு நிதி தொடர்பாகத் தீவிர விசாரணை – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட பின்னணியில் என்ஜிஓ – மாநிலங்களவையில் தகவல்” என்னும் தலைப்பில் இந்து தமிழ் திசை நாளிதழ் 7.4.2023 அன்று செய்தி வெளியிட்டது.
அச்செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
“தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடீயா’, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019 – 2021 காலகட்டத்தில் அந்நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது.
இதில் ரூ.2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தின் அந்நிய நிதி பெரும் உரிமம் ரத்து செய்யப்படும்.” என்ற செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது.
இதே சமயத்தில், யூடியூப் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழியாக மட்டுமே இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் சில பார்ப்பன சார்பு தளங்கள் வாயிலாகவும் ஸ்டெர்லைட் வேதாந்தந்தா நிறுவனத்திற்கு ஆதரவான இந்த பிரச்சாரத்தை வலுவாகப் பரப்பினர் என்பது கவனிக்க வேண்டியதாகும்.
தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராகப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக “தி அதர் மீடியா” தொண்டு நிறுவனத்திற்கு எதிராக அமைச்சகத்திற்குப் புகார்கள் வந்துள்ளனவா? என்று மாநிலங்கள் அவையில் கேள்வி எழுப்பப்பட்டது என்பதே உண்மை.
அதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர், “வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 (எஃப்.சி.ஆர்.ஏ., 2010) விதிகளை (எஃப்.சி.ஆர்.ஏ., 2010) மீறியதாகக் கூறப்படும் சில புகார்கள், “தி அதர் மீடியா, புது தில்லி” இந்த அமைச்சகத்தில் பெறப்பட்டுள்ளன. கள முகமையின் உள்ளீடுகளும் பெறப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விரிவான தகவல்களைக் கோரி சங்கத்திற்கு ஒரு நிலையான வினாப்பட்டியல் வழங்கப்படுகிறது. மேலும், இது FCRA, 2010ன் விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் ஆராயப்படுகிறது. அதன்படி, சங்கத்திற்கு வினாத்தாள் வழங்கப்பட்டு பதிலும் பெறப்பட்டுள்ளது. FCRA, 2010 இன் விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் சங்கத்தின் FCRA பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படலாம்” என்று கூறியுள்ளார். அமைச்சர் அளித்துள்ள இந்த பதிலில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வந்ததாகவோ, “தி அதர் மீடீயா”விற்கு தொடர்பு இருப்பதாகவோ ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் எங்கும் குறிப்பிடவில்லை.
இந்திய ஒன்றிய அமைச்சகத்தின் பதிலுக்கும் “இந்து தமிழ் திசை” நாளிதழ் வெளியிட்ட செய்திக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. ஆளுநரின் பொய் பேச்சிற்கு வலு சேர்க்கும் வகையிலேயே “இந்து தமிழ் திசை” முன் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது.
ஜனநாயகத் தன்மையற்ற இந்த போக்கைக் கண்டித்து இந்து தமிழ் திசை மேற்கூறிய செய்தியைத் திரும்பப் பெறுவதோடு, மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து எழுத்தாளர் மீனா கந்தசாமி அவர்கள் தனது டிவிட்டர் பதிவில், “கோவிட் பேரிடர் காலத்தில் “ஆக்சிஜன் உற்பத்தி” என்று வேதாந்தாவின் ஸ்டெர்லைட் அரசிடம் கோரிக்கை வைத்து மீண்டும் திறக்கப்பட்டது கூட கார்ப்பரேட் PR இயந்திரங்களால் இயக்கப்பட்டதாகவே இருக்கும். நிச்சயமாக, “ரம்மி” ரவி போன்ற பல நிறுவனப் பிரமுகர்கள் ஏற்கனவே வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு ஆதரவாகப் போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதைக் காணலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் “தி இந்து” ஆங்கில நாளிதழின் முன்பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக “எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு பணிவாக வேண்டுகிறோம்” என்று வேதாந்தாவின் ஸ்டெர்லைடுக்கு ஆதரவாக விளம்பரத்தை வெளியிட்டனர்.
2018ன் போராட்டம் மற்றும் அதன் மீதான அருணா ஜெகதீசன் அறிக்கை மூலம் இது ஒரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த தன்னெழுச்சியான அற வழி போராட்டத்தைச் சிதைக்கும் பொருட்டே துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. இதுமட்டுமின்றி இந்த தாமிர தொழிற்சாலையின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களின் நிலம் மற்றும் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறி பல ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வழங்கியுள்ள நன்கொடை விவரங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) இக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் வேதாந்தா நிறுவனம் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளது. இப்பெருநிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை நிதி பெற்றுக்கொண்டு அந்நிறுவனங்களின் விருப்பங்களுக்குச் செயலாற்றுவதைத் தான் ஒன்றிய மோடி அரசும் அதன் முகவரான தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் செய்து வருகின்றனர்.
தாங்கள் பெற்றுக்கொண்ட பணத்திற்கு உண்மையாக தங்கள் முதலாளி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு விசுவாசமாக ஒன்றிய பாஜக அரசும் அதன் மாநில முகவரும் பணியாற்றுகிறார்கள். இப்பணியின் பிரச்சார பிரிவாகத் தமிழர் விரோத பார்ப்பன “தி இந்து” குழுமம் மற்றும் அதன் இணைய பிராக்சிக்கள் செயல்பட்டு வருகிறது.
“தி இந்து” பத்திரிகை சொல்வதற்கு எதிராகச் செயல்பட்டாலே தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்று தந்தை பெரியார் அன்று சொன்னது இன்றும் பொருந்தும். இப்படியான தமிழர் விரோத “தி இந்து” குழுமத்தைத் தந்தை பெரியார் வழியில் திராவிட ஆட்சி புரிவதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு அரசு தூக்கிப்பிடிப்பது தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் மட்டுமல்ல தமிழீழ விடுதலை போராட்டமாகட்டும் தமிழ் நாட்டு மீனவர்கள் படுகொலையாகட்டும் “தி இந்து” பத்திரிகை எந்த சலனமும் இல்லாமல் தமிழர்களைத் தவறிழைத்தவர்களாகச் செய்தி வெளியிடும். ஆரியப் பார்ப்பன மற்றும் சிங்கள பேரினவாதிகளோடு கைகுலுக்கி நிற்கும்!