தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!

தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அலுவலக சோதனை தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!

விசாரணை என்ற பெயரில் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் ஒன்றிய அரசின் செயல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! – மே பதினேழு இயக்கம். (அறிக்கை)

தமிழ்நாட்டின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களின் வீடு அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் 14-06-2023 புதன்கிழமை ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே மே பதினேழு இயக்கம் கருதுகிறது.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நலனை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சியினர் மீது ஒன்றிய அரசின் நிறுவனங்களை கொண்டு அடக்குமுறையை ஏவும் தொடர் செயலில் ஒரு பகுதியாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை முறையும், அவரது கைதும் நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே அடக்குமுறையை ஏவும் ஒன்றிய பாஜக அரசின் செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக மே பதினேழு இயக்கம் கருதுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் ஒன்றிய விசாரணை நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுவதை யாரும் குறை கூறப் போவதில்லை. ஆனால், எதிர்க்கட்சியினரை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் இது போன்ற நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகவும், இந்திய ஒன்றிய அரசின் ஏகபோக அதிகாரக் குவிப்பையும் முன்நிறுத்துகிறது. இது மாநில அரசுகளுக்கும், மாநில அரசியலுக்கும் பேராபத்தாக அமையும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை அம்பலப்படுத்துவதும், அவர்களை நிராகரிப்பதும் மக்கள் மன்றத்தின் கடமை. மாநிலத்தின் இறையாண்மையை மதிக்காமல் தன்னிச்சையாக, அதுவும் தலைமைச் செயலகம் உள்ளே சென்று சோதனையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிராகரிப்பதும், அரசின் ரகசிய கோப்புகள் அடங்கிய அலுவலகத்தில் அரசின் அனுமதியின்றி நுழைவதும் கண்டிக்கப்படக் கூடியவையே. அமலாக்கத்துறையின் இந்த செயல் தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தக்கூடிய செயலாகும்.

சுதந்திரமாக செயல்படக்கூடியவை என்று கருதப்படும் ஒன்றிய அரசின் சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உள்ளிட்டவை, ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுவதையே காண முடிகிறது. இவை, பாஜகவுடன் இணக்கமாக செல்லாத மாநில கட்சிகள் மீது அடக்குமுறையை ஏவுவதற்கும், ஆட்சி மாற்றத்திற்கு உதவவும், எம்எல்ஏக்களை வாங்க குதிரை பேரம் நடத்தவும், செல்வாக்குள்ள எதிர்க்கட்சியினரை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளவும், இணங்காதவர்களை முடக்கவும், இஸ்லாமிய சிறுபான்மையினரை சிறையிலடைக்கவும், அரசியல் செயற்பாட்டார்கள் மீது கருப்பு சட்டங்களை ஏவவும் என பாஜகவின் அரசியல் நலனுக்காகவே செயல்படுகிறது.

கடந்த காலத்தில், மாநில கட்சிகளான தமிழ்நாட்டின் அதிமுக, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், டில்லியின் ஆம் ஆத்மி, மராட்டியத்தின் சிவசேனா, பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதாதள், ஜார்க்கண்டின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா உட்பட பல மாநில கட்சிகள் ஒன்றிய பாஜக அரசின் இந்த யுக்திக்கு பலியாகியுள்ளனர். இந்த மாநில கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அணிமாற செய்யப்பட்டுள்ளனர். கட்சிகள் உடைக்கப்பட்டு பாஜகவின் தலைமையில் ஆட்சிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் நிறுவனங்கள் துணை போயுள்ளன. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் அவை மேற்கொள்வதில்லை.

இதே போல், வங்கியில் பல கோடிகள் கடனாக பெற்று திருப்பி செலுத்தாத பனியா கும்பல்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்ட பாஜகவின் மாநில அரசுகள் மீதும் இந்த நிறுவனங்கள் விசாரணை நடத்தியதில்லை. பாஜக அரசின் மீது வைக்கப்பட்டுள்ள ரபேல் ஊழல், பிஎம் கேர்ஸ் ஊழல் போன்றவை குறித்தும் இவை கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இவை மாநில அரசுகளை முடக்கி ஒன்றியத்திடம் அதிகாரத்தை குவிக்க மட்டுமே செயல்படுகிறது. மாநில உரிமைகள் மீது பற்றுள்ளவர்கள் இந்த அத்துமீறலை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசின் மாநில அரசியல் மீதான அத்துமீறல் ஜனநாயக விரோதமானது. சுதந்திரமாக செயல்படும் அரசு உறுப்புகளை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது ஊழலை விட மோசமான செயலாகும். பாஜக அரசின் இந்த அதிகார அத்துமீறல் பாசிச சர்வாதிகார ஒற்றை ஆட்சியை நோக்கி செலுத்தப்படுகிறது. இவற்றை அனுமதிப்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வழிவகுக்கும். ஆகவே, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »