பெண் விடுதலைப் புலிகளின் இலக்கியம்-நிர்வாகத் திறன்

“தேசியத் தலைவர் ஆரம்ப காலத்திலிருந்து கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது எங்களுடைய போராட்டத்தை போரியல் அடிப்படையில் வேறு விடுதலைப் போராட்டங்களிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றது.”

– படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான தராகி சிவராம் அவர்கள்.

அமெரிக்கப் போரியல் ஆய்வாளரான சுடீவன் குகன் என்பவர் இந்திய ராணுவத்தைப் பற்றி எழுதிய புத்தகத்தில், இந்திய ராணுவம் போரிட்ட விடுதலை அமைப்புகளுக்கிடையில் விடுதலைப் புலிகள் அமைப்பானது கல்வி கற்ற, போரியல் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றமையாக இருந்ததனால் தான் இந்திய ராணுவம் பெறும் சவால்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது என்று எழுதியதைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகள் கல்விக்கு அளித்த முதன்மையான மதிப்பினை விளக்கியிருந்தார்.

மாமனிதர் தராகி சிவராமின் கூற்றுப்படியே, நாகரிகத்தில் மூத்த குடிகளாய் பிறந்து, வாழ்வியல் கல்வியால் சமத்துவத்தை நிலைநிறுத்தி, பெருங்கடலையேக் கட்டியாண்ட தமிழினத்திற்கு வரலாற்றுப் பூர்வமாக உரிமையாக இருந்த நிலத்தைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதைக் கொண்டு வெகுண்டெழுந்தவர்கள் விடுதலைப்புலிகள்.

பெண் விடுதலைப்புலிகளும் வீரத்தில் நிகரற்றவர்களாய், ஈகத்தில் இணையற்றவர்களாய் சிங்களப் பேரினவாதிகளை எதிர்த்துப் போரிட்ட வரலாறே பெரும்பாலும் அறியப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களின் கல்வியறிவும், நிர்வாகத் திறனும், கவியாற்றலும் , இலக்கிய நயமும், கருத்தியல் வளமும் பெரிதளவில் பேசப்படா பொருளாகவே இருக்கிறது. அவர்கள் அறிவுத் திறமையால் பெற்ற உள்ளாற்றலே தன்னினத்திற்கான உரிமைக்காக ஆயுதம் தூக்க காரணமாக இருந்திருக்கிறதே தவிர, ஆண்களின் சொற்படி அடிபணிந்து நடப்பதற்காக ஆயுதம் தரிக்கவில்லை என்பது இந்த உலகிற்கு தெரிய வர வேண்டும்.

கல்வியறிவும், போரியல் நுணுக்கமும் பெற்று எதிர்த்து நின்றதனால் தான், அவற்றை எதிர்கொள்ள முடியாத பேரினவாத, சிங்கள ஆணாதிக்க இராணுவ வெறியர்கள் இறுதிப் போரின் போது போர் மரபையே மீறி காட்டுமிராண்டிகளாக பாலியல் வக்கிரத்தை அவர்களின் மீது நடத்தி அதைக் காணொளிகளாக வெளியிட்டு மகிழ்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் நீதி நிர்வாகத்திலும், காவல் துறையிலும் ஐம்பது விழுக்காடு பெண்களே பணியாற்றினர். பெண் விடுதலைப் புலிகளுடன் அமைப்பு சாராத பொதுப் பெண்களும், பல வித தொழில்கள் செய்யும் பெண்களும் இணைந்து நிறுவனங்களில் பணியாற்றினர். இதனால் உதவி தேவைப்படும் பெண்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக உதவி கிடைக்கும் வழிமுறைகள் எளிமையாக இருந்தது. இதனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று எவருமில்லாத சமூகமாக உருவாக காரணமாக இருந்தது.

உலக அளவில் இப்படியொரு பேரன்புடன், திட்டமிட்ட கட்டமைப்பை பெண்களுக்கென சிறப்பான முறையில் முன்னெடுத்த பெண் விடுதலைப்புலிகளை விட, அனைத்துக் கட்டமைப்பையும் அதிகாரத்தில் வைத்திருக்கும் வேறெந்த நாட்டின் அரசுகளாவது செய்திருக்குமா என்பது கேள்விக்குறியே?

பெண் விடுதலைப் புலிகள் இயல்பாகவே “நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையுடனும்” இருப்பர். பெண்களின் இந்த தோற்றத்தைக் கண்டு மற்ற பொதுப் பெண்களுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் கராத்தே பயிற்சிகளில் ஈடுபட ஆர்வம் கொண்டு பலரும் கற்றுக் கொண்டனர். பெண் விடுதலைப்புலிகள் பெண்கள் மேம்பாடு பற்றிய பரப்புரையும், வரதட்சணை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையும் பொதுவான பெண்களுக்கிடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகள் “சீதனத் தடைச் சட்டம்” கொண்டு வருவதற்கு காரணமாகியது.

பெண்கள் சந்திக்கும் குடும்ப வன்முறைகளை புள்ளி விவரங்களுடன் தொகுத்து, உரிய நடவடிக்கை எடுத்து புனர்வாழ்வளிக்க ‘பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு மையம்’ செயல்பட்டது. வன்னியில் இயங்கிய இவ்வமைப்பானது வன்னியில் போர் அனர்த்தங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களை மேம்படுத்தும் பொருட்டு விடுதலைப்புலிகள் அமைப்புப் பெண்களை முக்கியப் பொறுப்பாளர்களாகக் கொண்டு நிறுவப்பட்டது. வெற்றி மனை உளவளத்துணை நிலையம், பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம், தாய், சேய் பராமரிப்பிற்காக மலர்ச்சோலை மையம், செங்கல், இனிப்பு, அப்பளம், சணல் போன்ற பொருள் உற்பத்தி நிலையங்கள், ஊனமுற்ற பெண்களுக்கான நிறைமதி இல்லம், கைம்பெண்களுக்காக உதயதாரகை தையல் மையம் என்பனவற்றையும் முல்லைத்தீவில் 93 சிறுவர்களைக் கொண்டு செந்தளிர் சிறுவர் இல்லமும் இந்த மையத்தின் கீழ் செயல்பட்டது.

மகளிர் அணியின் அதிகார ஏடாக ‘சுதந்திரப் பறவைகள்’ வெளிவந்தது. அதிகமான மக்களை சென்றடைந்த ‘புலிகளின் குரல்’ வானொலியில் திறமைசாலிகளான பல பெண் ஒலிபரப்பாளர்கள் இருந்தார்கள். சிங்களப் பேரினவாதம் நடத்திய போர்களினால் பாதிக்கப்பட்ட சுமார் 6000 சிறுவர்களுக்கான சிறுவர் இல்லங்களை பெண்களே முக்கியப் பொறுப்புடன் பராமரித்தனர். அதில் ஆதரவற்ற சிறுமிகளுக்காக அமைக்கப்பட்ட ‘செஞ்சோலை இல்லம்’ குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பெண்கள் நிர்வாகப் பணியிலும், காவல் பணியிலும், ஊடகப் பணியிலும் விழிப்புணர்வுப் பரப்புரையிலும், பெண்கள் மேம்பாட்டுப் பணியிலும் ஈடுபட்டிருந்ததை, சமாதான நடவடிக்கையின் செயல்பாட்டாளராக வன்னிக்கு சென்ற நா. மாலதி அவர்கள் தனது ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம் (நிமிர் பதிப்பகம் வெளியீடு)’ புத்தகத்தில் துல்லியமாகவும், விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

நிர்வாகத்தில் மட்டுமல்ல, படைத்துறையில் மட்டுமல்ல பெண் விடுதலைப் புலிகள் இலக்கியப் படைப்புகளிலும் சிறந்தவர்களாக விளங்கினர். போராளி அமைப்புகளுக்கிடையில் போர்க் காலங்களில் இயற்றப்படும் ‘போர் கவிதைகள்’ என்னும் இலக்கிய வகைமையை பெண் விடுதலைப் புலிகள் திறமையுடன் கையாண்டனர். அவர்களின் படைப்புகளை வெளியிட ‘மகளிர் பிரிவு வெளியீட்டகம்’ என்னும் பிரிவின் கீழ் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். பெண் விடுதலை, இன விடுதலை, சமூகநீதி, மூடத்தன ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றக் கருத்தாக்கங்கள் இவர்களின் படைப்புகளில் விரவியிருந்தன.

தங்கள் இனத்திற்கு நேரும் கொடுமைகளை புறக்கணித்து செல்லும் சர்வதேசங்களை நோக்கி, ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி இவர்கள் முன் வைத்த கேள்விகள் காத்திரமானவை. ஐ.நா சபையை நோக்கி ஒரு பெண் புலி சீற்றத்துடன் எழுதும் கவிதையில்,

“கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள் தான் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன
….
….
உலக சமாதானம் – இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும் – சீ
முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது”

– தீ பறக்கும் வார்த்தைகளில் பல நாடுகளும் கூடும் பிரம்மாண்டமான ஐக்கிய நாடுகள் சபையில், ஒரு இனத்துக்குரிய உரிமையை அழிக்கும் இனத்திலிருந்து பிரிந்து செல்ல பாதிக்கப்படும் இனத்திற்கு உரிமை உண்டு என்ற விதிகள் இருந்தும், பச்சைப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழினத்திற்கு உரிய நீதிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானம் என்னும் போர்வையில் நாடகமாடுவதைக் கண்டு உள்ளுணர்வு வெகுண்டு எழுதிய கவிதை.

தனது பேனாவே கூரான ஆயுதமென கவி வடிக்கிறார் ஒரு பெண் போராளி,

” எனது பேனா கூரானது
எனது கைகளில் உள்ள
ஆயுதத்தைப் போல
….
….
எமது உணர்வுகளை
கொச்சைப்படுத்தும்
சில பேனாக்களுக்கு
ஓர் வேண்டுகோள்!
முகவரி தாருங்கள்
உங்கள் முகத்திரையை
என் பேனா கிழிக்கும்!
….”

– துப்பாக்கி அன்றே கொல்லும் ஆயுதம், பேனா நின்றே கொல்லும் ஆயுதம் என்பதை மிகவும் கூரான சொற்களால் செதுக்கிய கவிதை.

கனரக வாகனங்களையும், பீரங்கிகளையும், எறிகணைகளையும் எறிந்த எங்கள் தேசம் “சூரியப் புதல்விகள் உலவும் தேசம் ” என்கிறார் ஒரு பெண் போராளி.

சுதந்திரம் எங்கள் உரிமை என்றதால் சாவு சாதாரண விலைக்கு வந்து விட்டதாக எழுதுகிறார் ஒருவர்,

“சுதந்திரமே,
….
….
சில நாடுகளில்
சில்லறைக்கே
அங்கிகரிக்கப்படும் உனக்கு
நாங்கள்
நோட்டு நோட்டாய்க்
கொடுத்த பின்பும்
வேட்டுக்கள் தானே கேட்கின்றன”

– கொத்துக் கொத்தாக நாங்கள் கொலையுண்ட பின்னும் சுதந்திரம் கிடைத்தபாடில்லை என ஒரு பெண் போராளி சுதந்திர தாகத்துடன் எழுதுகிறார்.

“குறுதிச் சேற்றில் பதியும் என் கால்கள் குறிக்கோளை நோக்கி விரைந்தேறும். நினைவுகளைத் தாங்கும் என் விழிகள் அடுத்த விடியலுக்காய் காத்திருக்கும்”,

“இலட்சிய வீரரின் இறுதி மூச்சின் வெப்பத்து வீச்சால் இந்து சமுத்திரம் இன்னுமொரு தரம் பொங்கித் தணிந்தது”,

“உலகத்து மொழி பெயர்ப்பாளர்களை உடனே அழையுங்கள். முடிந்தால் எங்கள் தோழரின் உள்ளத்து உணர்வுகளை உரத்து மொழிபெயர்க்கட்டும்.”

– இவை யாவும் பெண் போராளிகளின் உள்ளத்து உணர்ச்சிகளை படமெடுத்த கவிதைகளில் சில வரிகளே.

தலைமுறையாக கடத்தப்படும் ஆணாதிக்க சமூகத்தால் பெண்களின் ஆளுமைத் திறமையை முடக்க ஆண்கள் கையாளும் யுக்தியை இலக்கியத்திலிருந்து, மகாபாரதத்திலிருந்து, இராமாயணத்திலிருந்து உதாரணங்களை எடுத்துக் கையாள்கிறார் ஒரு போராளி. ஒளவையாரை ஏளனம் செய்த கம்பன் எழுதிய கவிதையை சுட்டிக்காட்டுகிறார். கருத்தியலில் மோத முடியாமல் கூச்சலிட்டு பெண் ஆளுமையை அடக்கிய பிரம்மவாதி, பெண் உணர்வுகளை மதிக்காத பொருளாக பார்த்த இதிகாசங்களின் காட்சியை விவரிக்கிறார். இன்னும் போரினால் தாங்கள் அடைந்த துயரங்கள் பல சிறுகதைகள் வாயிலாக கடத்துகின்றனர். எறிகணைகளுக்கிடையில் மக்கள் அடைந்த வலிகள், சிங்களப் படைகளுக்கு சவால் விட்டவாறு பெண் விடுதலைப்புலிகள் செய்த சாதனைகள், பெண் கடற்புலிகள், பெண் கரும்புலிகள் வீரத்தை விளக்கும் கதைகள், இந்திய அமைதிப் படையால் நிகழ்ந்த துயரங்களை முன் வைத்து எழுதிய சிறுகதைகள் என பெண் விடுதலைப் புலிகள் தங்கள் படைப்புகளால் பல ஆவணங்களை நம்மிடம் கையளித்துச் சென்றிருக்கிறார்கள்.

அவர்களின் பேனாக்களில் விரிந்த கவிதைகளில், சிறுகதைகளில் போலியான வார்த்தை விவரணைகள் இல்லை. வீணான சொற்கள் இடம்பெறவே இல்லை. ஒவ்வொரு வரிகளிலும் போரோடி வாழ்ந்த விதத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அமைதியாய் கடந்த சர்வதேசத்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். உலக சமாதான அமைப்புகளை நோக்கி கூர்மையான எழுத்துக்களை வீசுகிறார்கள்.

அவர்களின் கவிதைகளில், பேரரசர்களின் வெட்டி வீரத்தைக் கொட்டி எழுப்ப வாடகைக்கு நியமிக்கப்பட்ட புலவர்களின் பாசாங்கில்லை, மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்க முன்கள வரிசையில் நிறை போர் வீரர்களின் ஈகம் இருந்தது. அதிகார வர்க்கத்திற்கு கூழைக் கும்பிடு போடுவதற்கே பேனாவை வளைக்கும் எழுத்தாளர்களின் கோழைத்தனமில்லை, தன்னினம் சுயமரியாதையுடன் வாழ இன்னுயிர்களை ஈந்தவர்களை ஏந்திய வீரம் இருந்தது. சுயநல சுகத்திற்காக ஆளும் தரப்பிற்கு தாளம் அடிக்கும் மோகிகளின் பாவனை இல்லை, தமிழர் இறையாண்மை பெற்று தன்மானத்துடன் வாழ தமிழீழத் தாகத்துடன் இறந்தவர்களின் கனவு இருக்கிறது.

பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் தேசியத் தலைவர். தலைவரின் சொற்படி விடுதலைப் படிநிலைகளில் ஏறி நீடித்து நிற்கும் சாதனைகள் பல புரிந்து, வீரத்திற்கும், சுயமரியாதைக்கும் பெண்ணினத்திற்கு முன்னுதாரணமாக நடையிட்ட நம் தமிழீழத்து நாயகிகளைப் போற்றுவோம்.

“எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்!
….
….
சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னா பின்னப்பட்டு போகலாம்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்

அர்த்தமுள்ள
என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட
தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலா வருவீர்கள்!

அங்கே நான் மட்டுமல்ல
என்னுடன் அத்தனை மாவீரர்களும்
சந்தோசமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்!”

– வருங்காலத்தில் தங்கள் உள்ள விடுதலை உணர்வை வடிக்கும் எழுத்துகள் வந்தே தீரும் என உறுதியுடன் நம்பிய பெண் போராளிகளின் புன்னகையை சுதந்திரத் தமிழீழத் தாயகத்தில் தான் காண முடியும். அவர்களின் விடுதலை தாகம் நிச்சயம் ஒரு நாள் தீரும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »