இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் புரட்சி

தமிழ்நாட்டில் வீறு கொண்டெழுந்த புரட்சிகள் எல்லாம் சாதிகளைக் கடந்து, மதங்களைக் கடந்தே நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்களின் ஆய்வாகும். தமிழகத்தின் தென்பகுதிகளில் வெள்ளையரை எதிர்த்த முதல் சுதந்திரப் போரில் சாதிகளைக் கடந்து ஒன்றிணைந்த பாளையக்காரர்களின் எழுச்சியும், அடுத்தகட்ட சுதந்திரப் போராக வடஎல்லையில் மதங்களைக் கடந்து நின்று வெள்ளையர்களை விரட்டிய தமிழர்களின் வேலூர் புரட்சியும் இதற்கு சான்றாக இருக்கிறது.

தென்னிந்தியாவின் வரலாற்றை மாற்றியமைக்க 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் மருது சகோதரர்கள் உருவாக்கிய ‘புரட்சி கூட்டமைப்பு’ வெள்ளையர்களின் கோவை கோட்டையைக் கைப்பற்ற படைகளை நகர்த்தியது. அது போல 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வடஆற்காடு (வேலூர்) மாவட்டத்திலும் குறுநில மன்னர்களாய் ஆண்ட பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து போரிட்டனர்.

சோழர், பல்லவர், பிற்காலச் சோழர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தொண்டை நாடாக இருந்த வட ஆற்காடு பகுதி, அதன் பின்னர் மராத்தியர், முகம்மதியர் படையெடுப்புகளுக்குப் பின் நவாபுகளின் கைக்கு சென்றது. ஆற்காடு நவாபுகளின் கொடுங்கோன்மையால் பாளையக்காரர்களின் விடுதலை வேட்கை வீறு கொண்டெழுந்தது. நவாபுகளின் மோசமான ஆட்சியால் வட ஆற்காட்டினை பிரிட்டிசு அரசாங்கம் கைப்பற்றியது. பாளையக்காரர்களை கைக்கட்டி வரி கட்ட நிர்ப்பந்தித்தது. சீற்றம் கொண்ட பத்திற்கும் மேற்பட்ட பாளையக்காரர்கள் ஒன்றிணைந்து பிரிட்டிசாரை எதிர்த்துப் போரிட்டனர். அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் நிறைந்த பகுதிகளில் எட்டு மாதங்கள் வரையிலும் வெள்ளையரை எதிர்த்து நின்றனர் பாளையக்காரர்கள். பெரும் ஆயுத பலமும், துரோகிகளின் பலமும் கொண்டே வென்று பழகிய ஆங்கிலேயர்கள் இந்த தன்மானத் தமிழர்களையும் வெற்றி கண்டனர். 1805-ல் வட ஆற்காடு பாளையர்கள் வீழ்ந்தனர். ஆங்கிலப் படை ஈவிரக்கமின்றி வீரர்களைக் கொலை செய்தது. மக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்தது. எல்லையற்ற கொடுமையை அனுபவித்த தமிழர்கள் பழிதீர்க்கும் நாட்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அதே சமயத்தில் கர்நாடகத்தில் ஆங்கிலேயர்களுக்கு தீவிரமான பகைவராய் மைசூரை ஆண்டு கொண்டிருந்தார் திப்பு சுல்தான். மத வேற்றுமை பாராது நல்லாட்சி நடத்திய திப்புவின் மீது மக்கள் மிகப் பெரிய மதிப்பினைக் கொண்டிருந்தனர். கோயில்களுக்கு பெருங் கொடைகளும், தானங்களும் வழங்கியவர் திப்பு சுல்தான். பல கோயில்களை புனரமைக்க நிதிகளை தாராளமாக கொடுத்தார். மருதுபாண்டியர்கள் அமைத்த புரட்சிக் கூட்டமைப்புடன் கைக்கோர்த்து நின்றார். இங்கிலாந்து அரசை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டிருந்த நெப்போலியனோடு நட்பு கொண்டிருந்தார். ஆங்கிலேயரை எதிர்த்த உலகளாவிய புரட்சிப் போர்களை ஆதரித்தவர். வரலாற்றில் உன்னத வீரர்கள், எதிரிகளை விட துரோகிகளால் தான் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது திப்பு சுல்தான் மரணத்திலும் நிரூபணமானது. வெள்ளையர் படையைத் தொடர்ந்து விரட்டியடித்த வீரரான திப்புசுல்தான், படைத் தளபதியாய் இருந்த துரோகிகளின் செயலால் சிறிரங்கப்பட்டினம் கோட்டையில் 1799-ல் வெள்ளையர்களுடன் நடந்த போரின் பொழுது கொல்லப்பட்டார்.

விடுதலை உணர்விற்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்கிய திப்புவின் மறைவிற்கு பின், அவரின் மனைவியரையும், மைந்தர்களையும் வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர் வெள்ளையர். மக்களின் மீது கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பொற்கால ஆட்சி தந்த திப்பு சுல்தானை வீழ்த்திய மனக்குமுறலுடன் இருந்த மக்கள் மீது கொலையும், கொள்ளையும் ஏவப்பட, கடுமையான சீற்றம் கொண்ட மூவாயிரம் பேருக்கு மேல் வேலூரில் குடிபுகுந்தனர். வேலூர் மக்களும் அவர்களை அரவணைத்தனர். அனைவரும் பழிவாங்கும் நாட்களுக்காக காத்திருந்தனர்.

வட எல்லையில் பாளையக்காரர் வீழ்ச்சிக்குப் பின், மனம் கொதித்துப் போயிருந்த தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிலரும், பாளையக்காரர்களின் மரபு வழி உறவுகளும் ஆங்கிலேயப் படையில் ராணுவ வீரர்களாய் இணைந்தனர். இவர்களை ஒன்று திரட்டி விடுதலைக் கனலை மூட்டும் செயல்களில் இறங்கினர் திப்பு சுல்தானின் இளவரசர்கள். அன்றைய நிலையில் ஆங்கிலப் படையில் இந்திய வீரர்கள் 1500 பேரும், ஐரோப்பிய வீரர்கள் 370 பேரும் வேலூர் கோட்டைக்குள் பணியாற்றினர். தங்களின் காவலுக்காக இந்திய வீரர்களையே அனுமதித்தனர் திப்புவின் இளவரசர்கள். போரைத் துவங்கும் அனைத்து சாத்தியமான வழிகளையும் சிந்தித்தனர் திப்புவின் புதல்வர்கள்.

வேலூர் கோட்டைக்குள் இருந்த ஜும்மா பள்ளிவாசல் அவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. ஐந்து வேளைத் தொழுகைக்காக இஸ்லாமிய மக்கள் குழுமிய வண்ணம் இருப்பர். விடுதலை வேள்விக்கு இஸ்லாமிய செய்திப் பரப்புரையாளர்களான பக்கீர்களை பயன்படுத்திக் கொண்டனர் திப்புவின் மைந்தர்கள். வெகுமக்கள் குழுமிய பக்கீர்களின் ஆலோசனைக் கூட்டங்களை ஆன்மீக சொற்பொழிவு என நினைத்தனர் வெள்ளையர். அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருத்துப் பரப்பல்களை, திப்புவின் இளவரசர்களிடமிருந்து வந்த செய்திகளை பாடல்கள் வழியாக மறைமுகமாக பக்கிர்கள் பரப்பினார்கள். இந்து, முஸ்லீமாக பணியாற்றிய சிப்பாய்களிடத்திலும் விடுதலை நெருப்பை மூட்டினார்கள். நீறு பூத்த நெருப்பாய் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தின் மீது சீற்றம் கொண்டிருந்த சூழலில் தான், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக சில உத்தரவுகளை விதித்தது ஆங்கில அரசாங்கம். இந்துக்கள் நெற்றியில் திருநீறு இடக் கூடாது, முகம்மதியர் தாடியை வழிக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை பிரிட்டிசு அதிகாரிகள் விதித்தார்கள். இதனை ஏற்க மறுத்தவர்களுக்கு கசையடிகளே தீர்ப்புகளாக வழங்கப்பட்டன. சிப்பாய்கள் சீறினர். பொதுமக்கள் கோவம் கொண்டனர். மதங்களைக் கடந்து பொதுமக்களும், சிப்பாய்களும், பாளையக்கார மரபுகளும், திப்புவின் மைந்தர்களும் இணைந்து நடத்திய புரட்சிக்கு நாள் குறிக்கப்பட்டது.

வெள்ளையர் விதித்த மதக் கட்டுப்பாடு வேலூர் புரட்சிக்கு ஒரு காரணம் தானேத் தவிர, ஒரே காரணம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளார்ந்த அளவில் மக்களின் மனதில் வேரூன்றி வளர்க்கப்பட்ட விடுதலை உணர்ச்சி புரட்சியாய் உருமாறியது. இரகசியக் கூட்டங்கள் நடந்தன. புரட்சி வேலை செய்ய மன்றங்கள் உருவாக்கப்பட்டன. மதங்களைக் கடந்து ஒன்றான வீரர்கள் வேலூர் கோட்டையை தங்கள் வசம் கைப்பற்றும் நாளை எதிர்நோக்கி இருந்தனர். அந்த நாளும் வந்தது.

திப்பு சுல்தானின் மகளுக்கு 1806-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9-ம் நாள் திருமணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான உறவினர்கள் வந்து குழுமினர். புரட்சியாளர்களும் வந்திறங்கினர். புரட்சிக்கான சூழல் ஏதுவாகியது. அடுத்த நாள் ஜூலை 10ம் நாள் வெள்ளையர்களின் இராணுவ நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்த நாளில் தமிழர்களின் இராணுவப் புரட்சி சுதந்திர வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது. வெள்ளையர் கொண்டாடும் இராணுவ நாள் என்பதால் அதிகாலைப் பயிற்சிக்காக ஜூலை 9 ந் தேதி இரவே ராணுவ வீரர்கள் கோட்டைக்குள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களே அன்றிரவு இரவுக் காவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர். ஒரு இஸ்லாமிய அதிகாரி, புரட்சியாளர்கள் பலரையும் கோட்டைக்குள் தங்க வைத்தார். வெள்ளை அதிகாரியிடம் இருந்து நயமாகப் பேசி கோட்டைத் தலைவாசலின் காவலை ஏற்றார் ஷேக் காசிம் என்ற புரட்சியாளர்.

1806 – ஜூலை, 10ம் நாள் அதிகாலை தமிழர் ராணுவத்தின் ஒரு பகுதி பயிற்சிக் களத்தில் வந்து நின்று பயிற்சியெடுப்பது போல துப்பாக்கிகளால் குறி பார்த்தனர். அங்கிருந்து ஒரு படை கிளம்பி கோட்டைத் தலைவாயில் நோக்கிச் சென்று ஆங்கில ராணுவத்தினரை சரமாரியாக சுட்டனர். அந்த சத்தத்தைக் கோட்டதும் மற்றொரு படை, போதை ஏற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர் பட்டாளத்தின் மீது குண்டுகளை வீசியது. வெள்ளையர்கள் பயந்தோடினர். புரட்சியாளர்கள் சுட்டுக் கொண்டிருந்தனர். இதற்குள் புரட்சியாளர்கள் கோட்டையின் முக்கியப் பகுதிகள், ஆயுத தளவாட அறை போன்றவைகளை கைப்பற்றினர். ஆங்கிலேயத் தளபதிகள் அவசரமாக ஒரு இல்லத்தில் கூடி கலந்தாலோசனை நடத்தினர். தமிழர் படை அந்த இல்லத்தைச் சுற்றி வளைத்தது. தளபதிகள் தலைதெறிக்க ஓடினர். 372 பேரைக் கொண்ட வெள்ளையர் படையில் 190 பேர் தமிழ் சிப்பாய்களால் வீழ்த்தப்பட்டனர். ஆவேசத்துடன் போர் புரிந்து கோட்டைக் கொடிமரத்தையும் பிடித்து விட்டார்கள் தமிழகப் புரட்சியாளர்கள். திப்புவின் மகன் கொடுத்தனுப்பிய திப்பு சுல்தானின் கொடியை பறக்க விட்டார்கள். திப்பு சுல்தான் கண்ட விடுதலைக் கனவு நிறைவேறி விட்டதாக சாதி, மதங்களைக் கடந்து தமிழர்களாய்ப் போரிட்டு வெற்றி கொண்ட தமிழக ராணுவ வீரர்கள் ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டத்தில் மூழ்கினர். வேலூர் கோட்டை விழாக்கோலம் பூண்டது.

இவ்வாறு வேலூர் கோட்டையில் தங்கள் வெற்றியை தமிழகச் சிப்பாய்கள் நிலைநாட்டிக் கொண்டிருந்த வேளையில், வேலூர் கோட்டையிலிருந்து தப்பித்துச் சென்ற ஆங்கிலேயத் தளபதியான மேஜர் கோட்ஸ் என்பவன், வட ஆற்காடு மாவட்ட ராணுவத் தளபதி கர்னல் இருந்த கில்லெஸ்பிக்கு செய்தி அனுப்பினான். பெரும் படைகளும், பீரங்கிகளையும் கொண்டு வந்த கில்லெஸ்பி, ஆரவாரம் பூண்டிருந்த வேலூர் கோட்டையின் கதவுகளை சினங்கொண்டு இடித்துத் தள்ளி, களிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினான். பேயாகச் சுழன்றது வெள்ளையர் படை. இந்து மற்றும் இஸ்லாமியத் தமிழர்கள் 800 பேர் கொல்லப்பட்டனர். பீரங்கிகளின் வாயினில் தமிழர்களை கட்டி வெடிக்கச் செய்தான் கில்லெஸ்பி. திப்பு சுல்தானின் இளவரசர்களில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 2000க்கும் மேற்பட்டோர் சிறையிலடைக்கப்பட்டனர். திப்புவின் குடும்பம், உறவுகள் என 500க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டனர். வயது முதிர்ந்தவர்களும், சில பெண்களும் மட்டும் கோட்டைக்குள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். வேலூர் புரட்சிக்கு ஆலோசனைக் கூடமாக இருந்த ஜும்மா பள்ளிவாசல் மூடப்பட்டது. ஆங்கிலேயர் அதனை அஞ்சலகமாக்கினர். 217 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னமும் அந்த பள்ளிவாசல் இஸ்லாமிய சமூகத்தின் தொழுகைக்காக திறக்கப்படவேயில்லை.

வேலூர் புரட்சி, வெள்ளையர்களே அதிரும் வண்ணம் விரிவான திட்டமிடப்பட்ட புரட்சியாக இருந்தது என்பது பின்னாட்களில் விசாரணையில் தெரிய வந்தது. வேலூர் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்களாவது புரட்சியாளர்கள் தங்கள் பிடியில் வைத்திருக்க வேண்டும். இடைப்பட்ட சமயத்தில் திப்பு சுல்தானின் இளவரசர் பத்தாயிரம் படைவீரர்களை போர்க்கருவிகளுடன் திரட்ட வேண்டும், மைசூர் மக்களின் துணையை நாடி, வேலூர் மற்றும் பேட்டையைப் பிடித்து ஆங்கில ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டமாக இருந்தது. பேட்டைப் பகுதியில் பல்லாயிரம் மக்கள் புரட்சிக்கு தயாராக இருந்தனர். புரட்சி வீரர்களுக்கு ஓய்வு பெற்றிருந்த ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர். இந்த வீரிய திட்டத்தின் தோல்விக்கு, புரட்சிக்கு திட்டமிட்டிருந்த நான்கு நாட்களுக்கு முன்பே புரட்சி நடத்தும் அளவுக்கு ஒரு சிப்பாயால் இந்த தகவல் கசிய விடப்பட்டதே காரணமாகி விட்டது.

வேலூர் புரட்சியில் வெள்ளையர் படையை எதிர்த்து தமிழகப் புரட்சி வீரர்கள் வேட்டையாடிய போதும், அவர்களின் வீட்டுப் பெண்களை எந்தவித அவமானத்திற்கும் உள்ளாக்கவில்லை. மாறாக சில சிப்பாய்கள் அந்த இக்கட்டான தருணத்திலும் அவர்களைக் காத்தனர் என பின்னாட்களில் ஆங்கிலேய அதிகாரிகள் எழுதி வைத்த ஆவணக் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்தியாவின் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற வீரம் மிகுந்த ஊர் வேலூர். வெள்ளையரின் கொடுமைக்கு எதிராக வெள்ளையரின் படையிலிருந்த தமிழர்கள் திரண்டெழுந்து போர் புரிந்த முதல் நிலம் நம்முடைய வேலூர். சாதி, மதமாக நம்மைப் பிரித்து நம்மை அடிமையாக்கலாம் என திட்டமிட்ட வெள்ளையரின் சதியை முறியடித்து இந்து-முஸ்லீம் என்கிற மத வேற்றுமையை கடந்து, சாதி வேறுபாடுகளை நீக்கி தமிழர்களாய் ஒன்றுபட்டு வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய மண் வேலூர் மண். இப்போர் வெற்றி பெற்றிருந்தால் வெள்ளையர் ஆட்சி 1806-ம் ஆண்டு ஜூலை10-லேயே முடிந்து போயிருக்கும். அதற்குப் பின்னர் வேலூர் புரட்சி வழிகாட்ட, வேலூரைப் பின்பற்றி வாலாஜாபாத், பெல்லாரி, பெங்களூர், நந்தியாதுர்க்கம், சங்ககிரி என புரட்சி விரிவடைய ஆரம்பித்தது.

இந்தியாவின் முதல் விடுதலைப்போராக இப்போர் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வட இந்தியாவில் வேலூர் புரட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு பின் நடந்த போரையே முதல் சுதந்திரப்போர் என டில்லி அரசு இன்றளவும் சொல்கிறது. தமிழரின் வீரஞ்செறிந்த வரலாறை மறைத்திருக்கிறது. இந்த வீரத்திற்கு சொந்தக்காரர்களாகிய வேலூர் மக்களை மதரீதியாகப் பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வட இந்திய கட்சியான பாஜக முயல்கிறது. வேலூர் மக்களின் புரட்சியை அங்கீகரிக்காத வட இந்திய கட்சிகள் வேலூர் மக்களின் ஓட்டுக்களை பெற வேண்டுமெனத் துடிக்கிறார்கள். இப்படியான சூழலில் நம் தமிழ்மண் விடுதலை பெறுவதற்காக இந்து-இசுலாமியர் என வேறுபாடு பார்க்காமல், சாதி வேறுபாடு கொள்ளாமல் போராடி மடிந்த வீரர்களுக்கு புகழ்வணக்கமும், வீரவணக்கத்தையும் செலுத்தி நம் மரபுகளை உயர்த்திப்பிடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »