பாஜக குண்டர்களின் அட்டூழியம்

“வீழட்டும் பாஜக, வெல்லட்டும் தமிழ்நாடு“ முழக்கத்துடன் மே 17 இயக்கம் பாஜக-விற்கு எதிரான தனது பரப்புரையை சென்னையில் இருந்து தொடங்கியது. ஏப்ரல் 2-ம் நாள் முதல் தொடங்கிய இந்த பரப்புரை சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு தழுவிய அளவில் திருச்சி, நாகை, சிதம்பரம், கோவை மற்றும் நீலகிரி தொகுதிகள் என்று 120-க்கும் அதிகமான இடங்களில்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பரப்புரைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடும், எங்கும் எந்த விதிமீறல்கள் இல்லாமலும் மக்களின் ஆதரவோடு சீராக தொடர்ந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9, 2024 அன்று கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகளின் கட்சி தலைவர் தோழர். குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர். அபு மற்றும் தமிழ் சிறுத்தைகள் கட்சி தோழர். அகத்தியன் ஆகியோர் பரப்புரைக்காக கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குழுமியிருந்த வேளையில், அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி கடிதம் காட்ட சொல்லியும், நீங்கள் எந்த கூட்டணி என்றும், மே 17 இயக்கத் தோழர்கள் அணிந்துள்ள இயக்க சட்டை(T-shirt) கழட்ட வேண்டும் என்று (குறளரசன் எனும் காவலர்) கூறியுள்ளனர். தோழர் திருமுருகன் காந்தி பரப்புரைக்கான முறையான அனுமதியைக் காண்பித்த போதும் காவல் துறையின் இந்த மிரட்டும் போக்கு தொடர்ந்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தி தங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்து கேள்வி கேட்டதும் பின்வாங்கத் தொடங்கினர்.

அந்நேரத்தில் அங்கு வந்த பாஜக குண்டர்கள் பரப்புரைக்கு வந்த தோழர். திருமுருகன் காந்தியை தடுத்தும், ஒருமையில் தகாத வார்த்தையிலும் பேசினர். இதற்கு சமாதானம் பேசிய காவல்துறையும் பிரச்சனை செய்யாமல் கலைந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். பிரச்சனையை தடுக்க வேண்டிய காவல் துறை அங்கு ஒருதலையாய் செயல்பட்டனர். பாஜக-விற்கு எதிராக மே 17 இயக்கம் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தை மக்களிடம் வழங்கக்கூடாது என மூத்த காவல் அதிகாரியிடம் பாஜக-வின் மாவட்ட பொறுப்பாளரான உத்தம ராமசாமி என்பவர்  உத்தரவிட்டார். இதனால் வாக்குவாதம் முற்றியது. பாஜக-விடம் மென்மையாக நடந்து கொண்டது   காவல்துறை.

மே 17 இயக்கம் தயாரித்த துண்டறிக்கையில் மோடியின் 10 ஆண்டு கால மக்கள் விரோத செயல்கள் இருந்தது. இது மக்களிடம் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்றால் ‘திராவிடம் ஒழிக, திராவிடத்தினால் ஒழிந்தோம்’ என்று பரப்புரை செய்யும் பாஜகவினரால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதா?

பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்டு மிரட்டிய பாஜக மாவட்ட பொறுப்பாளரையும், ‘பாரத் மாதா கீ ஜே‘ என முழக்கமிட்ட கும்பலை ‘ஜெய் பீம்!’, ‘பெரியார் வாழ்க!‘, ‘தமிழ்நாடு தமிழருக்கே!, வெளியேறு வெளியேறு, வட நாட்டானே வெளியேறு!!‘ என்கிற முழக்கத்தோடு தோழர்கள் விரட்டியடித்தனர். அந்தப் பகுதியில் கடும் போராட்டத்திற்கு பின்பு தான் அந்தப் பகுதியில் பரப்புரை தொடங்கப்பட்டது.

மேலும் கூடலூர், அரவங்காடு, குன்னூர் ஆகிய பகுதிகளில் முறையான அனுமதி வாங்கி இருந்த போதும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பரப்புரையை மறுக்க தேர்தல் ஆணையிடம் எந்த வலுவான காரணங்களும் இல்லை ஆனாலும் அனுமதி மறுக்கப்பட்டது. காவல் துறையுடனும் தேர்தல் ஆணையத்திடமும்  போராடியே பரப்புரை நடத்தப்பட்டது. ஒரு காவல் அதிகாரி தோழர். திருமுருகன் காந்தி மீது வழக்குகள் இருப்பதால் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் ஆணையமும் கூறாத விதிமுறையை காவலர்கள் பாஜக-வின் நன்மைக்காக செய்ய வரிந்து கட்டி வருவது மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக் காவல் துறை யார் கட்டுப்பாட்டில்  இயங்குகிறது என்கிற சந்தேகத்தையே எழுப்புகிறது.

பாஜக குண்டர்களின் அடாவடி தமிழ்நாடு முழுவதும் அடக்க முடியாத வண்ணம் தொடர்கிறது. தேர்தல் விதிமுறையை மீறி இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த பாஜகவினரை கேள்வி கேட்டதற்காக திமுகவை சேர்ந்த 5 பேர்களை இந்த பாஜக குண்டர்கள் அடித்து காயப்படுத்தி உள்ளனர். நாகப்பட்டினத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தி ஒரு வீட்டையே தீக்கிரையாக்கி உள்ளனர். திருப்பூரில் GST குறித்து கேள்வி கேட்ட பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி, தகாத வார்த்தைகளை உபயோகித்து உள்ளனர்.

மேலும் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரத்தை தொடர்கிறார். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒரு பெருங்கூட்டத்துடன் சுற்றுவதும் போக்குவரத்தை மறிப்பதும் நடைபெறுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கிய நிலையில் வாகனத்தின் விளக்கையும் ஒலி பெருக்கியை மட்டும் அணைத்து விட்டு மக்களை சந்திப்பது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் ஆகாதா?

கோவையில் சுதந்திரமாக பரப்புரை செய்வது கூட கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. அண்ணாமலைக்கு சேவகம் செய்யும் போக்கே  அதிகாரிகளிடம் காண முடிந்தது. கோவையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உள்ள ஆட்கள் காவல் துறையில் ஊடுருவியுள்ளார்கள் என்கிற கேள்வி எழுகிறது. பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருபவர்கள் தான் இந்த  ஆர்எஸ்எஸ் அமைப்பு. சாகா பயிற்சி எனும் பெயரில் இளைஞர்களிடம்  இந்தியா முழுக்க தீவிரவாத சிந்தனையை பரப்பி வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்தினார்கள். பாஜக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அமைப்புக்கு உயிரூட்டும் திட்டமிட்ட செயல் திட்டங்களை வகுத்து நிறைவேற்றியும் வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி கட்சியை சார்ந்தவர்கள் பொய் நாடகங்களை நடத்தி ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க முற்பட்டதை நாம் பல இடங்களில் காணலாம். இந்து தர்மம், சமஸ்கிருத கலாச்சார அடிப்படையில் இந்துக்களை ஒன்று திரட்டுவதே தங்களின் இலட்சியம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்து முன்னோக்கி நகர்கிறார்கள். இவர்களின் ‘இந்துக்களே ஒன்றிணையுங்கள்’ எனும் கோசத்திற்கும், முருகனின் வேலை கையில் எடுத்து அரசியல் செய்த போதும் அதற்கு இரையானவர்கள் பலர். எதிர்க்கட்சிகளை விட பாஜகவால் கூட்டணி கட்சிகளே அதிகம் சிதைந்து போயின. தமிழ்நாடு இத்தேர்தலில் பலவகையில் திசை திருப்பலுக்கும், மடை மாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிதானமாக ஊடுருவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தேர்தலில் பாஜக வென்றால் கோவை  ஒரு கலவர பூமியாக மாறிவிடும். தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாளைய திட்டம். அவ்வகையில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி போராடுவார்கள். ஏற்கனவே மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோவிலுக்கு வராதவர்களுக்கு உங்கள் ஓட்டு வேண்டுமா? புனிதமான சாவன மாதத்தில் ஆட்டுக்கறி சாப்பிடுவது பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்று உணவு அரசியலையும், மதவாத அரசியலையும் முன்னிறுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதும்  மக்களிடம்  அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுதான், பாஜகவின் மாற்று அரசியலாக இருக்கிறது.

பெண்கள் மீது ஒரு இடத்தில் வன்முறை நடக்கிறது என்றால், அந்த சமூகம் பாதுகாப்பு அற்ற நிலையில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. சமத்துவம், சமூகநீதி நிறைந்த தமிழ் மண்ணில் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத கும்பலை வேரோடு களைய வேண்டும்.

இது எங்கள் தமிழ்மண். சங்கிகளின் கலவர மிரட்டலுக்கு அஞ்சுகிற கூட்டமல்ல எமது மே17 இயக்கம். இது பெரியார், பிரபாகரன், அண்ணலின் வழி வந்த படை. “எதிர்த்து நிற்போம், துணிந்து வெல்வோம்” வடநாட்டு அடிமை கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லாமல் செய்வோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »