தராகி சிவராம் நினைவுநாள் – திருமுருகன் காந்தி

தமிழினம் கண்ட தமிழ்த்தேசிய சிந்தனையாளர் தராகி சிவராமின் நினைவுநாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் வலைதளத்தில் ஏப்ரல் 28, 2024 அன்று பதிவு செய்தது.

தமிழரின் அரசியல் தளத்தை விரிந்த பார்வையில் ஆராய்ந்தவர். தமிழினம் கண்ட தமிழ்த்தேசிய சிந்தனையாளர் தராகி சிவராமின் நினைவுநாள் இன்று. இராணுவ ஆலோசகராக தெற்காசியாவின் எதிர்காலம் குறித்து ஆழமான உரைகளை வெளிப்படுத்தியவர். அரசியல்-இராணுவ கூறுகளை இவரைப்போல ஆய்வு செய்து வெளியிட்ட ஊடகவியலாளரை காண இயலாது. இந்தியாவிற்குள்ளாக போராளிகளது அரசியலையும், போர் தந்திரங்களையும் கொச்சையாக விமர்சித்தவர்களின் வாதங்களின் தற்குறித்தனத்தை புரிந்துகொள்ள இவரது கட்டுரைகளை வாசிப்பது அவசியம்.

குறிப்பாக புலிகள் எதிர்ப்பு கட்டுரைகளை எழுதிக்குவித்த ம.க.இ.க முன்னாள் அரசியல் தலைமையான மருதையன் போன்றோரின் அரசியல் பார்வை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது, மார்க்சிய விரோதமானது என்பதை தராகியின் கட்டுரைகள் போகிற போக்கில் சொல்லிச் செல்லும். 40 ஆண்டுகளாக தற்குறித்தனத்தின் உச்சத்தில் நின்று ஈழப்போராட்டத்தை இழிவு படுத்திய இக்கும்பலின் வாதங்கள் தராகியின் முன்னர் தவிடுபொடியாவது மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் சர்வதேசிய தளத்தை, பங்களிப்பை தராகி மிக எளிமையாக விளக்குவிடுவார்.

தற்போதைய மேற்காசியாவின் போர் குறித்து 2000ம் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து பேசி இருக்கிறார். பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னரான தெற்காசியாவின் அரசியல் குறித்த தராகியின் ஆய்வுகள் உலகளவில் கவனத்திற்குள்ளானவை. இடதுசாரி பார்வை எனும் பெயரில் ஈழப்போராட்டத்தை இந்திய பார்ப்பனிய narrative உள்ளாக கொண்டு சென்றோர் திட்டமிட்டு தராகி எனும் மனிதனின் சிந்தனைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவிச்செல்லுவதை இன்றளவும் காண இயலும்.

ஏகாதிபத்திய ஊடகங்கள் மட்டுமல்லாது என்.ராம் போன்ற சந்தர்ப்பவாத பார்ப்பன ஊடக கும்பலின் அரசியலை முறியடிக்க ’தமிழ்நெட்.காம்’ எனும் தமிழ்த்தேசிய ஊடகத்தை உருவாக்கி, பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ராய்ட்டர்ஸ், சி.என்.என், தி இந்து ஆகியவை உருவாக்கிய இலங்கை சார்பு செய்தி கட்டமைப்பை உடைத்து, தமிழர் தரப்பு செய்திகளை உலகளாவிய அளவில் கவனத்திற்கு கொண்டு சென்றது தமிழ்நெட். அமைதிப்பேச்சு வார்த்தையை குலைக்க மேற்கொள்ளப்பட்ட செய்தித்திணிப்புகளை/திரிபுகளை அம்பலப்படுத்தியது.

கிழக்குப்பகுதியில் கருணாவால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் போது, கருணா நேர்மையற்ற இரண்டகம் செய்வதை தராகி சிவராம் அம்பலப்படுத்திய பின் கருணாவின் நகர்வுகள் சிதறுண்டு போயின. இந்தியாவிற்குள்ளாக கருணாவின் மீது போராளி, கலகக்காரன் மற்றும் victim card பிம்பம் கட்டமைக்கப்பட்டதை நம்மால் இன்றும் மறக்க இயலாது. அன்றைய தினத்தில் போராட்டத்தையும், அமைதி ஒப்பந்தத்தையும் உடைக்க கருணா பிம்பத்தை பயன்படுத்திய தமிழ் அறிவுசீவிகள் அதன் பின்னர் வாய்மூடி இன்றுவரை மெளனம் காக்கின்றனர். தமது நேர்மையின்மை குறித்து சுயவினர்சனத்தை மேற்கொண்டதுமில்லை.

இப்படியான நாச வேலைகளை முறியடிப்பதில் முன்னணி சிந்தனையாளராக நின்ற ‘தராகி’ சிவராம், இதே நாளில் சிங்களத்தின் படைகளால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு படுகொலையானார். தமிழர் போராட்டத்தின் நுணுக்கங்களை அறிய வேண்டுமெனில் தராகி சிவராம் கட்டுரைகள் நாம் வாசிப்பது மிக அவசியம். அப்போது தான் என்.ராம், மருதையன் போன்றோரின் சீரழிவு பரப்புரைகளைஉணர்ந்து கொள்ள இயலும். தமிழினத்தின் சார்பில் நின்று தமிழரின் விடுதலை போராட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் எடுத்துரைத்த போராளி தராகி சிவராமிற்கு எமது வீரவணக்கங்கள்.

தராகியின் உறுதிப்பாட்டை முன்வைத்து, அவரது நண்பர் மார்க் விட்டேக்கர், தராகியின் படுகொலையை ஒட்டி எழுதிய நினைவுக்குறிப்பு. ‘தன்னுடைய பணி தன்னை கொன்றுவிடும்’ என்பதை பதிவு செய்து, தனது தேசத்திற்கான ஊடக பணியை தொடர்ந்தவர் என்பதை பதிவுசெய்த கட்டுரை கீழேபதிவு செய்கிறேன்.

https://jdsrilanka.blogspot.com/2010/04/remembering-sivaram-dharmeratnam.html?
https://www.facebook.com/plugins/post.php?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »