காலநிலை மாற்றமும் வெப்ப அலைகளும்

“உலகத்தில் 1986 ஆண்டுக்கு பின் பிறந்த எந்த குழந்தையும் தனது வாழ்நாளில் ஒரே ஒரு மாதத்தை கூட இயல்பான மாதமாக பார்க்க முடியாது” – என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது காலநிலை மாற்றம். பூமியின் இயங்கும் அங்கங்களை பல ஆண்டுகளாக உடைக்கும் அல்லது மாற்றும் விதமான மனிதனின் செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் வெப்பமே ’உலக வெப்பமயமாதல்’ என்கிறோம். இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 1, 2024 -ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் ஏப்ரல் முதல் சூன் மாத வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது.

இந்தியாவில் வழக்கமாக கோடைக் காலம் மத்திய, வடக்கு மற்றும் கடலோர பகுதிகளில் தான் முக்கிய வெப்ப மண்டலம் இருக்கும், தற்போது தமிழ்நாட்டிலும் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர், பரமத்தி வேலூர், திருநெல்வேலி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது வீசும் வெப்ப அலையால் உத்திரப்பிரதேச கட்டிடத் தொழிலாளி ஒருவரும்,  மட்டைப்பந்து (cricket) விளையாடிய 14 வயது சிறுவனும் வெப்ப பக்கவாதம் (Heat stroke) என்ற நோய் தாக்கி உயிரிழந்தார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல கேரளா மற்றும் ஒடிசாவிலும் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்துசெய்திகளில் வெளியானது.

வெப்ப அலை என்பது சமவெளியில் ஒரே பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40°C தொடும்போதும் அல்லது இயல்பிலிருந்து 4.5°C அல்லது 5°C தாண்டும்போது அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையாக அறிவிக்கிறது. அதேபோல மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 30°C தாண்டினாலும், கடலோர பகுதிகளில் வெப்பநிலை 37°C தாண்டினாலும் அதை வெப்ப அலை என்று குறிப்பிடுகிறோம்.

காலநிலை மாற்றத்தால் அதிதீவிர வெப்பமும், அதிதீவிர மழையும் ஏற்படுகிறது. அதாவது வழக்கத்தை விட உச்சமாக 44°C வெப்பம் அதிகரித்துள்ளது. ஊட்டியில் வெப்பநிலை 29.4°C பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 6.1°C அதிகம். இப்படி காலநிலை மாற்றம் உருவாவதால் கோடைமழை 85% குறைந்து விட்டது. மூன்று மாத மழை மூன்று மணி நேரத்தில் பெய்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி, திருநெல்வெலி மற்றும் சென்னையில் 100° மழை கொட்டித் தீர்த்தது, துபாயில் ஏற்பட்ட பெருமழைக்கு காரணம் புவி வெப்பமயமாதலே.

உடல் ரீதியான பாதிப்புகள் எனப் பார்க்கும் போது பொதுவாக நீரிழப்பு, வெப்ப சோர்வு- பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படும். குறிப்பாக அதீத வெப்பத்தால் வெப்பப் பிடிப்பு (Heat Cramps) அதாவது 102°F காய்ச்சலுடன் உடலில் வீக்கம் ஏற்படும். மேலும், உடல் வெப்பநிலை 40°C அதாவது 104°F அல்லது அதற்கும் அதிகமாகச் செல்லும் போது மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை ஏற்படுத்தும் வெப்ப பக்கவாதம் கூட ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் வெப்ப அலைகளால் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவமனையில் சேர்வது 5% அதிகரிக்கிறது. கடுமையான வெப்பம் என்பது சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் கவனமுடன் இருக்குமாறு நுரையீரல் நிபுணர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். உலகெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இதை உறுதி செய்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் திரு. சுந்தரராசன் அவர்கள்,

  • உலக பன்னாட்டு குழுவால் வெளியிடப்பட்ட ஐந்தாவது மதிப்பெண் அறிக்கையில் கடலின் மாற்றத்திற்கு 70% மனிதர்களும் 30 சதவீதம் இயற்கையும்  காரணம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் உலக பன்னாட்டு குழுவால் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் முழுக்க முழுக்க காலநிலை மாற்றத்திற்கு மனிதர்கள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இனி ‘தமிழகத்தில் 272 நாட்கள் வெப்பமான நாட்கள் இருக்கும்’ எனவும், இதில் குறைந்த பட்சம் 100 நாட்கள் அதிகபட்சம் வெப்பநிலையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ஏற்பட்டு வரும் அதிக பட்ச வெப்ப நிலைக்கு முக்கிய காரணம் ”எதிர் புயல்”. புயல் ஒரு திசையில் செயல்பட்டால், எதிர் புயல் வேறொரு திசையில் செயல்படும். இதன்மூலம் உலகின் ஒரு பகுதியில் தீவிரமான வெப்பமும், மற்றொரு பகுதியில் தீவிரமான மழைப்பொழிவும் இருக்கும்.
  • இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவானது, தற்போது 2023-ம் ஆண்டை விட மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டாகவும், இது எதிர்பார்த்ததை விட 1.49% அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் உலக வானிலையியல் மையம் அறிவித்துள்ளது. ஒருவேளை 2024-ம் ஆண்டை கணக்கிட்டால் 2023-ம் ஆண்டை விட அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக அறிவிக்கப்படலாம்.
  • கடந்த 50 ஆண்டுகளில் (1970-2020) பெருங்கடலில் பொதுவாக 4km ஆழமானது, தற்போது 2km வரை வெப்பமடைந்துள்ளது, இது 2500 கோடி அணுகுண்டுகள் வெடித்த வெப்பத்திற்கு சம்மானது. மேலும் 14°C இருந்த பெருங்கடலில் 21°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அதிர்ச்சமிக்க தகவல் வந்துள்ளது என கூறுகிறார்.

இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பேரிடர் வரும் என எதிர்ப்பார்க்கலாம், இது முழுக்க முழுக்க மனித தவறுகளால் ஏற்பட்டது என சுட்டிக்காட்டுகிறார்கள் வல்லுநர்கள். அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கட்டுப்பாடற்ற வளர்ச்சி, தொழில் நிறுவனங்கள், சொத்துக்கள் எனச் சேர்ந்தாலும் இயற்கை பேரிடர் முற்றிலும் ஒரு நிமிடத்தில் அழித்துவிடும் என்பதை சென்னை வெள்ளம் 2015, 2023-ல் பெற்ற படிப்பினைகளாக இருந்தும் முகத்துவாரங்களில்தான் இன்னும் பெரிய கட்டுமானங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆற்றின் கரைகளில் வாழும் மக்கள் ஆக்கிரமிப்பு என வெளியேற்றப்படுகின்றனர். மழையில் மட்டுமல்ல வெயில் தாக்கத்தினால் மிகவும் பாதிப்பது எளிய மக்களே. அவர்களின் உடல் உழைப்பு மிகுந்த தொழில்களால் உடல்நிலை மிகவும் பாதிக்கிறது.

2023-ம் ஆண்டு அதீத வெயிலின் காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 14 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றனர். இதுபோல அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பல்வேறு இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தலைவர்களின் பிறந்தநாள் விழாவில் வயதுக்கேற்றார் போல் 60 லட்சம் மரங்கள், 70 லட்சம் மரங்கள் நடப்படும் என புகைப்பட விளம்பரங்களோடு நிற்கின்றனர். இதனை தொடர்ந்து கவனிப்பதுமில்லை, கண்டு கொள்வதுமில்லை,

பசுமை நிறைந்த கோவையில் யானை வழித்தடங்களை அழித்து ஈசா யோகா மையம் கட்டியதால் கோவையின் வனங்களில் இருந்த பசுமையே நாசமானது. 2015 முதல் 2020 வரையிலான பாஜக ஆட்சியின் போது 6.68 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2009-2013-ம் இடையேயான ஆண்டுகளை விட, 2014-2018-ம் ஆண்டுகளுக்கு இடையில் 36% அடர்ந்த காடுகளை பாஜக அரசு அழித்திருக்கிறது. பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றி கார்ப்பரேட்டுகள் சுரங்கத் தொழில் துவங்க திட்டம் வகுத்தது. இந்த அநீதிகள் குறித்து போராட்டம் நடத்திய மனித உரிமை செயற்பாட்டாளர்களை பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் அடைத்தது மோடி அரசு. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் பழங்குடியின மக்களின் நில, வன உரிமைக்கு பாடுபட்டவர்களே.

அரசாங்கங்கள் மக்களை மையமாகக் கொண்ட அரசியல் அணுகுமுறையிலிருந்து விலகி, தொழில்துறையை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப அணுகுமுறைக்கு மாறியுள்ளதாகவும் உலக வள நிறுவனம் (WRI) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கேற்பவே இந்திய அரசின் தொழில் கொள்கையும் வடிவமைக்கப்பட்டது. மோடி அரசு அதானி நிறுவனங்களுக்காக, இந்தியாவின் மிகப்பெரிய தொடர்ச்சியான வனப்பகுதிகளில் ஒன்றான ஹஸ்டியோ அரந்த் (HASDEO ARAND) வனப்பகுதியை தாரை வார்த்தது. அதில் 91 ஹெக்டேர் (இது மும்பையை விட மூன்று மடங்கு அதிகம்) அளவிலான மரங்கள் வெட்டப்பட்டன. பர்சா ஈஸ்ட் & காந்த பாசன் (PEKB) என்ற நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கின. 1,898 ஹெக்டேர் அளவிற்கான வனங்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அழிக்கப்பட்டன. சுமார் 5 பில்லியன் டன்  நிலக்கரி எடுக்க இவ்விரிவான காடழிப்பு நடந்தது. சட்டீசுகர் மட்டுமல்ல ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களிலும் பெரு நிறுவன நலனுக்காக காடழிப்புகள் தொடர்கின்றன.

உலகம் முழுவதும் 2015-2020 வரை, ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் ஹெக்டேர் அளவில் காடுகள் அழிக்கப்பட்டன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UN FAO) மதிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் காடுகளை மீட்டெடுப்பது அவசியம் என்று எச்சரிக்கின்றனர். வனங்களை அழிப்பதில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரசியா போன்றவை மிக அதிக அளவிலான காடுகளை அழிக்கின்றன.

நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு பருவநிலை மாறுதல்களினால் கடுமையான சவால்களை சந்திக்கும் என உலக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்தது நம் கண் முன்னாலே நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, பல்லுயிர் உயிரினமும் இதில் பாதிப்படைகிறது. எனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராக இயற்கையை நேசித்து சுற்றுசூழல் நீதிக்காகப் போராடும் சமூகப் போராளிகள், முற்போக்கு அமைப்புகளுக்கு ஆதரவாக மக்கள் உறுதுணையாக இருந்து போராடுவதே நாம் நம் தலைமுறையினரைக் காக்க செய்யும் கடமையாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »